கடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை

ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறுவர் இதழான ‘இளம்பிறை’ மாத இதழில் என்னுடைய சிறுவர் கதை ஒன்று அச்சேறியுள்ளது. இரு பாகமாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை இனியும் தொடராக வெளி வரும். இன் ஷா அல்லாஹ். சில திருத்தங்கள் அச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. சில அச்சுப்பிழைகளும் உள்ளன. அடுத்த முறை இன்னும் அதிகமாக கவனத்துடன் பதியப்படும். முழு கதையும் கீழே தரப்பட்டுள்ளது.




==  கடலில் மிதந்து வந்த கடன் ==


ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153

பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...





இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின்  மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.

அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல்.


பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.

உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்...  பிலால்!”//

இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், 
தமிழில் அல் ஸூமத், 
வெளியீடு மெல்லினம்.

.

இரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①



இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் படிக்க ஆரம்பிக்கும்போது, 2004 இல் வெளியிடப்பட்டு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்ட ஒரு பிரச்சினையின் வேரின் மேல் மீண்டும் கால் பதித்து விட்டேனோ என்றே பட்டது. மேற்கொண்டு வாசிக்கும்போது ஊகம், ஊர்ஜிதமாகி விட்டது.
 = = =
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்தான் சகோதரி சல்மாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் வாங்கிய இந்நூல் இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளும் ஒரு முரணை, ஒரு தூரத்தை, ஒரு கானல் நீர் விம்பத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கிறேன். ஏன் இப்படி?? ஒரு வேளை முதலிலேயே இந்த நூலை வாசித்து விட்டு பின்னர் கவிதைத் தொகுதியை வாசித்திருந்தால் வேறு பார்வை கிட்டியிருக்குமோ என்னவோ. எனினும் எல்லாவிடத்திலும் கருத்துக்களை கருத்துக்களாகவே அணுக விரும்புகின்றேன்.

இந்தப் பகுதியில் மதிப்புரையைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். மதிப்புரை தந்திருப்பவர் திரு.ரவிக்குமார். சில காலத்திற்கு முன் பேராசிரியர் அ.மார்க்ஸுடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழை நடத்திக்கொண்டிருந்தவர். தற்போது ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.
= = =

பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், அதிலுள்ள குடும்ப அமைப்பின் மீதும், அதன் பெண்களின் மீதும் ஒரு கசங்கிய பார்வைதான் வெளியுலகிற்கு இருக்கின்றது. குஜராத் சம்பவத்தில் ஒரு டாகுமெண்டரியில் ஒரு நரவெறி மிருகம் சொல்லும்... உரித்த மாம்பழங்களைப் போல எங்களுக்கு முஸ்லிம் பெண்கள் கிடைத்தார்கள், நாங்கள் வெறியுடன் பசியாற்றினோம் என. நிதர்சனத்தில் பெண்கள் மீதும், அதிலும் இஸ்லாமியப் பெண்களின் மீது ஆண்களின் பார்வையில் தேடலும், தகிக்கும் தவிப்பும்தான் இருக்கின்றது என்பதுவே உண்மை.

யானையைக் கண்ட குருடர்கள் போல, ஒரு பொரி கிடைத்ததும் அது உண்மையா, நிஜம்தானா என்பதைக் கூட அறிந்து தெளியாமல் குருடர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று அதுதான் யானை என வாதாடினால்??? அதுபோல்தான் இருக்கின்றது, நாவலும் அதன் முன்னுரையும்.  ஒவ்வொரு விமர்சனம் எழுதும் முன்னரும், அதன் ஆசிரியரைப் பற்றி, அவர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி, அதற்கு மதிப்புரை / அணிந்துரை / முன்னுரை எழுதியுள்ள பெருமக்களைப் பற்றி, இன்னும் பலதரப்பட்ட பார்வைகளையும் வாசித்து உள்வாங்கி, அதன் பின்னரே என் பார்வையை பாரபட்சமில்லாமல் வைக்க வேண்டும் என எண்ணும் ஒரு சாமான்ய மனிதனுக்கிருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையா சார்???? குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகின்றது. அவர்களுக்கு வெறுப்பு, உங்கள் மீதல்ல, உங்களின் மார்க்கத்தின் மீது என்று. சத்தியமான வார்த்தைகள். 

ஒரு சமூகம் பற்றிய தனது அறியாமையை, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை மேடையிட்டுப் பறை சாற்ற திரு. ரவிக்குமாருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் போன்றிருக்கின்றது. பெண்களின் உடல் பற்றிய எண்ணங்களே புதிராகவும், காணும் பொருள் யாவும் அதனையொட்டிய கனவாகவே வியாபித்திருக்கும் இருளடைந்த கிடங்கில் பாலியல் குறித்த பெண்களின் சம்பாஷணைகள் என்பது இன்னும் கிளர்ச்சியூட்டும் ஓர் புதிராகவே இருந்திருக்கக்கூடும். அதனைக் கண்டு, படித்து, புளகாங்கிதமடைந்து, லயித்துக்கிடக்க இந்த நூல் பலருக்கும் உதவியுள்ளது போல அவருக்கும் உதவியுள்ளது என்பது மட்டுமே புரிகின்றது. அழகிய பொய்களும், புனைவுகளும் சீராட்டத்தான் படுகின்றன.

விரும்புகிற உடலை அடைவது சுதந்திரம் எனவும், விலங்குகளின் பழக்க வழக்கத்தை ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் செய்பவரை எந்தக் கோணத்தில் ஆராய்வது. தன் சமூகத்திடமும், தன் குடும்பத்திடமும் இதையே பரப்ப அவர் தயாராக இருப்பாரோ எனக் கேள்வி எழுகின்றது. இவரின் சிந்தனைகள் என்னவென்பதையோ, எந்தப் பின்புலத்தை, அறிவுத்தளத்தைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இவரின் வாதங்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தைப் பற்றிய ஒருபக்கச்சார்பு கொண்ட ஒரு நூலுக்கு இவரின் மதிப்புரை எவ்வாறு செல்லுபடியாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது.  காதல் என்றால் காதல்தான்...அதில் மதம், ஜாதி, பணம், பக்கோடா என வித்தியாசம் ஏன் பார்க்கிறீர்கள் என்றலைந்த இயக்குநர் சேரன், தன் மகளின் விஷயத்தில் ஒரு தகப்பனாய் துடித்ததை இதே தமிழகம் மௌன சாட்சியாய்க் கண்டு நின்றதே.... அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன....  இதோ நேற்றும் கூட குஷ்பு, ஒரு தாயாய் தன் பெண் குழந்தைகளுக்கு உடைகளின் பாதுகாப்பு, அவசியம் பற்றிப் பரிந்துரைத்ததைப் படிக்கிறேன். அங்கே இலங்கையில் அமைச்சரொருவர் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் பதிவைக் கடக்கிறேன். உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்.... அப்படித்தானே...??

மதிப்புரையில் காணப்படுவதெல்லாம் ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் பார்வை மட்டுமல்ல. ஒரு சமூகத்தினை எத்தனை ஏளனம் செய்தும், அடக்குமுறை ஏவியும் அதனைத் தோற்கடிக்க முடியவில்லை என்னும் இயலாமை, அதனின் கட்டுக்கோப்பை, உள்கட்டமைப்பை, சங்கிலிப்பிணிப்பை தகர்க்க முடியவில்லையே என்னும் மறுகல்... எங்களைப் போல நீங்களும் ஒழுங்கற்ற வாழ்விற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்னும்  தொனி. நாவலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புனைவுக்கற்பனைக்கும், சமூகத்தின் போக்கு இதுதான், சமூகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையால் விளைந்தது இது, மதமே தீவிரமும் வன்முறையும் கொண்டதாயிருக்கிறது என எல்லாவிடத்திலும் ஒரே புலம்பல்.

தனிப்பட்ட புரிதல்களும், தனியொருவரின் அனுமானங்களும், தனிநபரின் கலங்கல் பார்வைகளுமே உண்மை என்றாகிவிடுமா....?? அவ்வாறெனில் வரலாறு நெடுகவும், இன்றும், வதைபடும் காஸா, சிரியாவிலிருந்தும் கூட பர்தா அணிந்த பெண்களின் சாதனைகளை வாசிக்க நேர்வது எவ்வாறு....? அவர்களெல்லாம் மதக் கோட்பாட்டை கடந்ததினால்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்களா என்ன?? அன்னை ஆயிஷா நாயகியிலிருந்து தற்கால தவக்குல் கர்மான் வரை இஸ்லாமியப் பெண்களைப் பற்றி, இஸ்லாம் அவர்களுக்குத் தரும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும், உயரிய மதிப்பையும் ஒரு முறையேனும் மதிப்புரை தந்தவரை வாசிக்க வேண்டுகின்றேன். புரைகள் அகற்றப்படின், பார்வைகள் தெளிவடைய சாத்தியமுண்டு.

முன்னுரைக்கே ஒரு பதிவா என அங்கலாய்ப்பாய் இருக்கின்றது. எனினும், முஸ்லிம் சமூகத்தை, அதன் மௌனத்தை, அதன் பொறுமையை உபயோகித்துக்கொள்ள ஆட்கள் முன்வரும்போது  மந்தைகள் உடனடியாக நிறைகின்றது என்பதே உண்மை. அதே உண்மைதான் அயான் ஹிர்ஸி அலியின் பின்னும், மலாலாவின் பின்னும், இன்னும் எல்லா அழகிய சட்டைகளின் பின்னும். ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டாரு. அம்புட்டுதேன்.

நாவல் பற்றி, அடுத்த பதிவில்... இன் ஷா அல்லாஹ்.

தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்


அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது.

எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.

பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும்  எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை,  மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது.

நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.

இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.

1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.

2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.

3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!

யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.

[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]

ஆசிரியர் பற்றிய குறிப்பு -- டேனியல்.செல்வராஜ்