ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..

Sunday, September 06, 2015 Anisha Yunus 0 Comments



முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம். இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான் சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...) க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி...!

சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத, போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.

எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது. அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும் பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும் அடங்கியுள்ளது.

முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த் தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை, இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும், தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய் வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ, கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப் பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.

தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக் காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும் துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும் உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம் என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின் சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன். நடக்கக்கூடியதா??

பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன. வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில் மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம் மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம் பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல.. அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.

முடிவாய் இரு கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்.. //இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும் காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும் உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின் தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய் இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது. புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள் இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின் வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும் அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது குறித்த ஒரு கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம் கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.

மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!

0 comments:

உங்கள் கருத்துக்கள்...