அது ஒரு கனாக்காலம்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments


.
அப்பாவின் வெஸ்பா வருவதற்குள்
பள்ளிக்கு எதிரில் இருக்கும் நூலகத்தில் நுழைந்து
புத்தகப் பாற்கடலில்
தொலைந்து போனதொரு
கனாக்காலம்....

.
அடுத்தாற்போல் இருக்கும் பள்ளிவாசலில்
தென்னைமரங்கள் வழியோடி
ஹௌழில் மீன்களுக்கு
பொரியை வாரி
இறைத்ததொரு
கனாக்காலம்....

.
மூடியிருக்கும் ரயில்வே கேட்டுக்குள் புகுந்தும்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தும்
இரு கைகள் விரித்தபடி,
இரு கண்கள் மூடியபடி
இரு கால்களையும் சமணமிட்டு
இரு தரப்பையும் கண்களில்
அள்ளிக்கொண்டு
சைக்கிளில் கல்விச்சாலைக்கு
சிட்டாய்ப் பறந்ததொரு
கனாக்காலம்....

.
சுடும் நவாப்பழத்தையும்
சுடாத வேப்பம்பழத்தையும்
பாவாடையில் கட்டிக்கொண்டு
ஆகப்பெரும் சொத்தாக
பாவித்ததொரு
கனாக்காலம்...

.
மழைக்கும் முன்னரே கிழிந்து நிற்கும்
நோட்டுப்புத்தகங்களை
மழை நீரில் கப்பலாக்க வேண்டி
இன்னும் கிழித்ததொரு
கனாக்காலம்...

.
நாக்கில் தடவி எண்ணிய நோட்டுக்களும்,
கடையிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும்
ஆலாய்ப்பறந்து மூக்கினை உள்விட்டு உள்வாங்கிய
புத்தம்புது பாடப்புத்தகங்களும்,
இம்முறை Camelஆ, Camlinஆ,, Natrajஆ, Foreignஆ
என அங்கலாய்க்க வைத்த
ஜாமெட்ரி பாக்ஸ்களும்,
தொட்டால் அப்பும் எண்ணெயில் மூழ்கிய
இரட்டைப் பின்னல்களும்,
குழலிலேயே மலர்ந்ததோ எனும் அழகில்
பூத்துக்குலுங்கிய ஜாதிமல்லியும், டிசம்பர்களும்
நிறைந்தும் நிறையாத நினைவுகளைப் பரிசளித்ததொரு
கனாக்காலம்...

.
நகர்கின்ற இயந்திரவாழ்வில்
இனிக்கும் காயங்களாய்
இழந்த சுகங்களை இன்னும் இன்னும்
நினைவுக்கூடுகளில்
அள்ளி இறைத்தபடி
பொங்கிக்கொண்டே இருக்கின்றது
எந்தன் கனாக்காலம்....

.
இறந்தது மட்டுமா....
இன்னும் வர வேண்டியதுமே
அப்படித்தான் எனச்
சிரித்தபடி நகர்கிறது
வாழ்வெனும்
கனாக்காலம்.....


#‎அது_ஒரு__கனா_காலம்‬
‪#‎சிறகுகள்‬ குழுமத்திற்காக...
‪#‎நான்‬

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

அதாகப்பட்டதென்னவெனில்......

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments

தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து எழுதப்பட்ட இரு நூல்களுக்கு தமிழக அரசு தடை போட்டுள்ளது. அதன் அசல், நகல், மூலாதாரங்கள் என எல்லாவற்றையும் அரசின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
நூல் தலைப்புக்கள் ‘வேந்தர் குலத்தின் பிறப்பிடம் எது???’ மற்றும் ‘மதுரை வீரனின் உண்மை வரலாறு’ -- நூல்கள் பதிப்பிக்கப்பட்டால் சமூக நல்லிணக்கம் கெட்டுப்போய்விடுமாம்...
=========================
அரசியல் துறை சார்ந்த அத்தனை பாட வகுப்புக்களையும் சென்னை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்ததோடல்லாமல் அந்த துறை சார்ந்த அத்தனை மாணவ மாணவிகளையும் கேம்பஸை விட்டு வெளியேறச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது... வேற்று பிராந்திய, பிறநாடுகளிலிருந்து வந்துள்ள மாணாக்கர்கள் உட்பட.... அபயமில்லை... எங்கே செல்ல என்று தவிப்பவர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் எழுதித் தரச்சொல்லி அடக்குமுறையை ஏவியுள்ளது. பேராசிரியர் மணிவண்ணன் மாணவர்களின் மதுவிலக்குப் போராட்டத்திற்கு ஆதரவு தந்ததுதான் பெரிய தவறாம்...
==========================
கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார ஆய்வில் தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்கள் மிகவும் பின்னடைவில் இருக்கின்றன. 50 சதவிகிதத்திற்கும் மேல் இந்த அவலநிலை. கேந்திரிய வித்யாலயாக்கள், DAV பள்ளிக்கூடங்கள் உட்பட இதுதான் நிலையாம்...
========================
கோவை. பட்டப்பகலில் திருச்சி ரோடில் 8-10 குண்டர்கள், கத்தி, வாள், துப்பாக்கி சகிதம் சண்டை. ஒருவர் சாவு. இருவர் காயம். மீதி எஸ்கேப்பு. அத்தினி பேரும் பெயில்ல வெளில இருப்பவிங்களாம்....
=========================
‪#‎வெளங்கிடும்‬.
இதுக்குத்தான் நான் நியூஸ் பேப்பரே படிக்காம இருந்தேன் இவ்ளோ நாளு.... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

தனிமையின் நூர் வருடங்கள்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 0 Comments


...இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என் மனம் கவர்ந்த தோப்பில் மீரான் சாஹிபின் மொழியாக்கத்தில் வெளி வந்திருக்கும் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. மூன்று கதைகளை முடித்தாயிற்று. மிகவும் பிடித்த, அல்லது மிகவும் இரசிக்கும் நடை கொண்ட எழுத்தாளர்களை வாசிப்பதென்பது மனதுக்கு தெம்பூட்டுவது. இன்னாரின் எழுத்து இது என்று எதுவும் சொல்லாமலே ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துத் தாருங்கள்.... அது இன்னாருடையதுதான் என அறிந்து கொள்ளும், புதிர் விளங்கும் கணம் மிகவும் அழகியது. அப்படித்தான் இந்த தொகுப்பிலும் மொழியாக்கம்தான் செய்திருக்கிறார் எனும்போதும் தனக்கே உரிய அழகியலில் மொழி பெயர்த்துள்ளது அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

மீரான் சாஹிபின் முக்கியமான முத்திரை என நான் கருதுவது, கதையின் மைய நீரோட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பி, அந்தக் கேள்விக்கான பதிலை சூட்சுமமாக கதையின் கடைசிப் பகுதியில் வைத்து, பின்பும் ஒற்றை பதிலுடன் அதனை முடிக்காமல், வாசகனை அங்கலாய்க்க விடுவது. I am Loving it. முதல் கதையிலும் இரண்டாம் கதையின் முடிவிலும் மிகவும் ரசித்த டச் அது.

க்ஹைர்.... ஆரம்பக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பும். ‘தனிமையின் நூர் வருடங்கள்’. கே.ஆர்.மீரா அவர்களின் சிறுகதை. மிகவும் சிறிய கதைதான். ஒரு கைதிக்கும், ஒரு ஊனமுற்ற பெண்ணுக்கும் நடுவில் பிறக்கும் காதல் பற்றியது. அவனின் மன ஊனத்தைப் பற்றியும், அவளின் சுதந்திர வானைப் பற்றியுமான கதை. 3,4 முறை வாசித்த பின்னும் அடுத்த கதைக்கு செல்ல இயலவில்லை. கதையின் போக்கை விடவும், கதையின் போக்கில் சென்று ஆணின் மனதைப் போட்டுடைத்ததன் தாக்கம் ஆழமானது. முழு கதையிலும் அந்த உளவியலே விரட்டிக்கொண்டு வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரைத் தவிர்த்து மற்றெல்லா ஆண்களுமே இவ்வுலகில் இப்படித்தான் இருக்கக்கூடும் எனக் கட்டியம் கட்டியது, இவ்வரிகளே.

//அவனுடைய மனசில் பெண் எனும் சொல்லிற்கு ஒரு பொருள்தானிருந்தது. மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு.//
சத்தியமான வரிகள்தான் இல்லையா....
.
.
...இன்னும் வாசிக்க மீதம் இருக்கின்றது.
...இன்னும் கற்றுக்கொள்ள மீதம் இருக்கின்றது.
...இன்னும் பயணிக்க நெடுந்தொலைவு இருக்கின்றது.

‪#‎தோப்பில்_முஹம்மது_மீரான்‬
‪#‎மலையாள_சிறுகதைகள்‬
‪#‎தனிமையின்நூர்வருடங்கள்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

பல்லிடுக்கில் போராளிகள்...

Thursday, August 20, 2015 Anisha Yunus 0 Comments


.
கற்களுக்கு அஞ்சி
தோட்டாக்களுடன் கைகுலுக்குகிறோம்

.
காயங்களுக்கு அஞ்சி
கொலைகளை முத்தமிடுகிறோம்

.
விழிகளைச் சந்திக்க
திராணியற்று
வேஷங்களை
மேடையேற்றுகிறோம்

.
விரியும் முன்
சுருளும் மலர்களை
குப்பைக்கூடையின் உள்ளே
கசங்கிய காகிதமாய்ப்
புதைக்கிறோம்

.
சுயத்தை உள்ளங்களில்
பூட்டி வைத்து
பல்லிடுக்கில் போராளிகளாய்
கொக்கரிக்கிறோம்

.
எம்மவர் யாருமில்லையே
கிசுகிசுத்துக்கொள்கிறோம்

.
இறப்பும் இழப்பும்
எண்களாகின்றன

.
நரிகளை
இறையாக்குகிறோம்.

.
ஆடுகள்
இரையாகின்றன..
#‎நான்‬
‪#‎Thoughts‬ over ‪#‎Palestine

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இரண்டாம் ஜாமத்துக் கதை | கவிஞர் சல்மா

Monday, August 10, 2015 Anisha Yunus 1 Comments

.
குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
 

என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான் 
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைத்தொகுப்பு

-முகநூலில் படித்தது.

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

எனக்காக நீங்கள் பேசுவீர்கள்தானே??

Monday, August 03, 2015 Anisha Yunus 0 Comments

இது டீஸ்டாவிற்காக -- ஸலீல் த்ரிபாதியிடமிருந்து
-------------------------------------------------------------------------------------------
டீஸ்டாவிற்கும்,
இந்தியாவை இந்தியாவாக
நிலைபெறச் செய்ய அரும்பாடு படும்
ஆன்மாக்களுக்காகவும்...
===========================


.
முதலில் அவர்கள் சஞ்சீவ்பட்டின் பின் சென்றார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் போலீஸ் அல்லவே.


பின் ஆஸாராம் வழக்கின் சாட்சிகள்
ஒவ்வொருவராய் மாண்டு போனார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் எந்த துறவியின் சீடனும் அல்லவே.

பின் வியாபம் வழக்கின் சாட்சிகளும்
காணாமல் போக ஆரம்பித்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் மத்தியப் பிரதேசத்திலா வசிக்கின்றேன்??

பின்னர் அவர்கள் மாயா கோத்னானியை
பெயிலில் விட்டார்கள்,
நான் எதுவும் கூறவில்லை..
அந்தப் பெண்மணி என்னை எதுவும் செய்ததில்லையே.

பின்னர் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருந்த
ஒவ்வொரு ஹிந்துவின் கோப்பும் பின்வாங்க ஆரம்பித்தது...
நான் எதுவும் கூறவில்லை..
ஹிந்துக்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லரே,
பின் அவர்கள் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்??

பின் அவர்கள் மாநிலத்தில் மாட்டுக்கறியை தடை செய்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
சிவப்பிறைச்சி உடலுக்கு உகந்ததல்ல.... தெரியும்தானே??

பின்னர் அவர்கள் ‘வீடு திரும்புதல்’ என கூச்சலிட்டார்கள்...
பிரதமர் அவ்வப்போது இந்தியாவிற்கே திரும்பி வருவதைத்தான்
அப்படிக் கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

பின்னர் அவர்கள் க்ரீன்பீஸின் வங்கிக்கணக்குகளை
உறையச் செய்தார்கள்...
நான் நினைத்துக்கொண்டேன்....
இந்தியா வளர வேண்டியுள்ளது அல்லவா,
க்ரீன்பீஸினால் இந்திய வளர்ச்சி
தடைபட அல்லவா செய்கின்றது??

பின்னர் அவர்கள் பிரியா பிள்ளை
விமானமேறுவதிலிருந்தும் தடுத்தார்கள்...
நான் நினைத்தேன்...
அஹ்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இந்தியாவிற்கு எதிராகப் பேச அவள்
ஏன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டா செடல்வாதை
கைது செய்ய முனைந்தார்கள்...
நான் அதைக் கண்காணாது இருந்து விட்டேன்...
உயர் நீதி மன்றமே, அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறிவிட்டதுதானே...
பின் நாம் ஏன் வருந்த வேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டாவின் வீட்டை ரெய்டு செய்தார்கள்...
நிச்சயம் அவளிடம் மறைப்பதற்கான
ஏதோ ஒன்று இருக்கின்றது...
இல்லையென்றால் ஏன் அவள்
எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை?????

என்றேனும் ஓர் நாள்,
அவர்கள் எனக்காகவும் வரக்கூடும்,
அவர்கள் சொல்கிறார்கள்....

ஹ ஹா..
அவர்கள் சொல்வது
நகைப்புக்குரியது;
இந்தியா,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் அல்லவா...
இதொன்றும் ஆதிக்க சக்திகளின்
கைப்பாவைக் குடியரசா என்ன??

நான் தவறாது வரி
கட்டுகிறேன்...
ஆதார் அட்டையும்
என்னிடம் உண்டு...
நாள் தவறாமல்
யோகாவும்
செய்பவன்.

ஆனாலும்,
அவர்கள் வந்தால்,
எனக்காக நீங்கள்
பேசுவீர்கள்தானே??
.
 8/2/2015

This is a translation of an English poem dedicated to Teesta Setelvad. 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...