மரணத்திற்குப் பிறகு வாழ்வா?? -- இறுதி பாகம்

Friday, September 14, 2012 Anisha Yunus 3 Comments

முந்தைய பதிவுகள்

மரணத்திற்குப் பிறகு வாழ்வா??

சகோஸ், ஒவ்வொரு உடைமைக்கு பின்னாலும் ஒரு பொறுப்புடைமை உள்ளது. நீங்கள் சொந்தம் கொள்ளும் ஒவ்வொரு பொருளிற்கும் உயிருக்கும் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பு, கட்டாயம் உள்ளது. ஒரு தொழிலாளி தன்னுடைய எஜமானிடத்தில் தன் வேலைகளைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியிருப்பதைப் போல, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் யாரேனும் ஒருவருக்கு கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பை சுமந்தே உள்ளனர். வாழ்வின் அடிநாதம் இது. இதே போல்தான் நம்மைப் படைத்த உண்மையான, உயர்ந்த, மூலாதார எஜமானான நம் இறைவனுக்கு நாம், நம் வாழ்க்கையைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியுள்ளது. கணக்கு காட்டும் பொறுப்பே இல்லாவிடில், நீதிக்கும், நியாயத்திற்கும் இடமே இல்லாமல் போய் விடும். இல்லையா??

இந்த உலகமானது ஒரு நாள் அழிந்தே தீரும் என்றுதான் குர்’ஆன் நமக்கு போதிக்கின்றது. ஆதி மனிதன் முதல் இறுதி மனிதன் வரை அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் செயல்களைப் பற்றி விசாரிக்கப்படுவர். யாரெல்லாம் இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதன் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரோ அவர்களுக்கெல்லாம் நற்கூலியும், யாரெல்லாம் இதற்கு மாறாக இறைவனை அஞ்சாமல் வழிகேட்டில் வாழ்ந்தாரோ அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையும் அளிக்கப்படும்; சுவர்க்கம் நற்கூலியாகவும், நரகம் தண்டிக்கும் இடமாகவும். சுவர்க்கத்திலோ, நரகத்திலோ பின் அது அமரவாழ்வாகிவிடும், முடிவே இல்லாத ஒன்றாக.


மரணத்திற்குப்பின் உயிர்ப்பித்தல் சாத்தியமா?

முதல்முறையாக நமக்கு யார் உயிர் தந்தாரோ அதே இறைவன், நம் மரணத்திற்குப் பின் மீண்டும் இரண்டாம் முறையாக உயிர் தருவான் என்று குர்’ஆன் கூறுகிறது. ஒரு பொருளை புதிதாய் முதன்முதலாக உருவாக்குவது என்பதுதான் கடினம். ஆனால் அதே பொருளை மீண்டும் இன்னொருமுறை உருவாக்குவது என்பது கடினமல்ல, மாறாக மிக சுலபமானது.

ஆனால் சகோஸ், நம்மை முதன்முறை படைப்பதே இறைவனுக்கு கடினமற்ற செயல் எனும்போது மீண்டும் நம்மை (மரணத்திற்குப் பின்) படைப்பது எவ்வாறு சிரமமாகக்கூடும்? இறப்புக்கு பின் நம்மை உயிர்ப்பிப்பது என்பது இறைவனுக்கு இன்னும் எளிதானதே. யோசியுங்கள்.?

அல்லாஹ், தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்,
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (திருக் குர்’ஆன் 36:79)

நியாயத்தீர்ப்பு நாளும், உயிர்ப்பிப்பதும் கட்டாயம் நமக்கு தேவையா?
ஒவ்வொரு மனிதனும் நீதி தழைத்தோங்குவதை விரும்புகிறான் சகோஸ், மற்றவருக்காக இல்லை என்றாகிலும் தனக்காகவாவது கட்டாயம் நீதி ஓங்கி ஒலிக்க வேண்டும் என ஏங்குகிறான்.

சமூக அந்தஸ்தினாலோ, பொருளாதார பின்னடைவினாலோ அநீதி இழைக்கப்படும் ஒவ்வொருவரும் அநீதியை தழைக்க வைக்கும் கொடியவர்களை எப்படியாயினும் தண்டித்திட விரும்புகிறார்கள். கற்பழிப்பு, திருட்டு போன்ற மாபாதகங்களை செய்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும் என ஒவ்வொரு சாமான்யனின் எண்ணமும் இருக்கிறது.  இவ்வுலகில் தண்டனைகள் கொடுப்பதன் மூலம் மட்டுமே அப்பழுக்கில்லாத நீதியை நிலை நாட்ட முடியுமா சகோஸ்?? யோசியுங்கள்...

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின்போது எண்ணிலடங்கா யூதர்களை கொன்றொழித்தான். (இன்று யூதர்கள் அவனைவிட கொடிய பாதகங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளனர் என்பது வேறு விஷயம்..!!) ஹிட்லரின் காலத்தில் காவல்துறை அவனை கைது செய்தது என்றே வைத்துக் கொள்வோம். என்ன தண்டனை கொடுத்திருக்க முடியும் அவனுக்கு? அவன் செய்தது போலவே ஒரு அறையிலிட்டு விஷவாயுவை செலுத்தியிருக்கக் கூடும். அதனால் நீதி நிலைநாட்டப்பட்டு விடுமா? காரணமின்றி கொலை செய்யப்பட்ட ஒரே ஒரு யூத உயிருக்கு வேண்டுமானால் அது சமமாகும். மற்ற அத்தனை உயிர்களுக்கு?????????????????????????????

சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 100 வருடம் அல்லது அதற்கு மேல் கூட போகக்கூடிய தீர்ப்புகளைப் பார்க்கிறோம். அந்த குற்றவாளி எத்தனை பாதகங்கள் செய்தானோ அத்தனை பாதகங்களுக்கும் சேர்த்து அந்தளவு வருடங்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு குற்றவாளியும் அத்தனை வருடங்கள் உயிரோடாவது இருப்பானா? எத்தனை பேர் அப்படி அத்தனை வருடங்களையும் தண்டனையில் கழிக்கின்றனர்.

அது மட்டுமல்ல. தூய்மையான, அப்பழுக்கற்ற நியாயத்தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்டோரையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். இதோ மாயாபென்னை 28 வருடங்களுக்காக சிறையில் அனுப்பியிருக்கிறார்கள். இன்றோ நாளையோ அவர் பெயிலில் வெளிவரக்கூடும் என்பது தனி விஷயம். ஆனால் அவர் கண்காணிப்பில் நடந்த கற்பழிப்புக்களுக்கும், கொலைகளுக்கும் அது துளியாவது ஈடாகுமா??

யோசித்துப் பாருங்கள் சகோஸ், ஹிட்லர் போன்ற ஆட்களால் கொல்லப்பட்ட மாசற்ற உயிர்களுக்கு என்ன ஈடு தர முடியும்?? எவ்வளவு முயன்றாலும் காரணமின்றி கொல்லப்பட்ட ஒரு உயிருக்குக் கூட நம்மால் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இதுதான் உண்மை சகோஸ்...!!

நேர்மையாளர்களாக வாழ்ந்த மக்களையுமே கொடுமை பல செய்தும் கொன்றும் இவ்வுலகம் வந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட அந்த நேர்மையாளர்களின் நேர்மைக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்??

பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்தான் சகோஸ் இது புரியும். இறப்பிற்கு முன் ஒவ்வொருவரும் செய்த நியாய/அநியாய செயல்களுக்கு ஈடான கூலியைத் தர, இறப்பிற்கு பின் உள்ள வாழ்வினால் மட்டுமே முடியும். தண்டனையோ, தக்க கூலியோ தரப்படாமல் ஒரு ஜீவனும் அழிந்திடாதபடி இறைவன் ஒருவன் மட்டுமே தீர்ப்பு வழங்க முடியும்.

யோசித்துப் பாருங்கள். முடிவே இல்லாத வாழ்வாக நரகமும் சுவர்க்கமும் அமைக்கப்ப்ட்டிருப்பதால்தான் ஹிட்லரும் அவனைப் போன்ற கொடுஞ்செயல்கள் செய்வோரும் ஆறு மில்லியன் தடவை என்ன அதற்கு மேல் கூட தீயில் வாட்டப்படுவார்கள். அதேபோல் அவர்களின் கையினால் அழிந்த மாசற்றோருக்கு இறைவன் எத்தனை விரும்புவானோ அத்தனை நற்கூலிகளையும் தர இயலும்.

எனவே அணுவளவு நல்லறம் புரிந்தோருக்கான கூலியைத் தரவும், இப்படி எந்த வித மாபாதக செயலும் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனையும் இறைவனிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறாக இறைவன் எல்லா செயல்களையும் தண்டிப்பவனாகவும், தன் செயலுக்கு வருந்தி நல்வழியில் செல்வோருக்கு மன்னிப்பையும் தருபவனாக இருக்கிறான். ஆனால்...

இறைவன் மன்னிக்கவே மாட்டாத ஒரு பாவம் எது??

ஷிர்க்.
ஷிர்க் செய்யும் மக்களை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான் என திருக் குர்’ஆன் கூறுகிறது. ஷிர்க் என்றால் இறைவனுக்கு இணை கற்பிப்பது, இறைவனையற்ற மற்றெதையும் வணங்குவது, இறைவனுக்கு இணையாக சமர்ப்பிப்பது என்று அர்த்தம். அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.” (திருக் குர்’ஆன் 4:116)

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்றால் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்படாமல் போவதும் அவனுக்கு அடி பணியாததுமாகும். கீழ்க்கண்டவை யாவும் அதில் அடங்கும்:
1. காற்று, நீர், நிலம், நெருப்பு, தீ போன்ற இயற்கையான படைப்புக்களை வணங்குவதும், அவற்றுக்கு தலை வணங்குவதும், அதீத அன்பில் அவற்றுக்கு முதன்மைத்தன்மை அளிப்பதும் இன்னும் பிற மனிதனின் கைகளாலான பொருட்களுக்கு, உருவச்சிலை, உரவப்படம், வரைபடம், கல்லறை போன்றவற்றுக்கு மரியாதை அளிப்பதுவும்.
2. இறைவனின் இருப்பை மறுத்தல் (குஃப்ர்)
3. இறைவனின் திருமறையாம் திருக்குர்’ஆனின் கட்டளைகளுக்கு மாறாக மனிதனின் கட்டளைகளுக்கு அடங்கி அஞ்சி நடப்பது.
4. பிறப்பும் இறப்பும் கொண்ட மனிதர்களுக்கு இறைவனின் மகன் என்றோ, மகள் என்றோ, மனைவி என்றோ இணை கற்பிப்பதும், அவர்களுக்கும் தெய்வீக ஆற்றல் உண்டு என நம்பிக்கை கொள்வதும்.
5. மலக்குமார்களையோ / தேவதைகளையோ அல்லது இறைவனின் சேவை செய்யும் பஞ்ச பூதங்களையோ வணங்குவதும். (இவைகளெல்லாம் தன் சொந்த விருப்பு வெறுப்புக்கள் இல்லாமல் ஒரே சிந்தனையில் இறைவனை வணங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை என்பதையும் நினைவில் வையுங்கள்.)

இறைவனுக்கு இணை கற்பிப்பது அத்தனை பெரிய குற்றமா???

சகோஸ்.... கொஞ்சம் உங்களைச் சுற்றியுள்ள உலகை உற்று நோக்குங்கள், அழகிய வண்ணத்துப்பூச்சிகளும், கறையற்ற போர்வை போல நீல வானமும், மனம் மயக்கும் சூர்யோதயமும், வண்ணச்சோலைகளும் அதில் கொள்ளை கொள்ளும் அழகில் சுற்றும் பறவைகளும், விலங்குகளுமாய் எத்தனை எத்தனை வண்ணங்களையும் இனிமையையும் கலந்து இந்த உலகை இறைவன் படைத்துள்ளார்??

நம்மையே எடுத்துக்கொள்வோமே.... படபக்கும் கண்களும், பல்வேறு ஒலிகளை சுவைக்க வைக்கும் செவிகளும், இவற்றையெல்லாம் நொடி விடாமல் சீராக பாதுகாக்கும் உள்ளுறுப்புக்களும் என எவ்வாறெல்லாம் கவனமாக படைக்கப்பட்டுள்ளோம். நாம் பிறந்தது முதல் இந்த நொடி வரை உடலில் உள்ள எதுவும் நிற்காமல் இயங்கிக் கொண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றையாவது இறைவனிடம் நாம் கேட்டு வாங்கினோமா? அல்லது நாம் தினமும் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர் என எதற்காவது அனுதினமும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டியுள்ளதா? இல்லையே..... ஆனால் அனைத்து ஜீவராசிகளும் இத்தகைய அருட்செல்வங்களையும், அன்பளிப்புக்களையும் அனுபவித்துக் கொண்டேதான் உள்ளன. ஒரு மைக்ரோ நொடியில் இதயம் தன் வேலையை நிறுத்தினால் கூட நம் இருப்பு, இறப்பாகிவிடும். அளவற்ற அருளாளனும் நிக்ரற்ற அன்புடையோனுமாக அவன் இருப்பதனால்தான் நாம் கவலையற்று ஜீவித்திருக்கிறோம்.

சகோஸ், இவ்வாறெல்லாம் நம்மைப் படைத்தும் பரிபாலித்தும் இருக்கும் இறைவனுக்கு நாம் என்ன செய்கிறோம்??? எப்படி அவனைத் தவிர்த்து வேறெதற்கேனும் தெய்வீகத்தன்மையை அளிக்க முன்னேறிவிடுகிறோம்?? எத்தனை எளிதாக அவனின் ஒப்பற்ற தன்மையை அழுக்காக்கிவிடுகிறோம்?? இதெல்லாம் அவனின்  எல்லையற்ற அன்பிற்கும் அருளிற்கும் நாம் புரியும் அநீதியாக இல்லையா?? இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தும் அலட்சியப்படுத்தியும் வாழும் நாம், நம்மை நாமே இறையடியார் என எப்படி கூறிக்கொள்ள முடியும்?? இறைவனுக்கும் அவனின் தெய்வீகத்தன்மைக்கும் தகாத செயல்களை நாம் செய்வதன் மூலம் எந்த விதத்தில் நாம் நம்மை வெளிக்காட்டுகிறோம் சொல்லுங்கள்...??

எனினும் இறைவன் நம்முடைய புகழுக்கோ, நன்றி கூறலுக்கோ தேவையுடையவனாக இல்லை... இதையே இறைவன் தன் மாமறையில் அறிவிக்கிறான், “நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்;” (திருக் குர்’ஆன் 39:7) சொல்லப்போனால் மனிதன், தன்னுடைய தேவைகளுக்காகவே இறைவனை வழிபடுபவனாக இருக்கிறான்.

ஏக இறைவன் என்னும் மதக் கோட்பாட்டில் கீறல் விழுந்ததுதான் போலி சாமியார்களும், நிறம், ஜாதி, இனத்தைக் கொண்டான வகுப்புக்கோட்பாடுகளும் உருவாக காரணமும்.  இதே காரணத்தினால்தான் சமூகம், ஊழல், சீர்கேடு என இன்னும் எல்லா வித அனாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கிறது. இதே காரணத்தினால்தான் மனிதன் கற்களின் முன்னும், மரக்கட்டைகளின் முன்னும் தலைகுனிந்து நிற்கிறான். இறுதியில் அவன் தன் கைகளால் செய்தவற்றை தானே வணங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். தன் இச்சைகளுக்கு அடி பணிந்து எல்லா தீய காரியங்களிலும் ஈடுபட்டுள்ளான்.

இறைவனை அஞ்சாமை என்பது தற்போது ஒரு ஃபேஷனாக, சமகால சமூக நியதியாக போற்றப்படுகிறது. இதனால் இறைவனின் கட்டளைகளை கீழே தள்ளி மனிதனின் சட்டங்கள் உலகாளும் நிலைக்கு முன் தள்ளப்பட்டுள்ளது. இதே கோட்பாடுகளில் ஊறித்திளைத்து வளர்ந்த மக்கள் தலைவர்களாக மாறி மக்களை இன்னும் வழிகேட்டில் கொண்டு சென்றுகொண்டுள்ளனர். சமூக அமைதி சீர்குலைந்து போனது. மனிதர்கள் இறுதியில் இனத்தின் பேராலும், நாட்டின் பேராலும், வம்சத்தின் பேராலும் போர்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்று வரையிலும் இந்த பேரிடியிலிருந்து மீண்டு வர முடியாமல் நம் சமூகம் தத்தளித்துக் கொண்டுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையாம் குர்’ஆனில் கூறுகிறான், “...நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்...”(திருக்குர்’ஆன் 31:13).

இத்தனை விதமான சமூக / தனி மனித சீர்கேடுகளையும் சீராக்கும் ஒரே வழி, மனிதன் தன்னைப் படைத்த இறைவனை அங்கீகரித்து, தன்னை படைத்து, பரிபாலித்து, உணவளிப்பவன் என்னும் உண்மையை மனதார ஏற்று, இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும்.

இது மட்டுமே, ஏக இறைவனை அங்கீகரித்து, அவன் வழி நடப்பது மட்டுமே உலகின் தலையாய தேவையான அமைதியையும், நீதியையும் நிலை நாட்டும். மற்றும் இது மட்டுமே மனிதனுக்கு, மரணத்திற்கு பின் உண்டான வாழ்வில் என்ன காத்திருக்கிறதோ அதற்கு வழி காட்டும். எனவே அல்லாஹ் தன் திருமறை மூலம் மக்களுக்கு நன்மாராயம் கூறுகிறான்,
“எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.” (திருக்குர்’ஆன் 95:6)

முடிவுரை:

இந்த தொடர் நம்முடைய எந்த சகோதர சகோதரிகளையும் காயப்படுத்துவதற்காகவோ, யாருக்கும் தீங்கிழைப்பதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக இறைவனின் நற்செய்தியை அறிவிப்பதற்கும், இதனைப் படிப்பவர் மனதில் வாழ்வின் தேவையை உணரச்செய்யவும், அவர்தம் வாழ்வை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப கொண்டு செல்லவும் அறிவுறுத்துவதே இந்தத் தொடரின் குறிக்கோளாகும்.

ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்கி, வாழ்க்கையை அவன் கட்டளைகளுட்பட்டு கொண்டு செல்வதே உலகை வாழத்தகுந்ததாகவும், வாழச்சிறந்ததாகவும் மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. இந்த தொடர் உங்களின் வாழ்வின் பொருள் தேடியும் மற்றும் இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆவலையும், அதன் மூலம் இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவிலான உறவையும் புரிந்து கொள்ளும் பேராவலை உண்டாக்கி இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

அல்லாஹ், தன் திருமறை குர்’ஆனில் வழிகாட்டுகிறான், 
“நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்;” (திருக் குர்’ஆன் 41:53)

3 comments:

  1. சகோ அன்னு....

    பதிவுன்னு சொல்லிட்டு ஒரு புக் மாதிரி எழதி இருக்கீங்க??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ஓக்கே ஜோக் அபார்ட்ஸ்... மாஷா அல்லாஹ்.. அருமையான பதிவு...

    பல வேலைச்சுமைகளுக்கும் இடையில் இது போன்ற கட்டுரைகள் எழுதுவது என்பது உண்மையிலே பெரிய விஷயம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சலாம் சகோ அன்னு!

    பல பயனுள்ள தகவல்கள். சகோ சிராஜ் சொல்வது போல் பல வேலைகளுக்கு மத்தியில் இது போல் பதிவுகள் எழுதுவது சற்று சிரமம்தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ அன்னு
    பலஹீனமான மனிதனின் ஈமானை ரீசார்ஜ் செய்யனும்னா அப்பப்ப
    இது போன்ற பதிவுகளை படித்து, நம் ஈமானை பூல் சார்ஜில் வைத்துக்கொள்ளவேண்டும்...
    ரீசார்ஜ் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...