இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)
தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம். இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!
இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???
நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.
news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327
கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.
------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------
பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.
மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.
குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.
அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.
நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????
.
 |
| நன்றி : உணர்வலைகள் |
இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர்
றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்படியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.
குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது?
இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது?
இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:
1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.

2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்லது அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.
இந்த பதிவின் நோக்கம்,
1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்?
2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது?
3. மிக மிக முக்கியமாக இரண்டு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?
பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.