பாலஸ்தீன வாழ்க்கையின் பக்கங்கள் சில....

Wednesday, December 05, 2012 Anisha Yunus 7 Comments

பாலஸ்தீன். இந்த மக்களைப் பற்றி சமூக தொடர்புகள் அதிகம் உருவான இந்தக் காலத்தில்தான் நாம் அறியப்பெற்று வருகிறோம்.... ஆனால் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் தமிழ் மொழி போல நம் கற்பனைக்கும் எட்டாத காலத்திலிருந்து வாழ்வைப் பறி கொடுத்துள்ளனர். இன்னும் கொடுக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதும், நாடாளும் அரசாங்கம் இன்றி, குடிமக்களின் தேவைகளுக்கு பதில் இன்றியும், வரைமுறையற்ற வாழ்வை அம்மனிதர்கள் வாழ்கின்றனர்.... நாளை என்னும் நம்பிக்கையுமின்றி....
அன்னா பால்ட்ஸர். ஒரு யூத - அமெரிக்கப் பெண். நம்மில் வாழும் 95% மக்களைப் போலவே இஸ்ரேல் ஒரு பாதிக்கப்பட்ட, தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்ள கஷ்டப்படும் நாடு, அண்டை நாட்டில் உள்ள யூத வெறுப்பு அரபிகளால் பாதிக்கப்படும் நாடு -- என்னும் கண்ணாடியின் மூலமே உலகைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்.... 2003 வரை. 
மத்தியகிழக்கு நாடுகளில் ஒரு சுற்றுப்பயணத்தில் பாலஸ்தீன அகதிகளை சந்திக்கிறார். அவர்களின் மூலம் அத்தனை வருடங்களும் கல்வியறிவிருந்தும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். அன்றிலிருந்து இன்று வரை உலக மக்களுக்கு, குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு உண்மையை உரக்கக்கூறும் பணியை செய்து வருகிறார். அவரின் தளத்திலிருந்து மெய்யான, துயர் மிகுந்த பாலஸ்தீன வாழ்க்கையின் பக்கங்கள் சில....

 # பாலஸ்தீன குடும்பங்கள் இன்றும் கூட்டுக்குடும்ப வாழ்வைப் போற்றிப் பாதுகாத்து வருபவை. அதிகமான வீடுகள் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டு, ஒரேயொரு சுவரை தடுப்பாக வைத்து வாழ்பவை. காலியான ஷெல்களையும், குண்டுகளையும் பிள்ளைகளுக்கு பொம்மைகளாய் பரிசளிப்பவை. உங்கள் வீட்டு டாய்லெட்டை லேட்டஸ்ட்டாக மாற்ற முடிவு செய்துவிட்டீர்களா... அங்கே திரைச்சீலையினால் மறைக்கப்பட்ட சுவற்றின் ஓரம் இருக்கும் ஒரு குழிதான் கழிவறை. ஒற்றை அறையில் குழந்தைகளும், எந்த நிமிடமும் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பு அளவிற்கேயான சாமான்களும், தயாராய் இருக்கும் கஃபன் துணிகளும்தான் வாழ்க்கை...


# பால்காரரோ, பேப்பர்காரரோ வந்து எழுப்புவதில்லை யாரையும், ஒரு குண்டு வெடிப்பின் ஓசையில் தூங்க ஆரம்பிக்கிறார்கள், அடுத்த வெடிப்பு நிகழும் வரை. பயந்து அழும் வயதான தாயையும், கைக்குழந்தையையும் சமாதானப்படுத்துகிறார்கள்,பெரிதாய் ஒன்றுமில்லை அம்மா தூங்குங்கள்.... F16 போலத்தான் தெரிகிறது.... அதிகம் பயமில்லை...தூங்குங்கள்....”. இப்படி நம் வீட்டுப் பெண்கள் பேச இயலுமா?? யோசனை செய்ய முடிகிறதா???? மளிகைக்கடைகளும், பணமாற்று மையங்களும் ஒன்றும் கிட்டாத இஸ்ரேலியப் படைகளுக்கு ‘ஹமாஸின் கூடாரங்கள்’ ஆகின்றன.
இத்தனைக்கும் நடுவே வாழ்வு, திட்டமிடல் என்பதை திட்டமிடும் முன்பே மரணம். யார் தாய், யார் தந்தை எனத் தெரிந்து கொள்ளும் முன்னே நிசப்தம்.

# காய்ச்சலில் இருக்கும் குழந்தையை காரில் ஏற்றிப் பறக்கிறீர்கள்.... உலகிலேயே அதிகமான சோதனைச்சாவடிகளை வைத்திருக்கும் ஒரு நாட்டில்.... அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன... கைக்குழந்தை சடலமாகும் வரை பரிசோதனை நீடிக்கிறது, சடலம் உறுதி செய்யப்படுகிறது அடையாள அட்டையை வைத்து!!!!!! ஒரு நிமிடம் உங்களை அங்கே நிறுத்திப் பாருங்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், பாலஸ்தீனின் வரலாற்றையும் ஆவணப்படமாகவும், புத்தகமாகவும் பார்த்தும் படித்தும் உச்சுக் கொட்டலாம்.... ஆனால் உணர்கிறோமோ???? பிரசவித்த வேதனை தீரும்முன் பாலகனை பறி கொடுக்கும் வலியை உணர்கிறோமா???

# மாதம் பிறந்தால் வரும் பெண்ணின் அசௌகரியத்திற்கு யாரிடம் சொல்லி பேட் வாங்குவது என்பதே நம்மில் பலருக்கு கஷ்டம்.... காஸாவில் நினைத்துப் பாருங்கள்... உங்களின் இரண்டு வயது தம்பிக்கும், திருமண வயதை எட்டிய அண்ணனுக்கும் உங்களை விட நன்றாகவே அந்த நாட்கள் எப்போதென தெரியும். அவர்களின் முன் ஒற்றை அறையில் கடக்க வேண்டும் இந்த நாட்களை... மூன்று பெட்ரூம் பத்துமா??? உறவினர் வந்தால் என்ன செய்ய... இவையெல்லாம் தினசரி வாழ்வின் கேள்விகள் நமக்கு.... அங்கே பழகிக் கொள்கிறார்கள், சகோதரனோ / சகோதரியோ துணி மாற்றினால் மற்றவர்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறார்கள்... இதோ அறை உருவாகிவிட்டது.

# எந்த கடைக்கு ஷாப்பிங் போகலாம் என நீங்கள் தேர்ந்தெடுத்துப் போவது வாடிக்கை. ஆனால் உங்களின் நாட்டை ஆக்கிரமித்து, உங்களையே அடிமை போல் ஆண்டு, உங்களுக்கு அடையாள அட்டை தந்திருக்கும் அராஜக அரசு, அந்த அடையாள அட்டையிலேயே எந்தெந்த இடங்களுக்கு உங்களுக்கு அனுமதி உண்டு, எந்த வீதிகள், நகர்கள் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு தந்தால்????? இது கற்பனை அல்ல..... பாலஸ்தீன மக்கள் வாழும் வாழ்க்கை இதுதான். சொந்த நாட்டிலேயே இத்தனை இழிவாய் வாழ அவர்களுக்கு மட்டுமே கொடுத்து வைத்திருக்கிறது.

# மணிக்கணக்கில் அல்ல, நாட்கணக்கில் அல்ல.... வருடக்கணக்கில் கர்ஃபீயு / ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பது பாலஸ்தீனத்தில் மட்டுமே. திடீரென ஜீப்புக்களும் டேங்குக்களுமாக ஒரு தெருவை சூழ்கையில் எந்த வீட்டில் குழந்தைக்கு போதுமான பால் இருக்கிறது, எந்த வீட்டின் வயோதிகர்க்கு அவசர மருந்துகள் இருக்கிறது என எந்த மிலிட்டரியும் பார்ப்பதில்லை. ஊடகங்களுக்கு ஊட்டுவதற்காக கேமராவும், ஃபோனுமாக அலையும் நிருபர்களிடம் திறக்கும் ஜன்னல்கள் வழியாக மக்கள் கதறுகின்றனர்..... ”உணவு தீர்ந்து விட்டது...உதவுங்கள்....”...”என் குழந்தைக்கு பாலில்லை...உதவுங்கள்”.... என் தாயின் இன்சுலின் தீர்ந்து விட்டது உதவுங்கள்....... எந்த கோரிக்கைக்கும் பதிலில்லை.... பதில் தர இயல்வதும் இல்லை.... 
# முயன்று, வீட்டை விட்டு வெளியேறி இச்சமயத்தில் வீட்டினர்க்கு உதவலாம் என்று வருபவர்களை, “இந்தாப்பா உள்ளே போ” என சொல்லும் அதிகாரிகள் கனவில் கூட இல்லை.... சொல்லும் மனிதனைத் தாக்கும் பயிற்சி கொண்ட நாய்களுடன் தெருவோரத்தில் பதுங்கியிருக்கும் சிப்பாய்கள்தானுண்டு. அந்நாய்களின் அகோரப்பசிக்கு தந்தையென்ன, தாயென்ன.... இல்லை இளம் ஆட்டுக்கறியை விட மென்மையான சிறு குழந்தைதான் என்ன???????????????

 # அமெரிக்காவில் தந்தையின் வேலை. தானுண்டு தன் குழந்தைகளுண்டு என இளம் பெண்குழந்தைகளுடன் நாட்களைக் கடத்தும் இன்னொரு குடும்பம். குழந்தைகளுக்கே உரித்தான கனவுகளுடன் தூங்குகையில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து அனைவரையும் எழுப்பி 14 வயதுப் பெண்னை மட்டும் தனியறையில் கேள்வி கேட்கிறோம் என வைத்துக் கொண்டு மற்றவர்களையெல்லாம் வேறொரு அறையில் அடைக்கிறார்கள்...... அந்தத் தாயின் வேதனை???????  அந்தப் பெண் பிள்ளையின் கண் முன்னேயே அவளின் அறையிலும் முழு வீட்டிலும் குண்டுகள் புதைக்கப்படுகின்றன....
# அந்தக் குடும்பத்தின் நிலையை விட இன்னொரு குடும்ப நிலை விவரிக்க இயலாதது.... வீட்டினருகே வெடிகுண்டுகளை வெடித்து எழுப்பி, குளிரில் பைஜாமாக்களுடன் அனைவரையும் வெளியேற்றி, இள வயது ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளில் விலங்கை அணிவித்து வீட்டின் முன் பக்க புற்களில் கிடத்துகிறார்கள். தேவைப்பட்ட நேரம் முடிந்ததும் அவர்களின் அண்டை வீட்டில் கேள்வி கேட்க கூட்டிச் செல்கின்றனர். இவற்றிற்கெல்லாம் முன்னர் அந்த அண்டை வீட்டினரை ஒரே படுக்கையறையில் அடைத்து விளக்குகளை அணைத்து எந்த சத்தமும், நகர்தலும் இருக்கக்கூடாது என கட்டளையிட்டாயிற்று. ஆணென்ன பெண்ணென்ன, பாலஸ்தீனியர்கள், முஸ்லிம்கள் என்றால் எல்லோருக்குமே Take it for granted இல்லையா???????
# பதிமூன்று வயதேயான தன் தம்பியை இஸ்ரேலியப் படையின் கோழைகள் எத்தனை துன்புறுத்தின என்பதைப் பற்றி 19 வயதான அஹ்மத் கூறுகிறார், “ மறுநாள் என் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்விருப்பதால் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென வெளியே பலமான சத்தங்கள் கேட்டதும் என் புத்தகங்களை வைத்து விட்டு என்ன சத்தம் என எட்டிப்பார்த்தேன். கிட்டத்தட்ட 14 இஸ்ரேலிய மிலிட்டரிக்காரர்கள் என் வீட்டை சுற்றியிருந்தனர். எங்கள் வீட்டு முன் கதவை பலங்கொண்ட மட்டும் எட்டி உதைத்துக் கொண்டும் ஒலியெழுப்பும் குண்டுகளை வீசிக்கொண்டும் இருந்தனர். அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்ததும் இழுத்துக் கொண்டு சென்றான். பதிமூன்றே வயதான என் தம்பி என்னைக் காப்பாற்ற முயன்றதும் அவனை வயிற்றில் எட்டி உதைத்தனர். காக்க வந்த தாயையும், தந்தையையும் கீழே தள்ளிவிட்டனர். ஒவ்வொரு தடவையும் என் தம்பி எழுந்து நிற்க முயலும்போதெல்லாம் அவனை மீண்டும் வயிற்றில் உதைப்பர். என் தாய் வீறிடுவார். என் தாய் கதறும்போதெல்லாம் அவனை துன்புறுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். சிறிது நேரத்திற்குப் பின் என் தாய் விசும்ப மட்டும் செய்தார். என் தம்பியிடமிருந்து சத்தமேயில்லை என்னும்போதுதான் கவனித்தேன், இரண்டு இஸ்ரேலிய சிப்பாய்கள் அவனின் முகத்தில் தங்கள் கைகளை வைத்தழுத்தி அவனின் மூச்சை திணறவைத்துக் கொண்டிருந்தனர். அவனின் முகம் இரத்தச்சிவப்பாகி அவன் சாவிற்காக போராட ஆரம்பித்த பின்னரே நிறுத்தினர்”
...... மக்களே.... இதுதான் மீடியாக்களில் கூறப்படுவது போல் ஒரு நாடு இன்னொரு நாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் இலட்சணமா?? இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள்தான் இஸ்ரேலை தாக்கும் போர்வீரர்களா?? சிந்தனை செய்யுங்கள் சகோஸ்....

# படித்தால் உங்களுக்கு சிரிப்பு கூட வரலாம். மனிதர்கள் மட்டுமல்ல பாலஸ்தீன மண்ணின் மரங்கள் கூட தன் பசிக்கு தீனியாக வேண்டும் என நினைப்பதை என்னவென்று சொல்வது? நள்ளிரவில் திருடர்கள் போல் வந்து பழமை வாய்ந்த அழகிய மரங்களை, எதெல்லாம் கெட்டோ நகரிலோ (ghetto - the streets where jews aka zionists live) அல்லது இஸ்ரேலை எங்கெல்லாம் அழகுபடுத்த முடியுமோ அதற்கெல்லாம் மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கிச் செல்கிறார்கள். தேவையில்லாதவை என எதையெல்லாம் நினைக்கிறார்களோ அதையெல்லாம் தாரற்ற, லெவெல் செய்யப்படாத பாலஸ்தீன ரோடுகளில் கண்டந்துண்டமாக வெட்டி வீசி விட்டுப் போகின்றனர். காரணம்???? இருக்கிறதே.... Choose your option.... 
  • ஒரு பாலஸ்தீன சிறுவன் மரங்களின் பின்னேயிருந்து டேங்குகளின் மேல் கல்லெறிகிறான்.... 
  • ஹமாஸ் படை வீரர்கள் மரங்களின் பின்னால் இருந்து கொண்டு தாக்க முற்படுகிறார்கள்.... 
  • ஒரு மரக்கிளையைக் கொண்டு ஒரு யூதனின் காரில் விபத்தை ஏற்படுத்தினார்கள்..... 
  • ம்ம்... இன்னும் உங்கள் கற்பனைக்கேற்ற கதையை இங்கே நிரப்பிக் கொள்ளுங்கள்.

சிறு குழந்தைகளில் சிலரை விளையாடப் பார்த்திருக்கிறீர்களா.... கேரம்போர்டு விளையாடுவார்கள்... அவர்களுக்கு சாதகமாய், அல்லது வெற்றி பெற இயலாவிட்டால் முழு போர்டையும் கவிழ்த்தி விடுவார்கள்... இஸ்ரேல் செய்வது அந்த சிறுகுழந்தையின் மூளையை விட அபத்தமான யோசனைகளைக் கொண்டது. தனக்கென ஒரு நாட்டை தானே அபகரித்து, அந்த நாட்டினரை பூதக்கண்ணாடி கொண்டு துடிக்க வைத்து சாகடிக்கும் எறும்புகளைப் போலாக்கி, அவர்களின் அழகிய வாழ்க்கையை தனக்கு சொந்தமாக்கி, மிஞ்சியிருப்பதையும் விடாமல் குப்பைத்தொட்டிக்குக் கூட லாயக்கில்லாததாக்கி..... இதை விடவும் மட்ட ரகமாய் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறது. இதைத்தான் சகோஸ் ஆதரிக்கிறீர்களா.... நாங்கள் ஆதரிக்கவில்லை எனச் சொல்பவர்களிடம் ஒன்று சொல்கிறேன்.... இஸ்ரேலை இன்னும் புகழ்ந்து பாடும் நாய் கூடப் பரவாயில்லை... ஆனால் மௌன சாட்சியாய் இருக்கும் நாம் எல்லோரும் இறைவனை அஞ்ச வேண்டும் சகோஸ்..... அஞ்ச வேண்டும்.

உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். 
  • உங்களூரில் உள்ள பத்திரிகைக்கு உண்மையென்ன என்பதை எழுத ஒரு மடலிடுங்கள்.... 
  • முடிந்தவரை களமிறங்குங்கள்... 
  • உங்கள் Status message, email signature, dial tone, seasons greetings என எவற்றிலெல்லாம் ஒரு செய்தியை சொல்ல முடியுமோ அவற்றிலெல்லாம் ஒரு செய்தியை சொல்லுங்கள்.... 
  • காரின் பின்புறம், கடை வைத்திருந்தால் கல்லாப்பெட்டியினருகில்... என எல்லா இடங்களிலும் ஒரு செய்தியை சொல்லுங்கள்....
  • உதாரணமாக..
“காஸா வாழ் மக்களும் மனிதர்களே...... 
காஸாவில் இனசுத்திகரிப்பு: மௌனம் சம்மதம்....... 
காஸாவின் குழந்தைகளும் வாழப்பிறந்தவர்களே.... 
பாலஸ்தீன் படுகொலைகளை கண்டிக்கிறேன்....
ஒவ்வொரு பெப்ஸியும், கோக்ககோலாவும் ஒரு குழந்தையின் உயிரை விலை பேசுகிறது 
என என்ன உங்களுக்குத் தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். 
  • நீங்கள் முஸ்லிமாக இருந்தால்தான் இதை செய்யவேண்டும் என்றில்லை சகோ.... மனிதனாயிருத்தல் போதுமானது. 
  • உண்மையை உரக்கக் கூறுங்கள். உங்களோடு உங்கள் சுற்றத்தையும் நட்பையும் இணைத்துக் கொள்ளுங்கள். உண்மையை பரப்புங்கள். 
  • இது ஒரு புரட்சியின் யுகம். அராஜகத்திற்கான இந்த எதிர்ப்பை இப்போது காட்ட முடியாவிட்டால் இனி எப்போதும் முடியாது :(

இதற்கும் மேல் உண்மைச்சம்பவங்களுண்டு.... போர்தான் இப்பொழுது முடிந்து விட்டதே...இவை இனி நடை பெறாதே என்பவர்களுக்கு.... பாலஸ்தீனை ‘பார்வையாளர் நாடு’ அந்தஸ்த்தை தந்ததும் வெஸ்ட் பேன்க்கின் ஓரத்தில் உள்ள குடியிருப்புக்களை பலவந்தமாக துப்பாக்கி முனையில் வெளியேற வைத்துள்ளது..... இது இன்னொரு ரவுண்டின் ஆரம்பம்.


.

7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரி அன்னு,
    அநீதி இழைப்பவர்கள் செய்யும் கொடுமையை விட கொடூரமானது நீதிமான்களும், அறிவு ஜீவிகளும் அதை கண்டு கொள்ளாது, அதை தடுக்காது மெளனித்து இருப்பது. பாலஸ்தீன் விவகாரத்தில் பெரும்பாலானவர்கள் இதை தான் செய்கிறார்கள். பாலஸ்தீனத்தின் நிலையையும் அவர்கள் படும் துன்பங்களையும் நினைத்தாலே கண்ணீர் தாரை தாரையாக கொட்டும். உலக ஊடகங்களால் வடிகட்டப்பட்டு வரும் செய்திகளை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறதே. அங்கே உண்மையை போய் அறிந்து வந்தால், அந்த துன்பங்களை அனுபவித்தால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய ஊடகங்களும், இஸ்லாமிய வெறுப்பு ஊடகங்களும் பாலஸ்தீன் துயரத்தை மறைத்து வெறுமனே இரண்டு நாடுகளுக்கான சண்டை என்பதை போலவே செய்தி வாசிக்கின்றன. நாடற்ற வாழ்க்கை வாழும் பாலஸ்தீனியர்களின் துயரங்களை நீக்கி அவர்கள் வாழ்வில் சுகத்தை கொடு யா அல்லாஹ் என்று நாம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. பாலஸ்தீனத்தின் துயரை துடைக்க வேண்டிய மிகப் பெரும் கடமை இஸ்லாமிய நாடுகளுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் உருப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் OIC எடுத்ததில்லை. அது குறித்து முடிவு எடுக்கவும் அவர்களுக்கு தைரியமில்லை. உலகத்தின் மற்ற நாடுகளும் இது வேடிக்கை தான் பார்க்கின்றன. சில கண்துடைப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா வில் ஓட்டு போடுவதோடு தம் கடமை முடிந்து விட்டன என்று உலகத்தின் அனைத்து நாடுகளும் எண்ணுகின்றன.

    ReplyDelete
  3. அமெரிக்கர்களை பொறுத்தவரை அந்த நாட்டு ஊடகங்களும் அதிகார வர்க்கமும் இஸ்ரேல் சார்பு நிலையை தான் எடுத்து வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை கொடு இரத்து செய்து விடுகின்றது அமெரிக்கா. அமெரிக்கர்கள் சுய முயற்சி எடுத்து உண்மையை அறியும் பொருட்டு அதை நோக்கி நடந்தாலே இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய சமூகத்தில் கூட பாலஸ்தீனம் விவகாரத்தை அறியாத அது ஏதோ ஒரு சண்டைக் களம் என்று எண்ணுகின்றவர்கள் இருக்கின்றனர். தமிழ் பேசும் சமூகத்தில் அவ்வாறு யாரும் இருந்தால் அவர்களுக்கு பாலஸ்தீனம் வரலாற்றை அறிந்து கொள்ள "நிலமெல்லாம் இரத்தம்" என்ற புத்தகத்தை வாசிக்கலாம். அதை தொடராக இந்த வலைப்பூவில் கூட பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
    "நிலமெல்லாம் இரத்தம்"

    ReplyDelete
  4. வ அலைக்கும் அஸ் ஸலாம் ஷேக் தாவூத் பாய்,

    என்ன சொல்வது, பதிவெழுதுவதற்கு முன்பிருந்த பாதிப்பு, அதை எழுதிய பின் இன்னும் அதிகம் ஆகிறதே தவிர குறையும் பாடில்லை. நிலமெல்லாம் ரத்தம் சுட்டிக்கு மிக்க நன்றி பாய். நான் அதை தளத்தில் இணைத்து விட்டேன். ஆம்.... தமிழ் மக்களுக்கு இன்னமும் இந்தப் பிரச்சினையின் முழு வடிவம் தெரியாதென்பது பெருங்குறை. யாரேனும் அதர்கு விடியல் தருவார்களா என்றே உள்ளேன்..... இன்ஷா அல்லாஹ் து’ஆ செய்வோம்.

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  5. assalamu alaikkum Annu

    தமிழில் நான் படித்தவரையில் நிலமெல்லாம் ரத்தம், விடியலின் பாலஸ்தீன வரலாறு போன்ற ஒன்றிரண்டு புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் அல்ஹம்துலில்லாஹ் நிறைய படைப்புகள் வெளிவந்திருக்கிறது.
    மேற்கு நாடுகளின் பத்திரிகை நிருபர்கள் சிலர் எல்லா தடைகளையும் தாண்டி பலஸ்தீன செய்திகளை வெளிக்கொண்டு வருவது அவ்வப்போது நடக்கிறது.

    ReplyDelete
  6. பீர் பாய்,

    வ அலைக்கும் அஸ் ஸலாம்.

    நிலமெல்லாம் ரத்தத்தை இப்போதுதான் நான் படிக்க ஆரம்பித்துள்ளேன். இன்னொரு புத்தகம் நான் கேள்விப்பட்டதில்லை. ஆமாம், தமிழில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவு. இன்ஷா அல்லாஹ் வெளிக்கொண்டு வருவோம். அல்லாஹு முஸ்த’ஆன்.

    :(

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...