அம்மாக்கள் அலுவலகம் போகத்தான் வேண்டுமா/??

//விக்கிக்கு மட்டும் எல்லாம் புரிகிற வயதாக இருந்தால், நாங்கள் வேலைக்குப் போகாவிட்டால் உன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் செலவு செய்ய முடியும்/? என்று கேட்க முடியும் என்று பேசி ஆறுதல் அடைவோம். ஆனால் ஆழ் மனதில் ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதைப் போல ஒரு கூற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய மகனுடன் நான் அன்றாடம் செலவிடும் நேரத்தையும், என்னுடைய மாமியார் அல்லது என் அம்மா செலவிடும் நேரத்தையும் கணக்கிட்டுப் பார்ப்பேன்.//

பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை தமிழில் இன்று வந்துள்ளது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

பெண்கள் உழைப்பாளிகளாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, ஆசிரியர்களாக, கல்பனா சாவ்லாவாக, பி.டி. உஷாக்களாக, பர்கா தத்தாக, அருந்ததி ராயாக , சாவித்ரி பாய் புலேவாக உருவாவதை முழு மனதார வரவேற்கும் அதே நேரத்தில் கிளார்க் வேலைகளுக்கு பலவித பெயர் சூட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளும் கவர்ச்சி விளம்பரங்களோடு கடை விரித்துள்ள இந்த 24*7 கணிணி வேலைகளுக்கு எதிர்க்கின்றேன்.

ஆண் பெண் என அனைவரையும் உடலால், மனதால், உணர்ச்சிகளால் உளைச்சலுக்கு ஆளாக்கும், இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு பொருந்தாத வேலை நேர/செயல்பாட்டு விதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் கூலி வேலைகளுக்கு என் எதிர்ப்பு உண்டு. பெரும் பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்தும் இந்த உளைச்சலாலேயே வேலைகளை உதறித் தள்ளிய அனுபவத்தால் இந்த என் கருத்தை பதிக்கின்றேன். நவீன குமாஸ்தா வேலைகள் பெண்களுக்கு உகந்ததல்ல. குடும்பத்தைச் சீரழிக்கும் இந்த வேலைகளை உதறித் தள்ளி, சுயமாக ஒரு அடையாளத்தை நிறுவ சிந்தியுங்கள்.

கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு. தக்கவோர் முடிவை ஆசிரியர் பதிக்காவிட்டாலும், கட்டுரையெங்கும் நிரம்பியிருக்கும் வலியே ஒரு பதிலாக உள்ளது. ஆங்கிலத்தில் இணையத்தில் உள்ளது. ( http://bit.ly/1Ztr1YH ). 



வியர்க்காத மனம்...


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வேர் பிடிக்கக் கொஞ்சம்
வெப்பக்காற்றையும்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்படம்

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.
உலகமே கொண்டாடும் கணித மேதை இராமானுஜம் கூட தன்னுடைய பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை வரை மற்ற எல்லா படிப்புக்களிலும் தோல்வியை மட்டுமே கண்டவர். இதனைப் படிக்கும்போது இன்றைக்கு ஆங்கில வழிக்கல்வி போல, அன்றைக்கிருந்த தெலுங்கு வழிக்கல்விதான் இதற்குக் காரணமாக இருந்திருக்குமோ என்னும் கேள்வி எழாமல் இல்லை. கேம்பிரிட்ஜில் ஆய்வுக்கல்வியின் போதும் ஜி.எச்.ஹார்டி அவருக்கு நண்பனாக இருந்ததை விட ஆசானாக அமைந்ததே ராமானுஜத்தை மெருகேற்ற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனித்துப் பாருங்கள், ஜி.எச்.ஹார்டிக்கு எந்த வயதிலும் தாய்மொழிவழி கற்பதில் தடை இருந்ததில்லை. நம் தாய்மொழியைப் பற்றிய நம் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் அலசிப் பாருங்கள்.
ஆங்கிலவழிக்கல்வி சாதகமானதா பாதகமானதா எனப் பல கோணங்களில் ஆராயும் இந்த ஆவணம், ஒரு பக்கத்தையும் புரட்டாமல் விடவில்லை. உதாரணத்திற்கு, 1947இல் சுதந்திர இந்தியாவின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தாராசந்த் குழுவின் பரிந்துரையும் சரி, 1948இல் பல்கலைக்கழக கல்வியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணனின் குழுவின் பரிந்துரையும் சரி உடனடியாக இந்தியாவில் கல்வியனைத்தும் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின, அதன் பின் கடந்த 2005 ...
-- பதிவை முழுதும் படித்திட தூது ஆன்லைனிற்கு செல்லவும். முதன் முறையாக என், இந்தப் பதிவு, இணையத்தில்வந்துள்ளது. நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

கரையைத் தேடும் ஜீலம்.... (திரைப்பாடல் மொழிபெயர்ப்பு)


ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

எத்தனை யுகங்கள்
இன்னும்
ரணங்களை பொறுப்பது....
விடை தெரிந்தவர் யார்???
இன்னும்
எத்தனை தூரங்கள்
விடியா இருளின்
விரல் பிடித்து நடப்பது/??
விடை தெரிந்தவர் யார்???

இரத்தம்... இரத்தம்....
யுகங்களின் இரத்தம்
வழிந்தோடுகின்றது...
வழிந்தோடுகின்றது...
இரத்தம்...
அழித்துவிடும் அனலாய்...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...
==================
திரைப்படம் - ஹைதர் (2014) | ஹிந்தி
பாடல் - ஜேலம்.. ஜேலம்
பாடல் வரிகள் - குல்ஸார்