அந்த ஜன்னல்...

Friday, December 13, 2013 Anisha Yunus 4 Comments

(*சிறுகதை முயற்சி)


எப்பொழுதும் போல முன்னதாகவே கிளம்பி விட்டேன் அந்த அலுவலகத்திற்கு. எல்லா “தொழில்நுட்ப பூங்கா” கட்டிடச் சிறைகளைப் போலவே அந்தப் பூங்காவும் இருந்தது. வழக்கம் போல், என் இடத்திலிருந்து அந்தப் பூங்காவை தேடுவதை விடவும், பூங்காவினுள் அந்த அலுவலகத்தைத் தேடுவது மிகக் கடினமாக இருந்தது.

மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது. நான் பத்தரை மணிக்கே வந்திருக்க வேண்டும். என் தைராய்டையும், அதன் பெயரைச் சொல்லியே காலம் தாழ்த்தும் சோம்பேறித் தனத்தையும் நொந்து கொண்டே வாகனத்தை பார்க் செய்துவிட்டு, கீழ் தளத்தில் சென்று விசாரித்தேன். ‘உள் நுழை’ அட்டையைப் பரிசோதித்த பின் நான்காவது மாடி, இடது புறம் உள்ள மின்தூக்கியில் (elevator) ஏறினேன். ஒன்று. இரண்டு.. மூன்று... நான்கு.... தளம் வந்து விட்டது. கதவுகள் திறந்ததும், மீண்டும் ஒரு முறை தேவையான ஆவணங்கள் எல்லாம் சரியாய் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். எதனையோ இழந்த வலி ஒன்று மின்சாரம் போல் தாக்கிச் சென்றது. நொடியில் அதிலிருந்து மீண்டு மீண்டும் தோள்ப்பையை பூட்டிவிட்டு, வலது புறம் நோக்கினேன். வாயிற்காப்பாளர்கள் குளிர்ந்த வரவேற்பறையில் விறைத்த சீருடையில் கறிக்குதவாத எதோ ஓர் விஷயத்தை மென்று கொண்டிருந்தார்கள். இங்கேதான் செல்ல வேண்டும். ரோட்டைக் கடக்கும் முன்னர் இரு பக்கமும் பார்ப்பது போல் என் கண்கள் தானாக என் இடப்புறத்தை நோக்கியும் சென்றன. அது...

வியர்த்தது எனக்கு.
கால்களின் அடியில் பூமி பறிக்கப்பட்டது போலிருந்தது.
கண்களின் உள் சுரப்பிகள் வேலைநிறுத்தம் செய்து விட்டதாக நினைத்திருந்தேனே... இது என்ன? என் கண்கள் நீரினால் நிரம்புகிறதே...
மின்னல் ஒன்று என்னை வெட்டி, இன்னும் என்னைக் கடக்காமலே உயிர் அனைத்தையும் உறைய வைக்கின்றதே....
நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...

---------- ---------- ---------- ---------- ----------

“...எல்லாம் சரியாய் இருக்கிறதா?”
“ஆமாம் அய்யா....ஆமாம்....எல்லாம் சரியாக இருக்கிறது.
அங்கே கூட யாரும் இத்தனை காகிதங்களையும் கேட்க மாட்டார்கள், உங்கள் தொல்லை தாங்க இயலவில்லை...”

“உன் மறதியைப் பற்றி எனக்குத்தானே தெரியும்...”
”சரி விடுங்கள்... குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். பால் ஃப்ரிட்ஜில் இருக்கிறது. பாட்டில்களைக் கழுவி வைத்துள்ளேன். கொஞ்சமாக சூடாக்கி தந்தால் போதும். சர்க்கரை சேர்த்தாதீர்கள். மதியம் வந்து சாப்பாடு வைத்தால் போதும்தானே? அதற்குள் பசித்தால் ஃபிரிட்ஜிலிருக்கும் எதையேனும் சாப்பிடுங்கள். சரியா...”

“சரி...சரி... என்னைப் பற்றியே பேசிக்கொண்டு முதல் நாளே தாமதமாக செல்லாதே... வழி நினைவிருக்கிறது அல்லவா.... என் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் கொண்டு வந்து விட்டிருப்பேன்...”
“இல்லை இல்லை.... இப்பொழுதுதான் கொஞ்சம் தேறியுள்ளீர்கள். அதுவும் மழை வேறு பெய்து கொண்டே இருக்கிறது, ஓய்வெடுங்கள். இரண்டு நிமிட தூரம்தானே அலுவலகம் வந்து விடுவேன் உடனே... சரியா...”

“சரி... பார்த்து மெதுவாக டிரைவ் செய்.”
“ம்ம்...ஓக்கே...பை..”

அது ஒரு மழைக்காலம். சிகாகோவின் மழைக்காலம் அவ்வளவு ரம்மியமானதல்ல எனறாலும், நாங்கள் வாழும் நேபர்வில் எனும் மிகச் சிறிய கிராமத்தில் உற்சாகம் தரும் காலம். ஒவ்வொரு நகரிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத் தடாகங்கள், இயற்கையாக ரோட்டின் அருகேயே உள்ள கால்வாய்கள், சில மணி நேரப் பயணத்திலேயே மணிக்கணக்கில் பயணம் செய்தாலும் தீராத நெற்பயிர்-வயல்கள் என மனம் மயக்கும் அழகிய கிராமம். சிகாகோ நோக்கிச் செல்பவர்களைக் கூட, டவுனுக்கு போறீங்களா என்றுதான் கேட்பார்கள். அன்பும், பண்பும் மிக்க அழகிய குக்கிராமம். அங்கே மூன்றாண்டுகள் வசித்து, குழந்தை அப்துலும் பிறந்த பின் வேலைக்குச் செல்லும் தேவை ஏற்பட்டது. அவரின் அலுவலகத்திலேயே வேலை கிட்டியது இன்னும் வசதியாகிப் போனது. இன்றுதான் சேர வேண்டும். அதற்குள் இவருக்கு சின்னம்மை தாக்கிவிட்டது. ஒரு வாரமாக அவர் படும் பாடு மிகக் கடினமாக இருந்தது. வீட்டில் வெளியில் என என் வேலையும் கூடினாலும், அவரின் சட்டென மெலிந்த உடலும் சுமையைக் கூட்டியது. எனினும், முதல் நாளே விடுமுறை கேட்கவேண்டாம் என்றதால் வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

அதோ, அந்த வெஸ்ட்ப்ரூக் வளைவில் திரும்பியதும் அலுவலகம். அந்த வீதி முழுக்க எங்கள் அலுவலகமே பலப் பிரிவுகளாக நிறைந்துள்ளது. அதில் மூன்றாவது கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் என் கேபின். முதல் நாள் என்பதால் மனிதவளத் துறையினரிடம் சில பல வேலைகள் இருந்தன. எல்லாம் முடித்துக் கொண்டு வரவே பத்தரை மணி என்பது பத்தேமுக்கால் ஆகிவிட்டது. முதல் தளத்தில் இருந்த ஒரு அமெரிக்கப் பென், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதால் ஒவ்வொரு தளத்தையும், அதிலுள்ள ஒவ்வொரு இடத்தையும், எல்லா துறைகளையும் சுற்றிக்காட்டி விட்டு இரண்டாம் தளத்தில் என் சீட் எதுவென்றறிந்து அது வரை கையோடு அழைத்து வந்து விட்டார். அடுத்த பத்து நிமிடங்களில் மேனேஜர் கென் டார்பி, மிக்கேல், ஜான், ஷுபா, ஆஸ்டின் என என்னுடன் வேலை செய்யும் அனைவரையும் அறிமுகம் கொண்டு அளவளாவ ஆரம்பித்தாயிற்று.

மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்ல அலுவலகத்திலிருந்து இரண்டே நிமிடங்கள்தான். சென்றதும் எலெக்ட்ரிக் குக்கரில் அரிசியிட்டு, அளவாக ரசம் செய்து, மைக்ரோவேவிலேயே சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அலுவலகம்.

மதியம் காஃபி குடிக்கும் போதுதான் கவனித்தேன். என் கேபினை ஒட்டியிருந்த அந்த ஜன்னலை. அழகிய ஜன்னல். அதை விட அழகு, அங்கே அமர்ந்து ஓய்வாக காஃபி குடிப்பதற்காக போடப்பட்டிருந்த பார் நாற்காலிகளும், ஒரு வட்ட மேஜையும். அதை விடவும் அழகு, அந்த ஜன்னலின் வழி தெரியும் காட்சி.

சில நாட்களிலேயே அந்த ஜன்னலுக்கும் எனக்கும் சொல்லப்படாத ஓர் உறவு உண்டாகிப் போனது. மகிழ்வோ, வருத்தமோ, அந்த ஜன்னலின் அருகில் உள்ள சேரில் அமர்ந்து, வெளியே தெரியும் தொலைபேசி டவரையும், வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும், பனியிலும், வெயிலிலும், இலையுதிர்காலத்திலும் அழகை இழக்கவே இழக்காத வரிசையாய் வீற்றிருக்கும் பைன் மரங்களின் வசந்தத்தையும் ரசித்துக்கொண்டே இருப்பேன். ரம்மியம். ரம்மியம். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அங்கிருந்து பார்த்தால் என் ரேவ்4 தெரியும். கடும் பனி இருந்தால் மட்டுமே அருகில் இருக்கும் பார்க்கிங் கட்டிடத்தினுள் நிறுத்துவேன். இல்லையெனில், திறந்த வெளியில் என் ஜன்னலுக்கெதிரிலேயே தெரியும்படிதான் நிறுத்தியிருப்பேன். “என்றைக்காவது ஒழுங்காக பார்க் செய்கிறாயா, என்றைக்கும் கோணலாகத்தான் இருக்கிறது” என்பார் அவர். “என்னுடையது எனத் தனியாகத் தெரிய வேண்டாமா...” எனத் தோல்வியை மறைக்க ஒரு நகைச்சுவையை துணைக்குத் தேடுவேன். வாழ்க்கை மிக அழகியதாக இருந்தது. நாட்கள் ஓடியதே தெரியவில்லை. வருடங்கள் ஓடியது. என் வாழ்விலும், வசந்தம், வெயில், பனி, என எல்லாம் முடித்து இலையுதிர ஆரம்பித்திருந்தது.

அப்துலுக்குப் பிறகு ஹீராவும் வந்து விளையாட ஆரம்பித்திருந்தாள். ஒட்டுவதற்குப் பதில் கண்ணாடியில் விரிசல் கூடிக்கொண்டே போனது. ஒவ்வொரு மதியமும், அந்த ஜன்னலிடம் என் ஆசை, நிராசை, சுகம், துக்கம் என எல்லாம் சொல்வதே வேலையானது. கூடிய விரிசல்கள் எல்லாம் சேர்ந்து வாழ்க்கைக்கண்ணாடியை பதம் பார்த்தன ஓர் நாள்.

உயிரைக் கொடுத்து உருவாக்கிய உறவுகள், காகித வழி எழுத்துக்களின் மூலம் பிரிந்து சென்றன. ஹீரா அவருடனும், அப்துல் என்னுடனும் என முடிவாயிற்று. இதோ, அத்துடன் இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இது, அது என எல்லா வேலையிலும் ஏதேனும் ஒரு காரணம் அவ்வேலையை விட்டுவிட வைத்தது. ஆசிரியரான என் தந்தையின் காரணத்தால், அவரின் பள்ளியிலேயே அப்துலும் படிக்க ஆரம்பித்திருந்தான். பளு என எதுவும் இல்லாதிருந்தது.

பணம் இருந்தது. எதிலும் செலுத்தும் மனம்தான் இல்லாமல் போனது. எனவே மீண்டும் மீண்டும் வேலை தேடுவது வழமையாகிப் போனது.

அப்படியொரு நாளில்தான் இந்த அலுவலகம் வந்து சேர்ந்தேன். என் இடதுபுறத்தில் தெரிந்ததும், அதே போன்றொரு ஜன்னல். என் மனதைரியத்தை எல்லாம் சுக்கு நூறாக்கியது. என் கைகள் பரபரத்தன. கால்கள் அத்திசையில் செல்ல தடை விதித்தன. மீண்டும் வலது புறம் திரும்பியதோ, அலுவலகத்தினுள் சென்று இண்டர்வியூவில் பேசியதோ, இண்டர்வியூ ரிசல்ட் தெரியும் வரை மீண்டும் வரவேற்பறையில் வந்து ஜன்னல் வழியாக நேபர்வில்லைத் தேடியதோ...எல்லாமே இயந்திர கதியில் நடந்தது.

இதோ.... எல்லாம் ஒரு கெட்ட கனவுதான். அது முடிந்து விட்டது. இப்பொழுதே மின்தூக்கியில் கீழே செல். உன் கார் காத்திருக்கிறது. இரண்டு நிமிடங்களில் உன் வீட்டில், உன் படுக்கையில் களைப்புத் தீர உறங்கலாம். இது வரை நடந்த எல்லாக் கனவும் சிதறி விடும்... மாலையில் ஹீராவும், அவரும் வந்து விடுவார்கள்...

...கதறியது மனது.
...கரை புரண்டது கண்கள்.
எனினும் நிஜத்தில் கடிகார முள் நகரக்கூட இல்லை. நிகழ்காலத்தின் கோரப்பிடியில் இறந்த காலம், இன்னொரு முறை இறந்தது. இதயம் மட்டும் சிக்கித் தவித்தது.

---------- ---------- ---------- ---------- ----------

“மேடம்.... கோபால் சார் அழைக்கிறார்”...


“...சார்...உள்ளே வரலாமா??”
“வாருங்கள் நஸீஹா. வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட 280 விண்ணப்பங்கள் வந்திருந்தன இந்த வேலைக்கு. எனினும் யாவரையும் தோல்வியுறச் செய்து நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். வருடம் எட்டு லட்சம் சம்பளத்தில் நாளைக்கே ஜாயின் செய்து விடலாம்.”

“...இல்லை சார். எனக்கு இந்த வேலை வேண்டாம்...”
“எக்ஸ்கியூஸ்மீ.... என் காதுகளில் சரியாக விழவில்லை.... என்ன சொன்னீர்கள்...?”

“...எனக்கு இந்த வேலை வேண்டாம் என்றேன் சார்...”
“...ஏன் சம்பளம் குறைவாக இருக்கிறதா? வேறு ஏதேனும் அலவன்ஸ் சேர்த்த வேண்டுமா?? கையில் வேறு ஏதும் ஆஃபர் இல்லை என்றுதானே சொன்னீர்கள்?? ஒரு வருடத்திற்குள் சீனியாரிட்டியும் கிடைத்து விடும். தங்களைப் போல அறிவார்ந்தவர்கள் ஒரே வருடத்தில் வெற்றிக்கனிகளை பறித்துக்கொண்டே செல்லலாம்....”

“...இல்லை சார். என்னிடம் அறிவில்லை. என் தோல்விகள் எனக்கு மட்டுமே தெரியும்... இந்த வேலையை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னிடம்... மன்னியுங்கள். வேறு எதுவும் பேசுவதற்கில்லை.... நான் செல்கிறேன்...”
“...”

மீண்டும் வரவேற்பறை.
மீண்டும் ஜன்னல்.
யாருமில்லா மின்தூக்கியினுள் அரவமில்லாமல் ஓர் பெருவெள்ளம்.
இறுமாந்திருந்த இதயம் தோல்வியுற்றது மீண்டும்...
கண்முன்னே கனவுகள் தோன்றி மறைந்தன மீண்டும்...

எதுவும் இனி கிடைப்பதற்கில்லை....
எதுவும் இனி மீண்டு வருவதற்கில்லை...
எதுவும் இனி தொடர்வதற்கில்லை....
முற்றுப்புள்ளியை தொடர்ந்து விட அவளாலும் முடியவில்லை...
காய்ந்து போன காயங்கள் என அவள் நினைத்த நினைவுகள் ஈரமண்ணில் ஒட்டிக்கொண்ட பாதங்களைப் போல் நிலைத்திருந்தன. அழுத்தமாக தம் பதிவுகளை விடாமலே வீற்றிருந்தன.

ஜன்னல்கள் காத்திருக்கின்றன...

4 comments:

  1. சுவாரஸ்யம்... முயற்சி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி தனபாலன் சகோதரர்.... :)

      Delete
  2. கதை நிஜமாலுமே மனதை அழுத்துகிறது..தொடர்ந்து எழுதுங்கள் அன்னு.எழுத்து நடை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஆசியாக்கா :)

      Delete

உங்கள் கருத்துக்கள்...