இரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①
இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் படிக்க ஆரம்பிக்கும்போது, 2004 இல் வெளியிடப்பட்டு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்ட ஒரு பிரச்சினையின் வேரின் மேல் மீண்டும் கால் பதித்து விட்டேனோ என்றே பட்டது. மேற்கொண்டு வாசிக்கும்போது ஊகம், ஊர்ஜிதமாகி விட்டது.
= = =
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்தான் சகோதரி சல்மாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் வாங்கிய இந்நூல் இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளும் ஒரு முரணை, ஒரு தூரத்தை, ஒரு கானல் நீர் விம்பத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கிறேன். ஏன் இப்படி?? ஒரு வேளை முதலிலேயே இந்த நூலை வாசித்து விட்டு பின்னர் கவிதைத் தொகுதியை வாசித்திருந்தால் வேறு பார்வை கிட்டியிருக்குமோ என்னவோ. எனினும் எல்லாவிடத்திலும் கருத்துக்களை கருத்துக்களாகவே அணுக விரும்புகின்றேன்.
இந்தப் பகுதியில் மதிப்புரையைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். மதிப்புரை தந்திருப்பவர் திரு.ரவிக்குமார். சில காலத்திற்கு முன் பேராசிரியர் அ.மார்க்ஸுடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழை நடத்திக்கொண்டிருந்தவர். தற்போது ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.
= = =
பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், அதிலுள்ள குடும்ப அமைப்பின் மீதும், அதன் பெண்களின் மீதும் ஒரு கசங்கிய பார்வைதான் வெளியுலகிற்கு இருக்கின்றது. குஜராத் சம்பவத்தில் ஒரு டாகுமெண்டரியில் ஒரு நரவெறி மிருகம் சொல்லும்... உரித்த மாம்பழங்களைப் போல எங்களுக்கு முஸ்லிம் பெண்கள் கிடைத்தார்கள், நாங்கள் வெறியுடன் பசியாற்றினோம் என. நிதர்சனத்தில் பெண்கள் மீதும், அதிலும் இஸ்லாமியப் பெண்களின் மீது ஆண்களின் பார்வையில் தேடலும், தகிக்கும் தவிப்பும்தான் இருக்கின்றது என்பதுவே உண்மை.
யானையைக் கண்ட குருடர்கள் போல, ஒரு பொரி கிடைத்ததும் அது உண்மையா, நிஜம்தானா என்பதைக் கூட அறிந்து தெளியாமல் குருடர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று அதுதான் யானை என வாதாடினால்??? அதுபோல்தான் இருக்கின்றது, நாவலும் அதன் முன்னுரையும். ஒவ்வொரு விமர்சனம் எழுதும் முன்னரும், அதன் ஆசிரியரைப் பற்றி, அவர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி, அதற்கு மதிப்புரை / அணிந்துரை / முன்னுரை எழுதியுள்ள பெருமக்களைப் பற்றி, இன்னும் பலதரப்பட்ட பார்வைகளையும் வாசித்து உள்வாங்கி, அதன் பின்னரே என் பார்வையை பாரபட்சமில்லாமல் வைக்க வேண்டும் என எண்ணும் ஒரு சாமான்ய மனிதனுக்கிருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையா சார்???? குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகின்றது. அவர்களுக்கு வெறுப்பு, உங்கள் மீதல்ல, உங்களின் மார்க்கத்தின் மீது என்று. சத்தியமான வார்த்தைகள்.
ஒரு சமூகம் பற்றிய தனது அறியாமையை, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை மேடையிட்டுப் பறை சாற்ற திரு. ரவிக்குமாருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் போன்றிருக்கின்றது. பெண்களின் உடல் பற்றிய எண்ணங்களே புதிராகவும், காணும் பொருள் யாவும் அதனையொட்டிய கனவாகவே வியாபித்திருக்கும் இருளடைந்த கிடங்கில் பாலியல் குறித்த பெண்களின் சம்பாஷணைகள் என்பது இன்னும் கிளர்ச்சியூட்டும் ஓர் புதிராகவே இருந்திருக்கக்கூடும். அதனைக் கண்டு, படித்து, புளகாங்கிதமடைந்து, லயித்துக்கிடக்க இந்த நூல் பலருக்கும் உதவியுள்ளது போல அவருக்கும் உதவியுள்ளது என்பது மட்டுமே புரிகின்றது. அழகிய பொய்களும், புனைவுகளும் சீராட்டத்தான் படுகின்றன.
விரும்புகிற உடலை அடைவது சுதந்திரம் எனவும், விலங்குகளின் பழக்க வழக்கத்தை ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் செய்பவரை எந்தக் கோணத்தில் ஆராய்வது. தன் சமூகத்திடமும், தன் குடும்பத்திடமும் இதையே பரப்ப அவர் தயாராக இருப்பாரோ எனக் கேள்வி எழுகின்றது. இவரின் சிந்தனைகள் என்னவென்பதையோ, எந்தப் பின்புலத்தை, அறிவுத்தளத்தைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இவரின் வாதங்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தைப் பற்றிய ஒருபக்கச்சார்பு கொண்ட ஒரு நூலுக்கு இவரின் மதிப்புரை எவ்வாறு செல்லுபடியாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது. காதல் என்றால் காதல்தான்...அதில் மதம், ஜாதி, பணம், பக்கோடா என வித்தியாசம் ஏன் பார்க்கிறீர்கள் என்றலைந்த இயக்குநர் சேரன், தன் மகளின் விஷயத்தில் ஒரு தகப்பனாய் துடித்ததை இதே தமிழகம் மௌன சாட்சியாய்க் கண்டு நின்றதே.... அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன.... இதோ நேற்றும் கூட குஷ்பு, ஒரு தாயாய் தன் பெண் குழந்தைகளுக்கு உடைகளின் பாதுகாப்பு, அவசியம் பற்றிப் பரிந்துரைத்ததைப் படிக்கிறேன். அங்கே இலங்கையில் அமைச்சரொருவர் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் பதிவைக் கடக்கிறேன். உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்.... அப்படித்தானே...??
மதிப்புரையில் காணப்படுவதெல்லாம் ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் பார்வை மட்டுமல்ல. ஒரு சமூகத்தினை எத்தனை ஏளனம் செய்தும், அடக்குமுறை ஏவியும் அதனைத் தோற்கடிக்க முடியவில்லை என்னும் இயலாமை, அதனின் கட்டுக்கோப்பை, உள்கட்டமைப்பை, சங்கிலிப்பிணிப்பை தகர்க்க முடியவில்லையே என்னும் மறுகல்... எங்களைப் போல நீங்களும் ஒழுங்கற்ற வாழ்விற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்னும் தொனி. நாவலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புனைவுக்கற்பனைக்கும், சமூகத்தின் போக்கு இதுதான், சமூகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையால் விளைந்தது இது, மதமே தீவிரமும் வன்முறையும் கொண்டதாயிருக்கிறது என எல்லாவிடத்திலும் ஒரே புலம்பல்.
தனிப்பட்ட புரிதல்களும், தனியொருவரின் அனுமானங்களும், தனிநபரின் கலங்கல் பார்வைகளுமே உண்மை என்றாகிவிடுமா....?? அவ்வாறெனில் வரலாறு நெடுகவும், இன்றும், வதைபடும் காஸா, சிரியாவிலிருந்தும் கூட பர்தா அணிந்த பெண்களின் சாதனைகளை வாசிக்க நேர்வது எவ்வாறு....? அவர்களெல்லாம் மதக் கோட்பாட்டை கடந்ததினால்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்களா என்ன?? அன்னை ஆயிஷா நாயகியிலிருந்து தற்கால தவக்குல் கர்மான் வரை இஸ்லாமியப் பெண்களைப் பற்றி, இஸ்லாம் அவர்களுக்குத் தரும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும், உயரிய மதிப்பையும் ஒரு முறையேனும் மதிப்புரை தந்தவரை வாசிக்க வேண்டுகின்றேன். புரைகள் அகற்றப்படின், பார்வைகள் தெளிவடைய சாத்தியமுண்டு.
முன்னுரைக்கே ஒரு பதிவா என அங்கலாய்ப்பாய் இருக்கின்றது. எனினும், முஸ்லிம் சமூகத்தை, அதன் மௌனத்தை, அதன் பொறுமையை உபயோகித்துக்கொள்ள ஆட்கள் முன்வரும்போது மந்தைகள் உடனடியாக நிறைகின்றது என்பதே உண்மை. அதே உண்மைதான் அயான் ஹிர்ஸி அலியின் பின்னும், மலாலாவின் பின்னும், இன்னும் எல்லா அழகிய சட்டைகளின் பின்னும். ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டாரு. அம்புட்டுதேன்.
நாவல் பற்றி, அடுத்த பதிவில்... இன் ஷா அல்லாஹ்.
இரண்டாம் ஜாமம் இரண்டாம் பாகத்திலா....
ReplyDelete