கிழவனும் கடலும் -- என் பார்வையில்

Thursday, September 03, 2015 Anisha Yunus 0 Comments

... எர்ன்ஸ்ட் ஹெமிங்வே உடைய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவல்.
Anisha Yunus's photo. முதல் முறை வாசித்திருக்கிறேன் ஹெமிங்வேயை... அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிகாகோவின் அருகிலுள்ள கிராமம் என்பது ஏனோ மனதுக்கு இதமளிக்கிறது. மறுக்க இயலாத வாஞ்சை இன்னும் அம்மண்ணை விட்டகல்வதே இல்லை.... க்ஹைர்... எர்னெஸ்ட் ஹெமிங்வேயைப் பற்றி அவரின் நூட்களில் எல்லாமே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகம் வாசித்துவிட்டு பகிர விரும்புகின்றேன், எளிய நடைக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே இப்போதைக்கு உணர்ந்து கொண்ட உண்மை.
இந்த நாவல், வறுமையிலும் முதுமையிலும் சிக்கியதோர் கிழவனைப் பற்றியது. மீன்பிடித்தல் என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி, ஒரு ஆணுக்கான அடையாளமாய் சுய அங்கீகாரத்துடன் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஓர் எளியவன் பற்றியது. பசி, வேதனை, இரத்தக்காயத்தின் மீதான கோபம், தனிமை, இயலாமை, வாழ்ந்து கெட்ட கணங்கள், வாழத்துடிக்கும் ஆவேசம், வயதை மீறிய துணிவு, பிரயத்தனம் என எல்லாமே உயிர்ப்புடன் எழுதப்பட்டுவிட எப்படியான அனுபவம் இருக்கக்கூடும் ஒரு ஆசிரியருக்கு... வியக்கிறேன்... மீன் பிடிக்கும் மனிதர்களின்வாழ்வைப் பற்றிய கற்பனையே அத்தனை போதுமானதா எனத் தெரியவில்லை... கற்பனைக்கும் மீறிய யதார்த்தமாகவே படுகின்றது, விவரங்களும், கள அமைப்பும், நடையும்...
அந்தக் கிழவனோடு சேர்ந்து வாசகனும் வேர்வையில் உழன்றும், இயலாமையில் சோர்வுற்றும், ஆப்பிரிக்க கடலோர சிங்கங்களின் அழகியலில் கரைந்தும், சிக்கிய மீனிடமே தன்நிலையைச் சொல்லி கெஞ்சவும், திடீரென வந்து நிற்கும் ஒரு பறவையைக் கொஞ்சவும், காயத்துக்கு மருந்து போடக்கூட துணை இல்லாததை நினைத்து தழுதழுக்கவும், ஆறுதல் தேடவும் முடிகிறதென்பதே நாவலின் வெற்றிதானல்லவா....?
கிழவனின் வெற்றி என்பது விற்பனைக்கென ஒரு மீனை அடைந்ததில் இல்லை.... தன் பலம் காட்டிட சுறாக்களைக் கொன்றதில் இல்லை.... மாறாக, தன்னையே மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணமே கிழவனின் வெற்றி.... படித்து முடித்த பின்னரும் அமைதியடையாத கடலாய் மனமும் நினைவுகளும்... .....அழகியதோர் வாசிப்பு.
...ம்ம்ம்.
...இரவல் நூலகத்தில் இனி நூல்கள் வாங்கிப் படிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும.. திருப்பிக் கொடுத்துவிட மனம் மறுக்கின்றதே?????

0 comments:

உங்கள் கருத்துக்கள்...