Showing posts with label இஸ்லாம். Show all posts

சமஸ் - ஒரு சினிமா டச்!

சமஸ் சார்,

நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின்  மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை சந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி.

தவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..

என்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.

அப்படித்தான் இந்தக் கட்டுரையும். இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest.

கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.

இந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் தங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல.

ஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த  அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir???

மிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது.

நல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை.

மேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.

இந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.

கடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே  தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு,  அந்த வெற்றிடத்தில் ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.

மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நன்றி.

கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??


கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

பதில்: ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் இரண்டு மட்டுமே. உடற்பசி மற்றும் வயிற்றுப்பசி. இந்த இரண்டுமே பூர்த்தியாயிருக்கும் நிலையில் மனிதன் தன் நிலை மறந்தே வாழ்கிறான். சுற்றிலும் நிகழ்பவைகளோ, நிகழ்ந்தவைகளோ, நிகழக்கூடியவைகளோ, அவனின் கவனத்தை திசை திருப்புவதில்லை. இந்த இரண்டில் எது மட்டுப்பட்டாலும், மனிதனின் எதிர்வினைகள், மிகுந்த தாக்கத்தை அவனைச்சுற்றி எல்லா வகையிலும் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், இரண்டுமே மட்டுப் படும்போது, மனிதன், தன் நிலையறிந்து, வரம்புகள் அறிந்து, எண்ணங்களையும், இச்சைகளையும் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுகிறான்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக்வாவுடையோர்களாக ஆகலாம். (அல் குர்’ஆன்2:183)

என்கிறது குர்’ஆன். தக்வா என்றால்?? தக்வா என்றால் இறையச்சம்? இறையச்சம் என்பது எப்போது ஏற்படும், தன்னிலை அறிந்தவனுக்கு மட்டுமே இறையச்சமும், இறைத்திருப்தியைப் பெற வேண்டும் என்னும் வேட்கையும் ஏற்படும். அதைத்தான் மற்ற மார்க்கங்களும் மோட்சம் என்கின்றன. அதன் சூட்சுமம் என்ன, தன்னிலை அறிந்து, தன் வாழ்வின் பொருள் அறிந்து அதன் மேல் நற்செயல்கள் செய்ய முற்படல். அதுவே இறைவனை சென்றடையச் செய்யும்.

படைத்தவனுக்குத்தானே படைக்கப்பட்டவற்றின் பலமும், பலவீனமும் தெரியும்... அல்லவா?? எனவேதான் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட தவணையில் மீண்டும் மீண்டும் மனிதனை தன் நிலையறிய வைக்க ஒரு ஒழுக்கநிலையை கட்டாயமாக்கினான். வருடத்திற்கோர் முறை, ஒரு மாதம் முழுக்க, பகலில் இந்த இரண்டுப் பசியையும் அனுபவியுங்கள், இரண்டையும் நிரப்ப வேண்டாம், என நோன்பு நோற்கச் சொல்கிறான். இந்த மாதம் மட்டுமன்றி, திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களையும் நபிமொழி, நோன்பு நோற்கச் சொல்கிறது. 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.


நோன்பு, மானம் காக்கும் கேடயம் என்கிறது. சொல்வதற்கு மிக எளிதாகத் தெரியும் இந்த கட்டளை, அனுபவிப்பதற்கு எளிதானதல்ல. ஏன்??

எப்படி வயிற்றுக்கும் உடலுக்கும் உணவு தடுக்கப்படுகிறதோ, அதே போல் சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும், இறைவன் வரம்புகளை (எல்லா நாட்களிலுமே அவை வரம்புகளே எனினும்) இப்பொழுது இன்னும் மிகைப்படுத்துகிறான்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் நபிவழி கூறுகிறது. உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என்று இன்னுமோர் நபிமொழி கூறுகிறது.

சொல், செயல்களில் நிதானத்தையும், வரம்புகளையும் விழிப்புடன் கவனிக்கச் சொல்கிறான். சுற்றியிருக்கும் வறியவர்களை, வளம் / வலிமை குன்றியவர்களை கவனிக்கச் சொல்கிறான். இல்லாமை என்பதைப் புரியவைக்கிறான். இத்தகைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துவது என்பது மிக மிகப் பெரும் பரீட்சையாகும். சுய விருப்பத்தின் பேரிலான இச்சைகளுக்கும், புலன்களுக்கும் Vs இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதற்குமிடையேயான பரீட்சை. இத்தகைய பரீட்சையை ஒரு மாதம் முழுக்க தன் விருப்பத்தின் பேரிலேயே முஸ்லிம் மக்கள் செய்கிறார்கள். இந்த மாதம்தான் ரமதான் மாதம்.

இதே மாதத்தில்தான், இவ்வுலகின் இறுதி மனிதன் வரை கடைப்பிடிக்கக்கூடிய தனிமனித ஒழுங்கு, இறைபொருத்தம் தேடும் வழிகள், பிற்கால சமுதாயங்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள், சமூக / குடும்ப / தனி மனித / அரசியல் சார்ந்த / பொருளாதார சட்டங்கள் என எல்லாத்திசையிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் சட்டங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருக் குர்’ஆனும் அருளப்பெற்றது.

எப்படி விரதம் இருப்பதாலும், நீராகாரம், பழங்கள் போன்ற பத்திய உணவுகளை மட்டுமே உட்கொள்வதாலும் உடலிலிருக்கும் அசுத்தங்கள் / toxins வெளியேறிவிடும் என்பது மருத்துவ உண்மையோ, அதே போல்... இவ்வகையிலான புலன்களின் மீதான நோன்பு, மனித மனதினை, எண்ணங்களைத் தூய்மைப்படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

மாதம் முழுக்க பரீட்சை வைத்து, களைப்படைந்த மக்களுக்கு ரமதான் மாதம் முடிவுற்றதும், “ஈதுல் ஃபித்ர்” என்னும் பண்டிகை / ஓர் நாள் விழா / உற்சாகக்
கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படுகிறது... அதுவும், இறைவனைத் தொழுது நன்றி செலுத்தும் விதமாக.

உண்மையில், இந்தப் பரீட்சையை ஆழ்மனதிலிருந்து ஒரு உத்வேகத்துடன் செய்தவர்களுக்கு, இந்த விடை கூறல் - பெருநாள், மிகக் கனமானதாகவே இருக்கும். இல்லையா??

(இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள: http://www.satyamargam.com/islam/analysis/1018-1018.html)

.

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்?

ஹெலோ சகோஸ்,

மறுபடியும் தனது கோர முகத்தை காட்டியுள்ள அறிவீனத்திற்கு ஒரு பதில் பதிவுதான் இது. எங்கே? எப்படி? என்பவர்களுக்கு, ஒரே டைட்டில்தான் பதில். ‘The Innocence of muslims'.

படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு: Simply bullshit. All it has is mendacity and the movie itself is nothing more than a sophomoric trifle...and for your thoughts to provoke everyone to follow your suit....better luck!! Not this alone, but even a thousand better films even can never ever change the 1.5 billion (and counting)  muslims following Prophet Muhammad in their daily life, bit by bit, minute by minute. Islam = Bliss !!

முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும்:
1. இதற்காக அப்பாவி மக்களை கொன்றது மிகப்பெரிய தவறு. என் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

இதற்கென அறவழியில் போராட்டம் செய்வதோடு மட்டுமல்லாமல்,

2. நம்மிடம் உள்ள ஆற்றலைக் கொண்டு இன்னொரு வீடியோ / மீடியா மூலமாக இன்னும் சிறப்பான விதத்தில் எடுக்கப்பட்ட, தகவலைக் கொண்ட உயர்ந்ததொரு படத்தை தந்திருக்கலாம்.

3. The Message போன்ற படங்களை தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து, அந்தப் படம் வந்த அதே நேரத்தில் அதே வலைதளத்தில் அப்லோடு செய்திருக்கலாம்....Make hay while the sun shines...!!

4. இஸ்லாமிய டாக்குமெண்டரிகளை  / திரைப்படங்களை தத்தம் லோக்கல் கேபிள் சேனல்களில் (அதான் ஊரெங்கும், உலகெங்கும் இப்போதுள்ளதே...) ஒளிபரப்பியிருக்கலாம்.

5. அந்த வீடியோவின் லின்க்கை பரவ விடாமல் அதிக ஹிட்ஸ் கிடைக்க விடாமல் தவிர்த்திருக்கலாம்.

6. இஸ்லாத்தில் இணைந்த / பிறந்து வளர்ந்த பெண் மேதைகளையும், சாதனையாளர்களையும், முக்கியமாக மேலை நாட்டில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்தில் இணைந்த பெண்களையும் இணைத்து அவர்களின் பார்வையிலிருந்து இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய அவர்தம் பார்வையைப் பற்றியும் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம்.

7. இதை விட எல்லாம் பெரிய ஆயுதமான து’ஆவை பள்ளிகளிலும் ஜமா’அத்தாக கூடும் இடங்களிலும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் தஹஜ்ஜுத்தில் மறவாது து’ஆ கேட்குமாறு அழைத்திருக்கலாம்.

8. இப்படி ஒரு படம் வெளியாக இருக்கிறது என்று தெரிந்த போதிருந்தே இத்தகைய யோசனைகளை இஸ்லாமிய அழைப்புக்களும், இஸ்லாமிய அரசுகளும் முன்னமே சிந்தித்து ஏதேனும் ஒரு வகையிலாவது செயல்பட்டிருக்கலாம்.

இன்னும் எத்தனை பெரிய அறீவீனங்களுக்கும் துளியும் தளராது இஸ்லாம். ஆனால் எல்லா நேரத்திலும் வெற்று அறிக்கைகள் விட்டு, இதற்கெல்லாம் உணர்ச்சி வயப்படக்கூடாது என வாய்வார்த்தைகளை மட்டும் ஆதரவாக்கிவிட்டு இன்னும் பல கோழைத்தனமான செயல்களால் மட்டுமே பதில் சொல்லும் நம்மால், நம் அரசுகளால், நம் அமைப்புக்களால்.... இஸ்லாம் .....?????????????????

மேலும் படிக்க:

 

பெற்றோரா ??? இறைவனுக்கா ????

 

 இறைவனுக்கு குழந்தை தேவையா?இறைவனுக்கு என்ன தேவை இருக்கக்கூடும்? இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா? இறைவனுக்கு பெற்றோர் இருக்கலாமா?

யோசித்துப் பாருங்கள் மேற்கண்ட கேள்விகளை...

ஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா? அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா? உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும்? தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது? அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே? நிகழவே முடியாத நிலையாகிறதே? எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல. அல்லாஹ், குர்'ஆனில் கூறுகின்றான்,
"அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்'ஆன் 112:1)"

இறைவன் சோர்வடையக் கூடுமா? இறைவன் மறக்கவோ அல்லது தவறிழைக்கவோ முடியுமா?

"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (குர்'ஆன் 2:255)"

இறைவனுக்கு ஈடு / இணை உண்டா?

"(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)"

நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் உண்டா?

நாம் முன்னரே சொன்னது போல், நம்மை சுற்றியுள்ள பொருட்களைப் பார்ப்போம். அவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நோக்கம் இல்லாமல், அதன் இருத்தலுக்கான ஒரு காரணம் இல்லாமல் இருக்கிறதா? நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே? ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா? இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா? பகுத்தறிவுள்ள எந்த மூளையும் இதை ஒத்துக் கொள்ளும், இவ்வுலகில் வாழும் நமக்கு ஒரு நோக்கம் / காரணம் இருப்பதை.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை யார் முடிவு செய்வது? நாமா அல்லது நம்மை படைத்தவனா?

சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் எழுதுகோலையே எடுத்துக் கொள்வோமே? அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன? அதன் உண்மையான நோக்கம், "எழுதுவது" அல்லது "எழுத உதவுவது". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது? முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா? எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே? நம் வாழ்க்கையின் சரியான / உண்மையான நோக்கம் என்ன என்பதை நம்மைப் படைத்த இறைவனிடமிருந்து மட்டுமே அறிய முடியும்.

வாழ்வின் நோக்கம் என்ன?

இதற்கான பதிலை இறைவன் குர்'ஆனில் தெளிவாக கூறுகின்றான்,
"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(குர்'ஆன் 51:56)"

இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என இறைவன் ஏன் எதிர்பார்க்கிறான்?

ஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் குழந்தை தமக்கு கட்டுப்பட்டு வளர வேண்டும் என எதிர்பார்ப்பது நிதர்சனம். ஒரு ஆசிரியர், தம மாணவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சாதாரணம். அதே ரீதியில்தான் நம்மைப் படைத்த இறைவனும், அவனை மதித்து, அடி பணிந்து நாம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறான். வணக்கத்திற்குரிய தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது, எனவே நாம் அவனை வணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இன்னும் வேறு விதமாக சொன்னால், நம் வாழ்வே ஒரு சோதனைதான். நாம் இறைவனை அஞ்சி, வணங்கி நடக்கிறோமா என பரீட்சித்து பார்க்கும் ஒரு சோதனைக்களம்தான் இவ்வுலக வாழ்வு. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (குர்'ஆன் 67:2)"


இனி, நபிமார்கள் என்றால் யார்?
.

'முஸ்லிம்' என்றால் யார்?




பல தெய்வங்கள் இருப்பின் ??????
 இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம். எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். அதாவது ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதை அடிபணிந்து நடப்பவரையே நாம் முஸ்லிம் என்கிறோம்.

பாடல்கள் பாடும் ஒருவரை நாம் 'பாடகன்' என்றே அழைக்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், எந்த மொழி பேசுபவராயினும் சரி. அது போல், எந்த ஒரு மனிதன், நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரை நாம் முஸ்லிம் என்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், அவரின் தோலின் நிறம் எப்படி இருப்பினும், அவர் எந்த மொழி பேசினாலும், அவர் முஸ்லிமே!!

இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு நபருக்கு அப்துல்லாஹ் எனவோ, இப்ராஹீம் எனவோ பெயரிருப்பதாலோ அல்லது அந்த நபர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ மட்டுமே அவர் முஸ்லிமாகி விட முடியாது. 'முஸ்லிம்' என்னும் பட்டம் வாரிசுரிமை போன்றதல்ல; மாறாக யாரொருவர் நம்மைப் படைத்த இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரையே குறிக்கும்.

குர்'ஆன் என்றால் என்ன?

ஏக இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி அவர்களுக்கு தரப்பட்ட இறுதி இறை வேதமே குர்'ஆன் ஆகும்.  முழு குர்'ஆனும் இறைவனின் வாக்கன்றி வேறில்லை. குர்'ஆனில் முஹம்மது நபியின் வார்த்தைகள் இல்லவே இல்லை. அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்கென்றே குர்'ஆன் உள்ளது, எனினும் அதன் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும் உள்ளது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் (இறைவன்) கூறுகின்றார், 
 "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (குர்'ஆன் 4:82)

இஸ்லாத்தின் அடிப்படை செய்தி என்ன?

இஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன? "படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே" என்பதே அது. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், 
 "இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்." (குர்'ஆன் 41:37)

வணக்கம் - என்பது இங்கே சடங்குகள் செய்வதையோ மந்திரங்கள் சொல்வதையோ குறிக்கவில்லை. மாறாக வணக்கம் எனபது இறைவனுக்கு அடிபணியும் ஒரு ஒழுக்கம், மனிதனின் ஒவ்வொரு காரியத்திலும் அந்த ஒழுக்கத்தை பிரதிபலிப்பதே வணக்கமாகும்.

இறைவனுக்கான குணாதிசயங்கள் என்னென்ன?

இஸ்லாம் நமக்கு கூறும் இறைவனின் குணாதிசயங்கள் என்னவெனில்:
1 இறைவன், ஏகன்.
2.இறைவனுக்கு தேவைகள் ஏதுமில்லை (அல்லது) தேவைகளற்றவனே இறைவன்.
3.இறைவனுக்கு பெற்றோரோ, மனைவியோ, குழந்தைகளோ கிடையாது.
4.இறைவனின் இயல்புகளான ஆற்றல், ஞானம், மன்னிப்பு போன்றவற்றில் அவனுக்கு நிகர் வேறெவருமில்லை.
5. இறைவனுக்கு சோர்வில்லை.
6. இறைவனுக்கு மறதியில்லை.
7. இறைவன் தவறு செய்பவனல்ல.
8.இறைவன், மக்களனைவரையும் நேசிப்பவனே அன்றி குலம், கோத்திரம் , சமூகம், வம்சம் போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பவனல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான், "(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)

பல இறைவன்கள் சாத்தியமா?

உதாரணத்துக்கு ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அதிபர்களோ, அல்லது ஒரு கல்விக்கூடத்தில் இரண்டு தலைமையாசிரியரோ இருப்பது சாத்தியமா? பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம்? ஒரு வாகனத்துக்கு இரு ஓட்டுனர்கள் போன்ற உதாரணம்தான் அது. ஒரே வாகனத்தை இருவரும் ஓட்டும்போது, அவர்கள் எத்தனை திறமைசாலியாய் இருப்பினும் விபத்து ஏற்படுவது உறுதி.

"(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்." (குர்'ஆன் 21:22) "


இனி, பெற்றோரா? இறைவனுக்கா????


.

இறைவனை படைத்தது யார்?



இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப் படைத்தது யார்?

நம் பெற்றோர் மூலம் நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள், அவர்கள் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அது எங்கே போய் முடியுமெனில், "அப்போ இறைவன் எப்படி உருவானார்? அல்லது அவனைப் படைத்தது யார்?"

பதில் மிக எளிது. 

இந்த முழு அண்டமும் உருவாவதற்கு முன் ஒரு பொருள் உருவாவது முக்கியம். அந்தப் பொருளைக் கொண்டுதான் மற்ற பொருட்களின் பிறப்பு இறப்பை கணக்கிட முடியும். அப்படிப்பட்ட பொருள் வேறெதையும் நம்பி அல்லது வேறு எந்த கட்டுப்பாடுக்கும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அது என்ன??? நேரம் !!!!

நேரத்தைப் பொறுத்தே நாம் அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் 'நேரத்தை' படைத்தவன் பிறப்பும் இல்லாமல் இறப்பும் இல்லாதவனாக இருக்க வேண்டும். நேரம் அல்லது மணித்துளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர இயலாதவனாக இருக்க வேண்டும். அந்த ஒருவனையே நாம் இறைவன் என்கிறோம்.



 

உதாரணத்துக்கு ஒரு பென்சிலை வடிவமைக்க ஒருவர் முயல்கிறார். அவரை 'எண் 1' என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னால் தனியாக அந்த பென்சிலை வடிவைக்க இயலாது. 'எண் 2'இன் உதவி தேவை என்கிறார். எண் இரண்டு நபரோ எண் மூன்றாம் நபரின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது என்கிறார். இப்படியே ஒவ்வொரு நபரும் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த பென்சிலை கடைசியில் வடிவமைப்பதுதான் யார்? பதிலில்லை இல்லையா? ஏனெனில் இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இன்றி என்னால் அந்த பென்சிலை வடிவமைக்க இயலும் என்று கூற வேண்டும். வடிவமைக்க வேண்டும். அப்படி இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இல்லாமல் வடிவமைத்தால்தான் அந்த சங்கிலி தொடர் முடிவுக்கு வரும். இல்லையேல் அது முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பென்சிலும் வடிவமைக்கப் படவே படாது.

அந்த ஒருவர்தான் யாரையும் சாராமல் தனியே இயங்கக்கூடிய ஆள். அவரை மட்டுமே நாம் பரம்பொருள், சூப்பர்பவர் அல்லது இறைவன் என்போம். யாரையும் சாராமல், தனியே இயங்கவும், படைக்கவும் தெரிந்தவனே இறைவன். எனவே 'இறைவனைப் படைத்தது யார்' என்ற கேள்விக்கே இப்பொழுது இடமில்லை.

இறைவன் என்பவன் யார்?
சரி, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. 'தாய் என்பவள் யார்?' உங்களின் பதில் என்ன? யாரொருவர் ஒரு குழந்தையை பெற முடியுமோ அவரே தாயாவார். இதுதான் எளிமையான பதில். 
இல்லை என் தாயை எனக்கு பிடிக்கவில்லை, அன்னை தெரசாவை கூட்டி வாருங்கள் அவர்தான் என் தாய் என்று நாம் கூற முடியுமா? நாம் எல்லோரும் அன்னை என்றழைப்பதால் அவர் நம் அன்னையாக முடியுமா? நம்முடைய தாய் யார் என்பதை முடிவெடுக்கும் வாய்ப்பு நம்மிடம் இல்லை.

அதே போல் என்னை, உங்களை படைத்தது ஒரிறைவன்.... ஒரே இறைவன். வேறு யாரை வேண்டுமானாலும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் நாம் இறைவன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய உண்மையான இறைவன் ஆகுமா? நம்மைப் படைத்தவனைப்போல ஆகுமா? எப்படி தந்தை தாயை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு / உரிமை நம்மிடம் இல்லையோ அதே போல் படைத்தவனை தவிர்த்து வேறெதையும் நம்முடைய இறைவனாக அங்கீகரிக்கும் வாய்ப்பும் உரிமையும் நம்மிடம் இல்லை. நம்மை படைத்தவன் மட்டுமே நம் இறைவன். உலகறிந்த ஒரே உண்மை இதுதான். எல்லா சமூகங்களிலும், சமயங்களிலும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரே கருத்து இதுவே.

திருமறை குர்'ஆனில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்:


வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - 
அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன். 
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; 
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் 
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; 
மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (57:3)

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

.

உண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா???



ஒரு ஊருக்கு போகிறோம், அல்லது ஊருக்குள்ளேயே பயணிக்கிறோம், அந்தப் பயணங்களில் எத்தனை முறை நாம் பாலங்களை கடக்க வேண்டி உள்ளது? அது தானாக முளைத்து விட்டது என்றால் நம்பும்படி உள்ளதா? ஒரு கட்டிடமோ, வாகனமோ அல்லது ஒரு தார் சாலையோ ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் துணையின்றி இதெல்லாம் முளைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த அந்த பொருட்களின் அல்லது கட்டிட அமைப்புக்களிலேயே அதை இவ்வளவு சிறப்பாய் வடிவமைக்க அந்தத்துறையின் நிபுணர் தேவை என்று நினைக்கிறோம், இல்லையா? அப்படி இருக்க, உயர்தரமான, கடுஞ்சிக்கலான கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மனித உடம்பு? யோசித்துப்பாருங்கள் சகோ...

சிந்தனை செய்யும் மூளையைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்: அது எப்படி சிந்திக்க உதவுகிறது, எப்படி பகுப்பாய்கிறது, எப்படி தகவல்களை சேமிக்கிறது, எவ்வாறு அவற்றை மீண்டும் வெளிக்கொணறுகிறது? எப்படி தகவல்களை பிரிக்கிறது, வகைப்படுத்துகிறது?? ஒரு மைக்ரானுக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் செய்யவும் வல்லது, அல்லவா? (இந்த வரியைப் படித்து பிரம்மிக்கவும் அதே மூளையை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளோம், நினைவிருக்கட்டும் !!)

கொஞ்சம் இதயத்தையும் கவனிப்போம். மனிதன் பிறந்த நொடியிலிருந்து இறக்கும் வரையிலும் நொடி தவறாமல் எப்படி இரத்தத்தை இறைக்கிறது? கல்லீரலும் சிறுநீரகமும் கூட இவ்வாறே ஓய்வின்றி உழைக்கின்றனவே. இரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள நஞ்சை அகற்றிடவும், இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் என ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை பணிகளை ஆற்றுகின்றன? நம் கட்டுக்குள் வரக்கூடியவையா இவை?

கண்கள்? அதைப் பற்றியும் யோசியுங்கள் சகோ...  

உயர் தர கேமராவையும் மிஞ்சும் வேகம், காட்சிகளை மையத்தில் குவிக்கும் திறன், சுழலும் பார்வையை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரி செய்யும் புலமை, காணும் காட்சியை மூளைக்கு மொழி பெயர்க்கவும், மதிப்பீடு செய்யவும், நிறங்களை உடலுக்கும் நரம்புக்கும் ஏற்புடையதாக்கி சுற்றியுள்ள ஒளிக்கும் தூரத்திற்கும் ஏற்ப தகவல்களை தரும் விவேகம், திறமை - இவையெல்லாம் யாரும் உருவாக்காமல், திட்டமிட்டுத் தராமலே வரக் கூடுமா? அல்லது சிலர் கூறுவது போல, இத்தகைய கடுஞ்சிக்கலான ஒழுங்குமுறைகளை தற்செயலான மரபணு மாற்றங்களோ அல்லது பரிணாமமோ உருவாக்கியிருக்க முடியுமா?

சுத்தமாக இருக்கும் ஒரு வெள்ளை சுவற்றில் பல்வேறு நிறங்களை பீய்ச்சி அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வர்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை போன்றோ, பறவை போன்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் போன்றோ கூட தோன்றலாம். ஆனால் அவை யாவும் கலந்து திடீரென மோனலிசா போன்றாயிடுமா? அல்லது ஒரு கலைஞனின் திறமையும் முயற்சியும் இன்றி ஒரு மோனலிசா ஓவியம் வந்து விடக் கூடுமா?

சகோ...ஒவ்வொரு பாகமாக பார்த்துப் பார்த்து செதுக்கியது போன்றுள்ள நம் உடல், அந்த மோனலிசா ஓவியத்தை விட மிக சிக்கலான பாகங்களையும் நுணுக்கங்களையும் கொண்டது இல்லையா? அப்படி இருக்கையில், இந்த உடம்பின் அமைப்பும், அழகும், நுட்பமும் எவரின் ஞானமும் இல்லாமல் இப்படியே உருவாகிவிட்டது என்று நம்புவது எந்த விதத்தில் பகுத்தறிவாகும் சொல்லுங்கள் ??? 

இந்தப் பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்வோமே... நாம் வாழும் பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களைப் போன்றதொரு கோள். நம் சூரிய மண்டலமும் பால் வீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மண்டலங்களில் ஒன்று. நாம் வாழும் பால் வீதி மண்டலமும் அதைப்போல் எண்ணிக்கையில் அடங்காத பால்வீதிகளில் ஒன்று. மொத்த பிரபஞ்சத்திலும் இது போல் லட்சக்கணக்கில் பால்வீதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரம் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் ஒரு உன்னதமான ஒழுங்கும் நுட்பமும் கலந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  

இன்றைய தேதியில் இன்னும் பல வருடங்களுக்கு பின் வர இருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் கூட இன்றே கணிக்க முடிகிறதே... எப்படி இது சாத்தியம்?  

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையுங்கூட இன்னும் 200 வருடங்களுக்கு இன்றே, இப்போதே கணிக்க முடியும். இவையெல்லாம் எப்படி முடிகிறது?  

அந்தப் பால்வீதியிலும், எண்ண இயலாத நட்சத்திரங்களிலும் கோள்களிலும், அவற்றின் அசைவிலும், சுழற்சியிலும் உள்ள ஒழுங்கால், அந்த நேர்த்தி மாறாது என்னும் நம்பிக்கையால்...  

இவையெல்லாம் பறை சாற்றுவது என்ன???  இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவனின் நேர்த்தியான கலைத்திறன் மற்றும் இதைப் பற்றியுள்ள உன்னதமான அறிவு.


அணுவளவும் பிறழாத ஒழுங்கும், அலாதியான அழகுடனும் விளங்கும் இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்து விட்டதாக நினைக்க முடிகிறதா சகோ? 

திடீரென நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பில் இத்தனை சிக்கலான ஒரு அமைப்பு வந்து விட முடியுமா?  தானாக வாய்த்து விடுமா?

நிகழ்வாய்ப்பில் ஒரு உதாரணம் சொல்லவா?  வெவ்வேறு நிறங்களாலான 10 கோலிக்குண்டுகளை வரிசைப்படுத்தி ஒரு பையில் போட்டு நன்றாக குலுக்குங்கள். அதன் பின் கண்களை மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து பத்து வரையான கோலிக்குண்டுகளை வரிசை தவறாமல் எடுக்க வேண்டும். முடியுமா? அதற்கான வாய்ப்புகள் எத்தனை தெரியுமா? இரண்டு கோடியே அறுபது லட்ச வாய்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பு (2,60,00,000 to 1) மட்டுமே. 

10 கோலிக்குண்டுகளுக்கு மட்டுமே இந்த நிலை எனில், லட்சோப லட்ச நட்சத்திரங்களும், கோள்களும், சம கால நிகழ்வில் இத்தனை துல்லியமான நேர்த்தியுடனும், ஒரு இனிய பல்லியத்துடனும் தற்செயலாக இயங்க எத்தனை வாய்ப்புகள் உண்டு, சொல்லுங்கள்???? 

பதில்????......................பூஜ்ஜியம்தான்!!!!

இந்த சிறிய உதாரணமே போதுமானதாக இல்லையா படைத்தவனின் இருப்பை விளக்க?????

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)





.