ஹிரோஷிமாவின் வானம்பாடி (Hiroshima No Pika)

Sunday, January 17, 2016 Anisha Yunus 0 Comments

சென்ற வருடம் இந்தப் புத்தகத்தினைப் பற்றிப் படித்த போதிலிருந்தே இந்த வருட புத்தக விழாவில் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நேற்று பொங்கல்-புத்தகத் திழுவிழா(!!)வில் வாங்கினேன். மிகச் சிறிய புத்தகம்தான். 45 ஒரு பக்கத்தாள்களில் முடிந்து விடுகின்றது. 1945, ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டால், சாமானியக் குடும்பம் ஒன்றில் சிறு பிள்ளையாக வளரும் 7 வயது மாயி-சான் அடுத்தடுத்த தினங்களில் காணும் காட்சிகளையும், வருடங்கள் கழிந்தும் அதன் தாக்கத்தை தன்னிலிருந்தும் பிறருடனும் காணும் அவலத்தைப் பதிவு செய்துள்ளது இந்த சிறு கதை.

தோசி மாருகியின் ஆழமான எழுத்தை, தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் சகோதரர் கொ.மா.கோ.இளங்கோ. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

கதை முழுதும் ஒரு அமைதியான நடையில் எழுதப்பட்டுள்ளது. மூர்க்கத்தனமோ, வெறியோ, அடங்காமல் வெடித்துச் சிதறும் சொற்களோ இல்லை. வீசப்பட்ட குண்டின் அராஜகத்தின் முன் அமைதியாய் எழுத்துக்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றன. இதுவே
 அதன் அளவிலா துயரத்தின் சாரமாக அமைகிறது.

ஒரு ஏழு வயதுப் பிள்ளையின் கண் முன் ஊரே உடலில் துணியற்று திக்கெங்கும் ஓடினால்.... கைக்குழந்தையின் சடலத்தை ஏந்தியவாறு தாயும் கண்ணீருடன் தண்ணீரில் மூழ்கினால்....பெண் குழந்தைகளின் முதல் வீரனாக வாழும் தந்தையின் உடல் முழுதும் கொப்புளங்களால் சூழப்பட்டு அதே நிலையில் மரணத்தையும் எய்தினால்....சூரியக் கதிர்கள் பட்டு பொங்கிக் களித்த நீர்நிலைகள் நீல நிறம் வற்றிப்போய் கருத்த மேனியுடனும் அடர்த்தியான இறுக்கத்துடனும் தாங்கொணா துயரத்தில் ஓடுவதைக் காண நேர்ந்தால்... அந்தப் பிஞ்சின் மனதில் எப்படியான வலிகள்... எப்படியான எண்ணங்கள் பதியப்படும் என்பதை கிரகிக்கவே இயலவில்லை.

ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்டது என்பதைப் படிக்கிறோம். ஆனால், அதன் தாக்கம் ஒரு குழந்தையின் மீது படியும்போது நிகழும் உளவியல் வன்முறையை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகின்றது. குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தாலும், இது பேசும் துயரத்தை அறியும் சிட்டுக்கள், இனி வரும் வாழ்வின் மீது நம்பிக்கை வைப்பார்களா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.

ஆற்றமுடியாத அவலத்தின் கண்ணீர், பேனா மையாய்க் கசிந்துள்ளது..... ஆங்கிலத்தில் இணையம் மூலமாக படித்திட -http://bit.ly/1OpDJob.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...