Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்


அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது.

எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.

பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும்  எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை,  மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது.

நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.

இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.

1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.

2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.

3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!

யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.

[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]

ஆசிரியர் பற்றிய குறிப்பு -- டேனியல்.செல்வராஜ்

தனிமையின் நூர் வருடங்கள்...


...இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என் மனம் கவர்ந்த தோப்பில் மீரான் சாஹிபின் மொழியாக்கத்தில் வெளி வந்திருக்கும் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. மூன்று கதைகளை முடித்தாயிற்று. மிகவும் பிடித்த, அல்லது மிகவும் இரசிக்கும் நடை கொண்ட எழுத்தாளர்களை வாசிப்பதென்பது மனதுக்கு தெம்பூட்டுவது. இன்னாரின் எழுத்து இது என்று எதுவும் சொல்லாமலே ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துத் தாருங்கள்.... அது இன்னாருடையதுதான் என அறிந்து கொள்ளும், புதிர் விளங்கும் கணம் மிகவும் அழகியது. அப்படித்தான் இந்த தொகுப்பிலும் மொழியாக்கம்தான் செய்திருக்கிறார் எனும்போதும் தனக்கே உரிய அழகியலில் மொழி பெயர்த்துள்ளது அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

மீரான் சாஹிபின் முக்கியமான முத்திரை என நான் கருதுவது, கதையின் மைய நீரோட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பி, அந்தக் கேள்விக்கான பதிலை சூட்சுமமாக கதையின் கடைசிப் பகுதியில் வைத்து, பின்பும் ஒற்றை பதிலுடன் அதனை முடிக்காமல், வாசகனை அங்கலாய்க்க விடுவது. I am Loving it. முதல் கதையிலும் இரண்டாம் கதையின் முடிவிலும் மிகவும் ரசித்த டச் அது.

க்ஹைர்.... ஆரம்பக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பும். ‘தனிமையின் நூர் வருடங்கள்’. கே.ஆர்.மீரா அவர்களின் சிறுகதை. மிகவும் சிறிய கதைதான். ஒரு கைதிக்கும், ஒரு ஊனமுற்ற பெண்ணுக்கும் நடுவில் பிறக்கும் காதல் பற்றியது. அவனின் மன ஊனத்தைப் பற்றியும், அவளின் சுதந்திர வானைப் பற்றியுமான கதை. 3,4 முறை வாசித்த பின்னும் அடுத்த கதைக்கு செல்ல இயலவில்லை. கதையின் போக்கை விடவும், கதையின் போக்கில் சென்று ஆணின் மனதைப் போட்டுடைத்ததன் தாக்கம் ஆழமானது. முழு கதையிலும் அந்த உளவியலே விரட்டிக்கொண்டு வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரைத் தவிர்த்து மற்றெல்லா ஆண்களுமே இவ்வுலகில் இப்படித்தான் இருக்கக்கூடும் எனக் கட்டியம் கட்டியது, இவ்வரிகளே.

//அவனுடைய மனசில் பெண் எனும் சொல்லிற்கு ஒரு பொருள்தானிருந்தது. மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு.//
சத்தியமான வரிகள்தான் இல்லையா....
.
.
...இன்னும் வாசிக்க மீதம் இருக்கின்றது.
...இன்னும் கற்றுக்கொள்ள மீதம் இருக்கின்றது.
...இன்னும் பயணிக்க நெடுந்தொலைவு இருக்கின்றது.

‪#‎தோப்பில்_முஹம்மது_மீரான்‬
‪#‎மலையாள_சிறுகதைகள்‬
‪#‎தனிமையின்நூர்வருடங்கள்‬

அறபுகளின் நாயகி -- புத்தக விமர்சனம்.





ஐடி துறையில் ஏறத்தாழ 8 வருட அளவில் அனுபவம் இருந்தபோது பல்வேறுபட்ட வலைதளங்களையும் பார்வையிட வேண்டியிருந்தாலும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு வகையறா, mini / micro marketing websites மட்டுமே. அதாவது ஒரு பொருளை விற்பதற்காகவே தயாராகும் வலைதளம் அது. அதில் அந்த பொருளைப் பற்றி பத்தி பத்தியாக நீங்கள் யூகிக்கும் ஐகான்ஸிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரும் பேசியிருப்பர். அதன் தரம், குணம், விலை என எல்லாவற்றைப் பற்றியும் ஏறத்தாழ இரு பக்கத்துக்கு அந்தப் பொருளை விற்பனை செய்யும் எல்லா அம்சங்களும் இருக்கும். ஆயினும் அந்தப் பொருளின் நம்பகத்தன்மையை மட்டும் அதில் காண இயலாது. $100, $200 பணம் கட்டினால் அந்தப் பொருள் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும். அப்படி ஒரு வலைதளத்தைப் பார்த்த அயற்சிதான் ஏற்பட்டது, சகோதரர் ஃபயாஸ் அவர்களின் ‘அறபுகளின் நாயகி’ புத்தகத்தைப் வாசிக்கும்போது. 75 பக்க புத்தகத்தில் முதல் 15 பக்கங்களுக்கு வெறுமனே Testimonials, Testimonials, Testimonials.... Please guyz, grow up!

உண்மையில் பயணத்தில் படிக்க விரும்பி எடுத்துச் சென்ற இரு புத்தகங்களில் ஒன்று, அறபுகளின் நாயகியும், இன்னொன்று ஆயிஷா அன்னையாரின் வாழ்க்கைக்குறிப்பு பற்றிய ஷேக் சுலைமான் நத்வியின் நூலை இதாரா பதிப்பகத்தார் பதிப்பித்திருந்த ஆங்கில மொழியாக்கம் ஒன்றும். அறபுகளின் நாயகி நூலில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை சுருக்கமாகவும் செறிவாகவும் உம்மஹாத்துல் மு’மினீன் என்னும் ஆங்கில மொழியாக்க நூலில் இரு பக்கத்திற்குள்ளாறேயே முடித்திருந்தது தனிச்சிறப்பு. tongue emoticon tongue emoticon tongue emoticon

புத்தகத்தின் மையக் கருத்தோடு நிச்சயம் ஒத்துப் போகிறேன். ஆம், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நிக்காஹ் நடக்கும்போதுஅன்னையவர்கள் பால்மணம் மாறா குழந்தையல்ல. அதற்கென நூலாசிரியர் காட்டும் எல்லா ஆதாரங்களோடும் ஒத்துப் போகிறேன். எனினும், இது புதிய விடயமல்ல. நிச்சயமாக அல்ல. ஏற்கனவே பல நூலாசிரியர்களும், ஆய்வாளர்களும் இதை விளக்கத்தோடு உம்மத்தின் முன் சமர்ப்பித்த விடயமே. எனவே இந்தப் பதிவின் பேசுபொருளும் புத்தகத்தின் மையக்கருத்தல்ல. அதற்கான தரம், தகுதி மற்ற நூற்களுக்கு நிச்சயம் உண்டு. Let us analyse only the way, the stage being set for this book. smile emoticon

========================
#மொழியியல் - புத்தகத்தின் பல இடங்களிலும், நேர்மறையான வாக்கிய அமைப்பில் எதிர்மறை சிந்தனைகள் விஷமாய் பரவி நிற்பது கண்டனத்துக்குரியது. உதாரணமாக, அந்த முழு நிலவைப் பற்றிக் கற்பனை செய்ய வேண்டாம் என்றால் முதலில் நம் மூளையில் பதிவது முழு நிலவின் வடிவமே. அதுபோலவே ஒரு கேள்விக்குறியின் கீழ் பல வாக்கியங்களும் வருவது யதேச்சையாகவா அல்லது திட்டமிட்டு நோக்கத்துடனேயே பதியப்பட்ட வாக்கியங்களா எனக் குடைகின்றது. (Pg: 24, 25, 35, 39..)


#பக்கச்சார்பு - பக்கம் 39இல் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹூவையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்பீடு செய்திருப்பது... சுப்ஹானல்லாஹ்... உங்களின் ideologyயை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து புத்தகம் எழுதுங்கள். அபூ பக்கரின் அளவுக்குக்குட அறிவில்லையா என்பது போல் நீங்கள் எழுதியிருக்கும் பத்தி, நிச்சயம் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை போட்டுடைத்து விட்டது. Total Bull@%#$%$#. இது போன்ற எண்ணற்ற வாக்கியங்கள் உங்களின் நோக்கம், இலக்கு என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் இந்த ஒரு பாரா மட்டுமே தங்களின் இருப்பை வெட்டவெளிக்கு நகர்த்தி விட்டது. Purely poisonous.

#தற்பெருமை - உஸ்தாத் மன்சூர் பற்றிய பாராவாகட்டும். எண்ணற்ற உலமாக்களை, மௌலானாக்களை பெயரின்றி குறிப்பிட்டு, உண்மையை எத்தி வைத்தால் இஸ்லாத்திற்கு இழுக்கு வந்துவிடும் என பொய்யையே அவர்கள் பரப்பிவிடுவது போல ஆலிம்களின் மேல் தோற்றம் எழுப்பி அவர்களை வாசகனின் பார்வைக்கு கேலிக்கூத்தாக்கியதாகட்டும், அவர்களைக் கீழிறக்கிக் காட்டுவதும் தன் புகழை ஆரம்ப பக்கங்களிலேயே பதிந்து கொள்வது என்பதும் the cheapest tactic. #MLM கூட #Better.

இன்னும் உஸ்தாத் மன்சூரின் விடைகளைப் பற்றிய ஆய்வறிக்கையில்(!!!!) நீங்கள் கூறுவது போல, முதல் பாயிண்ட்டில் உஸ்தாத் அவர்கள் ஆறுவயது என வரையறுத்து முடிவு செய்வது பிழையானது என உறுதி கூறியுள்ளார். இரண்டாம் பாயிண்ட்டிலும் அன்னை ஆயிஷா அவர்கள் திருமண வயதை அடைந்த பினனரே திருமணம் நடைபெற்றது என்பதனையும் விளக்கியுள்ளார். மீதம் உள்ள பாயிண்ட்களில், உஸ்தாத் அவர்கள், எப்படி அந்த திருமணத்தை நோக்க வேண்டும் என்பதையும், அதன் மேலான சட்டங்கள் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளன என்பதனையும் இன்னும் தெளிவாக விளக்கவே முயன்றிருக்கிறாரே ஒழிய, he is not contradicting himself. NO. ஆனால், உஸ்தாதின் பதிலின் இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள // பதில் தந்தவர் உஸ்தாத் மன்சூர்// என்னும் ஒற்றை வாக்கியம் உஸ்தாதின் பதிலை மீளாய்வு செய்யும் நிலைக்கும் தங்கள் கோணல் பார்வையிலிருந்து படிக்குமாறும் வாசகனை தூண்டிவிடுகின்றது. இவ்வாறான இடங்களில் தஸ்லீமா நஸ்ரீனின் Obsessive writing நினைவிற்கு வருவது தவிர்க்க இயலவில்லை. Sorry to say this.

இன்னும் என் பெருமதிப்பிற்கும், அளவிலா நேசிப்பிற்குமுரிய இமாம் அன்வர் அவ்லகி அவர்களின் அன்னை ஆயிஷா பற்றிய உரையிலும் சரி, இமாமவர்கள் முக்கியமாக விளக்க முன்வருவது, முதலில் நம்புங்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் உங்களின் கற்றறிவைக் கொண்டு பகுத்தாய முயற்சிக்காதீர்கள் என்பதுதான். அபூ பக்கரைப் போல நம்பிக்கை கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதுதான் முதல் பாடம். அதனால் மட்டுமே அவர்களெல்லோரும் பொய்க்கு அணி சேர்கிறார்கள், என்னைப் போல உண்மையை ஆராய முன்வரவில்லை, நான் மட்டுமே முதன்முதலாக அன்னையின் கண்ணியத்தைக் காக்க அவதரித்துள்ளேன் எனக் கூவுவது ___!!!! ___!!!! ___!!!! (Please fill in the blanks).

#முனாஃபீக்குத்தனம் - உமர் ரலியல்லாஹு அன்ஹூ சம்பந்தமான, அப்பட்டமாக வலிந்து திணிக்கப்பட்ட episode. ஒவ்வொரு வாக்கியமும், அது கூறும் பொருளும் மிக மிக மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு வரியிலும் அஹ்லுல் பைத்தினர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்வர மாட்டார்கள் என்பதை அழுத்தமாக குறிப்பிடும் அதே வேளையில் உமர் அல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹூவைப் பற்றி, எனக்குப் பிறகு ஒரு நபி இருந்தால் அது இன்னாராகத்தான் இருக்கும் என நபியவர்கள் அங்கீகரித்த உத்தமர் பற்றி, பெண்களின் கண்ணியத்தை காக்க இறைவன் அனுப்பிய பல சட்டங்களுக்கும் மூலக்காரணமாக விளங்கிய சத்தியசீலர் பற்றி கள்ள மௌனம் சாதித்தது உங்களின் Utter Hypocrisyயைப் பறை சாற்றுகின்றது. Ridiculous approach. எழுத்தாணியைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புங்கள், விஷத்தை அல்ல.

#நடுநிலைமை - இத்தனை காரமாக எந்த புத்தக விமர்சனமும் நான் முன்வைத்ததில்லை இதுவரை. "It is a fault, that this book was given a platform, which it din't deserve." PERIOD.