என் எழுத்து, முதன்முறையாக அச்சில்...

Friday, July 31, 2015 Anisha Yunus 3 Comments

முதன் முதலாக என் ஆக்கம் ஒன்று, அச்சேறுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். குழந்தைகள் இதழில் வெளி வருவது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. தம்பி Rizwanக்கும், ரிஸ்வானை அறிமுகம் செய்த Fakir Bhaiக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை என் விமர்சனத்தை மட்டுமே பார்த்து வெறுத்துப்போயிருக்கும் மக்களிடமிருந்து முதல்முறையாக விமர்சனங்களை எதிர்பார்த்து நிற்கிறேன். இது ஒரு தொடராக வெளி வரும் என்பதால், ஆசை தீர மாதா மாதம் திட்டித் தீர்க்கலாம் என்னை :) :)
 
இந்த விஷயத்தை என் ஒமரிடம் சொன்னதும் அவன் சொன்னது, ஆஹா, ஏன் தமிழில் எழுதறீங்க... என்னால படிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்னால படிக்க முடியாதே என. எனக்கும் வருத்தம்தான் ஹபீபீ <3 ..... தமிழை உனக்கு இன்னும் கற்றுக்கொடுக்கவில்லை என... இன் ஷா அல்லாஹ், வழி செய்வோம். 

குறிப்பு-- அச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. மன்னிக்கவும்.

எல்லாப் புகழும் ஏகன் ஒருவனுக்கே...
வலில்லாஹில் ஹம்த். வலகஷ் ஷுக்ர்.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

கலாமிற்காக என்னால் கண்ணீர் அஞ்சலி செலுத்த இயலாது..... Sorry about it.

Wednesday, July 29, 2015 Anisha Yunus 3 Commentsமறைந்த டாக்டர் அப்துல் கலாமின் மரணம் என்னை பாதிக்கவும் இல்லை, அதற்கென என் வருத்தங்களோ, மரியாதையோ இல்லை. அதுவும், என்னைக் கடந்து சென்ற ஓர் மரணம் அவ்வளவே. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

ஆனால்... இறந்து போன ஒருவரைப் பற்றிப் பேசாதீர்கள், எழுதாதீர்கள் என்கிறீர்களே ஏன்??? இறந்தவரின் ஆன்மா சுவனத்திற்கு அருளப்பட்டதா, நரகத்திற்கா என்பதை இறைவன் அறிவான். அதன் மீதான எந்த வழக்கும் நம் கையில் தீர்ப்புக்கில்லை.

எனினும், இன்றைய சமுதாயமும், நாளை வர இருக்கும் சமுதாயமும் இவரைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல் போனால், மீண்டும் ஒரு பிழையான வரலாறு அரங்கேறிடவும், நீரோக்களும், ஹிட்லர்களும், மோடிகளும், பட்டேல்களும், அவர்தம் கூஜாக்களும் வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட நாமே சாட்சியாகி விட மாட்டோமா.... நாமே மை நிறைத்து தந்தவர்களாகி விட மாட்டோமா....??

இறந்து போன ஒருவர் சாமான்யனாக இருக்கும் பட்சத்தில், கூற்றில் உண்மையுண்டு. நகர்ந்து செல்லலாம். கண் காணாது, செவியேற்காது, மௌனித்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்கள் ஒருவரை ஐகானாக, தங்களின் குலக்கொழுந்தாக கொண்டாடியும், அவரின் மரணத்தை தங்கள் இவ்வுலக வாழ்விற்கே நேர்ந்து விட்ட அவலம் போன்றும் உணர்ச்சிவசப்பட்டு பிதற்றும் வேளையில், தம் சமூக மக்களுக்காக, தம் சமுதாய மக்களுக்காக, தாம் வாழ்ந்த நிலத்தின் வேர்களுக்காக, தமக்கு உணவும், உறைவிடமும், ஞானமும் தந்தருளிய, இல்லாத சமயங்களில் அன்பின் மிகுதியால் அள்ளிக்கொண்ட மக்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதுவும் கேள்விக்குட்படாதா???? அந்த பிம்பத்தை வைத்துத்தானே கொண்டாடுகின்றீர்கள்??? அதுவே உண்மை இல்லை எனும்போது அதனை வெளிச்சமிட்டுக்காட்டுதல் நம் கடமையில்லையா?? இறந்தது ஓர் முஸ்லிம் என்பதற்காகவே சதாம் ஹுசேனும், இடி அமீனும் இரட்சிப்பாளர்களாகி விடுவார்களா??

சதாம் ஹுசேன் அளவுக்கும், இடி அமீன் அளவுக்கும் டாக்டர் அப்துல் கலாம் இருந்திருக்க வில்லைதான். ஆனால் கொலை செய்பவனை விட அந்தக் கொலைக்கு ஆதரவு தெரிவித்தவனும், வாய் மூடி மௌன சாட்சியானவனும் அதே அளவுக்கு கொலை செய்தவர்கள் அல்லவா.... கூடங்குளத்தினால் மாள்பவர்களும், இனி மாள இருப்பவர்களும், பாலிஸ்டிக் மிசைலினால் பிணமாகுபவர்களும், அனாதைகளாகும் குடும்பங்களும் மனிதர்கள் இல்லையா. இவர்களையெல்லாம் காவு கொடுத்தா ஒரு மணி மண்டபம் எழுப்ப துணை நிற்கப் போகிறீர்கள்...? எந்த மாணவர்களின் முன்னோடியாக காட்டப்படுகின்றாரோ அதே மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கென ஒரு துரும்பும் கிள்ளாதவரையும், கல்வி எனும் பெயரில் கொள்ளை வியாபாரம், கொலை வியாபாரம் ஆவதைத் தடுக்காதவரையும், சாதி, மதம், நிறம் இன்ன பிற பிரிவுகளால் தற்கொலைக்கு தள்ளி விடும் பாடச்சாலைகளை எதிர்க்காதவரையும், அவரைப் போன்றே ஏழ்மையில் பிறந்து ஏழ்மையிலேயே வாடிய விவசாயிகளின் வேரறுபட்டபோது கள்ளமௌனம் காத்தவரையுமா கொண்டாடச் சொல்கிறீர்கள்...?
சரியை தவறு எனக் கொள்வதை விட்டும் பெரிய தவறு, தவறை, தவறானவர்களைச் சரி எனக் காண்பது. சத்தியம், எத்தனை கசப்பாக இருப்பினும், சத்தியத்திற்கே துணை நில்லுங்கள். நம் நிகழ்கால வாழ்வில் அசத்தியத்தின் எழுத்தாணிகள் விதியினை மாற்றியமைப்பது போல, நாளை வரும் சமுதாயத்தையும் பொய்களால் நிரப்பாதீர்கள்.

ஜெய் ஹிந்த்!
=============
மறைந்த விஞ்ஞானி டாக்டர் கலாமின் பொய்-மெய், தோற்ற அலசல்களை விரிவாகப் படிக்க விரும்பினால், முகநூலில் இருந்தும், இணையத்தில் இருந்தும் சில இணைப்புகள் (Not Conclusive)

அப்துல் கலாமின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட பிம்பம், உண்மையில் என்ன என்பதற்கு இந்தக் கட்டுரைகளே போதுமானது. யாகூப் மேனனின் மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாமான்யனுடன் கூட அவர் ஒன்று சேரவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது.

 

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

37 - அடையாளம் பதிப்பகம் | எம்.ஜி.சுரேஷ் | நாவல் விமர்சனம்

Saturday, July 25, 2015 Anisha Yunus 2 Comments
வாசிப்பவனுக்கு மிக அதீத விளக்கம் தரும், தரப்படும், எந்த ஒரு படைப்பும் கதையோ, கவிதையோ... தன்னை நிலைநிறுத்தத் தவறுகின்றது. அத்தனை பாத்திரங்களுக்கும் பெயர்கள், அதற்கான காரணிகள், துல்லிய விலாசம், நேரம், பொழுது, நிறம், அதன் விருப்பு/வெறுப்புக்கள்... இது போல கதையின் கருவுக்கு சம்பந்தமில்லாத (தேவையானவை தவிர்த்து) இன்ன பிற அம்சங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அந்தப் படைப்பு மெல்லச் சாகின்றது. அதே நிலைதான் 37, நாவலிலும்.

ஒவ்வொரு பாத்திரத்தையும், வாசகனின் மனநிலைக்குள்ள்ளும் கற்பனைக்குள்ளும் வலிந்து ஒரு துல்லிய பிம்பத்தையே நிறுவ வேண்டும் என்னும் அதீத ஆர்வத்தில், அதிகபட்சமான இடைச்செறுகல்கள் முழு புதினத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டன என்பது அதன் தொய்வுக்கு ஒரு காரணம் என்றால், அறிவியல் புனைவு எனப் பெயர் வைத்ததே இதற்கு சரியான தெரிவா எனக் குழம்பச் செய்வதும் இன்னொரு காரணி. விக்கிரமாதித்தன் கதைகளுக்கும், வாய் வழிக் கதைகளுக்கும், தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், இதில் அறிவியலுக்கு தரப்படவில்லை என்பதே நிஜம்.

ஆங்காங்கே, பாத்திரத்தின் இருத்தலுக்கும், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கும் தொடர்பு அறுந்து விழுகிறது. திடீரென வாசகனை அம்போவென ஒரு தெருவில் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்கு தாவி விடுகிறார் மனிதர். Episode அல்லது Speaking person நடுவே இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடவில்லை நான். Talking about the missing links. சில இடங்களில், இயந்திரன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆசிரியரே கொன்று விட்டாரோ எனக் கேள்வி முளைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு கள வர்ணனை நடந்து கொண்டிருக்கும்போதே இராமநாராயணன் ரேஞ்சுக்கு மேஜிக் வித்தைகளும் நிகழ்கின்றன. :


அறிவியல் பெயர்கள் அதிகம் புழங்கியிருக்கும் அதே நேரம், அதன் பிரம்மாண்டத்தைப் பற்றிய ஒரு சிறு வியப்பைக் கூட வாசகனுக்குத் தராமல் தடை போட்டு நாவல் முன்னேறுகின்றது. வாசகன் ஒருவன் மெல்ல அசை போட்டு, அறிவியலின் வேகத்தையும், வளர்ச்சியையும் உள்வாங்கி அதிசயித்து, ஆஹா இத்தனையும் சாத்தியமா என ஆச்சரியப்பட வைக்கவேண்டிய ஒரு படைப்பு.... அடுத்த பக்கத்தோடு புதினம் முடிந்து விடுமா என யோசிக்க வைப்பது வேதனையே! ஆனால், ஆசிரியர் தான் படித்த, விரும்பிய, விரும்பும் இலக்கியவாதிகள், அவர்களின் படைப்புக்கள் என எல்லாவற்றையும் ஒன்று விடாது இதில் பதிவு செய்துவிட்டதை எண்ணும்போது............. :'( :'(  .. ஆனந்தக் கண்ணீர். :P

சுஜாதாவின் பாணியே இன்றி, சுஜாதாவின் சாதனையை முறியடிக்க ஆசிரியர் அதீதப் பிரயத்தனப்பட்டிருக்கிறாரோ என்றும் கூட நினைவு வராமல் இருக்கவில்லை. ஆனால், அட் த லீஸ்ட், ஜீனோ-வின் Flowவை, மொழியை, ஏக காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, அறிவியல் வளர்ச்சிகளை எப்படி தன் கதையின் போக்கோடு பிணைத்தாரோ, அந்த டெக்னிக்கை, ஒரு முறைக்கு இரு முறை படித்து அதன் பின் முயற்சித்திருக்கலாம். இதுவே சுஜாதாவின் புனைவுகளை இது சாத்தியமா என்னும் கேள்வியிலிருந்து, நடக்கத்தான் போகிறது என்னும் உறுதிக்குக் கொண்டு வந்தது, வாசகர்களை. ஆனால், இந்தப் புதினத்தில், That is missing. அடையாளம் பதிப்பகத்தாரின் படைப்புக்களுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டு என்னுள். But, இது பெருந்தோல்வி. :(

இந்த நாவலைப் பற்றி சகோதரர் Manazir இடம் ஏற்கனவே பேசியிருந்ததால், பாதி படிக்கும்போதே தோன்றியது, ஒரே ஒரு வரியுடன் விமர்சனம் எழுதி முடித்து விடலாம்... // இந்தப் புக்கை பத்தி மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க மனாசிர்....... :'( :'( :'(  // என. விதி வலியது. hi..hi.. இந்தப் பதிவை எழுதியே ஓய்ந்தேன்.

இதே ஆசிரியருடைய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ எனும் நூலைப் பற்றி Manazirஉம், Lafees Shaheedஉம் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் கொடுத்து விட்டதால், அதைத் தேட ஆரம்பித்துள்ளேன். இன் ஷா அல்லாஹ், வாசிப்போம்.....

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

திருநங்கைகளும் நானும்...

Tuesday, July 21, 2015 Anisha Yunus 1 Comments

நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து சென்னை நோக்கிய ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போதுதான் அது நிகழ்ந்தது. வழக்கம் போல ரயிலில் பயணிக்கும் ஆண்களிடம் மிரட்டி, அருவருப்பாக பேசி, தொட்டு, கலவரப்படுத்தி பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் சிலர் நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியிலும் ஏறினார்கள். அதுவரையிலும் முஜாஹித் சீட்டின் ஓரத்தில் நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் அடித்துக்கொண்டிருந்தான். (அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க.... எப்போ எங்களை எல்லாம் நடுரோட்டுல கட்டி வெச்சு அடிக்கப்போறாங்கன்னுதான் தெரியல)கடைசியாக வந்த திருநங்கை, முந்தைய வகுப்பில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிவிட்டு வரும்போது முஜாஹித் அவரையும் அடித்தான். உடனே அவர் கடந்து செல்லாமல் முஜாஹிதின் சீட்டின் அருகிலேயே நின்று கொண்டார். முஜாஹிதும் வரிசையாக சில அடிகள் போட்டுவிட்டு, அவரின் கன்னத்தைக் கிள்ளி சிரித்துக்கொண்டிருந்தான். அந்தத் திருநங்கை முஜாஹிதிடம் பெயர் கேட்டதும், இவனும் ’முஜாயித்’ என்றான். பின் ‘என்னுடன் வந்து விடுகிறாயா’ என்றதும், விரைந்து தலையாட்டினான். (அடப்பாவி!!!!!) ‘மம்மியிடம் சொல்லிவிட்டு வா’ என்றதும், என்னை நோக்கி, ‘அம்மீ....டாட்டாஆ....’ என்றான். (வீட்டுக்கு போனப்புறம் இருக்கு உனக்கு....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....). பின்னர், அந்தத் திருநங்கை, வா, வர்றியா என்றதும், முடியாது என்று தலையாட்டிவிட்டு, அடுத்து நின்று கொண்டிருந்தவரை அடிக்க தயாரானான்.

அதன் பின் என்னைக் கடந்து வெளியேறினார், அந்தத் திருநங்கை. அதுவரையிலும் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள் முட்டி மோதின. அவரை அழைத்து ஒரு நிமிடமாவது பேச வேண்டும், இறைவன் தந்த கண்ணியமான் உடலை, இப்படி காட்சிப்பொருளாக ஆக்கி, கண்டவரும் தன் இச்சையைக் கண்கள் வழியே தீர்ப்பவர்களுக்கு உணவாக்கி, ஏன் உங்கள் சுய கௌரவத்தை, உங்களின் தன்மானத்தை பலியிடுகிறீர்கள் நீங்களே, இதுவும் ஒரு படைப்பினம் எனும்போது ஏன் பல திருநங்கைகளும் கௌரவமாக சுய சம்பாத்தியத்தில் அல்லது கண்ணியமான பணிகளில் ஈடுபடுவதைப் போல நீங்களும் ஈடுபடக்கூடாது, ஏன் உங்களின் மதிப்பை, கண்ணியத்தை நீங்களே விலை பேசுகிறீர்கள் என்றெல்லாம் பேச நினைத்தேன். எனினும், தனியே பயணிக்கும்போது இருக்கும் தைரியமும், செயல்வீச்சும், குழந்தைகளோடு பயணிக்கும்போது இருப்பதில்லை. அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகி விடுகின்றது. அந்தத் திருநங்கை அடுத்த பெட்டியில் போய்ச் சேர்ந்த பின் நினைத்துக்கொண்டேன், கடைசியில், நானும் ஒரு முகநூல் போராளி மட்டுமே என..... இந்த ஒரு சிறு போராட்டத்தில் கூட என் ஈமானை, என் தாவாஹ்வை செயலாற்ற முடியவில்லை எனும்போது, ஜிஹாதுன் நஃப்ஸின் (தன் ஆன்மாவுக்கான) போராட்டத்தில் தோற்றவளாகவே காட்சியளிக்கிறேன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

படம் உதவி கூகுள்

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

புன்னகைகள்

Saturday, July 18, 2015 Anisha Yunus 0 Comments

 
 
புன்னகைகள்
புரியப்படுகின்றன

வாழ்வாக,
சாபமாக,

துயரமாக,
சுமையாக,

புறக்கணிப்பாக,
கரிசனமிக்கதாக,

அன்பின் விளைவாக,
அலட்சியத்தின் பரிசாக,

சொல்ல ஏதுவுமில்லா
தருணங்களில்
மௌனத்தின்
சாவியாக,

வெறுமையாக,
பசுமையாக,

ஏதேனும் ஓர் வடிவைத் தாங்கியபடி
புன்னகைகள்
புரியப்படத்தான் செய்கின்றன.

வறண்ட காணியின்
வேரற்ற பெருமூச்சாய்
வெளிப்படும் ஒரு புன்னகை -

ஈரம் தேடும்
பிஞ்சுக்கண்களுக்கு
வாழ்வின் அர்த்தத்தை
மீட்டுத் தரும் என்றால்,

விட்டுச் செல்வோமே
வெறுமனே ஓர்
புன்னகையை...
 
# Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

நீ - நான் - மௌனம்.

Friday, July 10, 2015 Anisha Yunus 0 Commentsவார்த்தைகள்
ஏதுமற்ற
அலங்காரங்களால்
நிறைந்து போகிறது
உன் மௌனம்.

தானல்லாத
தன்னை
எதிர்கொள்ள இயலாப்
பெருவெளியில்
தோல்வியுறுகின்றது
என் மௌனம்.

சுயமெனும்
கோரப்பிடியில்
மௌனத்தின்
ஆயுதங்களை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறோம்
நாம்.

நேசம்,
காற்றோடு
காற்றாகின்றது...


#Deepதீ

படம் உதவி - கூகுள்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இதமாய்... இதமாய்...

Wednesday, July 08, 2015 Anisha Yunus 0 Comments


தீயின்
கருநாக்கு
தழுவி
நிற்கின்றது.

கண்ணீரின்
ஆழிப்பெருவலை
மூச்சை உள்ளடக்கும்
பெருமுயற்சியில்
களைக்கின்றது.

மாயையின்
பெருங்குரல்கள்
செவியை அடைத்தபடி...

உண்மையின்
உலர்நாக்கு
சப்தத்தின் முகவரியைத்
தொலைத்தபடி...

யுகங்கள் முழுதும்
அக்கினிக்கு
தாரைவார்த்து
தொலைந்து போகின்றேன்
நான்...
அணுஅணுவாய்,
செதில் செதிலாய்,

சாம்பலாய்ச் சரிந்தேன்
இனி
துயரில்லை,
துன்பமில்லை,
என இன்புறும்
வேளையில்,

மீண்டும்
வருகின்றாய்
உன் பிஞ்சு விரல்களால்
மீட்டு என்னை....

இரக்கமற்ற இவ்வுலகிற்கு
இதமாய்....
இதமாய்...

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...