அன்புள்ள சந்தனமுல்லை

Monday, May 17, 2010 Anisha Yunus 16 Comments

உங்கள் பதிவு அருமை. அதேபோல் மீடீயாவின் பின்னால் செல்லாமல் மற்றவர்களின் பதிலையும் தெரிஞ்சுக்க நினைத்தது மிக நேர்மை. நன்றி. என்னை கூப்பிடவில்லை என்றாலும் பதில் சொல்ல வேண்டிய சமூகத்தை சார்ந்திருக்கிறேன் என்பதால் பதில் அளிக்கிறேன்.

1. நமக்கு உண்மையில் ஃபத்வாவில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று தெரியாது. மீடீயாவில் அத்தனை எழுத்துக்களையும் போடுவது கிடையாது. அவரகளின் தேவைக்கு எற்ப ஒட்டி, வெட்டிதான் பயன்படுத்துவர். அதனால் உண்மையில் என்னவிதமான ஃபத்வா கொடுக்கப்பட்டது என்று தெரியாது. அதனால் இதன் மேல் தர்க்கம் புரிவது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல.

2. ஃபத்வாவை வார்த்தைகள் பிறழாமலே மீடீயா வெளியிட்டுள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அந்த லின்க்கில் படித்ததில், "ஆண்களுடன் சரளமாக, பர்தா / திரை இன்றி பேசி பழகும் அபாயம் இருப்பதால் அத்தகைய இடங்களில் பெண்கள் வேலை செய்ய ஷரீஅத்தில் இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலோட்டமாக இல்லாமல் நன்கு ஆராய்ந்து படித்தால், இத்தகைய இடங்களில் வேலை செய்வதையே அல்லது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக, கருத்தாக காத்து வளர்க்க வேண்டுமென சட்டமுள்ளது. பெண் குழந்தைகள் இருந்து அவர்களை நன்றாக பேணிப் பாதுகாத்தால் நானும் அவர்தம் பெற்றோரும் / காப்பாளரும் சொர்க்கத்தில் பெரு விரலும் சுட்டு விரலும் போல இணைந்திருப்போம் என நபி மொழி உண்டு.

இந்த ஃபத்வாவின் கூற்றுப்படி, பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலையைப் பற்றி பிரச்சனையில்லை. பிரச்சனை, சகஜமாய் பழகுகிறோம் பேர்வழி என பெண்களையும் ஆண்களையும் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை பற்றிதான். இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் எல்லா விதமான பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே போவதுதான் உண்மை. இந்த ஃபத்வாவை மீண்டும் படித்துப் பாருங்கள், பெண்கள் பெண்களுக்காக மட்டும் உள்ள பணியிடங்களில் வேலை பார்ப்பதையோ அல்லது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதையோ அல்லது இந்தியாவில் தற்சமயம் அதிகமாக காணப்படும் மகளிர் சுய உதவிக் குழு போன்றவற்றில் வேலை செய்வதையோ இந்த ஃபத்வா ஆட்சேபிக்கவில்லை. புரிகின்றதா?

இந்த ஃபத்வாவை மீடீயா அவல் போல் மெல்லவே வேறுவிதமான தலைப்பை கொடுத்துள்ளதை கவனிக்கவும். அந்த செய்தியிலேயே படித்தால் பெண்கள் கல்லூரியில் பணிபுரியும் ருக்ஸானா என்ற பெண்ணின் பதிலில் புரியும். மகளிர் கல்லூரியில் பணி புரிகின்றார். அதிகமாக பர்தா அணிந்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இராது. அதுவுமன்றி ஆண்களுடன் பழக வேண்டிய சூழ்நிலைகளும் குறைவு. இதில் பயன் யாருக்கு?

தலைப்பை மட்டும் பார்த்து இதனை குறை சொல்ல முடியாது. ஷரீஅத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணி புரியும் பட்சத்தில் பெண்கள் பணி புரிவதை எந்த அமைப்பும் குறை சொல்ல முடியாது, காரணம், அல்லாஹ் பெண்களை வேலை செய்வதை விட்டோ, சம்பாதிப்பதை விட்டோ தடை செய்யவில்லை. அல்லாஹ் தடை செய்யாததை, முஹம்மது நபி (ஸல்) தடை சொல்லாததை வேறு யாரும் தடை சொல்லமுடியாது. இங்கும் அப்படியே. சூழ்நிலைகள் பாதுகாப்பாக உள்ள பட்சத்தில் பெண்கள் வேலை செய்யலாம்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள ஷம்ஷாத் அக்கா முதற்கொண்டு ஆஃப்ரீனின் அம்மா வரை எவருக்குமே சூழ்நிலை பாதுகாப்பாக உள்ளவரை வேலை செய்வதற்கு அந்த அமைப்பும் சரி எந்த அமைப்பும் சரி ஆட்சேபணை விதிக்கவில்லை. பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத இடத்தில் வேலைக்கு அனுப்ப சாதி மத பேதமன்றி எந்த தாய்தந்தையும் அனுமதிக்க மாட்டார். அவர்கள் பர்தா அணிபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும், பர்தா என்பது உடையோடு மட்டும் நில்லாது எண்ணங்களுக்கும் சேர்த்தே இறைவன் கூறியுள்ளான். அதனாலேயே ஆண் பெண் என இரு பாலருக்கும் ஹிஜாபை கட்டாயப்படுத்தியுள்ளான். அத்தகைய கட்டுப்பாடான மனம் உள்ளவரை, ஷரீஅத்தை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை இல்லாதவரை வேலை செய்ய தடையில்லை என்பதையே அந்த ஃபத்வாவும் கூறுகின்றது.


எனவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதே தவறு என்று ஃபத்வா கொடுத்திருப்பதாய் எண்ணவேண்டாம். மீண்டும் அந்த செய்தியைப் படித்துப் பார்த்தால் தலைப்பை எவ்வளவு யோசித்து வில்லங்கமாய் தந்திருக்கின்றார்கள் என புரியும். என்னால் இயன்ற அளவு பதில் சொல்வதில் தெளிவாய் இருக்க முயற்சித்து உள்ளேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

பி.கு. சில காலங்களுக்கு முன் பெங்களூருவில் Oracle Inc - Software Engineer பணியில் இருந்தவள்தான் நானும். என்னுடைய வேலை இரண்டாம் மாடியில், சிற்றுண்டி சாப்பிட மேலே டெர்ர்ஸ்சிற்கு செல்ல வேண்டும். டெர்ரஸ்சில்தான் மது அருந்தும் இடமும் உள்ளது. தனியே இடங்களில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆசை ஆசையாக விடாமல் முயற்சி செய்து வேலை வாங்கிய கம்பெனி அது. எனினும் மனதுக்கு ஒட்டாத சூழ்நிலை, பாதுகாப்பில்லாத உணர்வு. நானே வலிய வந்து ஐந்தே மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். இப்போது அதே வேலை, வீட்டில் என் குட்டிப் பையனுடன் லூட்டி அடித்துக் கொண்டே Internet-Freelancing மூலமாக சம்பாதிக்கின்றேன். காலத்திற்கேட்ப நாம்தான் பத்திரமாக இருக்க வேணும் என்ன நான் சொல்வது?

ps2:-



16 comments:

உங்கள் கருத்துக்கள்...