ஒரு கொலைகாரனின் பேட்டி - 3 (உண்மைச் சம்பவம்)

Sunday, April 17, 2011 Anisha Yunus 4 Comments

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....சகோதரரே... நான் செய்த அந்த மாபாதக செயலைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும்...
...உங்களுக்கு தெரிந்ததுதான். உங்கள் தந்தை, மௌலானா சாஹேப் ஹீறாவை தில்லியில் உள்ள அவரின் தங்கையின் வீட்டிற்கு சில காலம் அனுப்பி வைத்தார். அங்கே தாயின் அன்பிற்கு சிறிதும் குறைவில்லாமல் அவளை நல் முறையில் கவனித்துக் கொண்டனர் உங்கள் அத்தையும், நாநியும் (அம்மாவின் அம்மா). ஆனால் ஒரு இரவில் ஹீறாவிற்கு அவளின் தாய் இறந்து விட்டதாக கனவு வந்தது. அவளின் தாய் மிகுந்த நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்ததாலும், ஹீறா தன் தாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாலும் அவளால் அந்த கனவு கண்ட பின் அங்கே இருக்க முடியவில்லை. தன் தாயை காணும் ஆவல் அதிகமானதால் காலையில் மௌலானாவிடம் அழுது தன் தாயை சந்திக்க அனுமதி கேட்டாள். ஆனால் மௌலானவும் உங்கள் அத்தையும், அவள் திரும்பி சென்றால் அவளின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று அந்த யோசனையை ஏற்கவில்லை. ஆனால் அவளின் அழுகையுடன் கடந்த நாட்களையும் தாயையே எண்ணி கலங்கிய விழிகளையும் கண்டு அவளை திரும்ப புதானாவிற்கு அனுப்ப சம்மதித்தனர். மௌலானா சாஹேப் அவர்கள், ஹீறாவை அழைத்து தன் குடும்பத்தினரை ‘தாவாஹ்’ (இஸ்லாத்தின் பால் அழைத்தல்) செய்ய மட்டும், அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் அவள் அங்கு செல்லலாம் என்றும், அப்படி செல்வதற்கு முன் இரண்டு ரக்-அத் தொழுகையை தொழுது, அல்லாஹ்விடம் இறைஞ்சிய பின் கிளம்புமாறு கூறிவிட்டார். தன் வீட்டினர் எப்பொழுதும் இஸ்லாத்தை ஏற்கவே மாட்டார்கள், இஸ்லாத்தை அவர்கள் மிகவும் வெறுக்கிறார்கள் என்றதும், அவளின் ‘தாவாஹ்’வில் வெற்றி பெறவும் இரண்டு ரக்-அத் தொழுதிட சொன்னார்கள். அதோடு நிக்காமல் மௌலானா சாஹேப் ஹீறாவிடம் பொறுமையுடன் செயல்படும்படியும், அவளின் உயிர் இதில் போனாலும் அது அவளுக்கு ‘ஷஹீத்’ (இஸ்லாத்திற்காக தன் உயிரை விட்டவர்களை  - வீரமரணம் எய்தியவர் என்ற பெயர்) அந்தஸ்து கிட்டும் என்று கூறி அவளை புதானாவிற்கு அனுப்பி வைத்தார். இதெல்லாம் அவள் வீட்டிற்கு வந்த பின் எங்களிடம் கூறியது.

ஹீறா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். நான் அவளை கண்டதும், அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்து, அவளை வீட்டை விட்டு போகும்படி சொல்லி விட்டேன். ஹீறா சற்றும் தளராமல், தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், ஒரு முஸ்லிமாக அவள் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறினாள். அவளின் தாய்ப்பாசத்திற்காகவும், சிறிது நாட்களில் அவள் மனதை குடும்பத்தினர் மாற்றி விடலாம் என்ற யோசனையாலும் அவளை வீட்டினுள் மீண்டும் அனுமதித்தோம். இரண்டே மாதத்தில் அவள் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்குகளை ஹீறா மிகவும் எதிர்த்தாள். தன் தாய் தன் முன் ‘கலிமா’ {அல்லாஹ் மட்டுமே இறைவன், முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதை உறுதி கூறுவது} சொல்லிவிட்டார் என்றும் கூறி, அவரை புதைக்கத்தான் வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினாள். நான் ஒரு அரக்கன், அதை மறுத்து என் அண்ணனின் மனைவியின் சடலத்தை எரித்தோம்..எங்களாலும் என்ன செய்திருக்க முடியும், அவரை புதைப்பது என்பது நடவாத காரியம், அப்போது...”

(மீண்டும் அழுகிறார்)

“அதன் பின்னும் வீட்டில் தன் மற்ற சகோதரர்களையும், சகோதரிகளையும் சில சமயங்களில் அவளின் தந்தையையும் இஸ்லாத்திற்கு மாற சொல்லி சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவளின் தொல்லை தாங்க இயலாமல் மீரட்டிலிருக்கும் அவளின் அத்தை வீட்டிற்கு சிறிது நாளுக்காக அனுப்பி வைத்தோம். அங்கேயிருந்தும் சிறிது நாட்களில் அவளின் மாமா எங்களை கூப்பிட்டனுப்பி, ‘இந்த அதர்மத்தை இங்கேயிருந்து கொண்டு செல்லுங்கள், தினம் தினம் கொடுமையாய் இருக்கிறது’ என்ற காரணம் கூறி, இனியும் வீட்டில் இந்த பெண்ணை வைத்திருக்க முடியாது என்றனுப்பி விட்டனர். நாங்களும் எங்களால் இயன்ற வரை அவளை இந்த பிடியிலிருந்து கொண்டு வர முயன்றோம். முடியாமல் போனதில், என்னுடைய பஜ்ரங்தள் கூட்டாளிகளிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் இது இன்னும் மற்றவர்களிடம் பரவாமல் இருக்க, அவளை கொன்று விட கூறினர். அவளை திரும்ப புதானாவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு ஒரு நாள் சென்று புதானாவில் உள்ள ஒரு நதியின் அருகில் 5 அடி உயரமுள்ள ஒரு குழியை தயார் செய்து விட்டு வந்தேன்....”

(குரல் நடுங்குகிறது)

“... நானும் என் அண்ணனும், அதாவது ஹீறாவின் தந்தையும் அவளை ஊருக்கு, அவளின் பெரியம்மா வீட்டிற்கு செல்லலாம் வா என்று கூறினோம். அவளுக்கு ஒரு வேளை கனவில் நடக்கப்போகின்றத் தெரிந்துவிட்டதா என்னவென்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுங்கள் சித்தப்பா.. நான் என் கடைசி தொழுகையை தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறினாள்....”

(மீண்டும் விசும்புகிறார்)

”...கடைசி தொழுகையாவது படிக்க விடுங்கள் என்றாள்..நாங்களும் பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதி தந்தோம். உடனே குளித்து, தொழுது, அழகிய உடைகளை அணிந்து கொண்டு, நகைகளையும் அணிந்து மணப்பெண்ணைப்போல அவள் தயாரானாள். நாங்கள் அவளைக் கூட்டிக்கொண்டு நடந்த போது, வழியில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அப்பொழுதும் அவள், பெரியம்மா வீட்டு பாதை இதுவல்லவே என்று எங்களைக் கேட்கவேயில்லை, சந்தோஷமாக எங்களுடன் வந்தாள். நதிக்கருகில் சென்ற பின், சிரித்தவாறே சென்று என் அண்ணனிடம், “அப்பா... என்னை பூவா (பெரியம்மா) வீட்டிற்கு கூட்டிப் போகிறேன் என்றுதானே கூறினீர்கள். பூவா வீட்டிற்கா அல்லது ’பிஹா’ வீட்டிற்கா (பிஹா - மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைப்பது)” என்று சிரித்தவாறே கேட்டாள்..."

(அழுகிறார்... தண்ணீர் கொடுக்கப்படுகிறது...)
  


“ஹ்ம்ம்...பூர்த்தி செய்யுங்கள் அப்துல்லாஹ் பாய், அதன் பின் என்ன நடந்தது..?"

( அப்துல்லாஹ் விசும்புகிறார் ...)

"எப்படி முடிப்பேன் இந்த கதையை.... முடித்துத் தானே ஆக வேண்டும்? ..."
...
...
"சிரித்துக் கொண்டே நின்றிருந்தவளை நான் அந்த குழியில் தள்ளி விட்டேன். என் அண்ணன் அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். அரக்கனை விடவும் கொடியவனான இந்த சித்தப்பா, பூவிலும் மென்மையான அந்தப் பெண்ணை குழியில், இதே கைகளால் தள்ளினேன்...."

(மீண்டும்  அழும் ஓசை கேட்கிறது)
"... நான் வைத்திருந்த பையில் ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தது. அதை அவள் மேல் ஊற்றினேன். தீப் பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசினேன். .."

(அழுகிறார்)

"...எங்களை நரகத்திலிருந்து காப்பது இருக்கட்டும். முதலில் நரகத்தின் தீயை நீ சுவைத்துப் பார் என்றவாறே அந்த பிஞ்சின் மேல் தீக் குச்சியை வீசினேன். புதிய ஆடை அவள் அணிந்திருந்ததால்  அதில் தீ எளிதில் பற்றிக் கொண்டது.தீ பற்றியவுடன் கீழே விழுந்திருந்த அவள் எழுந்து நின்று விட்டாள்...."
...
...
...
"... எழுந்து நின்று வானை நோக்கி கைகளை உயர்த்தி "யா அல்லாஹ் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்தானே.. இந்த ஹீராவை காண்கிறாய்தானே ... யா அல்லாஹ் பாறைக்குள்ளிருக்கும் வைரத்தையே காண்பவன் இந்த ஹீராவை பார்க்கிறாய்தானே ? யா அல்லாஹ் நீ என்னை மன்னிப்பாயா... என்னை ஏற்றுக் கொள்வாயா? ....என்று கேட்க ஆரம்பித்தாள்"

(அடக்க முடியாமல் அழுகை தொடர்கிறது )


“...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் "என்று உயர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே இருந்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அண்ணனோ அழுது கொண்டே என்னிடம், "இன்னும் ஒரு முறை அவளிடம் பேசிப் பார்த்திருக்கலாமே... நாம் நல்லபடி சொல்லியிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பாளே" என்றார்.   எனக்கு இம்முறை அவரின் மேல் கோபம் வந்தது. விடுவிடுவென்று அவரை இழுத்துக் கொண்டு நடந்தேன். குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...."

(அவரின் அழுகை நிற்கும் வரை பொறுத்திருந்து தண்ணீர் மீண்டும் தரப் படுகிறது)

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் மாற்றி விட்டார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன். இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாக்ஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமிய கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."


(பகுதி -4)
.

4 comments:

  1. நடுநடுங்க வைக்கின்றன சம்பவங்கள். வாசிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, செய்த அவர் எப்படியொரு குற்றவுணர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருப்பார்?

    ReplyDelete
  2. அன்னு பகிர்வுக்கு நன்றி..முழுக்கதையையும் தொடர்ந்து எழுதி முடியுங்கள்..

    ReplyDelete
  3. நம் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக.

    "...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்..." ---அந்நேரத்திலும் தாஃவா..! ஈமானின் பலம்..! நெருப்பு எம்மாத்திரம்..!

    "குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...." ---இன்னாலில்லாஹி...

    "யா அல்லாஹ், நீ என்னை மன்னிப்பாயா... என்னை ஏற்றுக் கொள்வாயா?" ---இறைவா, அவருக்கு மறுமையில் அருள்புரிந்து, அந்த சகோதரி கேட்ட பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பாயாக..!

    தமிழில் பகிர்ந்துகொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி சகோ.அன்னு.

    ReplyDelete
  4. @ஹுஸைனம்மா,
    சரியாக சொன்னீர்கள். ஒரு பத்து ரூபாயை கடையில் தர மறந்து விட்டாலோ, அல்லது தெரியாமல் யாருக்கேனும் அடிபட்டு விட்டாலோ நம்மால் எப்படி அதை மறக்க முடியும், முள்ளாக குத்திக் கொண்டேயிருக்கும். அவரோ இதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதே இறைவனின் கருணை.
    நன்றி :)

    @ஆஸியாக்கா,
    கண்டிப்பாக. இன்னும் ஒரு பாகம்தான். படியுங்கள். மற்றவருக்கும் படிக்க குடுங்கள்.
    நன்றி :)

    @முஹம்மது ஆஷிக் பாய்,
    ஹ்ம்ம்... சமையலின்போது சிறிதே சுட்டுவிட்டாலும் நாம் அல்லாஹ்வைத் தவிர மற்ற எல்லோரையும் கூப்பிடுகிறோம். ஆனால் அந்த சின்னப்பெண் அந்த நேரத்திலும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரும் மறுமையின் நெருப்பில் சிக்கக்கூடாது என்பதையே நினைவில் வைத்திருந்திருக்கிறார். நமக்கும் அல்லாஹ் அது போன்ற ஈமானை தர வேண்டும். ஆமீன்.

    நன்றி :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...