'முஸ்லிம்' என்றால் யார்?

Tuesday, June 12, 2012 Anisha Yunus 3 Comments




பல தெய்வங்கள் இருப்பின் ??????
 இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம். எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். அதாவது ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதை அடிபணிந்து நடப்பவரையே நாம் முஸ்லிம் என்கிறோம்.

பாடல்கள் பாடும் ஒருவரை நாம் 'பாடகன்' என்றே அழைக்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், எந்த மொழி பேசுபவராயினும் சரி. அது போல், எந்த ஒரு மனிதன், நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரை நாம் முஸ்லிம் என்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், அவரின் தோலின் நிறம் எப்படி இருப்பினும், அவர் எந்த மொழி பேசினாலும், அவர் முஸ்லிமே!!

இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு நபருக்கு அப்துல்லாஹ் எனவோ, இப்ராஹீம் எனவோ பெயரிருப்பதாலோ அல்லது அந்த நபர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ மட்டுமே அவர் முஸ்லிமாகி விட முடியாது. 'முஸ்லிம்' என்னும் பட்டம் வாரிசுரிமை போன்றதல்ல; மாறாக யாரொருவர் நம்மைப் படைத்த இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரையே குறிக்கும்.

குர்'ஆன் என்றால் என்ன?

ஏக இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி அவர்களுக்கு தரப்பட்ட இறுதி இறை வேதமே குர்'ஆன் ஆகும்.  முழு குர்'ஆனும் இறைவனின் வாக்கன்றி வேறில்லை. குர்'ஆனில் முஹம்மது நபியின் வார்த்தைகள் இல்லவே இல்லை. அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்கென்றே குர்'ஆன் உள்ளது, எனினும் அதன் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும் உள்ளது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் (இறைவன்) கூறுகின்றார், 
 "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (குர்'ஆன் 4:82)

இஸ்லாத்தின் அடிப்படை செய்தி என்ன?

இஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன? "படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே" என்பதே அது. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், 
 "இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்." (குர்'ஆன் 41:37)

வணக்கம் - என்பது இங்கே சடங்குகள் செய்வதையோ மந்திரங்கள் சொல்வதையோ குறிக்கவில்லை. மாறாக வணக்கம் எனபது இறைவனுக்கு அடிபணியும் ஒரு ஒழுக்கம், மனிதனின் ஒவ்வொரு காரியத்திலும் அந்த ஒழுக்கத்தை பிரதிபலிப்பதே வணக்கமாகும்.

இறைவனுக்கான குணாதிசயங்கள் என்னென்ன?

இஸ்லாம் நமக்கு கூறும் இறைவனின் குணாதிசயங்கள் என்னவெனில்:
1 இறைவன், ஏகன்.
2.இறைவனுக்கு தேவைகள் ஏதுமில்லை (அல்லது) தேவைகளற்றவனே இறைவன்.
3.இறைவனுக்கு பெற்றோரோ, மனைவியோ, குழந்தைகளோ கிடையாது.
4.இறைவனின் இயல்புகளான ஆற்றல், ஞானம், மன்னிப்பு போன்றவற்றில் அவனுக்கு நிகர் வேறெவருமில்லை.
5. இறைவனுக்கு சோர்வில்லை.
6. இறைவனுக்கு மறதியில்லை.
7. இறைவன் தவறு செய்பவனல்ல.
8.இறைவன், மக்களனைவரையும் நேசிப்பவனே அன்றி குலம், கோத்திரம் , சமூகம், வம்சம் போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பவனல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான், "(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)

பல இறைவன்கள் சாத்தியமா?

உதாரணத்துக்கு ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அதிபர்களோ, அல்லது ஒரு கல்விக்கூடத்தில் இரண்டு தலைமையாசிரியரோ இருப்பது சாத்தியமா? பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம்? ஒரு வாகனத்துக்கு இரு ஓட்டுனர்கள் போன்ற உதாரணம்தான் அது. ஒரே வாகனத்தை இருவரும் ஓட்டும்போது, அவர்கள் எத்தனை திறமைசாலியாய் இருப்பினும் விபத்து ஏற்படுவது உறுதி.

"(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்." (குர்'ஆன் 21:22) "


இனி, பெற்றோரா? இறைவனுக்கா????


.

3 comments:

  1. சலாம்! சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    அருமையான விளக்கம்..
    //எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். //


    செம்ம பாயின்ட் ... ஒருத்தர் மோசமா கார் ஒட்டுனா மோசமான ஒட்டுனர் என்றுதான் சொல்ல வேண்டும்.. அதே போல ஒருவர் மோசமாக பாடினால் மோசமான பாடகர் என சொல்ல வேண்டும்.. அதை விட்டுவிட்டு காரையா பாடலையோ குறை சொன்னால் அது அறிவுடைமை ஆகாது அதே போல்தான் இஸ்லாத்தை பெயரளவில் தாங்கி இருக்கும் சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இஸ்லாத்தை குறை சொல்வது முட்டாள்தனம்..!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நிறைய அம்புக்குறி அங்குட்டும் இங்குட்டும் இருக்குபோதே நினைத்தேன் நிறைய வெளக்கம் கொடுக்கப் போறீங்கே என்று.

    அருமையான விளக்கமான பதிவு நன்றியுங்கே

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...