அலிகார் பிரியாணி

Monday, April 04, 2011 Anisha Yunus 37 Comments


ஹெல்லோ, என்ன நானெல்லாம் சமையல் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கப்பிடாது. ஐம்பதாவது பதிவையாவது ஜனங்க படிக்கற மாதிரி எழுதியாகணுமேன்னு ஒரு சித்தம். அதேன். (ஹி ஹி விளம்பரம்!!)

நாங்க ஒரு நாலு குடும்பம் இங்கே அப்பப்ப Get Together  என்ற போர்வையில் ஆளுக்கு கொஞ்சமாய் சமைச்சு எடுத்துட்டு வந்து வகை வகையா ஒரு பிடி பிடிப்போம், மாசத்துக்கு ரெண்டு வாட்டியாவது. இதுல அலிகார்ல இருந்து இங்க வந்திருக்கற ஒரு தோழி வீட்டு சாப்பாடுன்னா மட்டும் எல்லார் வீட்டு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும். சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். காரம், மசாலா எக்ஸெட்ரா எக்ஸெட்ரா எல்லாம் இல்லாம அதே நேரம் ருசியா இருந்தா குழந்தைங்க என்ன, நாமே ஒரு பிடி, பிடிப்போம்தானே?? அதனாலேயே மற்ற குழம்பு, சைடு டிஷ், இனிப்பு என மற்றவங்க எல்லாம் ஒரு பொறுப்பு எடுத்துகிட்டாலும் சாப்பாடு (அதாவது, பிரியாணி ) எப்பவுமே அவங்க வீட்டுதுதேன் இருக்கும். அதனுடைய ரெசிபி இதோ.


தேவை:
 • முழு கோழி - 1 (அல்லது 2 பவுண்டு / 900 கிராம் மட்டன்)
 • முதலில் சிக்கன் ஸ்டாக் செய்ய: 
 1. பூண்டு 10-12 பற்கள்
 2. துருவிய இஞ்சி - 1 மேஜைக்கரண்டி
 3. சோம்பு, தனியா - 1 மேஜைக்கரண்டி தனித்தனியாக எடுத்து ஒரு சிறிய துணியில் பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
 4. பெரிய / கறுப்பு ஏலக்காய் - 3
 5. பிரியாணி இலை - 1 (கட்டாயம் இல்லை)
 6. குறுமிளகு - 1 தேக்கரண்டி
 7. இலவங்கம் - 4
 8. சிறிய பச்சை மிளகாய் 10 (’யலபேனோ’வாக இருந்தால் அதே அளவிற்கு வெட்டிக்கொள்ளுங்கள்)
 9. நறுக்கிய பெரிய வெங்காயம் 1/2 கப் (என்னிடம் அப்போது சின்ன வெங்காயமே இருந்தது, ஹி ஹி அட்ஜஸ்ட் ப்ளீச்!!)
 • உப்பு - தேவையான அளவு
 • தண்ணீர் 2 கப்
 • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
குக்கரில் எண்ணை விட்டு எண் 1 முதல் 9 வரையுள்ள பொருட்கள் எல்லாம் போட்டு தாளித்து விடவும். பின் 
 • சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவையற்ற எலும்புகளை போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து 7 - 8 விசில் விடவும்.
 • கட் செய்த சிக்கன், தோலில்லை என்றால், சிக்கனை சேர்க்காமல் தண்ணீர் மட்டும் ஊற்றி இரண்டு விசில் விடவும். பின் சிக்கன் துண்டுகள் போட்டு 2 நிமிடம் மட்டும் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
 • தனியே எலும்புகள் மட்டும் வாங்கியிருந்தால் அதனை தண்ணீர், உப்பு எல்லாம் சேர்த்து 7-8 விசில் விடவும்.
எந்த வகையானாலும் கறியை சிறிது வதக்கி பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
ஸ்டாக் தயாராகி விட்டது. தோல், எலும்பு நீக்கிவிட்டு, பொட்டணத்தையும் எடுத்து விட்டு நீரை வடித்து அளவு பார்த்து வையுங்கள்

பிரியாணி செய்ய:
அரைக்க :-
 
 • பூண்டு பற்கள் - 20
 • இஞ்சி 4 துண்டுகள் (1” சைஸில்)
 • பட்டை - 2 துண்டுகள் (1” சைஸில்)
 • ஜாதிக்காய் 2 துண்டுகள் (ஒரு ஜாதிக்காயை உடைத்து சிறிய இரண்டு துண்டுகள் போட்டால் போதுமானது 1/4 அளவு)
ஜாவித்ரி
 • ஜாவித்ரி - 2 சிறிய பூக்கள் (நம்ம ஊரு தாழம்பூவை காய வைத்தது போலிருக்கும், ஜாதிக்காய் மேலுள்ள பூ. சிறிய பூக்களாக போடவும்)
 • மேற்கண்ட அனைத்தையும் சிறிதே சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
 
தாளிக்க:
 • குறுமிளகு - 1/2 தேக்கரண்டி
 • கருப்பு / பெரிய  ஏலக்காய் - 2
 • எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
 • தயிர் 1 கப்
 • பாஸ்மதி அரிசி - 3.5 கப்
 • சுடு நீர் (தயார் செய்த ஸ்டாக்குடன் சேர்த்து 5.5 கப் அல்லது அதற்கும் கம்மி. பார்த்துக்கொள்ளுங்கள்)

செய்முறை:
அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குறுமிளகு, ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். தீ மிதமாக இருக்கட்டும்.


அரைத்த விழுதை போட்டு எண்ணெய் விடும் வரை (1-2 நிமிடங்கள்) வனக்கவும். 

 

கறித்துண்டுகளைப்போட்டு சிறிது வனக்கவும். உப்பு சேர்க்கவும்.

பின் தயிர் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரியும் வரை வனக்கவும். ஒரே கப்பை தண்ணீருக்கும் அரிசிக்கும் உபயோகியுங்கள். அளவு மாறாமல் இருக்க.
எண்ணெய் பிரியும் நிலைக்கு வந்ததும் சுடுநீரை ஊற்றி கொதிக்க விடவும். ஆய்ந்து, கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். பின் நல்ல கனமான மூடியைப்போட்டு மூடிவிட்டு 20 நிமிடம் வரை குறைந்த அளவு தீயில் ‘தம்’மில் விடவும்.


பின் திறந்து பார்க்கவும், அரிசி வேகாமல் இருந்தால் அப்படியே அடுப்பை அணைத்து விட்டு, ’அவனை’ 350 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு (150 டிகிரி செல்சியஸ்) முற்சூடு செய்து அதில் 20 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
எப்பவும் போல நான் செய்யும்போது மட்டும் தண்ணீர் ஜாஸ்தியாகி விட்டது!!
 • இந்த பிரியாணியின் சிறப்பம்சமே அதன் வெள்ளை வெளேர் நிறம்தான். அரைத்த விழுதை கரியும் வரை வதக்க வேண்டாம். 
 • முழு ஜாதிக்காயில் கால்வாசி போதும். அதிகம் சேர்த்தால் ஒரு மாதிரி தொண்டை எரியும், தலை சுத்துவது போன்றுமிருக்கும்.
 • அதிக அளவில் செய்யும்போது தண்ணீர் குறைத்துக் கொள்ளவும்.
 • இதே போல் மட்டனிலும் செய்யலாம். மட்டனில் செய்பவர்கள் ஸ்டாக் செய்யும்போது முழுக்கவே மட்டன் துண்டுகளை வேக விட்டு (அல்லது இன்னும் ஒரு விசிலில் வெந்து விடும் போன்ற நிலை வரை) எடுக்கவும்.
 • ஸ்டாக் தயாரித்த பின் கறி இல்லாமல் பிளெயின் சாதமாக கூட இப்படி கிளறி எடுத்துக் கொள்ளலாம். எந்த கறி சால்னாவுடனும் அருமையாக இருக்கும்.
 • தேவையானால் ஆரஞ்சு கலரை 1 தேக்கரண்டி பாலில் கலக்கி கடைசியில் தெளித்துக்கொள்ளவும்.
டிஸ்கி:
இந்த பிரியாணி, அதிகமா மசாலா காரம் இல்லாம டேஸ்டியாய் சாப்பிடும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. உறுதி. அப்படி யாராவது ”இல்லை, எனக்கு பிடிக்கலை”ன்னு சொன்னாக்க ஜெய்லானி பாய் பேரை மாத்திரலாம்...அஆங்!!

அதெல்லாம் ஓக்கே, விடுங்க. கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு நிறைய இடத்துல பார்த்த ஞாபகம், இப்ப எங்கயுமே அந்த பட்டன் காணம்??? ஹெ ஹெ ஹெ... அவ்வளவு சீக்கிரம் நம்மால இலங்கை போரை மறக்க முடிந்ததே...என்ன சொல்ல!!

.

.

37 comments:

 1. அன்னுக்கா, பார்க்க நல்லா, அழகான ( பிரியாணி மேலை ஏன்கா கோலம் போட்டீங்க) கோலத்துடன் சூப்பரா இருக்கு.
  எனக்கு பிடிக்கலை. இப்ப ஜெய்லானி பாய் பெயரை மாத்துங்க பார்க்கலாம்.

  ReplyDelete
 2. //அதெல்லாம் ஓக்கே, விடுங்க. கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு நிறைய இடத்துல பார்த்த ஞாபகம், இப்ப எங்கயுமே அந்த பட்டன் காணம்??? ஹெ ஹெ ஹெ... அவ்வளவு சீக்கிரம் நம்மால இலங்கை போரை மறக்க முடிந்ததே...என்ன சொல்ல!!//

  Boycott ???? ஹி ஹி. அதெல்லாம் பேச்சோட போயிடும். நான் மட்டும் தான் பார்க்காமலே இலங்கை தோற்க வேணும்னு வேண்டிட்டு இருந்தேன். அதுக்காக பைனல் ஸ்கோர் செக்பண்ணிட்டு இருந்தது உண்மை ;)

  அசின் படம் புறக்கணின்னு கத்திட்டு முதல் ஆளாகப் போய் உ.த அங்கிள் பார்த்த போதே மற்றவர்கள் மீது இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. அவர் பதிவில போய் உங்க கூட கோவம்னு சொல்லிட்டு வந்திட்டேன். =((

  ReplyDelete
 3. பிரியாணில் தண்ணி அதிகம். ஹா ஹா. சேம் பிளட். உடனேயே ஒரு நொன்ஸ்டிக் பான்ல போட்டு கொஞ்சம் வாட்டிட்டு கொடுக்க வேண்டியது தான்.

  இல்லேன்னா வாம்ல ஒரு மணிநேரம் விட்டுட்டு, கோழிப் புக்கை என்று சொல்லி கொடுங்க. (பொங்கலை புக்கைன்னு சொல்லுவாங்க.) அப்படி பல நாள் ஏமாத்தி இருக்கேன். இவங்களும் நம்பி சாப்பிட்டு வாவ் ரொம்ப நல்லா இருக்கு அனாமி, ரெசிப்பு கொடு, அம்மாகிட்ட கொடுத்து செய்ய சொல்லனும்னு சொல்லுவாங்க. ஹா ஹா ஹா.

  ReplyDelete
 4. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் அன்னு

  ReplyDelete
 5. /
  அப்படி யாராவது ”இல்லை, எனக்கு பிடிக்கலை”ன்னு சொன்னாக்க ஜெய்லானி பாய் பேரை மாத்திரலாம்...அஆங்!!

  //

  எனக்குப் பிடிக்கலை. ஜெய்லானி பெயரை மாற்றவும்

  ReplyDelete
 6. பிரியாணி நல்லா இருக்கு அன்னு. (இதச் சாப்பிட்ட) ஒரியாக்காரர் நலம்தானே:-)

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்,அன்னு,அலிகார் பல்கலைக்கழகம் தான் கேள்விபட்டிருக்கேன்,அலிகார் பிரியாணி சூப்பர்.நிச்சயம் செய்து பார்ப்பேன்,போஸ்டிங்கும் உண்டு.பிரியாணிக்கே சூப்பர் பிரியாணி கொடுத்திட்டீங்களே! இது தான் பிரியாணி கொடுக்கிறதுன்னு சொல்றதா?(அல்வா கொடுப்பது போல்),அந்த ஜாவித்ரியை நம்ம ஊரில் அன்னாசிப்பூன்னு சொல்வோம்னு நினைக்கிறேன்.எல்லாப் பொருளும் இருக்கு,செய்ய வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கணுமே!
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அன்னு.
  ஹே ஹே ,Take cricket as a game not a war,enjoy the game and we should not cross our limits to keep the communal harmony. As a game i enjoyed it very well.

  ReplyDelete
 9. அப்படியே பிரட்டி இப்பவே சாப்பிடனும் போல இருக்கு,அன்னு,நீங்க இங்கே இருந்து இன்னும் போகலகையான்னு கேட்பது புரிகிறது.செய்ற வரைக்கும் இங்கே தான் டேரா போட்டிருப்பேன்.அந்த கலர் தெளித்திருப்பது பிரியாணிக்கே சுத்தி போட்ட மாதிரி இருக்கும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. முதலில் வாழ்த்துகள் அன்னு...

  ரொம்ப நல்லா இருக்கு அலிகார் பிரியாணி...இதே மாதிரி தான் நான் செய்வேன்...ஆனால் கொத்தமல்லி + புதினா சேர்ப்பேன்...

  நான் எப்பொழுதுமே சிக்கன் ஸ்டாக் கடையில் வாங்குவது தான் சேர்ப்பேன்...அப்படி இல்லாமல் இப்படி செய்தால் தான் சுவையாக இருக்குமா...அல்லது கடையில் கிடைக்கும் ஸ்டாக்கே போதுமா...

  அக்‌ஷ்தாவிற்கு ரொம்பவும் பிடித்த பிரியாணி...ஆமாம் நீங்க சொல்வது போல குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க....

  ஆமாம் இதில நெய் சேர்க்க வேண்டாமா...

  ReplyDelete
 11. @ஆஸியாக்கா,

  எனக்கு கிரிக்கெட்ல சிக்ஸர் தவிர வேறொன்னுமே தெரியாது. மெய்யாலுமா. அதை நான் பார்ப்பதும் இல்லை, ரசிப்பதும் இல்லை. இந்த கிரிக்கெட்னு மட்டும் இல்லை. நான் விளையாட்டை பார்த்ததையோ, அதை புறக்கணிக்கனும்னு சொன்னதையோ, அல்லது கடைசியில் கொண்டாடுவதையோ, எதையுமே வேற்று மனுஷனாய் நின்று பார்க்கும் ஆள். ஒரே வேதனை என்னன்னா, எவ்வளவு சீக்கிரம் நம்முடைய ஒரு வேதனைய, ஒரு சபதத்தை, ஒரு temptationஉக்காக விட முடியுது என்பதே..!! (புரிஞ்சதா??? இல்லைன்னா மெயில்ல எழுதறேன்... ஹெ ஹெ .. Neither I am supporting the boycott, nor I am congratulating this victory. Those who were hurt in that war are common men, those who are loaded with gifts and accolades are Highly paid players, and the common men here is again a silent spectator!!!)

  ReplyDelete
 12. @கீதாக்கா,
  நெய் சேர்க்க வேண்டாம், ஜாதிக்காயின் வாசமும், ஏலக்காயின் வாசனையுமே போதும். இதனாலேயே, இது கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்களுக்கும் ஏற்றது!! கடையில் அதிகமான பொருட்கள் ப்ரெச்ர்வேடிவ்வா சேர்க்கப்பட்டிருக்கும். என்னைப்பொறுத்தவரை, குழந்தைகளுக்கு வீட்டில் செய்யும் பொருட்களே உகந்தது. நான் வேணும்ன்னா இந்த ஸ்டாக்கை முதலிலேயே தயார் செய்து வெச்சுக்க முடியுமான்னு கேட்டு சொல்றேன்க்கா. :)

  நன்றி :)

  ReplyDelete
 13. @ஆஸியாக்கா,
  உங்களை மாதிரி சமையல்ல டாக்டர் பட்டம் வாங்கினவங்கெல்லாம் இப்படி கமெண்ட் தர்றது, உண்மைலயே சந்தோஷமா இருக்கு. செஞ்சுட்டும் கண்டிப்பா எழுதுங்க. ஜாவித்ரியை நான் இங்கதான் வாங்கினேன், ஊர்ல அம்மா இது செய்யணும்னு சொன்னாங்க, அவங்ககிட்ட அந்த பெயரையும் சொல்லி வைக்கிறேன். நன்றி :)

  ReplyDelete
 14. @வானதிக்கா,
  ஹ ஹ ஹா... பிரியாணி எப்படி செஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்திருது. அதனாலதேன் கோலமாவது அழகா தெரியட்டும்னு போட்டு வெச்சேன்!!
  //இப்ப ஜெய்லானி பாய் பெயரை மாத்துங்க பார்க்கலாம்.//
  மெஜாரிட்டி ஓட்டு கிடச்சவுடனே மாத்திரலாம், காசா பணமா...இல்ல நம்ம பேரா...ஹெ ஹெ ஹெ:)
  நன்றி :)

  @அனாமிகா,
  ஆஹா, நான் அமெரிக்கா வந்து செய்யற வேலைய நீ ஆஸ்திரேலியாவிலா... ஹெ ஹெ ஹெ... அவங்க எல்லாம் என்னிக்காவது தமிழ்நாட்டுப்பக்கம் வராமலா போகப்போறாங்க. ஆனாலும் பாவம்...ஹெ ஹெ ஹெ
  //வாவ் ரொம்ப நல்லா இருக்கு அனாமி, ரெசிப்பு கொடு, அம்மாகிட்ட கொடுத்து செய்ய சொல்லனும்னு சொல்லுவாங்க. ஹா ஹா ஹா.//
  இது வேறயா....ஹெ ஹெ ஹே... நல்லாவே படிக்கறீங்க எல்லாரும்!!
  நன்றி :)

  @கார்த்திண்ணா,
  உள்குத்து எதுவும் இல்லியே... ஹெ ஹெ ஹெ:
  எல்லாருமே ஜெய்லானி பாய் பேரை மாத்தறதுக்கு ஒரு சான்ஸ் தேடிட்டுதான் இருக்கீங்க போல!! எங்கே அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!
  நன்றி :)

  @கோபிண்ணா,
  என்னடா இந்த கேள்வி இன்னும் கார்த்திண்ணா கேக்கலையேன்னு பார்த்தேன், ஆஹா உங்க கிட்ட இருந்து வந்திருச்சு. இப்ப வரை எதுவும் பிரச்சினையா தெரியலை. தெரிய வந்துச்சுன்னா ஃபாலோ அப் பதிவும் போடறேன் ஹெ ஹெ :

  ReplyDelete
 15. கண்டிப்பாக கேட்டு சொல்லுங்க அன்னு...

  அக்‌ஷ்தா குட்டிக்காக கண்டிப்பாக சீக்கிரமாக செய்து கொடுக்கனும்..

  அழகாக தெளிவான படங்களுக்கு முதலில் வாழ்த்துகள்..

  அடிக்கடி இது மாதிரி எங்களுக்கும் புதுசா ரெஸிபி போடுங்க...

  ReplyDelete
 16. புது மாதிரியான பிரியாணி ஆக இருக்குது.... உங்கள் வீட்டுக்கு வரும் போது, செய்து கொடுத்துடுங்க... :-)

  ReplyDelete
 17. ஆஹா சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க.

  விருந்துக்கு வரட்டோ? சொறி .... அழையா விருந்தாளியாக நான் எங்கேயும் வரமாட்டேன்...:))).

  ReplyDelete
 18. என்னது, ரெஸிப்பியான்னு அதிர்ச்சியாத்தான் இருந்துது. (எனக்கு நீங்களும் துணைன்னு நம்பி இருந்தேன்!!) செய்முறையும் ரொம்ப ரொம்ப விளக்கமா, ஸ்டெப் பை ஸ்டெப்பா, ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நீளமா இருக்கேன்னு நினைச்சேன். இந்த வாக்கியத்தைப் பார்த்ததும்தான் புரிஞ்சுது - //ஒரே கப்பை தண்ணீருக்கும் அரிசிக்கும் உபயோகியுங்கள். அளவு மாறாமல் இருக்க.// - நீங்க எவ்வளவு கவனமா சமையல் செய்றீங்க, அதைவிட எம்புட்டு உஷாரா குறிப்பு எழுதுறீங்கன்னு!! ஹி.. ஹி..

  BTW, செய்முறை வித்தியாசமா இருக்கு. வழக்கமா பிரியாணில போட்டு செய்கிற பொருட்கள்தான், நீங்க அரைச்சு சேர்த்துருக்கீங்க. மேலும் ஸ்டாக் சேர்த்து பிரியாணி செய்வது புதுசு. செஞ்சுப் பார்க்கிறேன் (இ.அல்லாஹ்) என் சின்னவனுக்கு, வெள்ளை பிரியாணிதான் ரொம்பப் பிடிக்கும். நெய் கூட இல்லையா, செம கட்டு கட்டலாம் (நல்லா வந்தா!!)

  ReplyDelete
 19. ஆனாலும், அமெரிக்காவுலல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட இப்படி “கெட்-டுகெதர்”னு ஒரு நிகழ்வு நடக்கிறதே, அந்த வகையில் கொடுத்து வச்சவங்க நீங்க!! :-))))))))))))

  ReplyDelete
 20. //கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு//

  பிரியாணில மசாலா, காரம் இல்லையேன்னு, இந்த வரியச் சேத்தீங்களா அனிஷா? ;-))))

  இந்தியர்களாகிய நமக்கு, பாகிஸ்தானையும், இலங்கையையும் “கிரிக்கெட்” என்ற புனிதப் போரில் மட்டுமே வெல்ல முடியும்!! அதுவே அவர்களை அடியோடு நசுக்கிய திருப்தி தரும்!! அந்த வெற்றியை ஈட்டித் தந்ததற்காக வீரர்களை (ராணுவமல்ல, கிரிக்கெட்) அதற்கான சம்பளத்திற்கும் மேலாக விருந்து, வீடு, கார், நிலம், இன்னும் என்னென்னவொ பரிசுகள் (வரிப்பணத்திலிருந்தும்) தந்து பெருமைப் படுத்துவோம். அத்தோடு, விளம்பரங்களில் அவர்கள் சொல்லும் பானங்கள் முதல் ரேஸர்கள் வாங்கி பயன்படுத்தி மகிழ்வோம். திரைப்படங்களில் மட்டும் இந்தியாவில் தீவிரவாதி என்றாலே முஸ்லிம் அதுவும் பாகிஸ்தானியாக இருக்கும்படி காட்டி நம் தேசியப்பற்றை வளர்ப்போம்!!

  ReplyDelete
 21. ஸலாம் உண்டாகட்டும் சகோ.அன்னு..!

  பிரியாணி செய்முறை அருமை. அலிகார் என்றாலே யுனிவெர்சிட்டிக்கு பிரபலம்...! பிரியாணிக்குமா..?

  சிறுவயதிலிருந்து சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்த ஒரு மனிதனுக்கு சமைக்கத்தெரிவது எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று ஆறு வருடங்களுக்கு முன்னர் ஹோட்டல்களே இல்லாத நட்ட நடு அரேபிய பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட போதுதான் உணர்ந்தேன்..!

  சமையல் புத்தகம் மூலம், முதன் முதலாக சோறு சமைத்தால் கஞ்சியாக வந்தது. காய்கறி சாம்பார் வைத்தால் அதே சட்டியில் பருப்பு பிரட்டல், காய்கறி வதக்கல், பருப்பு ரசம், மசாலா தண்ணீர் எல்லாமே லேயர் லேயராய் 4 in 1 ஆக இருந்தது.

  உடனடியாக அறையில் இருந்த வட இந்தியரிடமும் பாகிஸ்தாநிகளிடமும் சமைக்க கற்றுக்கொண்டேன். ஒருசில மாதங்களில் நான் சமைத்ததை எனக்கு மிச்சம் வைக்காமல் மற்றவர்கள் பாராட்டி சாப்பிட்டு விடும் அளவுக்கு தேறியும்விட்டேன்.

  அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...//எப்பவும் போல நான் செய்யும்போது மட்டும் தண்ணீர் ஜாஸ்தியாகி விட்டது!!//---அடிக்கடி அரிசியை மாற்றாதீர்கள்... அல்லது, ஒரே லேபிளில் அரிசியை மாற்றி விற்பவர்களிடமும் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தண்ணீர் அளவுகள் அரிசிக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லவா..?

  ReplyDelete
 22. 50க்கு வாழ்த்துக்கள் அன்னு!!அலிகார் பிரியாணி அருமை!!!

  ReplyDelete
 23. @கீதாக்கா,
  கண்டிப்பா. அப்டேட் செய்யறேன்.
  நன்றி :)

  @சித்ராக்கா,
  உங்களுக்கு இல்லாமலா, வாங்க செஞ்சுரலாம்!!
  நன்றி :)

  @அதிராக்கா,
  ஆஹா... இப்படியெல்லாம் கோச்சுக்கக் கூடாது. என் பிரியாணி சாப்பிடவும் ஆளுங்க வரேன்னு சொல்றதைப்பார்த்தா வானத்துல மிதக்கற எஃபெக்ட்தான் வருது ஹி ஹி ஹி
  நன்றி :)

  @ஹுஸைனம்மா,
  இங்க இருக்கற குறிப்பு எல்லாமே எனக்கான வார்னிங்தான். பதிவு செஞ்சு வச்சுட்டா பார்த்து செய்யறது வசதி. ஹெ ஹெ. இந்த பிரியாணியாவது, ஆத்துக்காரரையும் பிள்ளைங்களையும் கடைக்கும் சமையலறைக்கும் அனுப்பாம செய்ங்கப்பா... ஹெ ஹெ ஹே..
  //ஆனாலும், அமெரிக்காவுலல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட இப்படி “கெட்-டுகெதர்”னு ஒரு நிகழ்வு நடக்கிறதே, அந்த வகையில் கொடுத்து வச்சவங்க நீங்க!! :-))))))))))))//
  என்ன சொல்ல, ஆக என் வீட்டுல சாப்பாடே நல்லா இருக்காதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல. கொஞ்சம் மறு பரிசீலனை செய்ங்கக்கா :))

  //பிரியாணில மசாலா, காரம் இல்லையேன்னு, இந்த வரியச் சேத்தீங்களா அனிஷா? ;-))))

  இந்தியர்களாகிய நமக்கு, பாகிஸ்தானையும், இலங்கையையும் “கிரிக்கெட்” என்ற புனிதப் போரில் மட்டுமே வெல்ல முடியும்!! அதுவே அவர்களை அடியோடு நசுக்கிய திருப்தி தரும்!! அந்த வெற்றியை ஈட்டித் தந்ததற்காக வீரர்களை (ராணுவமல்ல, கிரிக்கெட்) அதற்கான சம்பளத்திற்கும் மேலாக விருந்து, வீடு, கார், நிலம், இன்னும் என்னென்னவொ பரிசுகள் (வரிப்பணத்திலிருந்தும்) தந்து பெருமைப் படுத்துவோம். அத்தோடு, விளம்பரங்களில் அவர்கள் சொல்லும் பானங்கள் முதல் ரேஸர்கள் வாங்கி பயன்படுத்தி மகிழ்வோம். திரைப்படங்களில் மட்டும் இந்தியாவில் தீவிரவாதி என்றாலே முஸ்லிம் அதுவும் பாகிஸ்தானியாக இருக்கும்படி காட்டி நம் தேசியப்பற்றை வளர்ப்போம்!!//

  பார்த்து, மசாலா காரம் எல்லாம் தனியா உங்களுக்கு மெயில்ல யாராவது அனுப்பப்போறாங்க. ஹெ ஹெ ஹெ... எதிர் கருத்துக்களை ஏற்கும் திராணி நிறைய பேருக்கு இல்லை என்பதே உண்மை. !!
  நன்றி :)

  @அமைதிச்சாரலக்கா,
  :))
  நன்றி :)

  @முஹம்மது ஆஷிக் Bhai,
  வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  அலிகாரின் உணவு வகைகளும் நிறைய ஃபேமஸ்தான். எங்க இல்லைன்னாலும் இங்கே, ஒமஹாவிலாவது.

  //சமையல் புத்தகம் மூலம், முதன் முதலாக சோறு சமைத்தால் கஞ்சியாக வந்தது. காய்கறி சாம்பார் வைத்தால் அதே சட்டியில் பருப்பு பிரட்டல், காய்கறி வதக்கல், பருப்பு ரசம், மசாலா தண்ணீர் எல்லாமே லேயர் லேயராய் 4 in 1 ஆக இருந்தது. //
  ஆஹா...இதையெல்லாம் தனி குறிப்பா போடுங்களேன்.. ஹ ஹ ஹா

  //உடனடியாக அறையில் இருந்த வட இந்தியரிடமும் பாகிஸ்தாநிகளிடமும் சமைக்க கற்றுக்கொண்டேன். ஒருசில மாதங்களில் நான் சமைத்ததை எனக்கு மிச்சம் வைக்காமல் மற்றவர்கள் பாராட்டி சாப்பிட்டு விடும் அளவுக்கு தேறியும்விட்டேன்.//
  பரவாயில்லையே, அண்ணி ரொம்ப குடுத்து வச்சவங்க போல. நிஹாரி சமையல் குறிப்பு ஒன்னு எழுதுங்களேன்..:)))

  //அடிக்கடி அரிசியை மாற்றாதீர்கள்... அல்லது, ஒரே லேபிளில் அரிசியை மாற்றி விற்பவர்களிடமும் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தண்ணீர் அளவுகள் அரிசிக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லவா..?//
  அப்படித்தான் நினைக்கிறேன். இங்க இருக்கறப்ப எந்த அரிசி நல்ல விலைல கிடைக்குதோ அதை உபயோகிப்பேன். பார்க்கலாம் இனிமேல் முடிந்தவரை அரிசி மாற்றாமல்! ஹெ ஹெ ...இங்க ஏமாற்று வேலைகள் இல்லை, Food & Hygiene Dept பயங்கர ஸ்ட்ரிக்ட் இந்த ஊர்ல.
  நன்றி :)

  @சுகந்திக்கா,
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 24. //அழகாக தெளிவான படங்களுக்கு முதலில் வாழ்த்துகள்..//
  கீதாக்கா, பகல் வெளிச்சத்துல கேமராவுக்கு பின்னாடி ஜன்னல் வர்ற மாதிரி வெச்சுகிட்டு உங்க நிழல் பொருள் மேல படாம எடுத்தீங்கன்னா, சூப்பரா வரும். பகல் வெளிச்சத்துக்கு முன்னாடி மத்த லைட்டிங்கெல்லாம் வேஸ்ட்!!

  (டிப்ஸ்.ஹி.ஹி..ஹி...)

  ReplyDelete
 25. அலிகார் - யுனிவெர்சிட்டிக்கும், பூட்டுக்கும் தான்
  ஃபேமஸ் என்று கேள்வி பட்டிருக்கேன். பிரியாணிக்குமா??? ரொம்ப நல்லது. ஆனா ஒரு பிரியாணிக்காக ஜெய்லானி பெயரையே மாத்தணுமா அவ்வ்வ்?? வேணும்னா பிரியாணி பெயரை மாத்திடலாமே?? சரியா??

  ReplyDelete
 26. அனிஸ்..!!என் பேரை மாத்த உங்களுக்கு பிரியாணிதான் கிடைச்சுதா ...!!! அவ்வ்வ்வ்வ்

  பேரும் பச்சை பூ சிம்பலும் ஒன்றுடன் ஒன்று கலந்தது...!! இரத்தமும் ஹீமோகுளோபினும் மாதிரி :-)))

  சந்தேகம் கேட்க அப்புறமா வரேன் ..இதை படிச்சதும் கைவசம் இது வரை 18 சந்தேகம் வந்திருக்கு . சொல்லாத வரை விட மாட்டேனே ஹே...ஹே...ஹி..ஹுஈஈஈஈஈஈஈஈ....!! :-))

  ReplyDelete
 27. 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

  வித்தியாசமான பிரியாணி!! செய்து பார்க்கிறேன்..இதை அப்படியே சாப்பிடலமா// அல்லது சிக்கன் க்ரேவி செய்து ஊற்றி சாப்பிடனுமா ஏன்னா பிரியாணி வெள்ளை கலரில் இருக்கும் அல்லவா அதான்...

  ReplyDelete
 28. @ அப்துல் காதர் பாய்,
  பூட்டை பத்தியெல்லாம் நமக்கு தெரியாது. வழக்கமா பூட்டை உடைக்கறவங்களுக்கு வேண்ண தெரியலம். (!!! ஹெ ஹெ ஹெ !!!) ஒரு பிரியாணிக்காக இல்லாட்டியும் பதிவுலகத்தில் சந்தேகம் என்னும் பேரை வைத்து படுத்தி எடுப்பதற்க்காகவாவது மாத்தணும். என்ன நான் சொல்றது... ஹெ ஹெ :))
  நன்றி :)

  @ஜெய்லானி பாய்,
  ஒரு சாக்கு கிடைச்சதே பெரிய விஷயம். பாருங்களேன், முதல் கருத்திலிருந்தே எல்லாரும் வரவேற்பு குடுத்துட்டாங்க. ஹி ஹி ஹி

  இரத்தமும் ஹீமோகுளோபினுமா, சரியாப்போச்சு போங்க. ஹெ ஹெ ஹெ :)
  இந்த பாருங்க, பேச்சு பேச்சா இருக்கணும். அதுக்கு நடுவில சந்தேகம்ன்னெல்லாம் வரக்கூடாது. நானே மொத பதிவு இப்பத்தான் சமையல் லேபிள்ல போட்டிருக்கேன், என்னமாச்சும் கேக்க வேண்டாம்...டைப்பினாலே போதும், பின்ன பார்சல் கட்டியே அனுப்பிருவேன். யார்கிட்ட!!
  // நன்றி :)

  @மேனகாக்கா,
  வாங்க வாங்க, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இப்பத்தான் இரண்டாவது தடவையா வர்றீங்க, உங்க மாதிரி சமையல் கலை நிபுணரையெல்லாம் வர வெக்கிறதுக்காகவே இனிமே சமையல் பதிவு போடலாம் போலவே!!
  எல்லா சால்னாக்கும் நல்லா இருக்கும் அக்கா. எதுவுமே இல்லாம கொஞ்சம் கெட்டித் தயிர் இருந்தாலுமே போதும். பொதுவா நான் பிரியாணிக்கு எதுவும் சைட் டிஷ் வெச்சுக்கறது கிடையாது. இது ஸ்டாக்கும் சேர்ந்திருப்பதால் பிளெயினாவே டேஸ்டியாதான் இருக்கும் செஞ்சு, சாப்பிட்டு பாருங்க :)
  நன்றி :)

  ReplyDelete
 29. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்.
  ஆஹா படங்கள் தெளிவாக இருக்கு சூப்பர் பிரியாணி, தக்காளி இல்லாமல் செய்தான் என் பெரிய பெயன் வாழ்த்தி சாப்பிடுவான்.
  இது பெயர் புதுசு கிட்ட தட்ட நான் செய்யும் கப்சா பிரியானி யும் ஷாகி பிரியாணியும் சேர்ந்து வருது பிரியாணியில் தான் எத்தனை வகை.
  இந்த முறையிலும் செய்துபார்க்கனும்.

  வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள், படங்கள் பளிச்சின்னு இருக்கு,

  ReplyDelete
 30. CONGRATS FOR THE 50 th POST.
  thanks for the yummy recipe

  ReplyDelete
 31. விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு அன்னு..நிச்சயம் என் பொண்ணுக்கு செய்து கொடுக்க போகிறேன்..
  வெஜ் ஸ்டாக் செய்ய சிக்கன் ஸ்டாக் செய்த முரையில் சிக்கனுக்கு பதில் வெஜ் போட்டு செய்யலாம் தானே??

  அடிக்கடி சமையல் பதிவு போடுங்க,வந்து ஒரு பிடிபிடிக்கிறேன்,சரியா...

  ReplyDelete
 32. GEETHA ACHAL said...

  அன்னு இன்று உங்கள் அலிகார் பிரியாணி செய்தேன்...ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது..

  எல்லாம் கரக்டாக தெளிவாக எழுதி இருந்திங்க...அதன்படி நானும் செய்தேன்..சூபப்ரோ சூப்பர்...

  கொத்தமல்லி, புதினா , நெய் மற்றும் எந்த தூள் வகைகள் என்று எதுவுமே சேர்க்காமலே அவ்வளவு சூப்பராக இருந்தது..

  எப்படி இருக்குமே என்று நினைத்து 2 கப் தான் செய்தேன்...அக்‌ஷ்தா குட்டியே இன்னும் வேனும் என்று கேட்க்கும் அளவிற்கு இருந்தது...அவளுக்கு ரொம்ப பிடித்து போச்சு..

  இனிமேல் அடிக்கடி செய்ய வேண்டியது தான்...உங்களுடைய தோழிக்கும் என்னுடைய நன்றியினை தெரிவிக்கவும்..

  இன்னும் இது மாதிரி குழந்தைகளை கவரும் விதமான குறிப்புகள் போடுங்க..
  April 16, 2011 9:11 PM
  அன்னு said...

  geetha akka,

  iam so happy that akshatha kutty liked it. I will try to post more like that biriyani insha allah.

  take care,
  heartfelt thanks to kuttimma, my first tester. he he :))
  April 16, 2011 11:04 PM

  ReplyDelete
 33. அனிஷா..இன்று உங்களுடைய அலிகார் பிரியாணியினை என்னுடைய பதிவில் போட்டு இருக்கின்றேன்..

  http://geethaachalrecipe.blogspot.com/2011/04/aligarh-briyani.html...இந்த் லிக்னினை பாருங்க...

  ReplyDelete
 34. இவ்வளவு நாளாக உங்கள் பக்கம் ஓப்பன் ஆகாமல் இருந்துச்சு என்னால் வரமுடியவில்லை.. இப்ப தான் கீதா ஆச்சல் லிக்கை பார்த்து வந்தேன்...

  படங்கள் மிகவும் அருமை... டைம் கிடைக்கும் பொழுது செய்துபார்க்கிறேன்

  ReplyDelete
 35. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...