ரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்

Thursday, June 30, 2011 Anisha Yunus 10 Comments

முன் குறிப்பு - முதலில் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ கதையை மட்டுமாவது படித்து விட்டு வாருங்கள்.


இனி...

போன பதிவில் சொன்னது போல தினம் ஒரு கதை என்று படிக்க ஆரம்பித்ததே இரண்டு வாரம் முன்தான். ரமணிச்சந்திரனின் ஓரிரு கதைகள் மட்டுமே நான் ஊரிலிருந்த பொழுது படித்துள்ளேன் என்பதால் நெட்டில் தேடி கதையை படித்தேன். முதலில் 3,4 கதைகளில் ஏதும் பெரிய தாக்கம் இல்லை. எப்பொழுதும் போல, நம் சினிமாக்களில் வரும் காதல் கதைகள், தளம் மட்டும் மாறி மாறி வரும். ஆனால் படித்த கதைகளில் முக்கால்வாசி கதையில் ஹீரோவாக வரும் ஆண் கண்டிப்பாக பெண்ணாசை பிடித்த சேடிஸ்ட்டாகவேதான் உள்ளான். ஏன்? இதை எதிர்த்து ஆண்கள் யாரும் பதிவு எழுதினார்களா தெரியவில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று தேடி தேடி படித்தவனாக இருப்பான், அல்லது அப்படிப்பட்ட தேசத்திற்கெல்லாம் வாரம் ஒரு முறை வர்த்தக விஷயமாய் பயணம் செய்பவனாக இருப்பான். இதிலெல்லாம் தப்பே இல்லை. தப்பு எங்கே என்றால், மது, மாது என்பது கழற்றி மாட்டும் சட்டையைப் போல மாற்றுபவனாக இருப்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயினிடம் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, “நீ என்னை மயக்கி, வலையில் வீழ்த்தி என் சொத்தை அபகரிக்கத்தானே வந்தாய்??” என்ன ஒரு Mentality? எனக்கு புரியவில்லை. அதெப்படி அவனாக தேடி போகும்போது அந்த பணத்தை அப்படி வீண் விரயம் செய்வதிலோ, தாராளமாக, தாராளம் காட்டும் பெண்களுக்கு வழங்குவதிலோ நொடியும் தவறாக எண்ணாதவன், ஏழைப்பெண் மட்டும் தன் சொத்தை வலையில் போட்டுக்கொள்வாள் என ஏன் எண்ணுவான்?

இது மட்டுமல்ல. முன்னுரை எழுதியிருக்கும் விதத்தை பார்த்தால் நல்ல கருத்து சொல்லக்கூடிய கதை என்றுதான் தோன்றும். ஆனால் படிக்க படிக்க, என்ன மெசேஜ் இது என்றுதான் தோன்றும். உதாரணத்திற்கு, தன் படுக்கைக்கு வர தினம் தினம் சம்மதம் கேட்கும் ஒரு பாஸ், அவனிடத்தில் கைத்தறியை மட்டுமே உடுத்தி தன் உணர்வுகளை அடக்கியாளும் பெண். சொத்து விஷயத்தில் ஒருவனை பழி வாங்கி அவனின் வருங்கால மனைவியையே படுக்கைக்கு அழைக்கும் ஆண், அதனை வருங்கால கணவனுக்காக செய்யும் தியாகமென நினைக்கும் பெண், அப்படி என்ன தியாகம்? என்ன மெசேஜ் இது?? எல்லாவற்றிற்கும் மேலாக ‘மயங்கினாள் ஒரு மாது’ என்னும் கதையில் சித்தரிக்கப்படும் கதை. ஒரு அளவே இல்லாமல் அந்தப்பெண்ணை பாலியல் கொடுமை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. எதற்காக? தன்னை தொட்ட ஒரு அன்னியனை அவள் அறைந்துவிட்டாள் என்பதற்காக மட்டும்...!!!!!!!!! அத்தனை கொடுமையை அனுபவித்த அந்த பெண்ணும், காந்தீய வழி முறையை பின்பற்றி அவனை மன்னித்து, மணமும் புரிகிறாளாம். அருவருப்பின் உச்சகட்டம் எனலாம்.

கதையில் வரும் பெண்களெல்லாம் அழகாய், குணத்தில் சிகரமாய் இருப்பதென்னவோ சரிதான், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறும் கூட்டமாக அல்லவா இருக்கிறார்கள். பொறுமை, அமைதி என்ற பேரில் அத்தனை பாலியல் தொந்தரவுகளையும், அத்து மீறல்களையும் அனுமதிப்பவர் போலல்லவா இருக்கிறார்கள்???

என்ன தேவை? அப்படி ஒரு பெண் ஏன் வாழ வேண்டும்? கதையில் வரும் பெண்ணை விடுங்கள். இந்த மாதிரி கதைகளை படிக்கும் பெண்களை எடுத்துக் கொள்வோம், வாலிப வயதில், கற்பனைகளும், கனவுகளும் சிறகடித்துப் பறக்கும் மனநிலையில் உள்ள டீனேஜ் பெண்களே இந்த மாதிரி கதைகளை விரும்பி படிப்பர். அல்லது வீட்டில் சமைக்கும், வீட்டை கவனிக்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் ரிலாக்ஸாக விரும்பும் மனைவிகள். இதில் இந்தளவு impractical story line தருவதில் என்ன சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும்? முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல என்ன பாங்கான வாழ்க்கை சொல்லித்தர முடியும்? ஒரு பேச்சுக்கு, உண்மையிலேயே ஒரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகளையோ, அல்லது அப்படிப்பட்ட hintsஐயோ தரும் ஒரு பணியாளரை இதையெல்லாம் படிக்கும் பெண் என்ன நினைக்க முடியும்? அய்யோ... இவரும் சிறு வயதில் தாய் தந்தை அன்பை இழந்திருப்பாரோ, அதனால் இப்படி நடந்து கொள்கிறாரோ?? அந்த கதையில் வரும் நாயகனைப் போல கடைசியில் திருந்தி மணம் செய்து கொள்வாரோ என தப்பான முடிவெடுக்க துணிந்து விட்டால்???இதைப் போன்றே மற்ற சமயங்களிலும் அத்து மீறும் ஆண்களை அடையாளப்படுத்தி விலக தெரியாமல் போனால்???

இது தேவையற்ற பயம், அப்படி யாரும் கதைகளைப் பார்த்து முடிவு செய்வதில்லை என மல்லுக்கட்ட முடியாது. எவ்வளவு செய்திகளை தினம் பார்க்கிறோம், சினிமாவுக்காக ரயில் ஏறிய சிறுமிகள் வாழ்வை தொலைப்பதும், திருமணமாகாமலே மனைவியாய் சொகுசாய் வாழ ஆசைப்பட்டு, கடைசியில் பத்திரிக்கைகளுக்கு தீனியாகிப்போவதும்... தினம் தினம் நாம் பார்ப்பதுதானே?

இவ்வளவு பெரிய வாசகர் வட்டம் வைத்திருக்கும் கதாசிரியர், இன்றைய சூழ்நிலைகளை அறிந்து அதிலுள்ள களைகளை அகற்றிட முயலக்கூடாதா??? கணவன் மனைவிக்குள் இருக்கும் (சட்ட ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட) உறவில் விழும் விரிசல்களை எப்படி நீக்குவது என்று எழுதலாமே?? கள்ளத்தொடர்புக்கு வழி வகுக்கும் பாதைகளை ஆராய்ந்து அதிலிருந்து மீள்வது போலவோ காப்பாற்றப்படுவது போலவோ எழுதலாமே?? தனிக்குடும்பத்தால் வரும் பிரச்சினைகளை அலசி, கூட்டுக் குடும்பங்களுக்கோ அல்லது வயதான தாய், தந்தை / மாமனார் மாமியார் போன்றவர்களை adjust செய்து வாழ்வதே எவ்வளவு பிரச்சினைகளிலிருந்து மீள வைக்கும் என்பதை எழுதலாமே?? 

நான் ஒருத்திதான் இப்படி யோசிக்கிறேனோ என்று பார்த்தால்  இன்னொரு வலைப்பதிவிலும் இந்த சிந்தனை எதிரொலிக்கிறது. இன்னும் எத்தனை பேர் மௌனமாக இதை சகிக்கிறோம் என்று புரியவில்லை. ஒரு சில கதைகள் நன்றாகவே உள்ளன. இல்லை என்றில்லை, ஆனால் 90% கதை இப்படி போவதுதான் வருத்தமாக உள்ளது. பாலியல் தொந்தர்வுகளும், அராஜகங்களும் அதிகரித்துள்ள தற்போதைய வாழ்க்கைச்சூழலில் அதை சட்டென எதிர்க்கும், துணிந்து நிற்கும் பெண்களல்லவோ ஹீரோயினாக வேண்டும்?? என்ன சொல்ல... நம் சகிப்புத்தன்மையை மெச்ச ஆளில்லை போங்கள்......!!!!

10 comments:

 1. அன்னு, என்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள். என் வீட்டு ஷெல்பில் 150 ரமணிச்சந்திர புத்தகங்கள் உள்ளன, கல்லூரி காலத்தில் இருந்து சேர்த்தது. ஒரு பாஸிட்டி பெர்செப்ஷனிற்காக என்னை கவர்ந்தவை. . என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் என் அன்பு வென்றிருக்கிறது. மனிதர்களை அழகாக புரிந்து கொள்ளும் தன்மையையும் இவைதான். தந்தன. நாவலை படிப்பதைவிட புரிந்து கொள்வது நம்மையே மாற்றி அமைக்கும். பாலியல் தொந்தரவு என்ற வார்த்தை சரிதானா?

  ReplyDelete
 2. @சாகம்பரி,

  வருகைக்கும் கருத்திற்கும் முதல் நன்றி.

  See...there are a lot of parameters. உங்க வயசு, அனுபவம், வளர்ந்த விதம், அதையும் தாண்டி எதையும் அணுகும் சுபாவம் இதெல்லாம் உங்கள் நட்பு வட்டாரத்திற்கும், உறவினர் அன்புக்கும் பாலமாய் இருந்திருக்கும். தன்னுடைய குணநலன் சரியிருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி கதைகள் Will be one additional boost. That's all. ஆனால் இந்த மாதிரி கதைகளைப் படிக்கும் சராசரி பெண்ணை எண்ணிப்பாருங்கள். சினிமாவுக்கு போகவோ, காதலனுடன் ஊற் சுற்றவோ விரும்பாத, அல்லது வசதிப்படாத அல்லது கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட பெண்களின் நிலை எண்ணிப்பாருங்கள். எவ்வளவு பேர் இதிலிருந்து positive message எடுத்துக்கொள்வார்கள். எல்லா தீயதிலும் நன்மை உண்டு. ஆனால் அதன் விகிதத்தை அலசி ஆராயும் பக்குவம் எல்லா பெண்களிடத்திலும் இல்லையே??

  பாலியல் தொந்தரவு என்கிற வார்த்தை தாண்டி என்ன வார்த்தை அங்கு ஒத்து வரும்? ஒரு கதையில் கீ செயின் விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார்கள். அதில் கீசெயின் குலுக்கல் போட்டு அந்த கீ செயின் யார் கையில் கிட்டுதோ அந்த காரும், அந்த காரின் ஓனருடைய செக்கரெட்டரியும் அவருக்கு அன்றைக்கு சொந்தம். இதற்கு தன் செகரெட்டரியை கூப்பிட்டு செல்கிறான் அந்த முதலாளி. இது பாலியல் தொந்தரவை விட சீப்பான வகை. அந்த நாளின் க்ளைமேக்ஸில் முதலாளி வந்து காப்பாற்றுவது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தாலும் இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் பெண் என்ன யோசிக்க வேண்டும்? எபப்டி செயல்படவேண்டும் என்பது இல்லையே?? அடுத்த நாள் அந்த முதலாளியின் பேச்சில் மயங்கி, மீண்டும் பொறுமை காத்து வேலையில் தொடர்வது போலுள்ளது. இதெல்லாம் பெண்களை இன்னும் இன்னும் வீக்காக்குவது போலில்லையா??

  ReplyDelete
 3. அன்னு, வைரமலர், பூங்காற்று, விடியலைத்தேடும் பூபாளம், வெண்மையில் இத்தனை நிறங்களா? போன்றவையை நான் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா?. மனிதர்களின் மனமாச்சரியங்கள் பற்றி சில குறிப்புகள் கிட்டும். பொதுவாகவே இந்த கதைகளின் அடிப்படை ஒன்றுதான். ஓரு தவறும் செய்யாத கதாநாயகி தன் வாழ்க்கையை தேடும் போராட்டம்தான். "நான் என்ன தவறு செய்தேன்? என்னுடைய வாழ்க்கைக்காக நாம் போராடவில்லையெனில் வேறு யார் அதனை சீர் செய்ய முடியும்" என்ற கேள்வி அடிப்படையில் இருக்கும். சின்ன விசயத்திற்கே வாழ்க்கையை தூக்கிப் போட்டு விடும் இந்த காலத்தில் வாழும் பொறுமையை கொடுக்கும் இது போன்ற தேடல்கள் தேவைதானே.

  ReplyDelete
 4. நீங்கள் சொன்ன உதாரணத்தில், எந்த பெண்ணாக இருந்தாளும் செருப்பைக் கழட்டி அடித்திருப்பாள்தான். கதாநாயகி என்பதால் அவ்வாறு செய்ய முடியாது என்று படிக்கும் நமக்கு புரிந்துவிடும். எல்லாவற்றையும் தாண்டியதுதான் காதல் என்று ஒரு quote இருக்கும். ஒவ்வொருவருக்கு ஒரு ஃபீலிங் என்பதால், பெண்கள் வீக்காக மாட்டார்கள், தனக்குப் பொருத்தமான ஆண்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவாகிவிடுவார்கள். நடைமுறையில் இது போன்ற வரையறைகளை ஆண்களால் ரீச் செய்ய முடியாது என்பதால், ரமணி சந்திரனின் கைட் லைன்படி நிறைய பேர் செலக்ட் ஆக மாட்டார்கள். சுப்பீரியர் பெர்சொனலிட்டிதான் விருப்பமாக இருக்கும். ரமணி சந்திரன் ரசிகைகள் பலர் பெண்களுக்குரிய குணங்களை வலுபடுத்திக் கொண்டு, பொறுப்பாக குடும்பம் நடத்துகிறாகள்.

  ReplyDelete
 5. @ சாகம்பரி,

  நீங்கள் சொன்ன தலைப்பிலெல்லாம் இன்னும் படிக்கவில்லை சகோ. நான் படித்த இன்னும் சிலவற்றிலும் நல்ல கருதான். இல்லையென்று சொல்லவில்லை. இதை நான் பதிவிலும் தெளிவுபடுத்தி உள்ளேன். ஆனால் மற்ற அனைத்திலும் இதே கரு, ஜோடனைகள்தான் மாறுபடுகின்றன.

  இன்னுமொன்று, நீங்கள் சொல்வது போல், “நான்தான் என் வாழ்க்கையை சீராக்கிட முயற்சிக்க வேண்டும்” என்கிற கருத்தை எங்கேயும் வலுவாக நான் காணவில்லை. தர்க்கத்துக்காக சொல்லவில்லை. 150 கதைகளை படித்துள்ள நீங்களே இதை புரிந்து கொள்ளலாம். எப்படி?? ஒவ்வொரு இடத்திலும் அந்த கதாநாயகி, கதாநாயகனின் துணையைக் கொண்டே நகருவதைப்போலே இருக்கும். அல்லது, கதாநாயகி தானாக ஒரு முடிவெடுத்தாலும் அதில் கதாநாயன், ஒரு சிறிய அளவிலாவது சீர்திருத்தம் செய்வது போலேதான் இருக்கும். ஏன்?? படித்த, பண்பான ஒரு பெண் அப்படி ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5% தப்பாக இருக்கும் முடிவைத்தான் எடுப்பாள் என்பதா?? இதுவே திருமண பந்தத்தில் இருக்கும் பெண்ணைப்பற்றி என்றால் கவலையில்லை. என்ன மெசேஜ் கிடைக்குமானால், எல்லா நிலையிலும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் நல்லது என்கிற மெசேஜ். ஆனால் திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு நிலை நல்லதல்லவே??? ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பசுத்தோல் போர்த்திய புலிகளே அதிகம். உண்மையான அக்கறையில் உதவி செய்பவர் மிகச்சிலர்.

  //நடைமுறையில் இது போன்ற வரையறைகளை ஆண்களால் ரீச் செய்ய முடியாது என்பதால், ரமணி சந்திரனின் கைட் லைன்படி நிறைய பேர் செலக்ட் ஆக மாட்டார்கள். சுப்பீரியர் பெர்சொனலிட்டிதான் விருப்பமாக இருக்கும்.//

  நீங்களே ஒத்துக் கொண்டுள்ளீர்கள். இந்த story line எல்லாம் impractical என்று. அது ஆணுக்காக இருக்கட்டும் அல்லது பெண்ணுக்காகவே இருக்கட்டும். பின்னர் கதைகளில் வருவது போல் superior personality, நடைமுறையில் சாத்தியமாகுமா?? இந்த மாதிரி நடந்துகொண்டாலும், ஏறெடுத்து பதிலுக்கு பதில் பேசினாலும் முறுவலை மட்டும் வெளியிடும் ஆண்களின் தோற்றம் உண்மையில் எவ்வளவு நம்மால் காண முடியும்? கதாநாயகியாக இருந்தால் மட்டுமே சில விஷயம் சாத்தியப்படும் அல்லது, கதாநாயகியாக இருப்பதால் மட்டுமே அந்த பொறுமை எனில், உங்களின் கடைசி வரிகள் உங்களுக்கே முரணானவையாக இருக்கிறதே சகோ???

  ReplyDelete
 6. அன்னு சிஸ்டர், எப்படி இருக்கீங்க?

  ரமணி சந்திரன் படித்ததில்லை. உங்க பதிவைப் பாத்த பிறகு படிக்கணும்னு தோணலை.

  ReplyDelete
 7. Hello,
  I also read few of her stories and found that they were not practical for every day life and stopped reading her books

  ReplyDelete
 8. What do you expect, this will be the story line in all the stories, since they are all "refurbished" Mills & Boon Romance books!. Easy recipe: Take a Mills & Boon, rename the characters and alter the location!, Voila, you have a Ramani chandran!!

  ReplyDelete
 9. சின்ன வயசில அனுராதா ரமனன் ,வாஸந்தி , ரமனி சந்திரன் , சிவ சங்கரி இப்படின்னு (( நிறைய பேரை போட்டா பக்கம் தாங்காது )) பலப்பேரோட நாவல்களை படிச்சிருக்கேன் இதுக்கென ஒரு ரசிகர் மன்றமே அப்போது இருந்துச்சி .
  அப்போது டீவி தமிழ் சேனல்கள் இல்லை. இரெண்டொரு ரேடியோக்கள்தான் . அபூர்வமா சில நேரம் இலங்கை ரேடியோ எடுக்கும் (பி எச் அப்துல் ஹமீத் வாய்ஸுக்காக கேட்பதுண்டு )

  நாவல்களை விட்டா வேர வழி இல்லை .சுபா , ராஜேந்திரகுமார் , ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள் மட்டுமே டைம் பாஸ் . இப்போ ஏகப்பட்ட மீடியாக்கள் வந்ததால அவர்களை பிச்சி பீஸாக்குகிறோம் அவ்வளவுதான் :-))

  ## ஆஹா... உங்களுக்கு நாவல் படிக்க நேரம் கிடைக்குதா ...ஹி..ஹி.. அதான் இந்த கொல வெறி :-)))))))))))))))))))))))

  // முன் குறிப்பு - முதலில் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ கதையை மட்டுமாவது படித்து விட்டு வாருங்கள்//

  pdf கிடைச்சா லிங்க் பிஸீஸ் :-)))))))))))

  ReplyDelete
 10. //பாலியல் தொந்தர்வுகளும், அராஜகங்களும் அதிகரித்துள்ள தற்போதைய வாழ்க்கைச்சூழலில் அதை சட்டென எதிர்க்கும், துணிந்து நிற்கும் பெண்களல்லவோ ஹீரோயினாக வேண்டும்?? என்ன சொல்ல... நம் சகிப்புத்தன்மையை மெச்ச ஆளில்லை போங்கள்......!!!!//

  உதாரணத்திற்கு....
  கதாநாயகிகள் ஆபத்தில் இருக்கும்பொழுது கதாநாயகர்கள் வந்து காப்பாற்றுவது போலவே இருந்த காலகட்டம் மாறி .... லேடி சூப்பர் ஸ்டாராக விஜயசாந்தி வந்து அசத்தியபோது கைதட்டல் வாங்க தானெ செய்தது.... இன்னும் சொல்லப்போனால் ஆணை விட பெண்ணுக்கே சக்தி அதிகம் என விஞ்ஞானம் சொல்கிறது... அதை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் தனது பெண் பிள்ளைகளை தற்காப்புகலைகளை கற்க ஊக்குவித்து உதவ வேண்டும் .. தற்காப்புகலை கற்றவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாகவே இருக்கும்.... அப்படி வளர்த்தாலே நீங்கள் சொன்னது போல் அனைவரும் ஹீரோயின் தான்... மன்னிக்கவும் இது முழுபதிவுக்கான கருத்து அல்ல நீங்கள் கடைசியாக சொன்ன வரிகளுக்கான கருத்து ... உங்களுடைய ஆதங்கம் வரவேற்க்க தக்கதே... வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...