Showing posts with label கவிதை. Show all posts

வியர்க்காத மனம்...


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வேர் பிடிக்கக் கொஞ்சம்
வெப்பக்காற்றையும்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்

சங்கீதம் 3
============
எனது சொற்கள்
மண்ணின் சொற்களாய் இருந்த நாளில்
நான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
சினத்தின் சொற்களாய் இருந்த நாளில்
நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்
நான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
தேனாய் மாறியபோதோ
ஈக்கள்
என் இதழ்களை மூடின.

| மஹ்மூத் தர்வீஷ்
| பலஸ்தீனக் கவிதைகள்
| அடையாளம் பதிப்பகம்

தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்


.
தந்தையே
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை

.
தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்
கல் எறிகின்றனர்
தூஷிக்கின்றனர்
நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்
உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்
.
தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?
என்னால் அவர்கள் எதை இழந்தனர்?
.
நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?
.
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா?
நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும்
என்முன் முழந்தாளிட்டனவே
.
.
| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
‪#‎மஹ்மூத்_‬ தர்வீஷ்
‪#‎அடையாளம்_பதிப்பகம்‬

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..



முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம். இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான் சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...) க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி...!

சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத, போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.

எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது. அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும் பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும் அடங்கியுள்ளது.

முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த் தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை, இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும், தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய் வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ, கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப் பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.

தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக் காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும் துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும் உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம் என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின் சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன். நடக்கக்கூடியதா??

பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன. வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில் மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம் மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம் பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல.. அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.

முடிவாய் இரு கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்.. //இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும் காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும் உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின் தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய் இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது. புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள் இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின் வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும் அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது குறித்த ஒரு கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம் கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.

மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!

பாவத்துணிகள்...


இயேசுவை அறைந்தவர்கள்..
ஏதோ ஒரு ஆணியில்
அறைந்திருக்கலாம்
என்னையும்,
அத்தனை பேரின்
பாவத்திற்காகவும்
மரித்த நீ, கொஞ்சமாய்
மரித்திருக்கலாம்
என் முட்டாள்தனங்களுக்காகவும்..
குருடரையெல்லாம்
காண வைத்தாயாம்..
முடவரை
நடக்கவைத்தாயாமே..
இதயம் இறந்தவர்களை
என்ன செய்திருப்பாய்
நீ..?
அகிலத்திற்கே
அப்பத்தை பகிர்ந்தளித்த
உனக்குமே
போர்த்தக்கிடைத்தது
அத்துணை பேரின்
பாவத்துணிகள் தான்..
பாவம் செய்தவள் மீது
கல்லெறிய
பாவமே செய்யாதவர்களை
அழைத்தாயாமே..
இன்றைக்கு
இருந்திருந்தால்
கற்களிலும்
பெருந்தொடக்கில்லாதவற்றைத்
தேடியிருப்பாய் நீ..
தேவனே..
தேவனே..
ஏன் எனைக் கை விட்டீர்
என்றா கதறுகிறாய்..
உனக்குமே தெரியவில்லை
போ....!
அற்பர்கள் மட்டுமின்றி
ஆலயங்களும்
பிசுபிசுப்பில்
மிதந்து கொண்டிருக்கிறதென..
‪#‎Deepதீ

அது ஒரு கனாக்காலம்...


.
அப்பாவின் வெஸ்பா வருவதற்குள்
பள்ளிக்கு எதிரில் இருக்கும் நூலகத்தில் நுழைந்து
புத்தகப் பாற்கடலில்
தொலைந்து போனதொரு
கனாக்காலம்....

.
அடுத்தாற்போல் இருக்கும் பள்ளிவாசலில்
தென்னைமரங்கள் வழியோடி
ஹௌழில் மீன்களுக்கு
பொரியை வாரி
இறைத்ததொரு
கனாக்காலம்....

.
மூடியிருக்கும் ரயில்வே கேட்டுக்குள் புகுந்தும்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தும்
இரு கைகள் விரித்தபடி,
இரு கண்கள் மூடியபடி
இரு கால்களையும் சமணமிட்டு
இரு தரப்பையும் கண்களில்
அள்ளிக்கொண்டு
சைக்கிளில் கல்விச்சாலைக்கு
சிட்டாய்ப் பறந்ததொரு
கனாக்காலம்....

.
சுடும் நவாப்பழத்தையும்
சுடாத வேப்பம்பழத்தையும்
பாவாடையில் கட்டிக்கொண்டு
ஆகப்பெரும் சொத்தாக
பாவித்ததொரு
கனாக்காலம்...

.
மழைக்கும் முன்னரே கிழிந்து நிற்கும்
நோட்டுப்புத்தகங்களை
மழை நீரில் கப்பலாக்க வேண்டி
இன்னும் கிழித்ததொரு
கனாக்காலம்...

.
நாக்கில் தடவி எண்ணிய நோட்டுக்களும்,
கடையிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும்
ஆலாய்ப்பறந்து மூக்கினை உள்விட்டு உள்வாங்கிய
புத்தம்புது பாடப்புத்தகங்களும்,
இம்முறை Camelஆ, Camlinஆ,, Natrajஆ, Foreignஆ
என அங்கலாய்க்க வைத்த
ஜாமெட்ரி பாக்ஸ்களும்,
தொட்டால் அப்பும் எண்ணெயில் மூழ்கிய
இரட்டைப் பின்னல்களும்,
குழலிலேயே மலர்ந்ததோ எனும் அழகில்
பூத்துக்குலுங்கிய ஜாதிமல்லியும், டிசம்பர்களும்
நிறைந்தும் நிறையாத நினைவுகளைப் பரிசளித்ததொரு
கனாக்காலம்...

.
நகர்கின்ற இயந்திரவாழ்வில்
இனிக்கும் காயங்களாய்
இழந்த சுகங்களை இன்னும் இன்னும்
நினைவுக்கூடுகளில்
அள்ளி இறைத்தபடி
பொங்கிக்கொண்டே இருக்கின்றது
எந்தன் கனாக்காலம்....

.
இறந்தது மட்டுமா....
இன்னும் வர வேண்டியதுமே
அப்படித்தான் எனச்
சிரித்தபடி நகர்கிறது
வாழ்வெனும்
கனாக்காலம்.....


#‎அது_ஒரு__கனா_காலம்‬
‪#‎சிறகுகள்‬ குழுமத்திற்காக...
‪#‎நான்‬

பல்லிடுக்கில் போராளிகள்...


.
கற்களுக்கு அஞ்சி
தோட்டாக்களுடன் கைகுலுக்குகிறோம்

.
காயங்களுக்கு அஞ்சி
கொலைகளை முத்தமிடுகிறோம்

.
விழிகளைச் சந்திக்க
திராணியற்று
வேஷங்களை
மேடையேற்றுகிறோம்

.
விரியும் முன்
சுருளும் மலர்களை
குப்பைக்கூடையின் உள்ளே
கசங்கிய காகிதமாய்ப்
புதைக்கிறோம்

.
சுயத்தை உள்ளங்களில்
பூட்டி வைத்து
பல்லிடுக்கில் போராளிகளாய்
கொக்கரிக்கிறோம்

.
எம்மவர் யாருமில்லையே
கிசுகிசுத்துக்கொள்கிறோம்

.
இறப்பும் இழப்பும்
எண்களாகின்றன

.
நரிகளை
இறையாக்குகிறோம்.

.
ஆடுகள்
இரையாகின்றன.



.
#‎நான்‬
‪#‎Thoughts‬ over ‪#‎Palestine

இரண்டாம் ஜாமத்துக் கதை | கவிஞர் சல்மா

.
குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
 

என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான் 
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைத்தொகுப்பு

-முகநூலில் படித்தது.

எனக்காக நீங்கள் பேசுவீர்கள்தானே??

இது டீஸ்டாவிற்காக -- ஸலீல் த்ரிபாதியிடமிருந்து
-------------------------------------------------------------------------------------------
டீஸ்டாவிற்கும்,
இந்தியாவை இந்தியாவாக
நிலைபெறச் செய்ய அரும்பாடு படும்
ஆன்மாக்களுக்காகவும்...
===========================


.
முதலில் அவர்கள் சஞ்சீவ்பட்டின் பின் சென்றார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் போலீஸ் அல்லவே.


பின் ஆஸாராம் வழக்கின் சாட்சிகள்
ஒவ்வொருவராய் மாண்டு போனார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் எந்த துறவியின் சீடனும் அல்லவே.

பின் வியாபம் வழக்கின் சாட்சிகளும்
காணாமல் போக ஆரம்பித்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் மத்தியப் பிரதேசத்திலா வசிக்கின்றேன்??

பின்னர் அவர்கள் மாயா கோத்னானியை
பெயிலில் விட்டார்கள்,
நான் எதுவும் கூறவில்லை..
அந்தப் பெண்மணி என்னை எதுவும் செய்ததில்லையே.

பின்னர் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருந்த
ஒவ்வொரு ஹிந்துவின் கோப்பும் பின்வாங்க ஆரம்பித்தது...
நான் எதுவும் கூறவில்லை..
ஹிந்துக்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லரே,
பின் அவர்கள் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்??

பின் அவர்கள் மாநிலத்தில் மாட்டுக்கறியை தடை செய்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
சிவப்பிறைச்சி உடலுக்கு உகந்ததல்ல.... தெரியும்தானே??

பின்னர் அவர்கள் ‘வீடு திரும்புதல்’ என கூச்சலிட்டார்கள்...
பிரதமர் அவ்வப்போது இந்தியாவிற்கே திரும்பி வருவதைத்தான்
அப்படிக் கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

பின்னர் அவர்கள் க்ரீன்பீஸின் வங்கிக்கணக்குகளை
உறையச் செய்தார்கள்...
நான் நினைத்துக்கொண்டேன்....
இந்தியா வளர வேண்டியுள்ளது அல்லவா,
க்ரீன்பீஸினால் இந்திய வளர்ச்சி
தடைபட அல்லவா செய்கின்றது??

பின்னர் அவர்கள் பிரியா பிள்ளை
விமானமேறுவதிலிருந்தும் தடுத்தார்கள்...
நான் நினைத்தேன்...
அஹ்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இந்தியாவிற்கு எதிராகப் பேச அவள்
ஏன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டா செடல்வாதை
கைது செய்ய முனைந்தார்கள்...
நான் அதைக் கண்காணாது இருந்து விட்டேன்...
உயர் நீதி மன்றமே, அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறிவிட்டதுதானே...
பின் நாம் ஏன் வருந்த வேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டாவின் வீட்டை ரெய்டு செய்தார்கள்...
நிச்சயம் அவளிடம் மறைப்பதற்கான
ஏதோ ஒன்று இருக்கின்றது...
இல்லையென்றால் ஏன் அவள்
எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை?????

என்றேனும் ஓர் நாள்,
அவர்கள் எனக்காகவும் வரக்கூடும்,
அவர்கள் சொல்கிறார்கள்....

ஹ ஹா..
அவர்கள் சொல்வது
நகைப்புக்குரியது;
இந்தியா,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் அல்லவா...
இதொன்றும் ஆதிக்க சக்திகளின்
கைப்பாவைக் குடியரசா என்ன??

நான் தவறாது வரி
கட்டுகிறேன்...
ஆதார் அட்டையும்
என்னிடம் உண்டு...
நாள் தவறாமல்
யோகாவும்
செய்பவன்.

ஆனாலும்,
அவர்கள் வந்தால்,
எனக்காக நீங்கள்
பேசுவீர்கள்தானே??
.
 8/2/2015

This is a translation of an English poem dedicated to Teesta Setelvad. 

புன்னகைகள்

 
 
புன்னகைகள்
புரியப்படுகின்றன

வாழ்வாக,
சாபமாக,

துயரமாக,
சுமையாக,

புறக்கணிப்பாக,
கரிசனமிக்கதாக,

அன்பின் விளைவாக,
அலட்சியத்தின் பரிசாக,

சொல்ல ஏதுவுமில்லா
தருணங்களில்
மௌனத்தின்
சாவியாக,

வெறுமையாக,
பசுமையாக,

ஏதேனும் ஓர் வடிவைத் தாங்கியபடி
புன்னகைகள்
புரியப்படத்தான் செய்கின்றன.

வறண்ட காணியின்
வேரற்ற பெருமூச்சாய்
வெளிப்படும் ஒரு புன்னகை -

ஈரம் தேடும்
பிஞ்சுக்கண்களுக்கு
வாழ்வின் அர்த்தத்தை
மீட்டுத் தரும் என்றால்,

விட்டுச் செல்வோமே
வெறுமனே ஓர்
புன்னகையை...
 
# Deepதீ

நீ - நான் - மௌனம்.



வார்த்தைகள்
ஏதுமற்ற
அலங்காரங்களால்
நிறைந்து போகிறது
உன் மௌனம்.

தானல்லாத
தன்னை
எதிர்கொள்ள இயலாப்
பெருவெளியில்
தோல்வியுறுகின்றது
என் மௌனம்.

சுயமெனும்
கோரப்பிடியில்
மௌனத்தின்
ஆயுதங்களை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறோம்
நாம்.

நேசம்,
காற்றோடு
காற்றாகின்றது...


#Deepதீ

படம் உதவி - கூகுள்

இதமாய்... இதமாய்...


தீயின்
கருநாக்கு
தழுவி
நிற்கின்றது.

கண்ணீரின்
ஆழிப்பெருவலை
மூச்சை உள்ளடக்கும்
பெருமுயற்சியில்
களைக்கின்றது.

மாயையின்
பெருங்குரல்கள்
செவியை அடைத்தபடி...

உண்மையின்
உலர்நாக்கு
சப்தத்தின் முகவரியைத்
தொலைத்தபடி...

யுகங்கள் முழுதும்
அக்கினிக்கு
தாரைவார்த்து
தொலைந்து போகின்றேன்
நான்...
அணுஅணுவாய்,
செதில் செதிலாய்,

சாம்பலாய்ச் சரிந்தேன்
இனி
துயரில்லை,
துன்பமில்லை,
என இன்புறும்
வேளையில்,

மீண்டும்
வருகின்றாய்
உன் பிஞ்சு விரல்களால்
மீட்டு என்னை....

இரக்கமற்ற இவ்வுலகிற்கு
இதமாய்....
இதமாய்...

#Deepதீ

வாழ்வென்னும் நதி....


கூழாங்கற்களைத் துழாவிச் செல்லும்
நதி போல் நகர்கிறது வாழ்வு;

இறந்த காலத்தையும்
இறந்து கொண்டிருக்கும் காலத்தையும்
தழுவித் தழுவி
மெய் மறந்தவாறே...

நீள் வானத்தின்
நீலத்தை போர்த்தியவாறு
உறங்கிப் போகின்றன
நதியின் மீன்கள்;

கல் விழும் சப்தமும்
எழாமலே உறங்கும்
கனமான நிசப்தத்துடன்
கை கோர்த்தவாறே....

இக்கரையில்
நின்று கொண்டுள்ளேன் நான்,
சிப்பிகளையும் முத்துக்களையும்
மணலோடு மணலாக்கி விட்டு
உடைந்து போன ஓடுகளையும்
செல்லரித்துப் போன
சங்குகளையும்
காற்சட்டையின் பாக்கெட்டில்
நிரப்பியவாறும்
பனி விலகும் முன்
பறித்த இளம்புல்லைப்
போல் மிளிரும்
புன்னகையோடும்;
பட்டாம்பூச்சிகளை
கண்களில்
சிறைபிடித்தவாறு...

எந்நேரமும் வரக்கூடும்
அந்தப் படகோட்டி;
நேற்றைய தினம் போல
அந்தி சாயும் வரை
தரிசனம் தராமலே
போபவனல்ல அவன்;
அதற்கும் முந்தைய தினம் போல
இருள் கவியும் வரை
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடுபவனும் அல்ல;
எந்நேரமும் வரக்கூடும்,

கிழிந்த சட்டையிலிருந்து
சிதறிக்கொண்டிருக்கும்
ஒரு புன்னகையை
சிநேகத்துடன் எனக்காகவும்
கொண்டு வந்துகொண்டிருக்கக்கூடும்;

இன்னும் காத்திருக்கிறேன்...
அவனுக்குத் தெரியும்
நான்
தினமும் காத்திருப்பது;

நிலவிலும் பகலிலும்
கசகசவென ஈரம் ஒட்டிக்கொள்ளும்
வியர்வையிலும்
குளிரிலும்
என்னுடைய தவம் கலையாமலே
காத்திருப்பேன்
எனப் புரிந்தவன் அவன்;

உன்னைச் சந்திப்பதில்
என்னை விடவும்
ஆனந்தம் கொள்வது
அவனாகத்தான் இருக்கக்கூடும்;
என்றேனும் கேட்கக்கூடும்,
அவனும்
உன் பெயரை,
உன் இருப்பிடத்தை,
உன் இருப்பைப் பற்றி;

எனினும்
பழங்களைப் பறிக்காமலே
தோட்டக்காரனிடம் சிக்கிக்கொண்ட
ஊமை போல்
கரை கடந்து
அதிர்கிறது
என் மௌனம்;

அத்துவானக் காட்டில்
நனைந்த இறக்கைகளை
உதறும் குருவி போல்
நடுங்குகின்றது
என் மனம்;

உன்னைப் பற்றிய
எல்லாமும்
என்னுள் நிறைந்து
போயுள்ளது;
நீயாகிப் போயுள்ளேன்
நான்;

உன்னைச் சந்திப்பதை விடவும்
உன்னைப் பாதுகாப்பது
அதி முக்கியமாகிப் போகின்றது எனக்கு;
என்றைக்கும் போல
இன்றைக்கும்
விரைந்து
வீடு திரும்புகின்றேன்;

அலைகளில்
மோதியவாறே
உரக்கப் பாடி வரும்
படகோட்டியின் பாடல்
நெஞ்சை வருடுகின்றது;

#Deepதீ

வலிகள் இன்னும் பாக்கியுள்ளது...


மயானத்தைக் கடந்து
வந்திருக்கின்றேன்....

நான்
மரணித்த வாசனை
இன்னும்
மிச்சமிருக்கின்றது காற்றில்....

மனித வாசனையை
விடவும்
மரித்த வாசனையே
மிகப்
பழகிப்போன ஒன்று....
=========================
தேடும்போதெல்லாம்
தென்படாத
அமைதி,

அலையிலா
ஆழ்கடலாய்
என்னைச் சூழ்ந்துள்ளது
என்
மரணத்தின் பின்....
==========================
வாருங்கள்
யாரேனும்....

இன்னும்
அத்தியாயங்கள்
பாக்கியிருக்கின்றது
வலிகளை
மையிலிட்டு நிரப்ப...
#Deepதீ

எதையுமே..... எதையுமே...



எதையுமே எண்ணாத...
எதையுமே எதிர்பாராத...

எதையுமே ஏற்காத...
எதையுமே மறுக்காத...

எதையுமே வெறுக்காத...
எதையுமே விரும்பாத...

எதையுமே தேடாத...
எதையுமே தொலைக்காத...

எதையுமே தூண்டாத...
எதையுமே தீண்டாத...

எதையுமே அண்மிக்காத...
எதையுமே அகற்றாத...

எதையுமே உள்வாங்காத...
எதையுமே வெளிக்காட்டாத...

இருப்பு ஒன்றைத் தேடுகிறேன்,
அய்யன்மீர்...

கண்டெடுத்தால்
கூப்பிட்டுச் சொல்லுங்கள்
எனக்கு.

எல்லோரிடமும்,
எல்லாவிடமும்,
எப்பொழுதும்
நேசம் கொள்ளும்
பாழாய்ப்போன மனதை
சற்றே
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கின்றது
அதுவரை,
காயங்களோடும்,
பாவங்களோடும்,
வாழப்பிறந்தவள்
நீ என!

#Deepதீ

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை...


பழைய பதிவுல நம்மளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைன்னு பட்டம் தந்ததா சொன்னதும் ஒரே மயிலு மேல மயிலு (சரி...சரி....மேல மேல...) சரி, நம்மளை பத்தி இன்னும் சரியாத் தெரியலே, சரியா புரிய வெக்கணும்னுதான் இந்த பதிவு. சின்னதுலர்ந்தே தமிழ்னா ரெம்ப இஷ்டம். எங்க தாத்தா உயிரோட இருந்தவரை தமிழ்ல பேசினா அடிதான் விழும், அதனாலேயே என்னமோ தமிழ் மேல ஒருதலைக் காதல் வளர்ந்துட்டே போயிடுச்சு. அது இன்னமும் தீரலை. ஆனா எங்க வூட்டுக்காரருக்கு தமிழ்னாலே அலர்ஜி. அவர் ஒரியாக்காரர். ஆனா அவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினச்சு எல்லாம் எதும் பேச முடியாது. சரியான சமயத்துல தமிழ்லயே பதில் தந்து நம்மளை கவுத்திடுவார். அதனால ஜாக்கிரதையா இருக்கோணும். சரி, நம்ம பட்டத்தை பற்றி பேசலாம். அதான் சொன்னேனே சின்னதுலர்ந்தே தமிழ்மேல ஒரு 'இது'ன்னு. அதுல எங்க படிஅம்மி, அதாவது எங்க பெரியம்மா, அப்பாவோட சின்ன அண்ணன் வீட்டுக்கு போனா என்னையும் என் தமிழையும் கலாய்ச்சுகிட்டே இருப்பாங்க.

அப்படி ஒரு நாள் நான் அவங்க வீட்ல வெளாண்டுட்டு இருக்கறப்ப எங்க பெரியப்பா பையனும், பெரியம்மாவும் சேர்ந்து, "உனக்குதான் தமிழ் நல்லா வருதே, ஒரு கவிதை சொல்லு"ன்னாங்க ஏற்கனவே எங்க தாத்தாவால வீட்ல தமிழ் பேச முடியாத சுனாமில வருந்தி இருந்த மனசுக்கு அவங்க கேட்டதும் தெம்பா போச்சு. அப்ப நான் 4வது படிக்கறேன். அவங்க வீடு அப்போ செட்டிநாட்டு ஸ்டைல்ல தொட்டிவீடும்பாங்களே அப்படி இருந்தது. அங்க இருந்த தூணையெல்லாம் படத்துல காட்டற பனைமரமா எண்ணி, ஒரு சோலோ ஹீரோயின் ரேஞ்சுக்கு பாடினேன். அந்த பாட்டைப் பார்த்து அசந்து போயிதான் எங்கண்ணன் (பெரிம்மா பையன்) எனக்கு 'கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை'ன்னு பட்டம் கொடுத்தார். சரி, சரி அப்படி அது என்ன பாட்டுன்னு கேக்கற சத்தம் கேக்குது. இதோ உங்களுக்காக மறுபடியும் (பாடலை... எழுதறேன்)

இருண்ட காட்டுக்குள்
அடர்ந்த மரங்கள் நடுவே
தனியாய் திரிபவனே
நீ யார் நீ யார் நீ யார்


ஆனா இவ்வளவு புதிர் வெச்சு பாடியும் அது பேனைப் பத்திய பாட்டுதான்னு எங்கண்ணனுக்கு தெரிஞ்சு போச்சுன்னா பாருங்களேன். என்ன எல்லாரும் அசந்து போயிருப்பீங்களே...ஜில்லுன்னு கொஞ்சம் எளனீ குடிங்க. நெஞ்சு நனையும். அப்புறமா ஓட்டு போடுங்க. ஆனால், என் கவிதை எழுதற ஆர்வம் நிக்கவே இல்லை. தஞ்சாவூர்ல வல்லத்துல டிப்ளமா படிக்கறப்ப ஒரு கவிதை எழுதி நான் அனுப்ப அதுக்கு பரிசும் வந்துச்சு (இப்ப என்ன சொல்றீங்க...இப்ப என்ன சொல்றீங்க...) ஆனா பரிசு எவ்வளவுன்னு தெரியாமலே ட்ரீட் வெச்சு 300 ரூபா காலி பண்ணிட்டேன். ஆனா பரிசுன்னு மணி‍ஆர்டர்ல வந்தது வெறும் 10ரூபாய். ஹ்ம்ம்....வளரும் கவிஞர்களை மனசாற வாழ்த்த தெரியாத கஞ்சாம்பெட்டின்னு நினச்சு விட்டுட்டேன். ரொம்ப நாள் எங்க வீட்ல குடும்ப மலர்ல வந்த அந்த பக்கத்தை லேமினேட் பண்ணி வெச்சிருந்தாங்கன்னா பாத்துக்குங்களேன். அந்த கவிதையும் வேணுமா? ஆனாலும் பாசக்கார பயலுவ. என்னமா வரி விடாம படிச்சுகிட்டே வராங்கன்னா பாரேன். இதான் அந்த கவிதை.

அன்று யார் வைத்த
முற்றுப் புள்ளியோ
இன்று இவள் நெற்றியில் பொட்டில்லை.


எப்புடி? நான் டிப்ளமா படிக்க தஞ்சாவூர் போனப்புறம், எங்க வூட்டு லகடபாண்டி ஒன்னு இருக்கே, என்ற தம்பி, அது நான் எழுதின கவிதையெல்லாம் தான் எழுதியதா ஸ்கூல்ல காட்டி தன்னோட கௌரவத்தை மேல ஏத்திகிடுச்சு. நானும் சரி நம்ம வூட்டுக்குதானே பெருமைன்னு மனசை கட்டுபடுத்திகிட்டேன். இப்ப இந்த கொசுவத்தி சுத்தினது எல்லாம் எதுக்காகன்னு கேக்கறீங்களா, எல்லாம் ஒரு ப்ளான்தான். அடுத்த பட்டம் தர்றதுக்கு இந்த வலையுலகத்தை ரெடி பண்ணனுமே அதுக்காகத்தான். எப்புடி?

நெருப்பு (கவிதைப் பகிர்வு)


அழகானது..
ஆபத்தானது..
ஆதிக்க சக்தி கொண்டது.

தீண்டுபவரையும்,
தூண்டுபவரையும்,
அணைப்பவரையும்,
ஆட்கொள்பவரையும்,
தயவின்றி,
தடையின்றி,
சுட்டெரிக்க வல்லது.

பிரகாசத்தையும்,
விகாரத்தையும்,
படைக்க வல்லது.

உபயோகிக்கப்படுவது;
வெறுக்கப்படுவது.

ஆராதிக்கப் படுவது;
அன்னியப்படுத்தப்படுவது.

எங்கெங்கிலும்
வெளிச்சத்தையும்
வெப்பத்தையும்
நீக்கமற நிலைத்திட்டாலும்,

உள்ளிலும்
வெளியிலும்
வெறுமையின் சுவடோடே
வசிப்பது.

: Deepதீ


# படித்ததில் பிடித்தது 

தலைப்பில்லா கவிதை....



உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...

உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...

அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....

இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...

கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...

இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....




..................
..........................
.............................
.........................................



கேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...



இரவினில்தான் கவிதை வரும் என்று
ஜன்னலருகில் அமர்ந்தபோதுதான்
தெரிந்தது, வானத்தின் இருள்.
அமாவாசையா நீ?

க‌ன்னே, மனியே
என்றெல்லாம் கவிதை
எளுதலாம் என்றால்
கனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்
தமிழாசிரியத் தந்தை

சைட்டடிக்க சைக்கிளே என்று
எட்டி மிதிக்கும் வேளையில்
நினைவில் வந்து நின்றது - உன்
அண்ணனின் பூத உடல்

கொலுசின் சத்தத்தில்
என்னை உணர்வாய் என்று
வாங்கிட விளைகையில்
எனக்கு முன் கியூவில்
உஷா உதூப்பாய் உன் தாய்

தூது செல் செல்லக்கிளியே
என்று உன் தங்கையை தேடினால்
கலர் கலராய் பெல்ட்டை காட்டுகிறது கராத்தே

அடச்சே...
வந்து வாய்க்குது பார்
எனக்குன்னு!!


.