சமஸ் சார்,
நேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின் மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை சந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி.
தவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..
என்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.
அப்படித்தான் இந்தக் கட்டுரையும். இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest.
கட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.
இந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் தங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல.
ஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir???
மிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது.
நல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை.
மேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.
இந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.
கடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு, அந்த வெற்றிடத்தில் ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.
மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நன்றி.