தலைப்பில்லா கவிதை....

Tuesday, September 13, 2011 Anisha Yunus 7 Commentsஉனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...

உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...

அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....

இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...

கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...

இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....
..................
..........................
.............................
.........................................7 comments:

 1. அசத்தலான கவிதை

  //ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
  ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என..//

  ஜூப்பருங்க.

  ReplyDelete
 2. அட அசத்தலான கவிதைகளும் எழுதுவீங்கலா
  ஆனால் சோகமாக இருக்கு

  ReplyDelete
 3. கவிதை நன்றாக இருந்ததுங்க.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ நீங்க கவிதையேல்லாம் எழுதுவீங்களா? மாஷா அல்லாஹ் உண்மையாகவா? ஹா ஹா ஹா

  என்னமோ நான் இந்த பதிவை 13 ந் தேதியே படித்த மாதிரியும் படித்து ரசித்து இதற்கு(எதிர்பதிவு அல்ல)ஆதரவு பதிவு எழுதுன மாதிரியில்ல இருக்கு

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. கவிதைக்கு தலைப்பு எதற்கு..?
  தலைப்பே கவிதையாகவோ...
  அல்லது கவிதையே தலைப்பாகவோ அமையக்கூடாதா..?


  //உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது//

  ...இதற்கான காரணம்...

  //என்னை தொட
  விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....//

  ...இதுவோ..?


  சோகம் இழையோடும் தலைப்பில்லா இக்கவிதைக்கு நாம் சொல்லும் செய்தி...

  "இவ்வுலகம் மட்டுமே நம் வாழ்க்கை எனில்...
  இன்பத்தில் சற்று குறைந்தாலும் அது துன்பமே.

  நாம் மறுமைக்கான சோதனைக்களத்தில் இருப்பதாக கொண்டால்...

  ஒவ்வொரு துன்பம் வரும்போதும்...
  'இறைவனின் சோதனைகள் இவை' என்றெண்ணி பொறுமையுடன் கடந்து சென்றால்...

  துன்பம் அனைத்தும் இன்பமே..!"

  ReplyDelete
 6. அன்னு, உணர்வுகளை கவிதையில் கொட்டும் பொழுது அலாதி நிம்மதி..
  அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...