இஸ்லாத்தின் பார்வையில்... | சர்வதேச இலஞ்ச எதிர்ப்பு தினம் | டிசம்பர் 9

Sunday, December 08, 2013 Anisha Yunus 4 Comments

ஒரு சமூகத்தின் தலைவன் அந்த சமூக மக்களின் ‘பணியாளன் - சேவகன்’ என்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்). தலைமை பதவியை ஏற்கின்ற ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான முதன்மைப் பண்பாகும் இது.

அதிலும் குறிப்பாய், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகின்ற ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என ஏனைய நபர்களுக்கும் கட்டாயம் இருந்தாக வேண்டிய உயரிய தகுதியாக ‘சேவை மனப்பான்மையை’ இஸ்லாம் மிக வலியுறுத்திச் சொல்கிறது.

நேர்மை, பொதுநலம் என்ற உறுதியான அடித்தளத்தின் மீதுதான் இஸ்லாமின் ஜனநாயக அரசியலை பெருமானார் (ஸல்) அவர்கள் இப்பூமிக்கு அர்ப்பணம் செய்தார்கள். இதற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆளுமைகள் சிறந்ததோர் சான்றாகும்.

இன்றோ??

தன் உரிமையை பெறுவதற்காக ஒரு குடிமகன் பணம் கொடுப்பதும், தன் கடமையைச் செய்ய வேண்டிய அரசாங்க ஊழியன் அதற்காக பணம் பெறுவதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

நிகழ்வு 1:

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.

உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகப்படுகிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவியின் பதில் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” எனக் கோபமாக சொல்கிறார்கள்.

அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிவர்த்தி செய்து தருமாறு அவைக்கு வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார் என சொன்னார்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் தன் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிறார்கள். எதுவும் பேச இயலாது, மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதை மக்கா மற்றும் மதீனாவின் இரண்டு பெண்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.

இந்த உமர் செய்த ஆட்சியைத்தான் நம் தேசத்தந்தை அண்ணல் மஹாத்மா நேசித்தார் என்பது உலகம் அறிந்த ஒன்றே.

சிறிய தலையணையில் என்ன நேர்ந்து விடப் போகிறது என் நாம் நினைக்கலாம். அற்ப பொருளுக்குக்கூட ஒரு ஆட்சியாளன், மக்கள் தலைவன் விலை போய் விடக் கூடாது என்பதே இதன் ஆழமான  தத்துவமாகும்.

அத்தோடு, இது போன்ற சிறிய பொருட்களிடமிருந்துதான் அனைத்து வித இலஞ்சத்திற்கும் அடித்தளம் அமைக்கப் படுகிறது. மக்கள் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களால் வசூலிக்கப்படுகின்ற பில்லியன் மதிப்பிலான பணப்பரிமாற்றங்களுக்கான ஊக்கம் இலஞ்சமாய் வழங்கப்படுகின்ற சொற்பக் காசுகளில் துவங்குகிறது.

இதன் விளைவுதான், நம் தேசத்தில் சமீபமாக அறியப்பட்ட பல அதிர்ச்சிகரமான லஞ்ச விவரப் பட்டியல்கள்...

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, 2010 காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு, ஆந்த்ராக்ஸ் தேவாஸ் ஒப்பந்தம், கோதாவரி படுகை எரிவாயு தோண்டுதலில் பிரச்சினை, தேசிய பொருள்கள் பரிமாற்ற சந்தையில் ஊழல், ஏர் இந்திய நிறுவன விமானக் கொள்முதலில் ஊழல், மற்றும் ஐ.பீ.எல் விளையாட்டில் ஊழல் என நீளுகின்ற இலஞ்சப் பட்டியல்கள். பல இன்றும் தீர்வு காண முடியாத தலைப்புச் செய்திகளாகவே இருக்கின்றன.

இப்படியான இக்கட்டான தருணத்தில், ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரின் நேர்மைத் தன்மையை இந்திய ஆளுமைப் பீடங்களின் செவிப் புலன்களுக்கு உரத்துச் சொல்வது அவசியமாகிறது.

நிகழ்வு 2:

இஸ்லாமியப் படை ஒன்று ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது துருக்கிஸ்தானை வெற்றி கொள்கிறது. அதிலே அவர்களுக்கு ஏராளமான பொருட்கள் பொக்கிஷமாகக் கிடைத்தது. வெற்றிக்களிப்பின் மிகுதியால் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனால், ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதைப் பயன்படுத்துவது கூடும் (ஹலால்) என்ற போதும், அன்பளிப்பை ஏற்க மறுத்தது மட்டுமின்றி, அதை விற்றுக்கிடைக்கின்ற பணத்தை இஸ்லாமிய அரசின் நிதி அமைச்சகத்தில் சேர்த்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

என்னவென்று சொல்வது?? முறையாக அரசுடைமையாக்கப்பட வேண்டிய நாட்டின் இயற்கை வளங்களில்  பெருமாபாலானவை ‘மக்க்ளின் பிரதிநிதி’ என்ற பெயரில் தனியொரு மனிதனின் பாக்கெட்டை நிரப்புவதற்காக மட்டுமே இன்று பயன்படுத்தப் படுகிறது. இது ஜனநாயக அரசியலின் இறையாண்மயைக் குழி தோண்டிப் புதைத்து விடுவதற்கான அடையாளமாகும்.

ஆங்கிலேயனின் பிடியிலிருந்து மீண்டோம். ஆனால், காலனிய ஆட்சியில், பரவலாகக் காணப்பட்ட  சகல விதமான  கையூட்டுப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாமல்  இன்று வரை ஊழலுக்கு நம் தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

இந்த நிலையில் நம் தேசம் பூரண சுய ராஜ்ஜியத்தை பெற்று விட்டதாய் நாம் பெருமையோடு மார் தட்டிக்கொள்கிறோம்.

நிகழ்வு 3:

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி)  அவர்கள் ஹஜ்ரத் உமரைப் போன்றே இஸ்லாமிய ஜனாதிபதிகளில் மிகப் பிரசித்தி பெற்றவர்கள். ஜனாதிபதியான ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி) திடீரென ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஓர் சிறிய ஆசை. ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை.

அவர்களின் சகாக்களுடன் இருந்தபோது ஒரு கூடை ஆப்பிள் அன்பழிப்பு செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு ஆப்பிளை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். “ஏன்... சாப்பிடவில்லையா..?” எனக் கேட்கப்படுகிறது.

பெருமானார் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி), ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கும் இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிடுகிறார்கள்.

மக்கள் பணியான அரசியல் தெய்வீகமானது. பொது நல சேவை நோக்கத்தோடு இருக்க வேண்டிய பக்திமயமான அரசியலை இலஞ்சத்தால் கறை படிந்த கரத்தால் களங்கம் செய்து விடக் கூடாது என்பதில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகின்றது.

ஊழலின் காரணத்தால் ஜனநாயக தேசத்தின் அரசியல் நிலைத்தன்மை, அதன் சமத்துவம், இறையாண்மை ஒரு கடைச்சரக்காகி விட்டது. மேலும் அந்த சமூக மக்களின் தூய்மைக்குணமும், ஒழுக்கச் சிந்தனையும், நேர்மையான பார்வையும், விலை மாதரைப் போல் களங்கப்பட்டு நிற்கிறது.

வெகுஜன மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பெருமளவில் பாதித்துள்ளது. அத்தோடு வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளியதோடு மட்டுமின்றி நாட்டின் மொத்த உற்பத்தி(ஜி.டி.பி)யிலும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது, என ஊழலால் ஏற்படுகின்ற பாதிப்பை விவரித்துக் கொண்டே போக முடியும்.

இது மாதிரியான அவல நிலையை ஏற்படுத்துகின்ற ஊழல் பேர்வழிகளை இஸ்லாம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இதனால்தானோ என்னவோ பெருமானார் (ஸல்) அவர்கள் ‘இலஞ்சம் கொடுப்பவனும், இலஞ்சம் பெறுபவனும் நாசமாகட்டும்’ என சபித்துள்ளார்கள்.

பேரம் பேசுவதும், பணத்தைக் கொடுப்பதும் இன்றைய ஊழல் அரசியலோடு ‘நகமும் - சதையும்’ ஆக பின்னிப்பிணைந்த பிரிக்க முடியாத கலாசாரமாகி விட்டது என்பது மட்டுமல்ல. அந்தப் பேரத்தில் வெற்றி பெறுபவன் ஒரு ‘அரசியல் சாணக்கியனாகவும்’, தோல்வியுறுபவன் ‘பிழைக்கத் தெரியாதவனாகவும்’ விமர்சிக்கப்படுகின்றான்.

நிகழ்வு 4:

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களை கைபர் பகுதியில் வசிக்கும் யஹூதிகளிடம் பேரீத்தம்பழ அறுவடையில் கிடைப்பவற்றில் தோராயமாகக் கணக்கிட்டு வரியை வசூல் செய்வதற்காக நாயகம் (ஸல்) அவர்கள் நியமனம் செய்து அனுப்புகிறார்கள்.

வரி வசூல் செய்வதற்காக சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களிடம், நாங்கள் செலுத்த வேண்டிய வரியில் சற்றுக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள், நாங்கள் தருவதை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், அதற்குப் பதிலாக அந்துல்லாஹ்வே இந்த ஆபரணங்களை முழுமையாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என தங்கள் பெண்களின் தங்க ஆபரணங்களை இலஞ்சமாக தருவது குறித்துப் பேசுகிறார்கள்.

இலஞ்சத்தை வாங்கிக்கொண்டு உங்கள் வரியில் என்னை சமரசம் செய்யச் சொல்கிறீர்கள், இறைவனின் மீது சத்தியமாக அதை நான் செய்யமாட்டேன் என மறுத்து விட்டார்கள், என்பது வரலாறு.

இப்படியாய் இஸ்லாமிய ஆட்சியாளர்களை பின்பற்றி அரசாங்கத்திடம் அடிமட்டம் தொடங்கி மேல்மட்டம் வரைக்கும் ‘நேர்மையான பொதுநல ஊழியனாக’,   ‘சேவை செய்ய மட்டுமே’ ஆசைப்படுகிற புனிதர்களின் தேர்தல் வெற்றிதான் - இலஞ்சம் இல்லாத உலகம் இயங்குவதற்கான ஆரம்பமாகும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

மௌலவி எம்.ஏ.முஹம்மத் லுத்ஃபுல்லாஹ் பிலாலி, பள்ளபட்டி. 

| தினத்தந்தி ஆன்மீக மலர் | 3/12/2013

* (ஸல்) -  ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் 
| இறைவனின் சாந்தி அவரின் மீது உண்டாகட்டும்.

*(ரலி) - ரலியல்லாஹு அன்ஹூ
| இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்ளட்டும்.

4 comments:

  1. வணக்கம்

    ஆசைப்படுகிற புனிதர்களின் தேர்தல் வெற்றிதான் - இலஞ்சம் இல்லாத உலகம் இயங்குவதற்கான ஆரம்பமாகும்...

    தலைப்பு பற்றி அலசிய விதம் அருமை .. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரூபன். இணையத்தில் அதிகம் இருக்க இயலாததால் மற்ற வலைப்பூக்களைப் பார்ப்பது கடினமாக இருக்கின்றது. நேரம் கிடைக்கும்போது பார்வையிடுகிறேன்.

      நன்றி... :)

      Delete
  2. பல இஸ்லாமிய வரலாறுகள் தெரிந்து கொண்டேன். சமூகக் கொடுமைகள், லஞ்சம் உட்பட, பலவற்றிற்கு எதிரான கொள்கைகள் கொண்டதால் தான் இஸ்லாம் சிலரால் ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் பானு.... இஸ்லாமிய விழுமியங்கள் மனிதனை மிருகமாவதிலிருந்தும் தடுக்கின்றன.... ஆனால் தற்கால மனிதனோ, கற்கால மனிதனை விடவும் மோசமான மனநிலையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளான்... இறைவனே போதுமானவன்.

      Delete

உங்கள் கருத்துக்கள்...