அது ஒரு கனாக்காலம்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments


.
அப்பாவின் வெஸ்பா வருவதற்குள்
பள்ளிக்கு எதிரில் இருக்கும் நூலகத்தில் நுழைந்து
புத்தகப் பாற்கடலில்
தொலைந்து போனதொரு
கனாக்காலம்....

.
அடுத்தாற்போல் இருக்கும் பள்ளிவாசலில்
தென்னைமரங்கள் வழியோடி
ஹௌழில் மீன்களுக்கு
பொரியை வாரி
இறைத்ததொரு
கனாக்காலம்....

.
மூடியிருக்கும் ரயில்வே கேட்டுக்குள் புகுந்தும்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தும்
இரு கைகள் விரித்தபடி,
இரு கண்கள் மூடியபடி
இரு கால்களையும் சமணமிட்டு
இரு தரப்பையும் கண்களில்
அள்ளிக்கொண்டு
சைக்கிளில் கல்விச்சாலைக்கு
சிட்டாய்ப் பறந்ததொரு
கனாக்காலம்....

.
சுடும் நவாப்பழத்தையும்
சுடாத வேப்பம்பழத்தையும்
பாவாடையில் கட்டிக்கொண்டு
ஆகப்பெரும் சொத்தாக
பாவித்ததொரு
கனாக்காலம்...

.
மழைக்கும் முன்னரே கிழிந்து நிற்கும்
நோட்டுப்புத்தகங்களை
மழை நீரில் கப்பலாக்க வேண்டி
இன்னும் கிழித்ததொரு
கனாக்காலம்...

.
நாக்கில் தடவி எண்ணிய நோட்டுக்களும்,
கடையிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும்
ஆலாய்ப்பறந்து மூக்கினை உள்விட்டு உள்வாங்கிய
புத்தம்புது பாடப்புத்தகங்களும்,
இம்முறை Camelஆ, Camlinஆ,, Natrajஆ, Foreignஆ
என அங்கலாய்க்க வைத்த
ஜாமெட்ரி பாக்ஸ்களும்,
தொட்டால் அப்பும் எண்ணெயில் மூழ்கிய
இரட்டைப் பின்னல்களும்,
குழலிலேயே மலர்ந்ததோ எனும் அழகில்
பூத்துக்குலுங்கிய ஜாதிமல்லியும், டிசம்பர்களும்
நிறைந்தும் நிறையாத நினைவுகளைப் பரிசளித்ததொரு
கனாக்காலம்...

.
நகர்கின்ற இயந்திரவாழ்வில்
இனிக்கும் காயங்களாய்
இழந்த சுகங்களை இன்னும் இன்னும்
நினைவுக்கூடுகளில்
அள்ளி இறைத்தபடி
பொங்கிக்கொண்டே இருக்கின்றது
எந்தன் கனாக்காலம்....

.
இறந்தது மட்டுமா....
இன்னும் வர வேண்டியதுமே
அப்படித்தான் எனச்
சிரித்தபடி நகர்கிறது
வாழ்வெனும்
கனாக்காலம்.....


#‎அது_ஒரு__கனா_காலம்‬
‪#‎சிறகுகள்‬ குழுமத்திற்காக...
‪#‎நான்‬

2 comments:

உங்கள் கருத்துக்கள்...