எனக்காக நீங்கள் பேசுவீர்கள்தானே??

Monday, August 03, 2015 Anisha Yunus 0 Comments

இது டீஸ்டாவிற்காக -- ஸலீல் த்ரிபாதியிடமிருந்து
-------------------------------------------------------------------------------------------
டீஸ்டாவிற்கும்,
இந்தியாவை இந்தியாவாக
நிலைபெறச் செய்ய அரும்பாடு படும்
ஆன்மாக்களுக்காகவும்...
===========================


.
முதலில் அவர்கள் சஞ்சீவ்பட்டின் பின் சென்றார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் போலீஸ் அல்லவே.


பின் ஆஸாராம் வழக்கின் சாட்சிகள்
ஒவ்வொருவராய் மாண்டு போனார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் எந்த துறவியின் சீடனும் அல்லவே.

பின் வியாபம் வழக்கின் சாட்சிகளும்
காணாமல் போக ஆரம்பித்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் மத்தியப் பிரதேசத்திலா வசிக்கின்றேன்??

பின்னர் அவர்கள் மாயா கோத்னானியை
பெயிலில் விட்டார்கள்,
நான் எதுவும் கூறவில்லை..
அந்தப் பெண்மணி என்னை எதுவும் செய்ததில்லையே.

பின்னர் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருந்த
ஒவ்வொரு ஹிந்துவின் கோப்பும் பின்வாங்க ஆரம்பித்தது...
நான் எதுவும் கூறவில்லை..
ஹிந்துக்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லரே,
பின் அவர்கள் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்??

பின் அவர்கள் மாநிலத்தில் மாட்டுக்கறியை தடை செய்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
சிவப்பிறைச்சி உடலுக்கு உகந்ததல்ல.... தெரியும்தானே??

பின்னர் அவர்கள் ‘வீடு திரும்புதல்’ என கூச்சலிட்டார்கள்...
பிரதமர் அவ்வப்போது இந்தியாவிற்கே திரும்பி வருவதைத்தான்
அப்படிக் கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

பின்னர் அவர்கள் க்ரீன்பீஸின் வங்கிக்கணக்குகளை
உறையச் செய்தார்கள்...
நான் நினைத்துக்கொண்டேன்....
இந்தியா வளர வேண்டியுள்ளது அல்லவா,
க்ரீன்பீஸினால் இந்திய வளர்ச்சி
தடைபட அல்லவா செய்கின்றது??

பின்னர் அவர்கள் பிரியா பிள்ளை
விமானமேறுவதிலிருந்தும் தடுத்தார்கள்...
நான் நினைத்தேன்...
அஹ்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இந்தியாவிற்கு எதிராகப் பேச அவள்
ஏன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டா செடல்வாதை
கைது செய்ய முனைந்தார்கள்...
நான் அதைக் கண்காணாது இருந்து விட்டேன்...
உயர் நீதி மன்றமே, அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறிவிட்டதுதானே...
பின் நாம் ஏன் வருந்த வேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டாவின் வீட்டை ரெய்டு செய்தார்கள்...
நிச்சயம் அவளிடம் மறைப்பதற்கான
ஏதோ ஒன்று இருக்கின்றது...
இல்லையென்றால் ஏன் அவள்
எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை?????

என்றேனும் ஓர் நாள்,
அவர்கள் எனக்காகவும் வரக்கூடும்,
அவர்கள் சொல்கிறார்கள்....

ஹ ஹா..
அவர்கள் சொல்வது
நகைப்புக்குரியது;
இந்தியா,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் அல்லவா...
இதொன்றும் ஆதிக்க சக்திகளின்
கைப்பாவைக் குடியரசா என்ன??

நான் தவறாது வரி
கட்டுகிறேன்...
ஆதார் அட்டையும்
என்னிடம் உண்டு...
நாள் தவறாமல்
யோகாவும்
செய்பவன்.

ஆனாலும்,
அவர்கள் வந்தால்,
எனக்காக நீங்கள்
பேசுவீர்கள்தானே??
.
 8/2/2015

This is a translation of an English poem dedicated to Teesta Setelvad. 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...