தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்
அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது.
எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.
பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும் எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது.
ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை, மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது.
நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.
இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது.
அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.
1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.
2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.
3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!
யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.
[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]
ஆசிரியர் பற்றிய குறிப்பு -- டேனியல்.செல்வராஜ்
0 comments:
உங்கள் கருத்துக்கள்...