கடலும், சுவரும்....

Friday, December 19, 2014 Anisha Yunus 0 Comments

.
கடல் அரித்துக் கொண்டேயிருந்தது. சுனாமிக்குப் பிறகு ஏற்றியிருந்த கரைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து விட்டிருந்தன. மனங்களின் ஈரம் வறண்டது போல. ஏன் கடலுக்கும் கவிதைக்கும் இத்தனை ஆழமான உறவு.... ஏன்..
.
.
---------
போலாம்மாம்மா???
இருடா... இப்பத்தானே வந்தோம். கொஞ்சம் விளையாடேன். அப்புறமா போகலாம்.
.
.
-----------
போலாம்மா....
ஏன் போனும் போனும்ன்றே???? வீட்டில யார் இருக்கா.
இங்கயும் யாருமில்லயில்லம்மா....
.
.
------------
உடைகளைக் கவ்வியிருந்த மண்ணை உதறியபடியே எழுந்து நின்றேன். உற்சாகத்துடன் பொங்கி வந்த அலைகளை இன்னொருமுறை பார்த்துக் கொண்டேன்.
அலைகள் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் வந்தது போல் தெரிந்தன எனக்கு.
மௌன சுவர்கள், கம்பீரமும், திடமும் வாய்ந்த தந்தை போல் தெரிந்திருக்குமோ அவனுக்கு... தெரியவில்லை.
.
.
எதுவோ புரிந்தது.
எதுவும் புரியவில்லை.
நகர ஆரம்பித்தோம்.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

Sunday, June 29, 2014 Anisha Yunus 3 Comments


கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

பதில்: ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் இரண்டு மட்டுமே. உடற்பசி மற்றும் வயிற்றுப்பசி. இந்த இரண்டுமே பூர்த்தியாயிருக்கும் நிலையில் மனிதன் தன் நிலை மறந்தே வாழ்கிறான். சுற்றிலும் நிகழ்பவைகளோ, நிகழ்ந்தவைகளோ, நிகழக்கூடியவைகளோ, அவனின் கவனத்தை திசை திருப்புவதில்லை. இந்த இரண்டில் எது மட்டுப்பட்டாலும், மனிதனின் எதிர்வினைகள், மிகுந்த தாக்கத்தை அவனைச்சுற்றி எல்லா வகையிலும் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், இரண்டுமே மட்டுப் படும்போது, மனிதன், தன் நிலையறிந்து, வரம்புகள் அறிந்து, எண்ணங்களையும், இச்சைகளையும் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுகிறான்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக்வாவுடையோர்களாக ஆகலாம். (அல் குர்’ஆன்2:183)

என்கிறது குர்’ஆன். தக்வா என்றால்?? தக்வா என்றால் இறையச்சம்? இறையச்சம் என்பது எப்போது ஏற்படும், தன்னிலை அறிந்தவனுக்கு மட்டுமே இறையச்சமும், இறைத்திருப்தியைப் பெற வேண்டும் என்னும் வேட்கையும் ஏற்படும். அதைத்தான் மற்ற மார்க்கங்களும் மோட்சம் என்கின்றன. அதன் சூட்சுமம் என்ன, தன்னிலை அறிந்து, தன் வாழ்வின் பொருள் அறிந்து அதன் மேல் நற்செயல்கள் செய்ய முற்படல். அதுவே இறைவனை சென்றடையச் செய்யும்.

படைத்தவனுக்குத்தானே படைக்கப்பட்டவற்றின் பலமும், பலவீனமும் தெரியும்... அல்லவா?? எனவேதான் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட தவணையில் மீண்டும் மீண்டும் மனிதனை தன் நிலையறிய வைக்க ஒரு ஒழுக்கநிலையை கட்டாயமாக்கினான். வருடத்திற்கோர் முறை, ஒரு மாதம் முழுக்க, பகலில் இந்த இரண்டுப் பசியையும் அனுபவியுங்கள், இரண்டையும் நிரப்ப வேண்டாம், என நோன்பு நோற்கச் சொல்கிறான். இந்த மாதம் மட்டுமன்றி, திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களையும் நபிமொழி, நோன்பு நோற்கச் சொல்கிறது. 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.


நோன்பு, மானம் காக்கும் கேடயம் என்கிறது. சொல்வதற்கு மிக எளிதாகத் தெரியும் இந்த கட்டளை, அனுபவிப்பதற்கு எளிதானதல்ல. ஏன்??

எப்படி வயிற்றுக்கும் உடலுக்கும் உணவு தடுக்கப்படுகிறதோ, அதே போல் சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும், இறைவன் வரம்புகளை (எல்லா நாட்களிலுமே அவை வரம்புகளே எனினும்) இப்பொழுது இன்னும் மிகைப்படுத்துகிறான்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் நபிவழி கூறுகிறது. உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என்று இன்னுமோர் நபிமொழி கூறுகிறது.

சொல், செயல்களில் நிதானத்தையும், வரம்புகளையும் விழிப்புடன் கவனிக்கச் சொல்கிறான். சுற்றியிருக்கும் வறியவர்களை, வளம் / வலிமை குன்றியவர்களை கவனிக்கச் சொல்கிறான். இல்லாமை என்பதைப் புரியவைக்கிறான். இத்தகைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துவது என்பது மிக மிகப் பெரும் பரீட்சையாகும். சுய விருப்பத்தின் பேரிலான இச்சைகளுக்கும், புலன்களுக்கும் Vs இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதற்குமிடையேயான பரீட்சை. இத்தகைய பரீட்சையை ஒரு மாதம் முழுக்க தன் விருப்பத்தின் பேரிலேயே முஸ்லிம் மக்கள் செய்கிறார்கள். இந்த மாதம்தான் ரமதான் மாதம்.

இதே மாதத்தில்தான், இவ்வுலகின் இறுதி மனிதன் வரை கடைப்பிடிக்கக்கூடிய தனிமனித ஒழுங்கு, இறைபொருத்தம் தேடும் வழிகள், பிற்கால சமுதாயங்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள், சமூக / குடும்ப / தனி மனித / அரசியல் சார்ந்த / பொருளாதார சட்டங்கள் என எல்லாத்திசையிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் சட்டங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருக் குர்’ஆனும் அருளப்பெற்றது.

எப்படி விரதம் இருப்பதாலும், நீராகாரம், பழங்கள் போன்ற பத்திய உணவுகளை மட்டுமே உட்கொள்வதாலும் உடலிலிருக்கும் அசுத்தங்கள் / toxins வெளியேறிவிடும் என்பது மருத்துவ உண்மையோ, அதே போல்... இவ்வகையிலான புலன்களின் மீதான நோன்பு, மனித மனதினை, எண்ணங்களைத் தூய்மைப்படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

மாதம் முழுக்க பரீட்சை வைத்து, களைப்படைந்த மக்களுக்கு ரமதான் மாதம் முடிவுற்றதும், “ஈதுல் ஃபித்ர்” என்னும் பண்டிகை / ஓர் நாள் விழா / உற்சாகக்
கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படுகிறது... அதுவும், இறைவனைத் தொழுது நன்றி செலுத்தும் விதமாக.

உண்மையில், இந்தப் பரீட்சையை ஆழ்மனதிலிருந்து ஒரு உத்வேகத்துடன் செய்தவர்களுக்கு, இந்த விடை கூறல் - பெருநாள், மிகக் கனமானதாகவே இருக்கும். இல்லையா??

(இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள: http://www.satyamargam.com/islam/analysis/1018-1018.html)

.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

'மோ' டி குரூஸ்... அ.மார்க்ஸ் :: மக்களே இந்தியாவை மீட்டெடுங்கள் ஃபாஸிச சக்திகளிடமிருந்து....

Thursday, April 10, 2014 Anisha Yunus 0 Comments

April 10, 2014 at 2:09am
இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய
இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச இருந்தவர்களில் ஒருவர் இந்துத்துவ மேடைகளில் பேசித் திரிபவரும், அவர்களால் "நெய்தல் நெருப்பு" (!) என்றெல்லாம் காவடி
தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

மேடையில் அந்த நபர் குருஸ் உட்கார்ந்திருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. எனக்கு முன்பாக அவர் பேச அழைக்கப்பட்டார். அங்கு திரளாகக் கூடி இருந்த முஸ்லிம்களைப் பார்த்து "சாச்சாமார்களே, சாச்சிமார்களே.." என விளித்து அவர் பேசத் தொடங்கினார். அவர்கள் ஊரில் முஸ்லிம்களை அப்படித்தான் உறவு முறை சொல்லிக்
கூப்பிடுவார்களாம். அதிகம் பேசவில்லை. ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துவிட்டு அமர்ந்தார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில்
வேலை செய்து கொண்டிருந்த  அவர் ஒரு சூட் கேஸ்நிறைய பணத்தைச் சுமந்து கொண்டு மும்பையில் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம்.அவர் போய்த்தான் ஊழியர்களுக்கு ஊதியம் பிரித்து அளிக்கப்பட இருந்ததாம். அப்போது முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் அவர்களைத் தாக்கிக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த இந்துத்துவசிவசேனைக் கும்பல் ஒன்று குரூசை நோக்கி ஓடி வந்ததாம். மொழி தெரியாத இவர் அஞ்சி ஓடி ஒரு பெரிய சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடந்துள்ளார். அந்த வீதியில்முஸ்லிம் ஆண்கள் யாரும் இல்லை. கலவரக்காரர்களைக் கண்டு பயந்தோடி இருப்பார்கள் போல.அநேகமாக குரூஸ்  விவரித்த அந்தக் கலவரம் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் நடந்த வன்முறையாக இருக்கலாம்.

வன்முறையாளர்கள் அடுத்த இலக்கைத் தேடிப் போனபின் அங்கிருந்தமுஸ்லிம் பெண்கள் குரூசைத் தூக்கிக் காப்பாற்றியுள்ளனர். தண்னீர்ப் பற்றாக்குறை மிக்கஅப்பகுதியில் எல்லோர் வீட்டிலிருந்தும் குடங்களில் தண்னீரைக் கொண்டுவந்து ஊற்றி அவர்மீது படிந்திருந்த மலத்தை எல்லாம் கழுவி இருகிறார்கள். அன்று இரவு அவருக்குப் பாதுகாப்பும்
அளித்து காலையில் அவர் கொண்டு வந்திருந்த பணப் பெட்டியையும் கொடுத்து பத்திரமாக அனுப்பியுள்ளனர்அந்த முஸ்லிம் சாச்சிமார்கள்.

இதைச் சொல்லிவிட்டு அவர் இறங்கியபோது, என்ன இருந்தாலும் ஒருஎழுத்தாளன், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும். இந்துத்துவ மேடைகளில் தோன்றுவதாலேயே இவரை
இந்துத்துவவாதி எனக் கொள்ள வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன். அவர் மேடையை விட்டுஇறங்கும்போது ஒரு புன்முறுவலையும் பகிர்ந்து கொண்டேன்.
இன்று இந்த நபர் ஏன் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என எழுதியுள்ள
கட்டுரையைப் படித்தபோதுதான் அன்று சாச்சிமார்கள் இவர் மீது ஊற்றிய தண்ணீர் அவரது புறஉடல்மீதிருந்த அசிங்கங்களை மட்டுமே கழுவியுள்ளது என நினைத்துக் கொண்டேன்.

மோடி அடித்தளத்திலிருந்து வளர்ந்தவராம். வளர்ச்சியின் நாயகராம்.தீர்க்கதரிசியாம். "A revolutionary, bold and committed visionary ..."... அடப் பாவி.. அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள்இனி உம்மை "நெய்தலின் நெருப்பு" என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், "சிங்கம்,புலி, கரடி..." என்றெல்லாமும் கொண்டாடலாம்.

கன்னட முது பெரும் எழுத்தாளர், நவ்யா இயக்கத்தைத்தோற்றுவித்தவர், ஞானபீட விருது மட்டுமின்றி பத்ம பூஷன் விருதையும் பெற்றவர், கேரள மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த யு.ஆர், அனந்தமூர்த்தி அவர்கள்,"மோடி பிரதமரானால் நான் இந்த நாட்டில் வாழ மாட்டேன்" என அறிவித்துள்ளார்.அவர், கிரிஷ் கர்னாட் மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக இன்று பிரச்சாரம்செய்து கொண்டுள்ளனர்.
 
ஒரு 150 அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மோடியின் தலைமையில்  வரும் பாசிசக் கும்பலுக்கு  வாக்களிக்காதீர்கள் என வெளியிட்ட அறிக்கையை இரண்டு
நாட்களுக்கு முன் நான் இங்கு பகிர்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.

இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இப்படி ஒருஅரசியல்வாதிக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் களம் இறங்கியது கிடையாது. இன்று ஏன்இந்த மாற்றம்? மோடி என்கிற நபர் ஒரு வெறும் அரசியல்வாதி அல்ல. மோடி எனும் உருவில் இந்தியபாசிசம் இன்று முழுமை அடைகிறது. பெரு முதலாளியமும் பாசிசமும் பிரிக்க இயலாதவை என்பதுமுசோலினி அளித்த வாக்குமூலம். இது நாள் வரை இந்துத்துவம் எத்தனையோகொலைகளையும் வன்முறைகளையும்விதைத்திருந்தபோதும், வெறுப்பைக் கட்டமைத்தபோதும் அப்போதெல்லாம் பெரு முதலாளியம் அத்துடன் ஊடு பாவாய்க் கலந்ததில்லை. சற்று விலகியே இருந்திருக்கிறது. இன்று அந்த இணைவு ஏற்பட்டுள்ளது.  மோடி என்னும் வடிவில் அது நிகழ்துள்ளது. எழுத்தாளநெஞ்சங்கள் வெறுப்பை வெறுப்பவை. எனவேதான் இந்த எதிர்ப்பு.

இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு, ஆண்டுகள் பன்னிரண்டாகியும் இன்னும் 50,000க்கும் மேற்பட்டோர் தம் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலை இருந்தும்ஒரு அடையாளமாகவேனும் வருத்தம் தெரிவிக்காத ஒரு நெஞ்சையும், இத்தனைக்குப் பின்னும் முஸ்லிம்கள்அளித்த விருந்தொன்றில் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்த மனத்தையும்மோடியைத் தவிர நீங்கள் வேறு யாரிடம் காண முடியும்?

மரணதண்டனை குறித்து ஜெயமோகன் கக்கி இருந்தவிஷத்தைக் குறித்த என் பதிவைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார்: "ஒரு விரிவான பதிலைநீங்க ஜெயமோகனுக்கு எழுதுங்கள் சார்" என்னால் அது சாத்தியமில்லை எனச் சொன்னேன்.

ஜெயமோகனுக்கோ அல்லது ஜோ டி குருசுக்கோ என்னால்பதில் எழுத முடியாது. அவர்கள் எதையும் புதிதாகச் சொல்வதில்லை. எற்கனவே பலமுறை பதில்சொல்லப்பட்ட, விளக்கப்பட்ட பிரச்சினைகளைப் புதிது போலச் சொல்லும் பாசிச உத்தியைக் கடைபிடிப்பவர்கள்அவர்கள். குருசின் இந்தக் கட்டுரையைத் தான் (கீழே உள்ள பதிவில் உள்ளது) எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன அவர் புதிதாய்ச் சொல்லிவிட்டார்?மோடியை வளர்ச்சியின் நாயகர் என்பதற்கு இதுவரை London School of Economics பேராசிரியர்கள்முதல் நம் ஊர் பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் எல்லோருந்தான் பதில் சொல்லி விட்டனர்.முக நூலில்தான் எத்தனை கட்டுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்? இதற்கு மேல் நான் என்னசொல்லிவிடப் போகிறேன்? இதற்கு பதில் சொல்வதை விட ஒரு காமெடி பீசாகிற வேலை வேறென்ன இருக்கஇயலும்?

ஜெயமோகனின் மரணதண்டனைக் கட்டுரையை எடுத்து,அதில் மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். அப்போது தெரியும். இது எதுவும் புதிதல்ல என்பது. இந்தக் கேள்விகளைக் கேட்பவன் ஒன்று படு முட்டாளாகஇருக்கவேண்டும் அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். மரணதண்டனை இருந்தால் குற்றங்கள்குறைந்து விடும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் எனச் சொல்கிற மண்டைகளுடன் யார் முட்டிக்கொள்ள முடியும்?

ஜெயமோகன்   ஜோ டி குருஸ் இவர்களுக்கு முன்னுதாரணம் தமிழில்
இல்லை. இவர்கள் ஒரு புதிய பரிணாமம் ஒரு நோயின் அறிகுறி. இவர்கள் இலக்கிய மோடிகள்.

 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

என்ன நடக்கிறது எகிப்தில்?

Saturday, March 29, 2014 Anisha Yunus 1 Comments


529 முஸ்லிம் சகோதரர்களுக்கு, ஒரு போலீஸ் ஆஃபீசரை கொன்ற காரணம் காட்டி எகிப்தின் மின்யாவிலுள்ள கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்று
தூக்கு தண்டனையை உத்தரவிட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜனத்திரளை ஒன்றாக கொலை செய்யும் உத்தரவு இது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

அதையும் விட கவனிக்கத்தக்கது, வழக்கு நடந்த விதம், ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், 529 பேருக்காகவும் வாதாடவோ, எதிர்கருத்து வைக்கவோ யாரையும் நியமிக்காமலும், எந்த வித விசாரணையோ, கள ஆய்வோ செய்யாமலும் தீர்ப்பு கூறப்பட்ட விதம்.

இந்த 529 பேரில் பாதிப்பேர் அந்த சம்பவம் நடக்கும்போது ஜெயிலில் இருந்தனர் என்பதும், மீதிப்பேர் எகிப்திலேயே அப்போது இல்லை என்பது எத்தனை சுடும் நிஜமோ அத்தனையே நிஜம், கொல்லப்பட்ட போலீஸ் ஆஃபிசரின் மனைவி அரசு அலுவலகங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் ஃபோன், மெயில் என எல்லா விதத்திலும் தகவல் பரிமாற்றம் செய்து, என் கணவரைக் கொன்றவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், இந்த 529 பேரில் அவர்களில் ஒருவரும் இல்லை எனப் போராடியது.
பாவம், நீதிதேவதையின் கண்கள் மட்டுமல்ல, காதுகளும் அடைக்கப்பட்டிருந்ததுதான் கொடுமை!

இதில் உச்சகட்ட கொடுமை, 529 பேரில் இருவர் 17 வயதிற்கும் கீழானவர்கள். 17 வயதிற்கும் கீழானவர்களுக்கு செல்லுபடியாகும், சீர்திருத்தப் பள்ளியின் விதி இவர்களுக்கு அமுலாகவில்லை. அது சரி, சிறிய குற்றமா செய்துள்ளார்கள்???? ஆயுதம் தாங்கிய ஒரு போலீஸ் ஆஃபீசரை அனைவரின் கண்களுக்கும் முன் 529 பேரும் சுற்றி வளைத்து கொலை செய்வது என்பது எத்தனை பெரிய அராஜகம்...! இல்லையா???

ஏற்கனவே மிலிட்டரி ஆட்சி ஆரம்பித்த தினத்திலிருந்து 575 சிறுவர்களையும், சிறுமிகளையும் எகிப்து காரணமில்லாமல் கைது செய்துள்ளதும் இன்னும் பலரை கொன்றே ஒழித்ததும் இன்னும் சிலர் “காணாமல் போயிருப்பதும்” எகிப்தில் நடக்கும் ஜனநாயக் ஆட்சிக்கு!!!! ஒரு முன்மாதிரியாகும்.

இன் ஷா அல்லாஹ், இந்த 529 பேரின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த எகிப்தின் மேதகு முஃப்தி அல்லாம் அவர்களிடம் 10 நாட்கள் கெடு இருக்கின்றது. உலகநாடுகளும், அனைத்து நாடுகளின் முஸ்லிம் உலமாக்களும் இந்தக் கொடுமையான தண்டனைக்கு எதிர்ப்பு காட்டியிருக்கும் இவ்வேளையில் உங்களின் கருத்தும் மிக முக்கியமானது. இந்தத் தளத்தில் உள்ள “பெட்டிஷன்” வசதியைப் பயன்படுத்தியும், பகிர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

எதிராளிகளைக் கொன்றே ஆட்சியை நிலை நிறுத்தப் பார்ப்பதும், குர்’ஆன் - நபியவர்களின் வழியில் இஸ்லாமிய ஆட்சியை 60 வருடங்களுக்குப் பின்
சுவாசிக்க ஆரம்பித்த எகிப்தில் மீண்டும் இராணுவ அராஜக ஆட்சி நீடிக்காமல் இருக்க கை கொடுங்கள்.

அராஜகம் செய்பவர்களை விடவும், அராஜகமும், அநிதியும் வெற்றிக்கொடி நாட்டும்போது மௌனமாக இருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்படாதது. உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் இன் ஷா அல்லாஹ்.
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய லின்க் : http://bit.ly/P9RLQE


விரிவாகப் படிக்க:

  • https://www.middleeastmonitor.com/news/africa/10556-systematic-torture-of-children-in-egypt
  • https://www.middleeastmonitor.com/news/africa/10551-former-judge-slams-al-sisi-presidency-bid
  • http://www.nytimes.com/2014/03/28/opinion/529-reasons-to-doubt-egyptian-justice.html?partner=rssnyt&emc=rss&utm_medium=facebook&_r=0
  • http://www.reuters.com/article/2014/03/25/us-egypt-brotherhood-courts-un-idUSBREA2O0NO20140325

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்...

Wednesday, March 05, 2014 Anisha Yunus 42 Comments

சில நாட்கள் முன், கீழ்க்காணும் காணொளியைக் காண நேர்ந்தது. எத்தனை எத்தனை படிப்பினைகள்.... பாடங்கள்.... சுய பரிசோதனை செய்யத் தூண்டும் கேள்விக்கணைகள்.... ஆங்கிலத்திலும், என் சிற்றறிவால் நான் செய்த தமிழாக்கத்திலும் படித்து பயனடையுங்கள்... இன் ஷா அல்லாஹ், அந்த சகோதரருக்கும், அவர் போல் உடலால் பலவீனமாகவும், உள்ளத்தாலும், ஈமானாலும் வானுயர்ந்து நிற்கும் ஏனைய சகோதர சகோதரிகளுக்காகவும் து’ஆ செய்யுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.


-----------


-----------

2013 இறுதியில், ஃபோர்ட்வர்த், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குத்பாவிற்காக சென்றிருந்தேன். ஒரே மாகாணத்தில் இருந்தாலும், 4,5 வருடங்களாக அந்த மஸ்ஜிதிற்கு போக இயலாமல் இருந்தது. அன்றைய தினம் குத்பாவிற்காக என்னை அழைத்ததும், நான் ஒப்புக்கொண்டேன். அன்றைய குத்பாவின் தலைப்பு, “து’ஆ”.

குத்பா முடிவடைந்ததும், கூட்டத்திலிருந்த ஒரு எகிப்திய இளைஞன் என்னருகில் வந்து சொன்னார், “அல்லாஹ் என்னுடைய து’ஆவை இன்று ஒப்புக்கொண்டான்.”. நான் கேட்டேன், “உங்களின் து’ஆ என்ன?” அவரின் பதில், “ நௌமன் அலிகான் ராபர்ட் டெவிலாவை சந்திக்க வேண்டும் என்பதே என் து’ஆ”.

“ஒஹ்.... அப்படியா, நீங்கள்தான் அந்த ராபர்ட் டெவிலாவா...?”
“இல்லை... ராபர்ட் டெவிலா என்பது என் நண்பனின் பெயர்..”

எதிர்பாராத பதில் என்பதால், என்னுள் ராபர்ட் டெவிலாவைப் பற்றி அறியும் ஆர்வம் மிகைத்தது.

ராபர்ட் டெவிலா என்பவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞர். ஃபோர்ட்வர்த்திலிருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் ஓர் கிராமத்தின் விவசாயியாக வாழ்ந்தவர். வாலிப வயதடையும்போது ஏற்பட்ட ஓர் மரபணு நோயின் காரணமாக, கழுத்து முதல் கால் வரை செயலற்றுப் போனவர். வருடங்களாக மருத்துவமனையிலேயே வாசம் புரிபவர். மிக மிக வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே அடங்கிக்கிடக்கும் அந்த மருத்துவமனையில், முப்பதுகளிலேயே அங்கு காலம் தள்ள வந்தவர், ராபர்ட் டெவிலா மட்டுமே. அவர், அவரின் பெட், அவரின் ரூம். இதுவே கடந்த பத்து வருடமாக அவரின் வாழ்க்கையானது. கை கால்கள் முடங்கிய நிலையில், அவரின் பொழுது போக்கிற்காக, குரலோசையை உள்வாங்கி சேவை புரியும் ஒரு கணிணியை, அவரின் பெற்றோர் பரிசளித்திருந்தனர்.

ராபர்ட் டெவிலாவின் குடும்பம், மிக கட்டுக்கோப்பான, இறைபக்தியில் ஊன்றிய கிறிஸ்தவக் குடும்பம். வார இறுதியில் சர்ச் மினிஸ்டர் வந்து ராபர்ட்டுக்காக பிரேயர் செய்வது என்பது வழக்கமாக இருந்தது. ராபர்ட்டுக்கு ஒரு நெருங்கிய தோழர் இருந்தார். அவரின் ரூமில் இருந்த இன்னொரு படுக்கையின் சொந்தக்காரர். கல்லீரல் நோயினால் உடல் முழுதும் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்தவர். மருத்துவமனையில் ஆரம்பித்ததுதான் அவர்களின் நட்பும். நண்பர்கள் இருவரும் இறைவன் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கலந்தாய்வு செய்வதே பொழுதுபோக்காக இருந்தது.

இறைவன் நாட்டப்படி, ராப்ர்ட்டின் நண்பருக்கு கல்லீரல் கொடையாளி ஒருவர் கிடைக்கிறார். நண்பர் பிரகாசமடைகிறார், “ராபர்ட்... உன்னை மிகவும் மிஸ் செய்வேன். ஆனால் என்ன செய்ய, எனக்கு ஈரலை கொடை தர ஒருவர் கிடைத்து விட்டாரே.... ஆபரேஷன் ஆனதும் என் மருத்துவமனை காலம் முடிந்து விடும்” என மகிழ்கிறார்.  எனினும், இறைவனின் திட்டம் வேறாக இருந்தது. ஆபரேஷனின்போதே ராபர்ட்டின் நண்பர் உயிர் இழக்கிறார். அவரும் ஒரு கிறிஸ்தவர். எனவே, அவரின் இறப்புக்குப் பின், அவர் கழுத்தில் இருந்த ஒரு சிலுவையை, அந்த நண்பரின் சகோதரி, ராபர்ட்டுக்கு நினைவுப் பரிசாக அதனை அளிக்கிறார். ராபர்ட்டின் மருத்துவமனை பெட்டின் ஓரத்தில், நட்பின் நினைவுச் சின்னமாக சிலுவை மணி தொங்க விடப் படுகிறது.

அதன் பின்பும் ராபர்ட்டின் வாழ்க்கை எப்பொழுதும் போலவே இருக்கிறது. இயல்பிலேயே உற்சாகமான மனிதனான ராபர்ட்டின் வாழ்வு, அதே ரீதியில் தொடர்கிறது. சில நாட்கள் கழித்து, இரவு உறக்கத்தில் ராபர்ட் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு மனிதன் தோன்றி, தன் பெயர் முஹம்மத் என்கிறார். அதன் பின், இறந்து போன நண்பனின் சிலுவையை சுட்டிக்காட்டி, “இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிய நோக்கம், மக்கள் இறைத்தூதர்களை வழிபடவேண்டும் என்பதற்காக அல்ல. படைத்த இறைவனை வழிபடவேண்டும் என்பதற்காகவே. இயேசுநாதரும் ஒரு சாமானிய மனிதனே. அவர் கடைவீதியில் நடப்பவராகவும் இருந்தார்” என்கிறார். அத்துடன் அந்தக் கனவு நிறைவுறுகிறது.

காலையில் ராபர்ட்டின் முதல் வேலை, கூகிளில் ‘முஹம்மத் என்பவர் யார்’ என்னும் கேள்வியோடு ஆரம்பிக்கிறது. இஸ்லாத்தைப் பற்றி அறிகிறார். ஷஹாதத்தை முன்மொழிந்து இஸ்லாமியர் ஆகிறார். ராபர்ட்டின் அடுத்த தேவை குர்’ஆனை ஓதுவதாக இருந்தது. குர்’ஆன் ஓதிட அரபி அவசியம் என்பதால் இணைய வசதிகளை உபயோகித்து, எகிப்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரனுடன் ஸ்கைப் வழியாக அரபி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். ஆயிற்று. குர்’ஆனின் பத்து அத்தியாயங்கள் மனனமும் ஆகி விட்டது. அதன் பின்னும் ராபர்ட்டின் ஆர்வம் அடங்கவில்லை. புரிதல் இல்லாமலே குர்’ஆனை மனனம் செய்வதா என சிந்தித்த ராபர்ட், குர்’ஆனை அறிந்து படிக்கும் அடுத்த தேடலை ஆரம்பித்தார்.  “குர்’ஆனை புரிந்துகொள்வது எப்படி”.... கூகிளில் அடுத்த கேள்வி. கிடைத்த பதில்களில்,  உஸ்தாத் நௌமனின் குர்’ஆன் விளக்க வீடியோக்களும் இருக்கின்றன. ஒன்று விடாமல் உஸ்தாதின் அத்தனை வீடியோக்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்.

இதன் நடுவில், அதே மருத்துவமனையில் சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகள் செய்யும் ஒரு எகிப்தியனும் இருக்கிறார். அவ்வூரில் மஸ்ஜிதே இல்லாததாலும், நெருங்கிய மஸ்ஜித் என்பதே 50 மைல்களுக்கு அப்பால் இருந்ததாலும், அந்த எகிப்தியருக்கு தொழுகைகள் பேணுவது, இஸ்லாமிய கோட்பாடுகளுடன் வாழ்வது என்பதெல்லாம் கிட்டத்தட்ட மறந்த நிலையில் இருந்தார். இறைவனிடம் இருந்து மிகவும் தூரமாகி விட்டோமோ என்றெண்ணும்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிறிஸ்தவ தேவாலய வழிபாடுகளில் கலந்து கொள்வதே வாழ்வியல் நடைமுறையானது. ஒரு நாள் மருத்துவமனையில் வழக்கமான பணிகளைச் செய்தவாறு ராபர்ட்டின் அறையைக் கடக்கும்போது அறையிலிருந்து காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்கிறது, “வல் அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீ க்ஹுஸ்ர்...”

விரைந்து ராபர்ட்டின் அறைக்குச் சென்ற, அந்த எகிப்தியர் கேட்கிறார், “ராபர்ட்...  என்ன சத்தம் அது? நீ என்ன கேட்டுக்கொண்டிருக்கிறாய்...? ”

ராபர்ட்: “ ஒன்றுமில்லையே...  ...ஓதியது நான்தான். "

எகிப்தியர்... இப்போது.. சந்தேகத்துடன், “ராபர்ட், நீ முஸ்லிமா..?”
ராபர்ட்: “ஆம் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன்.”
எகிப்தியரின் ஆச்சரியத்திற்கு எல்லையற்றுப் போகிறது. அல்லாஹ்வின் ஹிதாயா, நேர்வழிக்கான பாதை எப்படி ஒருவரை வந்தடைகிறது..... கிறிஸ்தவத்தின் வழி நடக்கும் அமெரிக்க தேசத்தில், முஸ்லிம் மசூதி கூட அருகில் இல்லாத ஓர் கிராமத்தின் மருத்துவமனையில், தன் பெட்டின் ஓரத்தில் கிடக்கும் கிறிஸ்தவ சிலுவையைக் கூட தன் கையால் அப்புறப்படுத்த இயலாத நலிந்த உடலுடன் இருக்கும் ஒருவர், தானாக முன் வந்து, அல்லாஹ்வே என் இறைவன் என உறுதியேற்பது என்பதை எப்படிப் புரிவது. தெரியவில்லை அவருக்கு. அந்த எகிப்தியருக்கு, உஸ்தாத் நௌமனைப் பற்றி அறிமுகம் கொடுத்து அவரின் வீடியோக்களைப் பார்க்கச் சொல்லி ராபர்ட் கேட்டுக்கொள்கிறார்.
“உஸ்தாதை ஒருமுறையேனும் நேரில் பார்க்க ஆவல் கொள்கிறேன்....” இது ராபர்ட்.
“ கண்டிப்பாக, இறைவனிடம் இதற்காக து’ஆ செய்கிறேன்....” இது எகிப்தியர்.

அதே எகிப்தியர்தான், அன்றைய தினம் என்னை ஃபோர்ட்வர்த்தின் மஸ்ஜிதில் சந்தித்தது. ஜும்’ஆ முடிந்ததும் நான், எகிப்தியர் இன்னும் சிலர் என எல்லோரும் ராபர்ட்டைத் தேடி பயணமானோம். மருத்துவமனையை அடைந்தோம். மருத்துவமனை அதிர்ச்சிக்குள்ளானது.

“....நீங்கள் அனைவரும் ராபர்ட்டைத் தேடி வந்திருக்கிறீர்களா...??”
“ஆமாம்....”
“ஏன்....”
“ஏனென்றால், ராபர்ட் எங்களுக்கு ஒரு உத்வேகம்... இன்ஸ்பிரேஷன்...”
“ராபர்ட்டா.....”
தொலைபேசிகள் அலறுகின்றன. மெயில்களும் மெமோக்களும் பறக்கின்றன. மேலிடம் வரை செய்தி சென்று, அவர்களின் அனுமதி கிடைத்தபின்னரே உஸ்தாதும் அவரின் நண்பர்களும் ராபர்ட்டை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த அதிர்ச்சி, ராபர்ட்டிற்க்கு. இனிய அதிர்ச்சி. அல்லாஹ், தன் து’ஆவை அங்கீகரித்த இனிய கணம்.

எல்லோரும் அளவளாவும்போது உஸ்தாத் கேட்டுக்கொண்டதிற்கிணங்க ராபர்ட் அத்தியாயம் அஸ்ரை அழகிய கிரா’அத்தில் ஓதிக் காட்டுகிறார். அனைவரின் கண்களும் குளமாகின்றன.

அல்லாஹ்வை ஒருவர் முற்றிலும் சார்ந்து விடும்போது, எந்த வழியில், எந்த விதத்தில் உதவி வரும் என்பதை எண்ணி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. அல்லாஹ் போதுமானவன். ஆற்றல் மிக்கவன்.

ராபர்ட்டின் வாழ்வில் இளைஞர்களுக்கு மிக அதிக படிப்பினைகள் இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ராபர்ட்டிற்கு ஒரு வீல் சேர் வண்டி உள்ளது. அதில்தான் ராபர்ட்டை வைக்க இயலும். கழுத்திலிருந்து கால் வரை எல்லா பாகங்களும் கிட்டத்தட்ட பூட்டப்பட்ட நிலையில்தான் ராபர்ட்டால் எங்கேயும் நகர முடியும். சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றால், அந்த வீல்சேருக்கென தனி வேன் ஒன்று உள்ளது. வீல்சேரை தன்னுள் லாக் செய்து கொள்ளும்படியான ஒரு சிறப்பான வேன். அந்த வேனில் பயணம் செய்தால் மட்டுமே, குழியோ, மேடோ, பள்ளமோ, கல்லோ, எதன் மீது அந்த வேன் சென்றாலும், ராபர்ட்டின் உடலுக்கு அதிர்வுகள் சென்றடையாது. இந்த நிலையில் ராபர்ட், மருத்துவமனையில் ஒரு கோரிக்கை வைக்கிறார், “நான் ஜும்’ஆ சென்று தொழ எனக்கு உதவுங்கள்....”

அன்றைய தினம் அந்த ஸ்பெஷல் வேன் இல்லாதபோதும் ராபர்ட்டின் நிலைமாறா விண்ணப்பத்தால், சாதாரண ஒரு வேனிலேயே அனுப்பி வைத்தனர், மருத்துவமனை நிர்வாகிகள். தன் வாழ்வின் முதன் முதல் தொழுகையை, ஜும்’ஆ ஜமா’அத்தாக தொழுத ராபர்ட்டுக்கு சாதாரண வேனில் பயணம் செய்ததால் பாதையில் ஏற்பட்ட குலுங்கள்களின் விளைவாக அவரின் முதுகு தண்டு இன்னும் அடிபட்டது. மருத்துவமனைக்கு திரும்பியபோது அவருடைய முதுகு வலி அளவிட இயலாததாக இருந்தது. அவர் வீல் சேரிலிருந்து இறக்கப்பட்டு ஆறு மாதங்கள் கண்டிப்பாக பெட்டிலேயே இருந்தாக வேண்டும் என சிகிச்சை விதி மாற்றப்பட்டது.

நான் ராபர்ட்டை சந்தித்த போது, படுக்கையில் வீழ்ந்து மூன்று மாதங்களாகியிருந்தது. ராபர்ட் கூறினார், “அன்றைய தினம், மஸ்ஜிதில் கிடைத்த நிம்மதியைப் போன்றொரு நிம்மதியும், மனசாந்தியும் எனக்கு வாழ்வில் அது வரை கிடைத்ததில்லை..... என்னை மறுபடியும் வீல் சேரில் உட்கார என்றைக்கு அனுமதிக்கிறார்களோ.... அன்று மீண்டும் ஜும்’ஆ சென்று வருவேன் சகோதரரே....”என்றார், ராபர்ட்.

இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. வாழ்க்கை வசதிகளை விடுங்கள்... தன் உடலில் கண், வாய், மூக்கு தவிர வேறெந்த பாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒருவரின் வாக்குமூலம் என்ன....? “மஸ்ஜிதில், தொழுகையில் மட்டுமே எனக்கு மனசாந்தி கிடைக்கிறது....” ஆனால் நம் நிலை என்ன.....???????

ராபர்ட் கூறினார், “ சில சமயம் நான் யோசிக்கின்றேன்... ஏன் என் வாழ்க்கை இப்படியானது என.... ஆனால் அதன் பின் சில நொடிகளிலேயே என் மீது நான் கடினம் கொள்கிறேன்.... இந்த வழியில்தான் அல்லாஹ் என்னை இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், அதற்கு ஈடாகுமா இந்த வலியும் இயலாமையும் என....”

நம்மில் பலர் இருக்கிறோம்.... ஆயிரம் வசதி, வாய்ப்புக்கள், சொத்துக்கள் இருந்தும் ஒரு சிறிய இழப்பு ஏற்பட்டதும், எனக்கு ஏன் அல்லாஹ் இப்படி ஒரு சோதனை தருகிறான் என விம்மி வெதும்புகிறோம்.... ஆனால், சகோதரர்களே உண்மையைச் சொல்கிறேன், என் வாழ்வில் இப்படி ஒரு ஒளி பொருந்திய முகம் கொண்ட இளைஞனை நான் கண்டதில்லை. அமைதி ததும்பும் அத்தகைய ஓர் முகத்தை நான் கண்டதில்லை.

ஹிதாயத் என்பது நம்மைச் சுற்றி இருக்கிறது... எதுவும் இல்லை என வாழ்வில் நீங்கள் வருந்தத் தேவையில்லை. நிறைய்ய இருக்கிறது.... கஹ்ஃப் குகையில் வரும் இளைஞர்களின் கதையை நினைத்துப் பாருங்கள்.... து’ஆ செய்ததன் காரணமாக, நித்திரையிலும் கூட அவர்கள் வழிநடத்தப் பட்டனர்.... எங்கே எந்தப்புறம், எப்பொழுது உடல் திரும்பிப் படுக்க வேண்டும் என்பது உள்பட..... அல்லாஹ் நமக்கு நேர்வழி நடத்தப் போதுமானவன்...  அவனிடம் யாசிக்க நாம் தயாராயிருக்கிறோமா என்பதே கேள்வி....!!

.

42 comments:

உங்கள் கருத்துக்கள்...

தாருண் தேஜ்பால், நரேந்திர மோடி, நமது ஊடகங்கள்.....

Monday, January 20, 2014 Anisha Yunus 0 Comments

டெஹெல்கா இதழ் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான தாருண் தேஜ்பால் சக பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் மேற்கொண்ட குற்றத்தின் மீது கோவா மாநில காவல்துறை நடவடிக்கை தொடர்ந்துள்ளதை வரவேற்போம்.

அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய அத்துமீறல்களை வெளிப்படுத்திக் கண்டிக்கும் நிலையிலும் விசாரித்துத் தண்டிக்கும் நிலையிலும் உள்ள பத்திரிகைத் துறையினரும், நீதித் துறையினரும் இப்படியான அத்துமீறல்கள் புரிவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியுள்ளது

தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாகவும், தன் தவறை ஒப்புக் கொண்டு பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கோரிவிட்டதாகவும், எனினும் தன் மனம் புண்படுவதால் ஒரு ஆறு மாதங்களுக்கு டெஹெல்கா தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தேஜ்பால் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த மனம் புண்படுதல், ஆறு மாதப் பதவி விலகல் எல்லாம் போதாது, செய்த குற்றத்திற்குரிய தண்டனை பெறவேண்டும் என்பது இப்பிரச்சினைகள் குறித்த அக்கறையுடையோரின் கருத்தாக இருக்கிறது. ஒரு வேளை இவரது மன்னிப்பை ஏற்று அந்தப் பெண் தன் புகாரை திரும்பப்பெற்றால் ஒழிய சட்டத்தின் முன் அவர் குற்ற நடவடிக்கையைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

இந்தச் செய்தி இன்றைய நாளிதழ்களில் விரிவாக வந்துள்ளது. தினமணி 3 காலத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்டப் பதிப்புகளில் முதல் பக்கத்திலேயே 'பேனர்' செய்தி எனச் சொல்லத் தக்க அளவிற்கு வெளிவந்துள்ளதாகவும் அறிகிறேன்.

சக பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான குற்றச்ச்சாட்டுகளைப் பிரசுரிப்பதில்லை என்கிற எழுதப்படாத 'பத்ரிகா தர்மத்தை' மீறி இச் செய்தியை நாளிதழ்கள் பலவும், தினமணி உட்பட முன்னுரிமை அளித்து வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் இங்குதான் "டாடி எனக்கு ஒரு டவுட்டு..."

ஏன் இந்தப் பத்திரிகைகள் இதே நேரத்தில் வெளியாகியுள்ள நரேந்திரமோடி சமபந்தப்பட்டுள்ள 'சாகேப்' ஒலி நாடாக்களுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை? சி.பி.ஐ விசாரணை கோரி பல்வேறு அமைப்புகள் சென்ற 18 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய ஆர்பாட்டச் செய்தியை முதல் பக்கத்தில்யைல்லாவிட்டாலும், கடைசிப்பக்கத்தில் கூட வெளியிடவில்லை? சித்தார்த் வரதராஜனுக்குப் பிந்திய 'இந்து' இதழ் கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மோடிக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்குத் தானே முதல் பக்கத்தில் இடம் கொடுத்தது?

டெஹெல்கா அது தொடங்கிய நாள் முதல் இந்துத்துவத்தைத் தோலுரித்த பாரம்பரியமுள்ள ஒரு நாளிதழ். மோடி 2002 வன்முறைகள் தொடர்பாக அது 'ஸ்டிங் ஆபரேஷன்' செய்து வெளியிட்ட பதிவுகள் உலகைக் குலுக்கியதை அவர்கள் மறந்துவிடத் தயாராக இல்லை.

இந்த உண்மையை நாம் பார்க்கத் தவறலாகாது.
 
Tehelka Links:
 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...