மோடி மோசடி: தேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு!

Wednesday, December 18, 2013 Anisha Yunus 2 Comments

கோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை, அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும்,

அவர்களுக்கு வேண்டாதவர்களை எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல நிறுவனங்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
 
பிரச்சார யுக்திகள்...
புளூ வைரஸ் (blue virus) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில், இந்தியா முழுவதும் உள்ள, ஏறக்குறைய 24 ஐடி நிறுவனங்களைப் பற்றித் தெரியவந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான
அபிமானிகள் இருப்பதைப் போலவும், வேறொருவரது கணக்கை ஹேக் செய்து, அவர் பேசுவது போல தரக்குறைவான பதிவுகளை இடுவது போலவும் பல மோசடிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவையனைத்தும், அந்தந்த கட்சி சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்காக செய்வதாகவும், பணம்தான் இதன் குறிக்கோள் என்றும் கோப்ரா போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹால், "இணையதளத்தின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன், இருபதுக்கும் மேற்பட்ட ஐடி கம்பெனிகளை அணுகினார். தனது தலைவர் நேதாஜி என்பவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாகவும், அவருக்கு எதிரானவர்களின் பெயரைக் கெடுக்க, செய்திகள் பரப்ப வேண்டும் என்றும் சையத் தெரிவித்துள்ளார்".
"அவர் அணுகிய அனைத்து கம்பெனிகளுமே, ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், போலியாக பல அபிமானிகள் இருப்பதாக காட்டலாம். இதனால் எதிர்கட்சியினரின் நற்பெயர் கெடுப்பதைப் போல செய்திகளும் பரப்பலாம் என்றே கூறின".
 
பாஜக, மோடி...
"இந்த புலனாய்வில கிடைத்த தகவலின் படி, பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே, அதிக அளவில் சமூக வலைதளங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. அவருக்காக பல நிறுவனங்கள், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றன".
வெறும் நரேந்திர மோடியின் பெயர் மற்றுமே புலானய்வில் வெளியாகியதைப் பற்றி கேட்ட போது, நடந்த 5-6 புலான்ய்வு ஆபரேஷன்களில், அவரைப் பற்றித் தான் மீண்டும் மீண்டும் தெரிய வந்தது என்று அனிருத்தா கூறினார்.
"பலர், நாங்கள் குறிப்பிட்ட நபர்களைத் தாக்குகிறோமா எனக் கேட்கின்றனர். நாங்கள் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் இது சாதாரண விஷயமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மோசடி நடக்கிறபோது, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். அவ்வளவே. ஆனால், இந்த நிறுவனங்கள், வேறு எந்த கட்சிக்கும் வேலை செய்யவில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது".
எதிர்வினை பதிவுகளை அழித்தல், அரசியல்வாதிகள் இடும் பதிவுகளை பல பேர் விரும்புவது போல் மாற்றுதல், ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்குதல் எனப் பல சேவைகளையும் வழங்குவதாக, அந்த ஐடி கம்பெனிகள் தெரிவித்துள்ளன.
 
தடம் தெரியாமல்...
எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை மறைக்கும் வகையில், எதிராளியைப் பற்றிய தவறான பதிவுகள் இடுகையில், அவை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்ததாக பதிவெற்றப்படும். அதே போல, பயன்படுத்தப்படும் கணிணியின் பாகங்களும், பல கடைகளிலிருந்து வாங்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வேலை முடிந்த பின்னர் அழிக்கப்படும். இருக்கும் இடம் தெரியாமல் இருக்குமாறு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிராக்ஸி கோடுகள் மாற்றப்படும். இவை, தடம் தெரியாமல் இருக்க, அந்த கம்பெனிகள் பின்பற்றும் முறைகள்.
பஹால் மேலும் பேசுகையில், "சையத் அணுகும் போது, இந்த கம்பெனிகள், முஸ்லிம்களின் பெயரில் போலி அக்கவுன்டுகளை ஆரம்பித்து, அவர்கள் நேதாஜியைப் பற்றி நல்லவிதமாக பேசுவதைப் போலவும், அவர்கள் கட்சியின் புகழ்பாடும் வீடியோக்களை, யூடியூபில் பல பேர் பார்த்தது போன்று உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்" என்றார். 

தகவல் தொழில்நுட்ப சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம் உட்பட பல சட்டங்களை, இத்தகைய மோசடிகள் மீறுகின்றன. இவை அனைத்தும் தண்டைனக்குரியவை என்றும் பஹால் தெரிவித்தார். 

நன்றி: தி ஹிந்து

2 comments:

  1. எப்படியாவது ஜெய்க்கனும்னு வேலை செய்யிரானுங்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கூற்று முற்றிலும் உண்மை சகோ. ஆனால் சத்தியமே வெல்லும்!! இன் ஷா அல்லாஹ். பொய்யின் வெற்றி தற்காலிகமானது. சுகம் தர வல்லது. ஆனால், நிரந்தர வெற்றியே உண்மையான வெற்றி!! மன்னர்களின் மகிழ்வை விடவும், மக்களுக்கு எது நலவைத் தருமோ, அதுவே நிரந்தர வெற்றி. மீண்டும் வருக...

      Delete

உங்கள் கருத்துக்கள்...