தனிமையின் நூர் வருடங்கள்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 0 Comments


...இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என் மனம் கவர்ந்த தோப்பில் மீரான் சாஹிபின் மொழியாக்கத்தில் வெளி வந்திருக்கும் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. மூன்று கதைகளை முடித்தாயிற்று. மிகவும் பிடித்த, அல்லது மிகவும் இரசிக்கும் நடை கொண்ட எழுத்தாளர்களை வாசிப்பதென்பது மனதுக்கு தெம்பூட்டுவது. இன்னாரின் எழுத்து இது என்று எதுவும் சொல்லாமலே ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துத் தாருங்கள்.... அது இன்னாருடையதுதான் என அறிந்து கொள்ளும், புதிர் விளங்கும் கணம் மிகவும் அழகியது. அப்படித்தான் இந்த தொகுப்பிலும் மொழியாக்கம்தான் செய்திருக்கிறார் எனும்போதும் தனக்கே உரிய அழகியலில் மொழி பெயர்த்துள்ளது அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

மீரான் சாஹிபின் முக்கியமான முத்திரை என நான் கருதுவது, கதையின் மைய நீரோட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பி, அந்தக் கேள்விக்கான பதிலை சூட்சுமமாக கதையின் கடைசிப் பகுதியில் வைத்து, பின்பும் ஒற்றை பதிலுடன் அதனை முடிக்காமல், வாசகனை அங்கலாய்க்க விடுவது. I am Loving it. முதல் கதையிலும் இரண்டாம் கதையின் முடிவிலும் மிகவும் ரசித்த டச் அது.

க்ஹைர்.... ஆரம்பக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பும். ‘தனிமையின் நூர் வருடங்கள்’. கே.ஆர்.மீரா அவர்களின் சிறுகதை. மிகவும் சிறிய கதைதான். ஒரு கைதிக்கும், ஒரு ஊனமுற்ற பெண்ணுக்கும் நடுவில் பிறக்கும் காதல் பற்றியது. அவனின் மன ஊனத்தைப் பற்றியும், அவளின் சுதந்திர வானைப் பற்றியுமான கதை. 3,4 முறை வாசித்த பின்னும் அடுத்த கதைக்கு செல்ல இயலவில்லை. கதையின் போக்கை விடவும், கதையின் போக்கில் சென்று ஆணின் மனதைப் போட்டுடைத்ததன் தாக்கம் ஆழமானது. முழு கதையிலும் அந்த உளவியலே விரட்டிக்கொண்டு வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரைத் தவிர்த்து மற்றெல்லா ஆண்களுமே இவ்வுலகில் இப்படித்தான் இருக்கக்கூடும் எனக் கட்டியம் கட்டியது, இவ்வரிகளே.

//அவனுடைய மனசில் பெண் எனும் சொல்லிற்கு ஒரு பொருள்தானிருந்தது. மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு.//
சத்தியமான வரிகள்தான் இல்லையா....
.
.
...இன்னும் வாசிக்க மீதம் இருக்கின்றது.
...இன்னும் கற்றுக்கொள்ள மீதம் இருக்கின்றது.
...இன்னும் பயணிக்க நெடுந்தொலைவு இருக்கின்றது.

‪#‎தோப்பில்_முஹம்மது_மீரான்‬
‪#‎மலையாள_சிறுகதைகள்‬
‪#‎தனிமையின்நூர்வருடங்கள்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...