கமல் Vs இஸ்லாம் :- விஸ்வரூபம் எடுக்கும் சதி!!!

Wednesday, January 23, 2013 Anisha Yunus 10 Comments

இந்த நாட்டை யார் ஆண்டு கொண்டுள்ளார்களோ அவர்களின் முதலாளித்துவ சிந்தனைகளையே நாம் தயாரிக்கும் இன்றைய சினிமாக்களும் கொண்டுள்ளன. ஒரு சோப்புக் கம்பெனியில் சோப் எப்படி தயாரிப்பார்களோ அதே போல்தான் மும்பையில் சினிமாக்களை தயார்செய்கின்றனர். பின்னர் அதை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்று விடுகின்றனர். அப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் சினிமாக்களின் கலாச்சாரதில் மக்களை மூழ்கிக்கிடக்க மாற்றிவிட்டார்கள். ஏகாதிபத்திய அரசு இந்தியாவை விட்டுச்சென்றதும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தில் உள்ளவர்கள், பிரச்சார பீரங்கிகளை முழு வீச்சில் உபயோகித்து மக்களின் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.  எழுத்தின் வாயிலாய் என்ன கருவை விதைக்கிறார்களோ அதே கருதான் இன்றைய சினிமாக்களிலும் உள்ளது என்றொரு கவலை என் நரம்புகளில் ஓடிக்கொண்டே உள்ளது. இதை இலாபத்துக்காக செய்யும் சிறுவிளையாட்டாகவோ, களியாட்டமாகவோ எடுத்துக்கொள்ள இயலாது. இந்த நாடெங்கும் பரந்து விரிந்துள்ள ஏனைய சமூகங்களின் கலாச்சாரத்தையும், தனித்தன்மையையும் ஒடுக்குவதற்கென்றே, மற்ற சமூக மக்களை பலி பீடத்தில் ஏற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சமூகம் சார்ந்த ஏகாதிபத்தியமாகவே ம் சினிமாக்கஎடுத்துக்கொள்ள வேண்டும்.:- உத்பால் தத்*

மேலேயுள்ள மேற்கோள் வாசகப்படி, சினிமாவால் எந்த சமூகம் பாதிக்கப்பட்டதோ இல்லையோ, எந்த சமூகத்தின் உணர்வுகள் விளையும் முன் நசுக்கப்பட்டதோ இல்லையோ, முஸ்லிம்களுடையதும், மிகவும் பின் தங்கிய சமூகங்களுடையதும் இந்த அட்டூழியங்களிலிருந்து இன்றும் தப்ப இயலாமல் உள்ளன. சில இடங்களில் ‘தீண்டத்தகாதோர்’ என்னும் முத்திரையைச் சுமந்தவர்களை விடவும் தீண்டப்படாதோராய், ”இந்தியாவுக்கெதிரானவர்கள்” என்றும் “ஒதுக்கப்பட வேண்டியவர்கள்” என்றும் இரு அடையாளங்களை நாள்தோறும் சுமந்த வண்ணம் இருக்கிறோம். இதுதானா உண்மை? சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இஸ்லாமியர்கள் செய்த தியாகங்கள் காற்றில் மறைந்து விட்டனவா??? சமூக கட்டமைப்பிலும், இந்தியாவை அடித்தளத்திலிருந்து எழுப்புவதிலும் இஸ்லாமியர்கள் மலையளவினும் மேலாய் செய்த பணிகளும், சேவைகளும், இழந்தவைகளும் எங்கே போயின? வரலாற்றின் அந்தப் பக்கங்களை அப்புறப்படுத்தியவர் யார்???? ‘தீண்டத்தகாதவர்கள்” என்னும் ஒரு ஜாதியை இந்த உலகத்திற்கு கண்டுபிடித்து அளித்த வல்லவர்கள், ஏகாதிபத்திய பிராமணர்கள். அவர்களின் ஆளுமையில் இருக்கும் அச்சக இயந்திரங்களிலிருந்து சினிமா கேமரா வரை எங்கும் ஒரே மந்திரம் நிறைந்துள்ளது. இந்தியாவில் இந்துத்வாவும், வர்ணாசிரமும் வரும் வழி செய்தல். இதற்கான பிரம்மாண்ட அஸ்திரமே ‘சினிமா’.

தாடி வைத்துள்ள அண்டை வீட்டார் முதல், போலீஸால் நடு வீதியிலிருந்து ‘தேர்ந்தெடுத்து’ அழைத்துச் செல்லப்படும் 13, 14 வயதுச் சிறுவர் வரை, அனைவரையும் ‘ஐ எஸ் ஐ ஏஜண்ட்’டாகத்தான் இருக்கும், அல்லது ‘இந்திய முஜாஹிதீன்களில் ஒருவனாக’ இருக்கும் என பாமரரும் எளிதாக புரியக்கூடிய வழி யாரேனும் செய்துள்ளனர் என்றால், அது சினிமாத்துறையினரே.

’முகத்தில் தாடி / கழுத்தில் தாயத்து / சிரத்தில் தொப்பி’ இல்லாமல் எத்தனை வில்லன்களை இந்த சினிமாக்களில் நீங்கள் பாத்திருப்பீர்கள். பாகிஸ்தான் என்றாலோ, ஆஃப்கான் என்றாலோ ஏன் குர்’ஆனைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் அருகிலுள்ள பயணியைக் கண்டாலோ கூட உங்களுக்கு என்ன தோன்றுகிறது??? யார் இதற்குக் காரணம்?? இன்று பாடப்புத்தகங்களில் கூட எழுத ஆரம்பித்து விட்டனர், மாட்டிறைச்சியை உண்பவர்கள் திவீரவாதிகள் என. யார் எழுதியது? ஏன் தணிக்கை ஆகவில்லை? நாளை இதே பாடப்புத்தகத்தை கை காட்டி இன்னுமொரு திரைப்படம் வெளியாகும். அவர்களைக் கேட்டால் இவர்களைக் கை காட்டுவார்கள், இவர்களைக் கேட்டால் அவர்களை. இருவருமே பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கையை ‘நன்மை பயக்கும்’ என்னும் எண்ணத்திலேயே தீவிரமாக ஆதரிப்பவர்களாகவே இருப்பர். இதை யாரும் சொல்வதுமில்லை, வெளிக்காட்டுவதுமில்லை. நசுக்கப்படும் எம் சமூகத்தை செருப்பிலும் ஒட்டி விடக்கூடாதென்று எட்டி நகர்ந்தே சென்று கொண்டுள்ளார்கள். ஒரு சமூகத்தின் சடலம், இன்னொரு சமூகத்திற்கு காகிதக் குப்பையாகத் தெரிகிறது. குப்பைத் தொட்டிக்கும் தகுதியற்றதாய்....

இது ஒரு சிலரால் யதேச்சையாய் உருவானது என்றால் அதுதான் இல்லை. கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
படம் - 1
படம் - 2
முதல் படம், துருக்கியில் முஸ்லிம்கள் உபயோகிக்கும் தொப்பிகள். இரண்டாவது படம், ஹிந்தி சினிமாக்களில் முஸ்லிம் கதாபாத்திரங்களின் படம். இரண்டுக்கும் ஒற்றுமை தெரிகிறதா??? அந்தக் காலத்திலிருந்தே படத்தில் இருக்கும் முஸ்லிம் கதாபாத்திரங்களை மிகப் பெரிய இடம் கொடுத்து போஸ்டர் அடிப்பார்கள். அதில் அந்தத் தொப்பி முக்கியமாக தெரிய வேண்டும் என வெளிப்படையாகச் செய்வார்கள்.. ஏன்???? அந்த தொப்பி இந்திய முஸ்லிம்கள் உபயோகிக்கும் ஒன்றல்ல. அந்தத் தொப்பியை நீங்கள் கடைவீதியில் காணும் முஸ்லிம் அணிந்திருக்க மாட்டார். ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்த உங்களின் மனதில் ஒரு கேள்வி தோன்றும். அந்தத் தொப்பி போடாவிட்டாலும் இவன் அன்னியன்தானே... இன்னொரு நாட்டுக்காரன்தானே என... அந்நிய உடைகளைப் போட்ட கதாபாத்திரங்களைக் காண்பித்தது, இந்தியாவுக்கும், இஸ்லாமியருக்கும் உறவே இல்லை என்னும் எண்ணத்தை வலுக்கட்டாயமாக எல்லோரின் சிந்தனையிலும் ஏற்றிடவே.

சினிமா என்ற பெயர் அறிமுகமான நாட்களிலிருந்து இந்த விஷமமும் விதைக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களை அந்நிய நாட்டவர்களாக காட்டும் நயவஞ்சகம். இந்த நாட்டுக்குரியவர்கள் இல்லை எனக் காட்டும் வஞ்சக மனப்பான்மை. இதற்கு முஸ்லிம்களே பலிகடாவானதும் வருத்தத்திற்குரிய வரலாறே.


அதே பாணியில் தமிழக முஸ்லிம்களையும் ஒரு காலத்தில் அசைத்துப் பார்த்தனர். அதை வளர விடாமல் செய்ததில் ‘திராவிட’ இயக்கங்களுக்கு பெரும்பங்கிருந்தது.  அன்றைய பாவமன்னிப்பு படத்தில் சிவாஜியின் தலையில் கவனியுங்கள். அதே துருக்கி தொப்பி. இந்நாட்டு மொழி பேசும், இந்நாட்டிற்காக தன் இன்னுயிரையும், தன் குடும்பத்தையுங்கூட இழக்கும், இழக்கத் துணியும் எம்மை, ‘அந்நியராய்’க் காண்பிக்கும் கொடூர மனப்பான்மையை என்னவென்பது???

இன்னும் ஒரு கோணத்திலும் எம்மை வஞ்சிக்கின்றனர். இன்றைய இந்தியாவில் உள்ள ஒரு சில முஸ்லிம்கள் தொப்பி வைப்பதோ, புர்கா அணிவதோ இல்லை. ஆனால் திரைப்படங்களில் இப்படி ஒரு சாராரை காட்டுவார்களா???  கிடையாது, ஆனால் புர்கா போட்ட பெண்ணை விபச்சாரியாகவும், தாடி வைத்து தொப்பி போட்ட ஆணை சாராயம் குடித்து குடலை உறுவும் வில்லனாகவும்தான் காட்டுவார்கள். ஏன்??? மக்கள் மனதில் இது பதிய வேண்டும், ஹிஜாப் போட்ட, பெண்களைக் கண்டதும், தாடி வைத்த ஆண்களைக் கண்டதும், மக்கள் மனதில் அச்சம் எழ வேண்டும் என்பதற்காக.

மற்ற சமூகத்தைப் போல வாழ்பவர்களோ அல்லது இறையச்சமே இல்லாமலோ வாழும் முஸ்லிம்கள் ஆபத்தற்றவர்கள், அவர்கள் தேசியத்திற்குப் பாடுபடுபவர்கள்..... ஆனால் தூய இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்னும் நஞ்சை விதையாய் அல்ல, விகாரமாய், வீரியமாய் வளர்க்கிறார்கள்.

ஹிந்துத்துவ சக்திகள் எப்பொழுதெல்லாம் மத்தியில் கை ஓங்கிய நிலையில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் பார்டர், சர்ஃபரோஷ் போன்ற, முஸ்லிம் மக்களை ‘அந்நிய நாட்டவர்களாகவே’, ‘தேசத்துரோகிகளாகவே’ சித்தரிக்கும் படங்கள் பெரிதும் ஹிட்டாகின்றன. தமிழகத்திலும் அதன் சாயல் பட ஆரம்பித்திருப்பதுதான் நெஞ்சைப் பிசைகிறது.

சாதி மத பேதங்களை வெளிச்சமிட்டுக் காட்டும், பெண்ணுரிமையை நிலை நாட்டும், இன்னும் பல சமூக அவலங்களைக் குறித்த மகத்தான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த தமிழகத்தில் இன்று, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மறக்க வைக்காமல் ஒளிபரப்பப்படும் ‘ரோஜா’ திரைப்படம் தமிழ் மக்களின் மனதிலும் அதே நச்சுக்கொட்டையை விதைப்பதின் தொடக்கப்புள்ளியானது என்றால் அது பொய்யாகாது.

அதை விழுந்து விடாமல் வேள்வித்தீ போல வளர்த்துவதில் அதன் பின்னர் வந்த படங்கள் எல்லாமே வழிதொடர்கின்றன..

திப்பு சுல்தானாகவும், உதவிக்கரம் நீட்டும் நவாப்களாகவும், படித்த மேதைகளாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்களை இன்று பிச்சைக்காரர்களாகவும், கூலிக்கு செருப்பை பாலிஷ் செய்யும் வறியவர்களாகவும் காட்டுகிறார்கள்.

அழகிய தமிழைப் போற்றியும், புகழ் பரப்பியும், உவந்து உச்சரித்தும் தாய் மொழியாம் தமிழுக்கு தொண்டாற்றிய முஸ்லிம்களை இன்று ‘நம்பள்கி, நிம்பள்கி’ எனத் தமிழறியாதவர்களாகவும், சிரிப்பை வரவைக்கும் காமெடியன்களாகவும் காட்டுகின்றனர்.

எட்டப்பன் என்றொரு வரலாறு இருந்ததை இன்று முஸ்லிம்களுக்கு உரியதாகவும், தாடி வைத்த அரபுகள் இந்தியா வருவதே பெண் கடத்தல் அல்லது போதை மருந்து கடத்தலுக்காகத்தான் என்பது போலவும் காட்டப்படுகின்றது. அதுவும் இல்லாவிட்டால் தாடையில் தாடியும், கையில் துப்பாக்கியையும் கொடுத்து ஜிஹாத் தீவிரவாதிக்களாக சித்தரிக்கிறது. விஜயகாந்தின் ஆஸ்தான வில்லன்களாகவும், அர்ஜூனின் கனவில்  அணுகுண்டு தயாரிக்கும் அப்பள வியாபாரிகளாகவும் கூட எம் சமூகம்தான் இன்று வரை உள்ளதே. ஏன்? ஏன்?? ஏன்???

அண்மையில் வெளிவந்த அப்பாவி படத்தில் முஸ்லிம் தீவிரவாதி, கோவிலில் ஒளு செய்வது போலொரு காட்சியை வைத்து, ஆடிக்கொரு முறை கோவிலுக்குப் போகும் சாமான்யனின் மனதில் கூட பிரிவினைத்தீயை உண்டு பண்ணுகின்றது. அன்வர் என்னும் படத்தில் ‘தீவிர’ முஸ்லிம்கள், ‘சாதாரண’ முஸ்லிம்களையும் கொல்வர் என்றொரு உதாரணம் காட்டப்படுகின்றது. ஆந்திராவிலிருந்து டப்பிங் செய்து வரும் படங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு ஆஸாத் படம், ஒரு சோற்றுப் பருக்கையே.

இவர்களுக்கெல்லாம் மேலே ஒரு படி சென்று, உலக மகா நாயகன் என தன் பெயருக்கு முன்னே பட்டம் போட்டுக்கொள்ளும் கமல்ஹாசனுக்கு விஸ்வரூபம் முதல் படமல்ல, முஸ்லிம் மக்களைக் காயப்படுத்துவதற்கு. ஏற்கனவே வெளியான ‘உன்னைப் போல ஒருவன்’ படத்திலும், தன்னால் இயன்ற அளவு ஆராய்ச்சி செய்து ஒரு பிரச்சாரத்தை உருவாக்கினார். அது என்ன? ‘தீவிரவாதி என்றெண்ணி யாரேனும் ஒருவனை போலீஸார் பிடித்தால், அவனை விசாரணை, தீர்ப்பு, சிறைச்சாலையில் சாப்பாடு என்றெல்லாம் இழுத்துக் கொண்டிருக்காமல், என்கவுன்டரில் கொன்று விடுங்கள்’ என்னும் நச்சுப்பிரச்சாரம். வழக்கின் மூலமும், சாட்சிகள் மூலமும் நீதி மன்றம் ஒருவனை ‘தீவிரவாதியா’ இல்லையா எனத் தீர்ப்பு தரும்வரை காத்திருத்தல் கூடாது என்னும் நல்லொழுக்கக் கொள்கை ஒன்றை, இந்திய சட்டத்திற்கு புறம்பான ‘தனி மனித நீதியைக் கையிலெடுக்கும் பாங்கை’ இச்சமூகத்திற்கு அளித்துள்ளார். சமுதாயப்பணி செய்வதில் கமலுக்கு நிகர் வேறெவருமே இருக்க முடியாது இல்லையா?? அதனால்தான் தன்னுடைய அடுத்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார் எனலாம்.

”இல்லை இல்லை...அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்,” என்ற கமல், “தங்களை பிழையான விதத்தில் காண்பிப்பதாக  சந்தேகிக்கும் முஸ்லிம்கள், படத்தைப் பார்த்த பின்னர் மனத்தை மாற்றிக் கொள்வார்கள், மேலும் தங்களின் ( அபிப்பிராய பேதத்துக்கு ) பரிகாரமாக அவர்களின் சகோதரன் ஹாசனுக்கு அடுத்த வருட பெருநாள் (பண்டிகைக்கு) அதிகமாக பிரியாணி அனுப்ப வேண்டும், நான் அவற்றை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன்.” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நடந்தது என்ன?

ட்ரெயிலரிலேயே தெரிகிறது, கதையின் கரு என்னவென்று. தொப்பியிட்ட, அரபு உடையணிந்த ஒரு 12 வயதுப்பையனை வைத்து ஆயுதங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை செய்யும் ஒரு காட்சி... இது இதற்கு முன் காட்டப்பட்ட  பயங்கரங்களையும், விட கொடிய பயங்கரம். வயது வந்த முஸ்லிம்கள் மட்டுமல்ல, தொப்பி போட்டு உங்கள் குழந்தையுடன் விளையாடும் 12, 13 வயதுப் பையனும் கூட தீவிரவாதிதான் எனக் குத்தப்படும் முத்திரை. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்????

 

Mr. கமல்ஹாஸனுக்கு:

வெளிநாடுவாழ் முஸ்லிமாக இருந்தால் அல்லது சமூகத்தில் முன்னேறிய முஸ்லிமாக இருந்தால் அதுவும் தாடி வைத்த முஸ்லிமாக இருந்தால் அவன் கட்டாயம் தீவிரவாதியாக இருப்பான், துப்பறி.....இதுதான் உங்களின் படம் தரும் செய்தியா?? இதுதான் நீங்கள் எம் சமூகத்திற்குத் தந்த நம்பிக்கையா Mr.கமல்ஹாசன்??? இதற்குத்தான் பிரியாணி கேட்டீர்களா....

ஏன் Mr.கமல்ஹாசன், ஏன்???? ஒன்றாய் வாழும் இச்சமூகத்தில், தங்களுடைய கோடிக்கணக்கான சொத்து உருவாக வழி செய்த இந்தத்தமிழகத்தை கூறு கூறாக்கிப் பார்க்க ஏன் விளைகின்றீர்??? நன்மையை நாடிய ஒரு சமுதாயத்தின் வேதனையைக் கூட அல்ல, அழிவை ஏன் எதிர்பார்க்கிறீர்??? உங்கள் படத்தைப் பார்த்த அனைத்து இஸ்லாமிய அமைப்பினருமே ஒரே குரலில் 'இந்தியாவில் இதுவரை இந்த அளவு முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு படம் வந்ததில்லை' என்று சொல்கின்றனரே ஏன்??? உங்கள் சட்டைப் பாக்கெட்டில் பணம் நிரப்ப எங்கள் உயிர்தான் விலையா? எங்கள் மானம்தான் பலியாடா??? கேவலமாக இல்லை? வெட்கமாக இல்லை? மானக்கேடானதொரு வழியாக இல்லை??? குட்டக் குட்ட  குனிந்து கொண்டே போனால்தான், முஸ்லிமை அழித்து அதன் பின் மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் அழித்து இந்துத்துவத்தை நிலை நாட்டலாம் என்னும் கொடிய ஆசையா??

நாத்திகன் என உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களே இதுதான் நாத்திகர்களின் வழியா? இறை நம்பிக்கையை வைத்து, தான் பிறந்த மண்ணுக்காக மண்ணின் அடியில் போவதைக்கூட உயிருள்ளவரை விரும்பும் எங்கள் சமூகத்தை சிதைத்தா உங்களின் நாத்திகம் வளர வேண்டும்??? இதுதான் உங்களின் பெயரில் உள்ள ‘ஹாஸன்’ என்னும் சொல்லுக்கு பின்னுள்ள வரலாற்றுக்கு நீங்கள் தரும் பரிசா???

நல்ல கலைஞனுக்கு ஆயிரமாயிரம் நல்ல கதைகள் கிடைக்கும் Mr.கமலஹாசன். கருத்தம்மா முதல் காசி வரை பல படங்களுண்டு. வித்தியாசமான, அதே நேரம் சமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை சொல்ல, தயாரிப்பாளருக்கு நஷ்டமும் தராமல் எடுக்கக்கூடிய கதைகள். திரைப்படத்துறையின் பின்னுள்ள அவலங்களைப் படம் எடுத்தாலும் போதும்  வாழ்க்கை முழுதும் உங்கள் கல்லாவையும், ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களினால் சரியக்கூடிய செல்வாக்கையும் வலுப்படுத்தலாம். சிந்தியுங்கள். உங்களின் மனநலனும், சிந்திக்கும் திறனும் நலமாகும் வரை, உங்களுக்காக தொடர்ந்து பிரார்த்திப்போம்.

அனைவரும் கமலஹாசனுக்காக பிரார்த்தியுங்கள். அவரவர் வலைதளங்களில் வைக்கவும்  பரிந்துரைக்கப்படுகிறது.


இஸ்லாமிய இயக்கங்களுக்கு:

வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ். :)
மகத்தான ஒரு படியை அடைந்துள்ளோம். இனி எவரும் நம் சமூகத்தை அவலாக்கி விடாமல் இருக்க, இது வரவேற்கத்தக்கதொரு சாதனை. இறையருளுடன் இனியும் நம் சமூகத்தை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் நல்முடிவுகளை வரவேற்கிறேன். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இறைவன், அளவிலா நற்கூலியை தந்தருள்வானாக. இன் ஷா அல்லாஹ், நாம் எல்லோரும் இணைந்து, இஸ்லாமியர்களுக்கெதிராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கெதிராகவும், இந்திய தேசிய ஒற்றுமையைக் குலைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வேரறுப்போம். அனைத்து சமூகமும் சுமுகமாய், நட்புடனும், நிம்மதியுடனும் வாழும் நிலையை விரைவில் இந்தியாவெங்கும் விதைப்போம். இன் ஷா அல்லாஹ்.

 

முஸ்லிம்களுக்கு:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. :)
Sources:
* - புது தில்லியில் 1979இல் நடந்த உலகளாவிய திரைப்பட விழாவில் திரு.உத்பால் தத் ஆற்றிய உரையிலிருந்து. 
உத்பால் தத் 1994, பக்கம் 25-26.

10 comments:

 1. மிகச் சிறந்த பண்பட்ட ஆக்கம். கூத்தாடிகளுக்கு உரைக்கிறதா என்று பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் சுவனப்பிரியன் பாய்.

   இதைக் கூத்தாடிகள் புரிந்தேதான் படமெடுக்கிறார்கள். புரிந்து கொள்ள வேண்டியது, பொது மக்களே. எப்படி காய் நகர்த்தப்படுகிறது, ஒரு சமூகத்தின் ஆதிக்க வெறிக்காக, எப்படி மற்ற சமூகங்கள் பலிகடாவாகிறது என்பது ஒவ்வோர் தடவையும் தெரிந்தே வருகிறது. இதைக் கொண்டு, இந்த ஆதிக்க சக்திகளை வேரறுக்க மக்கள் முன் வர வேண்டும், இன் ஷா அல்லாஹ்.

   Delete
 2. குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.

  குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. அல்ஹம்துலில்லாஹ்.

   மிக நல்ல செய்தி சகோ. தமிழ்நாட்டிலும் தடை என சற்றுமுன்னரே கேள்விப்பட்டேன். இத்தகைய முன்னேற்றத்தை தந்திருக்கும் நம் ‘ஒற்றுமையை’ பலமாக பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இன் ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம்.

   Delete
 3. சற்றுமுன் கிடைத்த செய்தி

  விஸ்வரூபம் பட விவகாரம் கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் நிறுவனத்தை திடீரென்று முற்றுகையிட்டனர ­முஸ்லீம்கள் போலீசாருக்கும், ­ இஸ்லாமியர்களுக் ­குமிடையே தள்ளுமுள்ளு போலீஸ் குவிப்பு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டதா ­க தகவல்

  ReplyDelete
  Replies
  1. இதைத்தான் “கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்றேன் சகோ.

   படங்களில் என்ன காண்பிக்கப்படுகிறதோ அதை நிஜத்தில் காட்ட முயற்சிப்பது, பொறுமையற்றுப் போவது மிக மிக கண்டிக்கத்தக்க ஒன்று.

   வேகத்தாலும், விவேகமின்மையினாலும் இழந்தது ஏராளம், கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். எந்த நிலையிலும் இன்னொரு ஆன்மாவுக்கோ பொது சொத்துக்கோ குந்தகம் விளைவிக்கவே கூடாது. இது இஸ்லாமல்ல.

   Delete
 4. ஆரம்பத்திலேயே நாம் இம்மாதிரி வெகுண்டெளுந்திருக்கவேண்டும்!விட்டுக்கொடுத்ததால்தான் காந்துகளுக்கும் ,அர்ஜுனுக்கும் ,இப்போ ஹாசனுக்கும் குளிர்விட்டுப்போய்விட்டது,கண்ணியமான முறையிலான நடவடிக்கையும் ,நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடரனும்! நல்ல பதிவு!எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படணும்!

  ReplyDelete
 5. மு.செ.மு. நெய்னா முஹம்மது
  January 23, 2013 at 6:39 PM
  (Source Adiraixpress)
  நடிகர் கமலுக்கு தேவையில்லாத வேலை இது. நம் ஊரில், நம் மாவட்டத்தில், நம் மாநிலத்தில், நம் நாட்டில் தினம், தினம் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து சங்கடப்பட்டு வருகிறோம்.

  உதாரணத்திற்கு பருவ மழை பொய்த்துப்போனதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலைகள்.

  4 வயது சிறுமி முதல் 65 வயது கிழவி வரை ஆளாகும் பாலியல் பலாத்காரங்கள்.

  அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் ஆதாரமாய் விளங்கும் காவிரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுப்பிரச்சினை.

  டீசல், பெட்ரோல், வீட்டு சமையல் எரிவாயுவின் மாதாந்திர விலை ஏற்றம்.

  சில்ல‌ரை வ‌ர்த்த‌க‌த்தில் அந்நிய‌ முத‌லீட்டு நுழைவால் நம்நாட்டு சிறு,குறு வ‌ணிக‌ர்க‌ளின் வேத‌னையும், வ‌ருத்த‌ங்க‌ளும்.

  நாட்டில் அண்மையில் ஆங்காங்கே ந‌ட‌ந்த‌ குண்டு வெடிப்பில் ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளின் அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌திச்செய‌ல்க‌ள்.

  பெட்டிக்க‌டைக‌ளை விட‌ பெருகி வ‌ரும் அர‌சு (டாஸ்மாக்)ம‌துக்க‌டைக‌ளால் ந‌ட‌க்கும் அன்றாட‌ குற்ற‌ங்க‌ள்.

  அன்றாட‌ வாழ்வாதார‌த்திற்காக‌ க‌ட‌லுக்கு மீன் பிடிக்க‌ச்சென்றால் வீடு வ‌ந்து சேர்வோமோ? இல்லையோ? என இலங்கை கடற்படையின் அன்றாடம் அரங்கேறும் அட்டூழியங்களால் நிச்ச‌ய‌ம‌ற்றுப்போன‌ ந‌ம் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளின் ப‌ரிதாப‌ நிலை.

  பொறுப்ப‌ற்ற‌ அர‌சு எந்திர‌ங்க‌ளால்/அதிகாரிக‌ளால் அன்றாட‌ம் அர‌ங்கேறும் ஊழ‌ல், ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ம், அல‌ட்சிய‌ அதிகார‌ம் என‌ வ‌றுத்தெடுக்க‌ப்ப‌டும் நாட்டு ம‌க்க‌ள்.

  சாதித்தீயால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ருகி வ‌ரும் ம‌னித‌ நேய‌ம். என இப்ப‌டி எவ்வ‌ள‌வோ அத்தியாவ‌சிய‌ பிர‌ச்சினைக‌ள் ந‌ம் த‌லைக்கு மேல் வெள்ள‌மென‌ அன்றாட‌ம் ஓடிக்கொண்டிருக்க‌ உன‌க்கு ஏன்ன‌ய்யா இந்த‌ வேண்டாத‌ வேலை?

  உன் ம‌ரும‌க‌ன் ம‌ணி ர‌த்ன‌ம் போல் இப்ப‌டி ஒரு சிறுபாண்மை ச‌மூக‌த்தை வேத‌னைப்ப‌டுத்தி அதில் எப்ப‌டித்தான் உன‌க்கு நாலு, காசு ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌ ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ?

  படத்தில் ஃபேக்ட்டைத்தானே சொல்கிறேன் என‌ நீ வித‌ண்டாவாத‌ம் செய்தால் மேலே குறிப்பிட்ட‌ பிர‌ச்சினைக‌ளெல்லாம் என்ன‌ ப‌க்க‌த்து பாக்கிஸ்தானின் பிர‌ச்சினைக‌ளா?

  இப்ப‌டி ஓரிறையை ம‌ட்டும் வ‌ண‌ங்கி தான் உண்டு, த‌ன் வேலையுண்டு என்றிருக்கும் ச‌முதாய‌த்தின் மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளைக்கூட‌ தெருவுக்கு வ‌ந்து போராட‌ வைத்து சங்கடப்படுத்துவதில் என்ன‌ தான் உன‌க்கு ச‌ந்தோச‌மோ?

  ப‌ர‌ப‌ர‌ப்பாய் பேச‌ப்ப‌டும் ம‌க்க‌ளாலும், உற்சாக‌ப்ப‌டுத்தும் ஊட‌க‌ங்க‌ளாலும் கோடிக‌ள் ப‌ல‌ உன் கால‌டியில் வ‌ந்து விழும் என்ற‌ ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ உன் கொள்கையில் நீ பிடிவாத‌மாக‌ இருந்தால் உன‌க்கு ஒன்று சொல்லிக்கொள்ள‌ விருப்ப‌ம் "இர‌ண்டாவ‌து முறையாக‌ அமெரிக்க‌ அதிப‌ராக‌ ப‌த‌வி ஏற்றுள்ள‌ ப‌ராக் ஒபாமாவை ப‌ற்றியோ அல்ல‌து இஸ்ரேலின் உண்மை வ‌ர‌லாறு ப‌ற்றியோ உலகமே விமர்சித்து வியக்கும் வண்ணம் ப‌ட‌ம் எடுத்து பில்லிய‌ன் டால‌ர்க‌ள் பார்க்க‌ உம‌க்கு துணிவேதும் உண்டோ?

  இத‌ற்கு ப‌ரிகார‌மாக‌ அடுத்த‌ ப‌டத்தில் முஸ்லிம் பெய‌ரிட்டு நீ ந‌டித்து விடுவ‌தால் அநியாயமாய் வாங்கிய‌ அடிக‌ளும், அத‌னால் வ‌ரும் த‌ளும்புக‌ளும் வ‌லியின்றி எளிதில் ம‌றைந்து போகாது. சாப‌மிட்டே அது ம‌ர‌ணிக்கும்.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ///தாடி வைத்துள்ள அண்டை வீட்டார் முதல், போலீஸால் நடு வீதியிலிருந்து ‘தேர்ந்தெடுத்து’ அழைத்துச் செல்லப்படும் 13, 14 வயதுச் சிறுவர் வரை, அனைவரையும் ‘ஐ எஸ் ஐ ஏஜண்ட்’டாகத்தான் இருக்கும், அல்லது ‘இந்திய முஜாஹிதீன்களில் ஒருவனாக’ இருக்கும் என பாமரரும் எளிதாக புரியக்கூடிய வழி யாரேனும் செய்துள்ளனர் என்றால், அது சினிமாத்துறையினரே.///

  சுடும் உண்மை
  ஒரு நாட்டின் உயர்மட்ட அறிவுஜீவிகளின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அந்த நாட்டு மக்களின் எண்ண ஓட்டகங்களும் இருக்கும் என்பார்கள் அறிவுக் கலங்களில் அந்த துறைகளை நாம் சமூகம் புறக்கணித்ததை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது

  பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர

  ReplyDelete
 7. எய்தவன் எங்கோ இருக்கிறான், கமல்ஹாசன் ஒரு அம்பு என கருதுகிறேன்..

  Please check this article...

  http://www.littleindia.com/politics/9680-bombing-afghanistan-with-bollywood.html

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...