பெற்றோரா ??? இறைவனுக்கா ????

Thursday, June 14, 2012 Anisha Yunus 10 Comments

 

 இறைவனுக்கு குழந்தை தேவையா?இறைவனுக்கு என்ன தேவை இருக்கக்கூடும்? இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா? இறைவனுக்கு பெற்றோர் இருக்கலாமா?

யோசித்துப் பாருங்கள் மேற்கண்ட கேள்விகளை...

ஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா? அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா? உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும்? தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது? அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே? நிகழவே முடியாத நிலையாகிறதே? எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல. அல்லாஹ், குர்'ஆனில் கூறுகின்றான்,
"அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்'ஆன் 112:1)"

இறைவன் சோர்வடையக் கூடுமா? இறைவன் மறக்கவோ அல்லது தவறிழைக்கவோ முடியுமா?

"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (குர்'ஆன் 2:255)"

இறைவனுக்கு ஈடு / இணை உண்டா?

"(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)"

நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் உண்டா?

நாம் முன்னரே சொன்னது போல், நம்மை சுற்றியுள்ள பொருட்களைப் பார்ப்போம். அவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நோக்கம் இல்லாமல், அதன் இருத்தலுக்கான ஒரு காரணம் இல்லாமல் இருக்கிறதா? நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே? ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா? இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா? பகுத்தறிவுள்ள எந்த மூளையும் இதை ஒத்துக் கொள்ளும், இவ்வுலகில் வாழும் நமக்கு ஒரு நோக்கம் / காரணம் இருப்பதை.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை யார் முடிவு செய்வது? நாமா அல்லது நம்மை படைத்தவனா?

சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் எழுதுகோலையே எடுத்துக் கொள்வோமே? அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன? அதன் உண்மையான நோக்கம், "எழுதுவது" அல்லது "எழுத உதவுவது". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது? முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா? எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே? நம் வாழ்க்கையின் சரியான / உண்மையான நோக்கம் என்ன என்பதை நம்மைப் படைத்த இறைவனிடமிருந்து மட்டுமே அறிய முடியும்.

வாழ்வின் நோக்கம் என்ன?

இதற்கான பதிலை இறைவன் குர்'ஆனில் தெளிவாக கூறுகின்றான்,
"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(குர்'ஆன் 51:56)"

இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என இறைவன் ஏன் எதிர்பார்க்கிறான்?

ஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் குழந்தை தமக்கு கட்டுப்பட்டு வளர வேண்டும் என எதிர்பார்ப்பது நிதர்சனம். ஒரு ஆசிரியர், தம மாணவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சாதாரணம். அதே ரீதியில்தான் நம்மைப் படைத்த இறைவனும், அவனை மதித்து, அடி பணிந்து நாம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறான். வணக்கத்திற்குரிய தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது, எனவே நாம் அவனை வணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இன்னும் வேறு விதமாக சொன்னால், நம் வாழ்வே ஒரு சோதனைதான். நாம் இறைவனை அஞ்சி, வணங்கி நடக்கிறோமா என பரீட்சித்து பார்க்கும் ஒரு சோதனைக்களம்தான் இவ்வுலக வாழ்வு. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (குர்'ஆன் 67:2)"


இனி, நபிமார்கள் என்றால் யார்?
.

10 comments:

  1. \\ஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா? அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா? உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும்? தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? \\ இறைவன் என்பவன், இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அற்ப மனிதனாகிய நீங்கள் இவ்வாறு சட்டம் போடுவது, அவன் யாராலும் கட்டுப் படுத்த முடியாத எல்லாம் வல்ல சர்வதிகாரி என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுவதாகும். அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான், இந்த உலகில் மனிதர்கள் உள்ள நிலையைப் பார்த்து அது இறைவனுக்கும் பொருந்த வேண்டும் என்று எதிர் பார்ப்பதே அறியாமை. அவனுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்வான். அதைச் செய்ய முடியாது, இதைச் செய்ய முடியாது என்று நீங்கள் எப்படி எல்லாம் வல்ல ஒருவனை சட்ட திட்டங்கள் போட்டு தடுக்க முடியும்? ஏன் நட்பு, பெற்றோர், காதலி, சேவகன் போன்ற உறவுகளை இறைவன் ருசிக்கக் கூடாது என்று நீங்கள் சட்டம் போடுகிறீர்கள்? சொல்லப் போனால் இந்த உலகத்தில் உள்ளது அத்தனைக்கும் மூலமே இறைவன், அவனிடத்தில் இல்லாத ஒன்று இங்கே எப்படி இருக்க முடியும்? கிளிகள் என்பது பறவைகள் என்ற குலத்தைச் [super set] சார்ந்தது என்றால், அதில் கிளிகளுக்கு [sub set] மட்டுமல்ல எல்லா பறவைகளும் அடக்கம். இந்த பிரபஞ்சத்திற்கு மூலம் இறைவன், அவனிடத்தில் இங்கு உள்ளதும் இருக்கும், அதற்க்கு மேலும் இருக்கும், ஆனால் அவனிடத்தில் இல்லாதது எதுவும் இங்கே இருக்க இயலாது.

    ReplyDelete
  2. \\இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது? அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே? நிகழவே முடியாத நிலையாகிறதே? எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல.\\ இறைவனின் பெற்றோர் என்றால் அவரை உருவாக்கியவர்கள் என்று அர்த்தமல்ல, அவர்களுடன் பெற்றோரிடம் உள்ள sentiments களோடு இறைவன் பழகுவார் என்று அர்த்தம். அவர்களும் இறைவனை இறைவன் என்பதை மறந்து தங்களது குழந்தையாகவே பாவிக்கிறார்கள். அதே போல மற்ற உறவுகளும் அவருக்கு உண்டு. மேலும் இறைவனைப் போலவே அந்த உறவுக்கும் ஆரம்பமோ, முடிவோ இல்லை. இறைவனுக்கு இது தேவையா என்று நீங்கள் கேட்கலாம், அதை தேவையா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது, அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. \\எழுதிரணும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்படியே ஒரு ஓட்டும்தேன் போட்டுட்டு போங்களேன்...\\ ஓட்டு போடுறேன், ஆனா எங்கேன்னு சொல்லவில்லையே?!!

    ReplyDelete
  4. சகோ ஜெயதேவதாஸ்,

    //இறைவன் என்பவன், இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அற்ப மனிதனாகிய நீங்கள் இவ்வாறு சட்டம் போடுவது, அவன் யாராலும் கட்டுப் படுத்த முடியாத எல்லாம் வல்ல சர்வதிகாரி என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுவதாகும். //
    சகோ, இறைவன் எப்படி இருக்கவேண்டும் என இறைவன்தான் தீர்மானித்துள்ளான். அதற்கான கோட்பாடுகளை இறைவனே தன் திருமறையில் குறிப்பிட்டுள்ளான். மனிதன் இயற்றிய மறையாக இருந்தால்தானே நீங்கள் இந்த குற்றம் சாட்ட முடியும்? இந்தப் பதிவில் எங்கே அப்படி மனிதனின் ரூல்ஸை குறிப்பிட்டுள்ளேன் சொல்லுங்கள்??

    //அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான், இந்த உலகில் மனிதர்கள் உள்ள நிலையைப் பார்த்து அது இறைவனுக்கும் பொருந்த வேண்டும் என்று எதிர் பார்ப்பதே அறியாமை.//
    சரியாக சொன்னீங்க... அதேதான் இறைவனும் முதல்ல இருந்து சொல்றார்.

    //ஏன் நட்பு, பெற்றோர், காதலி, சேவகன் போன்ற உறவுகளை இறைவன் ருசிக்கக் கூடாது என்று நீங்கள் சட்டம் போடுகிறீர்கள்? //
    நாங்க எங்க சட்டம் போட்டோம்? இறைவனின் தன்மையே அதுதானே... பிறப்பும் இறப்பும் உள்ள ஒரு உயிருக்கு அது ஜீவித்திருக்கும் காலம் வரை ஆதரவுக்கும் ஆத்ம திருப்திக்கும் ஒரு துணை தேவை. ஆனால் இறைவன் அப்படி ‘இறைவனடி சேர்’பவரில்லையே.... அப்படி ஒரு உறவு பின் எதற்கு தேவை என நினைக்கிறீர்கள்??

    //இந்த பிரபஞ்சத்திற்கு மூலம் இறைவன், அவனிடத்தில் இங்கு உள்ளதும் இருக்கும், அதற்க்கு மேலும் இருக்கும், ஆனால் அவனிடத்தில் இல்லாதது எதுவும் இங்கே இருக்க இயலாது.//
    இப்பவும் சரியான வாதம்..!!

    //இறைவனின் பெற்றோர் என்றால் அவரை உருவாக்கியவர்கள் என்று அர்த்தமல்ல, அவர்களுடன் பெற்றோரிடம் உள்ள sentiments களோடு இறைவன் பழகுவார் என்று அர்த்தம். அவர்களும் இறைவனை இறைவன் என்பதை மறந்து தங்களது குழந்தையாகவே பாவிக்கிறார்கள். அதே போல மற்ற உறவுகளும் அவருக்கு உண்டு. //
    ஸ்ஸ்ஸ்.... முடியல பாஸ்..!! ஒரு வாக்கியத்துல இப்படியும் மறு வாக்கியத்துல அப்படியும்.... எப்படி இப்படியெல்லாம்??

    //இறைவனுக்கு இது தேவையா என்று நீங்கள் கேட்கலாம், அதை தேவையா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது, அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.//
    அல்லாஹ்வே.... மறுபடியும் அதே உருட்டா??

    //எழுதிரணும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்படியே ஒரு ஓட்டும்தேன் போட்டுட்டு போங்களேன்...\\ ஓட்டு போடுறேன், ஆனா எங்கேன்னு சொல்லவில்லையே?!!//
    அதென்னவோ தெரியல சகோ... எந்த டெம்ப்ளேட் மாத்தினாலும் எனக்கும் திரட்டிகளின் கோட் ஸ்னிப்பெட்ஸ்க்கும் ஒத்து வர மாட்டேங்குது.... அதனால இப்ப மாத்திட்டேன் :))

    ReplyDelete
  5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .......... அப்பா........... அம்மா.......... இதெல்லாம் போட்டே பதிலை நிரப்பியிருக்கீங்க...........!! இப்பவாச்சும் பதில் போடணும்னு பெரிய மனசு வச்சீங்களே, அதைப் பாராட்டனும்.

    இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் திருமறையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை, உங்கள் மனதுக்குப் பட்டதை எழுதியிருக்கிறீர்கள். அது சரியாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

    \\பிறப்பும் இறப்பும் உள்ள ஒரு உயிருக்கு அது ஜீவித்திருக்கும் காலம் வரை ஆதரவுக்கும் ஆத்ம திருப்திக்கும் ஒரு துணை தேவை. ஆனால் இறைவன் அப்படி ‘இறைவனடி சேர்’பவரில்லையே.... அப்படி ஒரு உறவு பின் எதற்கு தேவை என நினைக்கிறீர்கள்??\\ இதுதான் உங்க கற்பனை என்கிறேன். மனுஷன் எதற்கையா துணை தேடுகிறான்? அந்த தேடும் குணம் எங்கேயிருந்து வந்தது? ஏனெனில் இறைவனிடம் அது நிரந்தரமாக இருப்பதால் இங்கே மனிதனிடமும் இருக்கிறது, அவனிடத்தில் இல்லாதது எதுவும் இங்கே மனிதனிடத்திலோ இந்த பிரபஞ்சத்திலோ இருக்காது.

    உங்களுக்கு இதுக்கு மேல சொல்ல விரும்பவில்லை, உங்க பிளாக்கில் ஸ்க்ரோல் பாரை பயன்படுத்த முடியாமல், பின்னாடியே வராங்க ......... போன்ற பட்டங்கள் தடுக்கின்றன, விரும்பினால் இதற்க்கு தீர்வு காணுங்கள்.


    எனது வலைப்பூவைப் படிக்க:
    http://jayadevdas.blogspot.in

    ReplyDelete
  6. சகோ ஜெயதேவ்தாஸ்,

    புதிதாய் ஒரு பதிவு போடும்போதுதான் பழைய பதிவுகளின் கமெண்ட்களுக்கு பதில் தருவது என் வழக்கம். சில சமயங்களில் நேரம் இருப்பின் முன்கூட்டியே பதில் தருவதுமுண்டு.

    திருமறையில் அடுப்பை பற்றியோ இறைவனின் அவதாரங்கள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை சகோ. எதுவெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் வசன எண்களுடன் குறிப்பிட்டுள்ளேன். எந்த விஷயம் இதில் உங்களுக்கு சரியாக படவில்லை? குறிப்பிடுங்கள், பதிலிருந்தால்... பதில் தர நேரமிருந்தால் கட்டாயம் பதில் தருகிறேன்...

    //மனுஷன் எதற்கையா துணை தேடுகிறான்? அந்த தேடும் குணம் எங்கேயிருந்து வந்தது? ஏனெனில் இறைவனிடம் அது நிரந்தரமாக இருப்பதால் இங்கே மனிதனிடமும் இருக்கிறது,...அவனிடத்தில் இல்லாதது எதுவும் இங்கே மனிதனிடத்திலோ இந்த பிரபஞ்சத்திலோ இருக்காது. //
    தவறாக விளங்கி உள்ளீர்கள் சகோ. மனிதனிடம் இருக்கும் எல்லா குணமும் இறைவனுக்கும் இருக்க வேண்டுமானால் பசித்தால் உண்பதும், வலித்தால் வெளிக்கு போவதும் இறைவனின் குணமாகுமா? அவனின் தகுதிக்கு சரிப்படு வருமா யோசியுங்கள். நாம் உயிர் வாழ பசியும் புசியும் உண்டு. இறைவன் அப்படிப்பட்ட நிலையில்தான் உயிர் வாழ முடியுமா?? இல்லைதானே?? அதேதான் இங்கேயும். இணை தேடும் தேவை இறைவனுக்கு இல்லை, ‘ஆகுக’ என்று கட்டளையிட்டால் படைப்புகள் உருவாகக்கூடிய ஆற்றல் இருக்கும்போது இறைவனையும் நம்மைப் போலவே இணை தேடி, கூடி, படைப்புக்களை பெற வேண்டும் என எப்படி எண்ண முடிகிறது??? மனிதனிடத்தில் இருக்கும் குணம் எல்லாம் இறைவனிடத்திலும் இருக்க வேண்டும் என்றால், இறைவன் பொய்யும் புளுகும் கலந்தவனாக இருக்க வேண்டும் என்றால், இறைவன் என்ற சொல்லுக்கு அகராதியில் என்ன அர்த்தம் தருவீர்கள்...??

    சகோ... இறைவன் மிக மிக மிக மிக.... infinite times உயர்ந்தவன். அவனை மனிதனின் அனாச்சாரங்களுக்கும் அவனே மூலம் என எண்ணாதீர்கள். மனிதனைப் போல சிறுமை கொண்டவனாக இருக்க வேண்டும் என்றும் எண்ணாதீர்கள். அவனின் தகுதிக்கு அது ஒப்பாகாது. ஒரே நேரத்தில் உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் உயிரற்றவைகளுக்கும் தேவையை பூர்த்தி செய்ய வல்லவன். அவனின் ஆற்றலை மனிதனோடு ஒப்பிடாதீர்கள். இந்த விஷயத்தை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

    //உங்களுக்கு இதுக்கு மேல சொல்ல விரும்பவில்லை, //
    உங்க இஷ்டம் சகோ. தேடல் இருக்கும் வரைக்கும், உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் வரைக்கும் கேள்விகள் நிறகாது. எப்பொழுது கேள்விகள் நிற்கின்றனவோ அப்பொழுது முன்முடிவு எடுத்தாயிற்று என்றே அர்த்தம். அது உண்மையிடம் போய்ச்சேர உங்களை விடாது.

    //உங்க பிளாக்கில் ஸ்க்ரோல் பாரை பயன்படுத்த முடியாமல், பின்னாடியே வராங்க ......... போன்ற பட்டங்கள் தடுக்கின்றன, விரும்பினால் இதற்க்கு தீர்வு காணுங்கள்.//
    கண்டிப்பாக கவனிக்கிறேன். நன்றி சுட்டிக் காட்டியமைக்கு. நேரம் கிட்டும்போது கண்டிப்பாக இதனை சரி செய்ய முயல்கிறேன். மீண்டும் நன்றி. :)

    ReplyDelete
  7. இறைவன் என்பவன் Absolute truth, அவனை இங்கே காணும் relative truth களை வைத்து ஒப்பிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். இஸ்லாமியர்களில் இறைவனுக்கு வடிவம் உண்டு, அவர் அர்ஸ் என்னும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள், உங்கள் நிலைப்பாடு எனக்குத் தெரியாது. Christians இறைவன் மனிதனை தன் வடிவிலேயே படைத்தான் என்கிறார்கள். அப்படியானால் நாம் உண்ண வாய் தேவை அவனுக்கு எதற்கு என்ற கேள்வி எழும். அவனுக்கு எந்த வடிவம் இருந்தாலும், ஏன் அவன் அந்த வடிவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழும், பதில் சொல்ல முடியாது. But, நமக்குள்ள tendency அத்தனையும் அவனுக்கு உண்டு, ஆனால் அவன் எது செய்தாலும் அது அவனுக்கு இகழ்ச்சியாகாது. இந்த மண்ணுலகம் விண்ணுலகத்தின் பிரதிபலிப்பே, ஒரே வித்தியாசம், இது நிரந்தரமற்றது, பிறப்பு இறப்புக்கு உட்பட்டது, அங்கே அது இல்லை. ஒரு மலையின் பிரதிபலிப்பைப் பார்த்தால் அதில் உயரமான இடம் பிரதிபலிப்பில் மிகவும் கீழாக இருப்பதாகத் தோன்றும், அது போல நமது செயல்கள் கீழ்த் தரமானவை, இறைவனிடத்தில் அந்த duality இல்லை. நீங்கள் இறைவன் ஏன் இவ்வாறெல்லாம் இருக்க முடியாது என்னும் போது, லாஜிக்காக வாதங்களை வைக்காமல், திருமறையில் இவ்வாறு சொல்லப் பட்டுள்ளது அதன் பொருள் இதுதான் என்று உங்கள் வாதத்தை வைக்கலாம்.

    ReplyDelete
  8. //இறைவன் என்பவன் Absolute truth, அவனை இங்கே காணும் relative truth களை வைத்து ஒப்பிட்டால் குழப்பம் தான் மிஞ்சும்.//
    கரெக்ட்டாக சொன்னீங்க சகோ. இதேதான் இந்த தொடர்பதிவு மூலமா உணர்த்த விரும்புகிறேன். நாம் வாழும் உலகம், மக்கள், உயிரினம், சந்திரன், சூரியன் என எல்லாமே relative truthதான். அதைக் கொண்டு கற்பனைக்கே எட்டாத தன்மைகளையும் இயல்புகளையும் கொண்ட இறைவனை நம்மோடு கம்பேர் செய்வது மிகப்பெரிய தவறு. இறைவனுக்கு அது இழுக்கு.

    //இஸ்லாமியர்களில் இறைவனுக்கு வடிவம் உண்டு, அவர் அர்ஸ் என்னும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள், உங்கள் நிலைப்பாடு எனக்குத் தெரியாது.//
    அதே நிலைப்பாடுதான் எனக்கும். அர்ஷில் இறைவன் எவ்வாறு அமர்வான் / அமர்ந்திருப்பான் / எழுவான் என்பதெல்லாம் நம் கற்பனைக்கு எட்டாது, புரிந்து கொள்ளவும் இயலாது. நம்மைச் சுற்றியுள்ள உலகை வைத்து இப்படித்தான் இறைவனும் அமர்வான், எழுவான் என நினைப்பது தவறு.

    // Christians இறைவன் மனிதனை தன் வடிவிலேயே படைத்தான் என்கிறார்கள். அப்படியானால் நாம் உண்ண வாய் தேவை அவனுக்கு எதற்கு என்ற கேள்வி எழும். அவனுக்கு எந்த வடிவம் இருந்தாலும், ஏன் அவன் அந்த வடிவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழும், பதில் சொல்ல முடியாது.//
    இதுவும் சரியான விவாதமே. இறைவன் எப்படி இருக்க வேண்டும், இருக்ககூடாது என்பதை நாம் அலச தேவை இல்லை. It's just not our business. அவனின் திறன் / அமைப்பு / ஆற்றல் எதுவோ அதை அப்படியே ஏற்கத்தான் வேண்டும்.பதில் சொல்ல இயலாத கேள்வியல்ல அது. தேவையற்ற, நமக்கு உபயோகமற்ற கேள்வி அது. இறைவனின் அம்சங்களையும் குணங்களையும் கொண்டே அவனை அறிந்திடவும் நெருங்கிடவும் முயல் வேண்டுமே தவிர அவனின் அமைப்பைக் கொண்டல்ல.

    //But, நமக்குள்ள tendency அத்தனையும் அவனுக்கு உண்டு, ஆனால் அவன் எது செய்தாலும் அது அவனுக்கு இகழ்ச்சியாகாது.//
    இங்க தான் சகோ இடிக்குது. அவனுக்கிருக்கும் பண்புகளில் சில நமக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.... அது 0.000000000000001% கூட அவனின் பண்புகளோடு ஒத்துப் போகுமா என்பது பெரிய கேள்வி. மறுபடியும் கேட்கிறேன்.... ஏன்? எதற்காக இறைவன் மனிதனின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?? நமக்குள்ள கீழ்த்தரமான எண்ணங்களையும் இறைவன் கொண்டாலும் அது அவனுக்கு இகழ்ச்சியாகாது என எப்படி எண்ண முடிகிறது உங்களால்? உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், சில நாட்களுக்கு முன் பிரபல ஆன்மீகவாதி ஒருவர் நடிகையுடன் இருந்த வீடியோ பரபரப்பை உண்டாக்கிற்று. இப்படி இருக்கக்கூடாது என்றும் இருக்கலாம் என்றும் பல தரப்பினர். ஏன் இருக்ககூடாது என்னும் கான்செப்ட் இங்கே வந்தது? நம்மை விட ஆன்மீகவாதி உயர்ந்தவர், குணநலன்களில் சிறந்தவர், ஆன்மீகத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் -- ஆகையால் அவர் இச்சைகளை தவிர்க்க வேண்டும் என எண்ணுவதால். ஒரு சாதாரண மனிதன், ஆன்மீகவாதி என தம்மை முடிசூட்டிக் கொள்ளும்போதே அவன் சிற்றின்பத்தின் பக்கம் போகக்கூடாது என்கிறோம்... ஆனால் இறைவன் மட்டும் அப்படி இச்சையுடையவனாக இருக்கலாமா?? அது எப்படி அவனுக்கு இகழ்ச்சியாகாமல் போகும்? சகோ... மனிதன் பலதரப்பட்ட கேளிக்கைகளில் மகிழ்பவன். இறைவன் கேளிக்கைகளுக்கும் இச்சைகளுக்கும் தன் நேரத்தை செலவிடுபவன் அல்ல. இவ்வுலகை நிர்மாணிக்கவும், பாதுகாக்கவும், பரிபாலிக்கவும், அணுவளவும் அநீதி தழையவிடாமல் இருக்கவும் உறுதி பூண்டவன், இந்த சிற்றின்பங்களில் (எத்தகையதானாலும்) சிக்குற மாட்டான். அது அவனின் தன்மைக்கு ஒவ்வாதது.

    சகோ ஜெயதேவ்தாஸ்,
    //நீங்கள் இறைவன் ஏன் இவ்வாறெல்லாம் இருக்க முடியாது என்னும் போது, லாஜிக்காக வாதங்களை வைக்காமல், திருமறையில் இவ்வாறு சொல்லப் பட்டுள்ளது அதன் பொருள் இதுதான் என்று உங்கள் வாதத்தை வைக்கலாம். //
    திருமறையில் மட்டுமல்ல சகோ, தலையில் இருக்கும் மறையிலும் இதுதான் தெளிவான பதிலாக இருக்கிறது. இதற்கு விதிகளும் வரையறைகளும் வகுத்துக் கொடுத்தவன் இறைவனே எனவே இதில் ஐயம் கொள்ளவோ, மறைக்கவோ, மறுக்கவோ எதுவுமில்லை. ஆராயாமல் திருமறையை நம்ப முடியாது. ஆராய்ந்து அறியுங்கள் என்றுதான் திருமறையில் இறைவனே கூறுகிறான். இது கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை சகோ, ஆராய்ந்து அறிந்து மனதிற்கு ஒப்பிய பின் ஏற்பட்ட நம்பிக்கை. சிந்தியுங்கள் :)

    ReplyDelete
  9. \\ஏன்? எதற்காக இறைவன் மனிதனின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?? \\ இறைவன் மனிதனின் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை, மனிதன் இறைவன் பண்புகளைக் கொண்டுள்ளான், ஏனெனில் he is the source of everything.

    \\நமக்குள்ள கீழ்த்தரமான எண்ணங்களையும் இறைவன் கொண்டாலும் அது அவனுக்கு இகழ்ச்சியாகாது என எப்படி எண்ண முடிகிறது உங்களால்?\\ கீழ்த்தரம் மேல்தரம் இதெல்லாம் relative terms. இந்தியாவில் ஒரு பெண் கண்ட கண்ட ஆடவர்களுடன் தொடர்பு கொண்டால் கீழ்த்தரம், அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப் பட்டது, அதை யாரும் கேவலமாக நினைப்பதே இல்லை. சாராயம் குடிப்பது கீழ்த்தரம், சட்டப் படி கைது செய்யலாம் என்றின்தது ஒரு காலத்தில், இப்போது அது சட்டப் பூர்வமாக்கப் பட்டுவிட்டது. எனவே, கீழ்த்தரம் என்பது எதை ஒப்பிட்டு சொல்கிறீகள் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறதே ஒழிய Absolute concept இல்லை. இறைவனைப் பொறுத்தவரையில் கீழ்த்தரம் மேல்தரம் என்ற duality -யே கிடையாது. There can not be anything that is independent of God, that is impossible, because he is the source of everything. எனவே, மனிதன் கீழ்த்தரம் மேல்தரம் இரண்டுக்குமே இறைவனே மூலம் ஆனால், இறைவனிடத்தில் அந்த duality இருக்காது. உங்கள் வீட்டில் மின் அடுப்பு சூட்டை கொடுக்கிறது, ஃபிரிட்ஜ் கூலிங் செய்கிறது, ஆனால் மின்சார சப்ளையில் சூடான மின்சாரம், குளிர்ச்சியான மின்சாரம் என்ற பாகுபாடு கிடையாது. மனிதனின் செயல்கள் இறைவனிடமிருந்து வரவில்லை என்றால் இறைவனிடத்தில் இல்லாத ஒன்று மனிதனிடத்தில் உள்ளது என்றாகிவிடும், இறைவனை விட வல்லமை பொருந்தியவன் மனிதனாகிவிடுவான். அதே சமயம், இறைவனிடத்தில் இருப்பதால் அவன் bad என்றாகிவிட மாட்டன்.

    ReplyDelete
  10. \\ உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம், சில நாட்களுக்கு முன் பிரபல ஆன்மீகவாதி ஒருவர் நடிகையுடன் இருந்த வீடியோ பரபரப்பை உண்டாக்கிற்று. இப்படி இருக்கக்கூடாது என்றும் இருக்கலாம் என்றும் பல தரப்பினர். ஏன் இருக்ககூடாது என்னும் கான்செப்ட் இங்கே வந்தது? \\ ஆன்மீகத்தின் போலி. டபுள் ஆயுள் தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.


    \\நம்மை விட ஆன்மீகவாதி உயர்ந்தவர், குணநலன்களில் சிறந்தவர், ஆன்மீகத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் -- ஆகையால் அவர் இச்சைகளை தவிர்க்க வேண்டும் என எண்ணுவதால்.ஒரு சாதாரண மனிதன், ஆன்மீகவாதி என தம்மை முடிசூட்டிக் கொள்ளும்போதே அவன் சிற்றின்பத்தின் பக்கம் போகக்கூடாது என்கிறோம்... ஆனால் இறைவன் மட்டும் அப்படி இச்சையுடையவனாக இருக்கலாமா?? அது எப்படி அவனுக்கு இகழ்ச்சியாகாமல் போகும்? \\ Because He is beyond duality. He is the Supreme autocrat, you can't question Him. If something is not there in Him, it cannot exist in His creation also. He being the source of everything, if you find something in His creation, but not there in Him then His creation has something more than Him, which will lead to question His very Supremacy.


    \\சகோ... மனிதன் பலதரப்பட்ட கேளிக்கைகளில் மகிழ்பவன். இறைவன் கேளிக்கைகளுக்கும் இச்சைகளுக்கும் தன் நேரத்தை செலவிடுபவன் அல்ல. \\ He is not like a stone, Bro!! If he can show infinite mercy, why can't he have other qualities?

    \\இவ்வுலகை நிர்மாணிக்கவும், பாதுகாக்கவும், பரிபாலிக்கவும், அணுவளவும் அநீதி தழையவிடாமல் இருக்கவும் உறுதி பூண்டவன், இந்த சிற்றின்பங்களில் (எத்தகையதானாலும்) சிக்குற மாட்டான். அது அவனின் தன்மைக்கு ஒவ்வாதது.\\ He has so many servants to take care of the Generation, Ordinance and Destruction, and he has nothing to do with this nonsense. He has his own abode where everything is bliss, and has no duality like good and bad.

    Anyway, have your faith and go ahead, may God bless you!! Bye.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...