ரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்

Thursday, June 30, 2011 Anisha Yunus 10 Comments

முன் குறிப்பு - முதலில் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ கதையை மட்டுமாவது படித்து விட்டு வாருங்கள்.


இனி...

போன பதிவில் சொன்னது போல தினம் ஒரு கதை என்று படிக்க ஆரம்பித்ததே இரண்டு வாரம் முன்தான். ரமணிச்சந்திரனின் ஓரிரு கதைகள் மட்டுமே நான் ஊரிலிருந்த பொழுது படித்துள்ளேன் என்பதால் நெட்டில் தேடி கதையை படித்தேன். முதலில் 3,4 கதைகளில் ஏதும் பெரிய தாக்கம் இல்லை. எப்பொழுதும் போல, நம் சினிமாக்களில் வரும் காதல் கதைகள், தளம் மட்டும் மாறி மாறி வரும். ஆனால் படித்த கதைகளில் முக்கால்வாசி கதையில் ஹீரோவாக வரும் ஆண் கண்டிப்பாக பெண்ணாசை பிடித்த சேடிஸ்ட்டாகவேதான் உள்ளான். ஏன்? இதை எதிர்த்து ஆண்கள் யாரும் பதிவு எழுதினார்களா தெரியவில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று தேடி தேடி படித்தவனாக இருப்பான், அல்லது அப்படிப்பட்ட தேசத்திற்கெல்லாம் வாரம் ஒரு முறை வர்த்தக விஷயமாய் பயணம் செய்பவனாக இருப்பான். இதிலெல்லாம் தப்பே இல்லை. தப்பு எங்கே என்றால், மது, மாது என்பது கழற்றி மாட்டும் சட்டையைப் போல மாற்றுபவனாக இருப்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயினிடம் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, “நீ என்னை மயக்கி, வலையில் வீழ்த்தி என் சொத்தை அபகரிக்கத்தானே வந்தாய்??” என்ன ஒரு Mentality? எனக்கு புரியவில்லை. அதெப்படி அவனாக தேடி போகும்போது அந்த பணத்தை அப்படி வீண் விரயம் செய்வதிலோ, தாராளமாக, தாராளம் காட்டும் பெண்களுக்கு வழங்குவதிலோ நொடியும் தவறாக எண்ணாதவன், ஏழைப்பெண் மட்டும் தன் சொத்தை வலையில் போட்டுக்கொள்வாள் என ஏன் எண்ணுவான்?

இது மட்டுமல்ல. முன்னுரை எழுதியிருக்கும் விதத்தை பார்த்தால் நல்ல கருத்து சொல்லக்கூடிய கதை என்றுதான் தோன்றும். ஆனால் படிக்க படிக்க, என்ன மெசேஜ் இது என்றுதான் தோன்றும். உதாரணத்திற்கு, தன் படுக்கைக்கு வர தினம் தினம் சம்மதம் கேட்கும் ஒரு பாஸ், அவனிடத்தில் கைத்தறியை மட்டுமே உடுத்தி தன் உணர்வுகளை அடக்கியாளும் பெண். சொத்து விஷயத்தில் ஒருவனை பழி வாங்கி அவனின் வருங்கால மனைவியையே படுக்கைக்கு அழைக்கும் ஆண், அதனை வருங்கால கணவனுக்காக செய்யும் தியாகமென நினைக்கும் பெண், அப்படி என்ன தியாகம்? என்ன மெசேஜ் இது?? எல்லாவற்றிற்கும் மேலாக ‘மயங்கினாள் ஒரு மாது’ என்னும் கதையில் சித்தரிக்கப்படும் கதை. ஒரு அளவே இல்லாமல் அந்தப்பெண்ணை பாலியல் கொடுமை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. எதற்காக? தன்னை தொட்ட ஒரு அன்னியனை அவள் அறைந்துவிட்டாள் என்பதற்காக மட்டும்...!!!!!!!!! அத்தனை கொடுமையை அனுபவித்த அந்த பெண்ணும், காந்தீய வழி முறையை பின்பற்றி அவனை மன்னித்து, மணமும் புரிகிறாளாம். அருவருப்பின் உச்சகட்டம் எனலாம்.

கதையில் வரும் பெண்களெல்லாம் அழகாய், குணத்தில் சிகரமாய் இருப்பதென்னவோ சரிதான், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறும் கூட்டமாக அல்லவா இருக்கிறார்கள். பொறுமை, அமைதி என்ற பேரில் அத்தனை பாலியல் தொந்தரவுகளையும், அத்து மீறல்களையும் அனுமதிப்பவர் போலல்லவா இருக்கிறார்கள்???

என்ன தேவை? அப்படி ஒரு பெண் ஏன் வாழ வேண்டும்? கதையில் வரும் பெண்ணை விடுங்கள். இந்த மாதிரி கதைகளை படிக்கும் பெண்களை எடுத்துக் கொள்வோம், வாலிப வயதில், கற்பனைகளும், கனவுகளும் சிறகடித்துப் பறக்கும் மனநிலையில் உள்ள டீனேஜ் பெண்களே இந்த மாதிரி கதைகளை விரும்பி படிப்பர். அல்லது வீட்டில் சமைக்கும், வீட்டை கவனிக்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் ரிலாக்ஸாக விரும்பும் மனைவிகள். இதில் இந்தளவு impractical story line தருவதில் என்ன சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும்? முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல என்ன பாங்கான வாழ்க்கை சொல்லித்தர முடியும்? ஒரு பேச்சுக்கு, உண்மையிலேயே ஒரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகளையோ, அல்லது அப்படிப்பட்ட hintsஐயோ தரும் ஒரு பணியாளரை இதையெல்லாம் படிக்கும் பெண் என்ன நினைக்க முடியும்? அய்யோ... இவரும் சிறு வயதில் தாய் தந்தை அன்பை இழந்திருப்பாரோ, அதனால் இப்படி நடந்து கொள்கிறாரோ?? அந்த கதையில் வரும் நாயகனைப் போல கடைசியில் திருந்தி மணம் செய்து கொள்வாரோ என தப்பான முடிவெடுக்க துணிந்து விட்டால்???இதைப் போன்றே மற்ற சமயங்களிலும் அத்து மீறும் ஆண்களை அடையாளப்படுத்தி விலக தெரியாமல் போனால்???

இது தேவையற்ற பயம், அப்படி யாரும் கதைகளைப் பார்த்து முடிவு செய்வதில்லை என மல்லுக்கட்ட முடியாது. எவ்வளவு செய்திகளை தினம் பார்க்கிறோம், சினிமாவுக்காக ரயில் ஏறிய சிறுமிகள் வாழ்வை தொலைப்பதும், திருமணமாகாமலே மனைவியாய் சொகுசாய் வாழ ஆசைப்பட்டு, கடைசியில் பத்திரிக்கைகளுக்கு தீனியாகிப்போவதும்... தினம் தினம் நாம் பார்ப்பதுதானே?

இவ்வளவு பெரிய வாசகர் வட்டம் வைத்திருக்கும் கதாசிரியர், இன்றைய சூழ்நிலைகளை அறிந்து அதிலுள்ள களைகளை அகற்றிட முயலக்கூடாதா??? கணவன் மனைவிக்குள் இருக்கும் (சட்ட ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட) உறவில் விழும் விரிசல்களை எப்படி நீக்குவது என்று எழுதலாமே?? கள்ளத்தொடர்புக்கு வழி வகுக்கும் பாதைகளை ஆராய்ந்து அதிலிருந்து மீள்வது போலவோ காப்பாற்றப்படுவது போலவோ எழுதலாமே?? தனிக்குடும்பத்தால் வரும் பிரச்சினைகளை அலசி, கூட்டுக் குடும்பங்களுக்கோ அல்லது வயதான தாய், தந்தை / மாமனார் மாமியார் போன்றவர்களை adjust செய்து வாழ்வதே எவ்வளவு பிரச்சினைகளிலிருந்து மீள வைக்கும் என்பதை எழுதலாமே?? 

நான் ஒருத்திதான் இப்படி யோசிக்கிறேனோ என்று பார்த்தால்  இன்னொரு வலைப்பதிவிலும் இந்த சிந்தனை எதிரொலிக்கிறது. இன்னும் எத்தனை பேர் மௌனமாக இதை சகிக்கிறோம் என்று புரியவில்லை. ஒரு சில கதைகள் நன்றாகவே உள்ளன. இல்லை என்றில்லை, ஆனால் 90% கதை இப்படி போவதுதான் வருத்தமாக உள்ளது. பாலியல் தொந்தர்வுகளும், அராஜகங்களும் அதிகரித்துள்ள தற்போதைய வாழ்க்கைச்சூழலில் அதை சட்டென எதிர்க்கும், துணிந்து நிற்கும் பெண்களல்லவோ ஹீரோயினாக வேண்டும்?? என்ன சொல்ல... நம் சகிப்புத்தன்மையை மெச்ச ஆளில்லை போங்கள்......!!!!

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

ரயில் பெட்டி -1

Friday, June 24, 2011 Anisha Yunus 17 Comments

#டவுட்டு

கலவை பதிவுக்கு ‘டிரங்குப் பெட்டி’ன்னெல்லாம் பேரு வெக்கிறப்ப, நாம ரயில் பெட்டின்னு பேர் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. கரெக்ட்தானே??? ஹெ ஹெ ஹே...


---------------------------- ~~ ---------------------------- 

 #ஹைக்கூ
அன்று
யார் வைத்த முற்றுப் புள்ளியோ 
இன்று
இவள் நெற்றியில்
பொட்டில்லை...
மலரும் நினைவுகள். 1997ல தினத்தந்தியின் ஞாயிறு மலரில் என்னுடைய இந்த கவிதைக்கு 10 ரூபாய் பரிசா அனுப்பினாங்க. (ஆனா அதுக்கு 300 ரூபாய் பார்ட்டிக்கு அழுதது வேற விஷயம்...!!)

---------------------------- ~~ ----------------------------

 #டைம் பாஸ்
இவ்வளவு நாளும் பொறுப்பா கழியணுமேன்னு தினம் ஒரு கதை ரமணிச்சந்திரனுடையது படித்தேன். அந்த கதைகளில் வருவது போல் இந்த காலத்திலும் இளவயதில் லட்ச லட்சமாய் சம்பாதிக்ககூடிய சக்தி, பெரிய பெரிய நிறுவனங்களை ஆளக்கூடிய சக்தி, எல்லா அழகிய கதாநாயகிகளுக்கும் தகுதிக்கேற்ற வேலை தரக்கூடிய சக்தி, பின் அவர்களின் வாழ்வில் மெர்க்குரி லேம்ப் ஏற்றும் சக்தியும் அரசியல்வியாதிகளின் (ஹீரோ)செல்வங்களுக்கு மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து. என்ன நான் சொல்றது?

---------------------------- ~~ ----------------------------
  
#விதி
 அலபாமா, டெனெஸ்ஸீ, கெண்டக்கி மாநிலங்களைக் கடந்து நெப்ரஸ்கா மாநிலத்திலும் வெள்ளம் எல்லை தாண்டி பாய்ந்தது பல ஊர்களில். ஒமஹாவிலும்தான். ஆனால் அதிகமான பாதிப்பு இல்லாமல் இருந்தது மட்டுமே ஆறுதல். கடலருகில் இருக்கும் மாநிலம்தான் பாதுகாப்பற்றது என இனி கூற முடியாதே? உள் தங்கியிருக்கும் இந்த மாநிலங்களின் கதியைப் பார்த்தால் யாருக்குமே இனி எங்கே வசிப்பது என்றுதான் தோன்றும். 

---------------------------- ~~ ---------------------------- 

#என்ன கொடுமை இது?
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் குழுமம், நிலக்கரியை பயன்படுத்தி மின்னாலை வைப்பதை எதிர்த்து நின்ற இரு சாமானியர்களை பொய் காரணங்களை காட்டி கைது செய்து வைத்து பாரபட்சமில்லாமல் துவைத்து எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர். அவரை ஹாஸ்பிடல் கட்டிலிலேயே சங்கிலியால் பின்னியிருக்கிறார்கள். ஆமைகளை நாசமாக்கிடும் தம்ரா(ஒரிஸ்ஸா) துறைமுகத்திற்கு எதிராய் டாடா குழுமத்தை எதிர்த்தபோதும் இதே நிலை. நம்மூரு போலீஸெல்லாம் CIAக்கு அண்ணன்மார் போலவே??

---------------------------- ~~ ---------------------------- 

#ஆ...
உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் (அட அப்படித்தானே தாத்தா நினச்சுகிட்டிருக்காரு???) சிறை சென்ற தன் மகள் மனிதத்தன்மையற்ற இடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாகவும் கண்ணீர் உதிர்க்கும் தலைவருக்கு..!!

---------------------------- ~~ ---------------------------- 

#ஆஹா...
பத்து வயதே ஆனாலும் தெளிவாக சிந்தித்து, இறைவனின் மீதான நம்பிக்கை மட்டுமே காக்கும் என்றறிந்து தன்னைத் தானே காமாந்தகனிடமிருந்து காத்துக் கொண்ட அந்த சின்னஞ்சிறு மொட்டிற்கு.

---------------------------- ~~ ---------------------------- 



#ஆனந்தக் கண்ணீர்???
(ஊடல் நிமித்தம் ஒரு சின்ன மௌன யுத்தத்திற்கு பின், இரண்டு நாள் கழித்து மாலை ஆஃபீஸ் முடிந்து வந்தவர் சொன்னது)
ஒரியா: என்ன இது, பொருளெல்லாம் இரைஞ்சு கிடக்கு. மௌன யுத்தம் நடந்தப்ப கூட வீடு நீட்டா இருந்ததே??
நான்: (கண்ணை கசக்கிக் கொண்டே) நீங்க வேற, அந்த அழகான நாட்களை ஏன் நியாபகப்படுத்தறீங்க..!!
ஒரியா. GRRRRRRRRRRrrrrrrrrrrrrrrr....

---------------------------- ~~ ----------------------------


ஓக்கே... தொடராமல் பெண்டிங்கில் இருக்கும் தொடர்களோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் :))


.

17 comments:

உங்கள் கருத்துக்கள்...