இரண்டாம் ஜாமத்துக் கதை | கவிஞர் சல்மா

Monday, August 10, 2015 Anisha Yunus 0 Comments

.
குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
 

என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான் 
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைத்தொகுப்பு

-முகநூலில் படித்தது.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...