என்னைச் சுற்றி ஏன் இப்படி??

Tuesday, March 29, 2011 Anisha Yunus 23 Comments

ஹ்ம்ம்... மன்னிக்கவும்.

தாமதமாக வரும் பதிவுகளுக்கு, வெறும் ஓட்டுக்களுக்கு, வராமலே போகும் பின்னூட்டங்களுக்கு என. நான் விரும்பி படிக்கும் எல்லா வலைப்பூக்களிலும் எழுதும் அளவிற்கு நேரமிருப்பதில்லை. அதுவுமின்றி கிட்டத்தட்ட என்னை பாதிக்கும் என் அருகிலுள்ளோரின் பிரச்சினைகள்... என்ன செய்ய???


=========================== = = = ===========================

இந்தப் பதிவில் எழுதியிருந்த தாயின் குழந்தைகள் அனைவரும் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு நாள் எங்களுடன் இருக்க விடுகிறேன். Day Careக்கு அனுப்பும் அளவிற்கு அவரிடம் பணமில்லை. அவரின் கடையில் சம்பாதிக்க வேண்டுமெனில் குழந்தைகளை வேறெங்கேயும் விடவும் முடிவதில்லை. இதனால் மற்ற நாட்களில் என் வேலைச்சுமை கொஞ்சம் கூடியுள்ளது. தவிர வலையை வலம் வரும் நேரமும் குறைகிறது. எனவே தான் முதல் பாரா.


=========================== = = = =========================== 



சில பல பிரச்சினைகளால் கவலையில் வாடும் ஒரு தோழியின் கண்ணீரையும் துடைப்பதற்கே நேரமில்லை, இதில் பதிவென்ன, ஓட்டென்ன போங்க...

விவரமாய் வேண்டாம். சுருக்கமாய் கேட்கிறேன், காலாகாலத்திற்கும் குழந்தைகளையும், கணவனையும் அவனின் உடன்பிறப்புக்களையும் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டே தன் வலிமையையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள், பெண்கள். ஆண்களோ, பெண்ணிடம் சிறிது தொய்வு தெரிந்தாலும், உடலில் சில சுருக்கங்கள் விழுந்தாலும் அடுத்த பெண்ணை நோக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு பெற்ற தாய் முதல் மாமியார் வரை பொறுத்திருக்க சொல்வதென்னவோ பெண்ணைத்தான். எங்கே வந்ததிந்த நியாயம்???????????

ஸ்கூலுக்கு அனுப்பினால் ஃபீஸ் என்னும் பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு லட்ச லட்சமாய் சம்பாதித்து தருகிறீர்கள், டாக்டரிடம் கொண்டு சென்றாலும் கேட்கும் தட்சணையை தருகிறீர்கள், குளிப்பாட்டி உணவூட்டி, பாடம் சொல்லி கொடுத்து ஆயாவிடம் விட்டாலும் மாதத்திற்கொருமுறை விருந்துபசாரம் செய்கிறீர்கள், இவை எதுவும் இல்லாமல் கேட்காமல் இவையனைத்தையும் செய்யும் மனைவியிடம் எப்படி இன்னொரு பெண் மேல் ஆசை வந்ததென்றும், நீ வசீகரமாய் இல்லையென்றும் கூற விழைகிறீர்கள்????
...
...
...
ச்ச...முடியல!!!!!



.

23 comments:

உங்கள் கருத்துக்கள்...

பெயர்க்காரணம் - தொடர் பதிவு!!

Tuesday, March 22, 2011 Anisha Yunus 34 Comments

ஹி ஹி ஹி, நன்றி கூகிளார்!

முன்னொரு காலத்தில் நொய்யல் ஆறு, கழிவுகளோடு அல்லாமல் நல்லாறாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் திருப்பூரில் திரு. சுக்கூர் என்னும் பண்பான கணவருக்கு, அவரின் அன்பினுமினிய மனைவி அவர்கள், மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களில் கடைக்குட்டிக்கு முஹம்மது யூனூஸ் என்றும் பெயரிட்டார்கள். மூவரையும் பாராட்டி சீராட்டி வளர்த்தனர். காலங்கள் உருண்டோடின. வயதில் குழந்தைகள் கால் செஞ்சுரி தாண்டியதும் காலில் விலங்கிட்டனர். (கலியாணந்தேன்..ஹி ஹி)

கடைக்குட்டியான யூனூஸ் பாய்க்கு முதலில் ஓர் ஆண்பிள்ளை பிறந்து அது சில மணித்துளிகளில் இறந்து போனது. அடுத்து ஒரு முத்தான ஆண் பிள்ளை பிறந்தது. அதன் ஒரு வருடத்திற்கு பின் தந்தையை அச்செடுத்தது போன்றே ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது. (யாருப்பா அது??? பூ மாலை, பட்டாசெல்லாம் வேண்டாம்...சொன்னா கேளுங்க ஹி ஹி ஹி). அந்த தந்தை, அப்பொழுது இருந்த வழக்கப்படி ‘குழந்தைகளுக்கு அழகிய இஸ்லாமியப் பெயர்கள்” புத்தகமெல்லாம் வாங்கி 'மிகவும் பொறுப்பானவள், குடும்பத்தினர்க்கு அன்பு செய்பவள்” என்றிருந்த பொருளைப் பார்த்து ‘அனிஷா’ என்று பெயர் வைத்தனர். அந்த குழந்தையும் பின்னாளில் அத்தகையவாறே வளர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த சிறு பெண்ணுக்கு அந்த பெயர் மீதிருந்த ஒரே கவலை என்னவெனில் பள்ளியில் எதற்கெடுத்தாலும் பெயர் வரிசைப்பிரகாரம் என்று எல்லா நேரங்களிலும் அவளின் பெயர் முன்னர் இருந்ததுதான். எனினும் என்ன செய்ய. சில நேரங்களில் அதனால் பிரச்சினை (அந்த பெண்ணுக்கல்ல, ஆசிரியருக்கு இருக்கலாம். யார் கண்டார்??) இருந்தாலும் பல நேரங்களில் அது நன்மையளிப்பதாகவே இருந்தது. பத்தாவது முடித்த பின் பெரியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கும்போது அந்த துறையின் H.O.D ஹேமலதா மேடத்திற்கு அந்த பெயர் ஒரு வலி நிவாரணியானது. எப்படி?? எந்த டெஸ்ட்டிலும், எந்த அசைன்மெண்ட்டிலும் க்ளாஸிற்கு நான்கு பேரே (அந்த நல்ல பெண் அனிஷா உட்பட....சொன்னா நம்பணும்!!)  ஒரிஜினல் பேப்பர் வைத்திருப்பர். மீதி முப்பத்தி எட்டு பேரும் அதிலிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வர். அதனால் கோப மயமாக க்ளாசிற்கு வரும்போது ரிக்டர் அளவு எட்டோ பத்தோ கூட ஆகும். வந்ததும், அனைவருக்கும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என பல்வேறு விழாக்கள் நடத்திவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்கு அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிப்பார். அனுஜாஆஆஆஅ, அபிராமீஈஈஈ, அனீஷாஆஆஅ என்று வந்ததும் நிற்கும். ‘உன் பேரு அனிஷாவா, மனீஷாவா?” என்பார். (ஜோக்கடிக்கிறாராமா!!!) உடனே....வாங்கிய அடியெல்லாம் மறந்து க்ளாசே கொல்லென சிரிக்கும் (சிரிக்கணும். இல்லாட்டி இண்டர்னெல் மார்க்கு அவங்க கைலதேன் தெரியுமில்ல??) பின் அந்த பாவப்பட்ட பெண் அனிஷா எழுந்து நின்று “மேம், என் பேரு அனிஷா. மனீஷா இல்ல.” என்று வழக்கமாய் சொல்லவேணும். உடனே மேம் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அதுவும் நல்லாதானிருக்குன்னு போயிடுவாங்க. இப்படியே மூன்று வருடமும் சென்றது. அதற்குள் தன் பெயரை என்னவாக மாற்றலாம் என ஓராயிரம் தடவை எண்ணியிருந்தாள் அப்பெண். ஒரு கட்டத்தில் ‘இஷா’ என்று கூட முடிந்தது. ஆனால் அது கனவாகவே நின்று போனது. மீண்டும் அனிஷாவே தொடர்ந்தது.
பின் கல்லூரி படிப்பும் முடிந்து, சில காலம் மேனாட்டு கம்பெனிகளுக்கு ஆலோசகராக............வெல்லாம் இல்லை, சாதாரண சாஃப்ட்டுவேர் என்ஜினியராக வேலை செய்து விட்டு திருவாளர்.ஒரியாவை மணந்தார். திருமணத்திற்கு முன் தனக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் ஒன்றுக்கு ஹாரூன் என்றும் இன்னொரு குழந்தைக்கு யஹ்யா என்றும் பெயர் வைக்க வேண்டுமென மிகவுமே விரும்பினார். ஹாரூன் யஹ்யாவின் வலைப்பக்கங்களை பார்த்தும், படித்தும். ஆனால் பாலைவனச்சிங்கம் என்னும் திரு ஒமர் மொஃக்தாரின் வாழ்வை திரைப்படமாக கண்ணுற்ற பின்னும், இரண்டாம் கலீஃபாவான ஒமர் பின் அல் கத்தாபின் வரலாற்றை படித்த பின்னும், தன் முதல் குழந்தைக்கு ஒமர் என்று பெயர் வைத்தார். அப்பொழுது அமெரிக்காவில் தங்கிய காரணத்தினால் குடும்ப பெயராக முஹம்மதுவையும், தந்தைவழிப்பெயராக அப்துல்லாஹ்வையும் வைத்தார்.

பின்னர் சற்றே எல்லாரையும் கலவரப்படுத்தி,  சோதனைகளைத்தாண்டி  நல்லவிதமாக பிறந்த மற்றொரு குழந்தைக்கு சோதனைகளை வாழ்வின் எல்லா நிலையிலும் கண்ட / அனுபவித்த நபி.இப்றாஹீமின் பெயர் வைத்தார். தந்தை வழிப்பெயரான  அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடிமை)வை திருவாளர்.ஒரியா அவர்கள், குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட சோதனைகளைக்கண்டும் அதை நல்விதமாய் முடித்துத்தந்த எல்லாம் வல்ல இறைவனின் கருணையை எண்ணியும் ‘அப்துர் ரஹீம்’(நிகரற்ற அன்புடையோனின் அடிமை) என்று மாற்றி வைத்தார். And they lived happily ever after (till now, bi'idhnillah.. )

ஆக, இதுதான் பெயர்க்காரணம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஅ..... :))

இதனை எழுத அழைத்த கார்த்தி அண்ணாவிற்கும், கோபி அண்ணாவிற்கும் மிக மிக நன்றி. :) தங்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் இருந்ததா??? ஹி ஹி ஹி

இதை தொடர நான் அழைப்பது
‘பூல் புலையா பேய்ப்புகழ்’ ஆமினா (படிச்சு முடிச்சிட்டீங்களா??)
பன்னிக்குட்டி ராம்சாமிண்ணா,(இந்த பெயருக்கு பின்னாடி ஒரு வரலாறே இருக்கும்போல?)

அழைப்பிதழ் இல்லாங்காட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி தன்னடக்கமா இருக்கற யாருமே இந்த தொடர் பதிவை தொடர் கதையாக்கலாம். ஹி ஹி :)


.

34 comments:

உங்கள் கருத்துக்கள்...

என்ன சொல்ல

Wednesday, March 16, 2011 Anisha Yunus 16 Comments

போன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...

வழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும், பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.

தனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

இத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.

பாடங்கள்:
  • உங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே?
  • தன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
  • இந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே!! எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.
  • குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
  • இன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.
 

பிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே!! 


.

16 comments:

உங்கள் கருத்துக்கள்...

எதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்?

Friday, March 11, 2011 Anisha Yunus 26 Comments

ஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...

நாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலியாவினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.

அப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.

பின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருகம்.

அந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன்? மிருகம் கூட இப்படி செய்யாதே??? அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும்? ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்?

நான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது? அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு?? இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூனிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.

அதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.

இப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும்? ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா?? அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா? யார் காப்பார் இவர்களை? இப்பொழுது நான் பாதுகாப்ப?ளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார்? பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது???? இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????

சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்?? இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே????  வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே??? என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.

பிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா? அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே????

இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??

//கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//



.

26 comments:

உங்கள் கருத்துக்கள்...