வாழ்வென்னும் நதி....
கூழாங்கற்களைத் துழாவிச் செல்லும்
நதி போல் நகர்கிறது வாழ்வு;
இறந்த காலத்தையும்
இறந்து கொண்டிருக்கும் காலத்தையும்
தழுவித் தழுவி
மெய் மறந்தவாறே...
நீள் வானத்தின்
நீலத்தை போர்த்தியவாறு
உறங்கிப் போகின்றன
நதியின் மீன்கள்;
கல் விழும் சப்தமும்
எழாமலே உறங்கும்
கனமான நிசப்தத்துடன்
கை கோர்த்தவாறே....
இக்கரையில்
நின்று கொண்டுள்ளேன் நான்,
சிப்பிகளையும் முத்துக்களையும்
மணலோடு மணலாக்கி விட்டு
உடைந்து போன ஓடுகளையும்
செல்லரித்துப் போன
சங்குகளையும்
காற்சட்டையின் பாக்கெட்டில்
நிரப்பியவாறும்
பனி விலகும் முன்
பறித்த இளம்புல்லைப்
போல் மிளிரும்
புன்னகையோடும்;
பட்டாம்பூச்சிகளை
கண்களில்
சிறைபிடித்தவாறு...
எந்நேரமும் வரக்கூடும்
அந்தப் படகோட்டி;
நேற்றைய தினம் போல
அந்தி சாயும் வரை
தரிசனம் தராமலே
போபவனல்ல அவன்;
அதற்கும் முந்தைய தினம் போல
இருள் கவியும் வரை
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடுபவனும் அல்ல;
எந்நேரமும் வரக்கூடும்,
கிழிந்த சட்டையிலிருந்து
சிதறிக்கொண்டிருக்கும்
ஒரு புன்னகையை
சிநேகத்துடன் எனக்காகவும்
கொண்டு வந்துகொண்டிருக்கக்கூடும்;
இன்னும் காத்திருக்கிறேன்...
அவனுக்குத் தெரியும்
நான்
தினமும் காத்திருப்பது;
நிலவிலும் பகலிலும்
கசகசவென ஈரம் ஒட்டிக்கொள்ளும்
வியர்வையிலும்
குளிரிலும்
என்னுடைய தவம் கலையாமலே
காத்திருப்பேன்
எனப் புரிந்தவன் அவன்;
உன்னைச் சந்திப்பதில்
என்னை விடவும்
ஆனந்தம் கொள்வது
அவனாகத்தான் இருக்கக்கூடும்;
என்றேனும் கேட்கக்கூடும்,
அவனும்
உன் பெயரை,
உன் இருப்பிடத்தை,
உன் இருப்பைப் பற்றி;
எனினும்
பழங்களைப் பறிக்காமலே
தோட்டக்காரனிடம் சிக்கிக்கொண்ட
ஊமை போல்
கரை கடந்து
அதிர்கிறது
என் மௌனம்;
அத்துவானக் காட்டில்
நனைந்த இறக்கைகளை
உதறும் குருவி போல்
நடுங்குகின்றது
என் மனம்;
உன்னைப் பற்றிய
எல்லாமும்
என்னுள் நிறைந்து
போயுள்ளது;
நீயாகிப் போயுள்ளேன்
நான்;
உன்னைச் சந்திப்பதை விடவும்
உன்னைப் பாதுகாப்பது
அதி முக்கியமாகிப் போகின்றது எனக்கு;
என்றைக்கும் போல
இன்றைக்கும்
விரைந்து
வீடு திரும்புகின்றேன்;
அலைகளில்
மோதியவாறே
உரக்கப் பாடி வரும்
படகோட்டியின் பாடல்
நெஞ்சை வருடுகின்றது;
#Deepதீ
0 comments:
உங்கள் கருத்துக்கள்...