ஊடகம், கடைகளை கொள்ளையடிக்கவோ, உயிர்களை பலியிடவோ செய்வதில்லை மிஸ்டர் மோடி!!!

Monday, December 16, 2013 Anisha Yunus 0 Comments

செய்தியாளன் இன்னொரு முறை சுடப்பட்டிருக்கிறான்....!

கார்கிலில்...
கந்தஹாரில்...
...இப்போது குஜராத்தில்!

அரசின் இயலாமைக்கு ஊடகங்களையே பலியாக்குகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேர செய்தி சேனல்கள், மிக எளிதான இலக்குகள் ஆகிவிட்டன, அவர்களுக்கு.

கார்கிலின் போது...
இராணுவ கட்டமைப்பில் உள்ள பலவீனங்களால் எழுந்த தோல்வியே மிக முக்கிய குற்றவாளி என அதிகாரமட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், ஊடகங்களையே, தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவர்கள் எனக் குற்றஞ் சாட்டினார்கள்.

கந்தஹார் விவகாரத்தில்...?
ஒரு செய்தி ஊடகமாவது, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, ‘மசூத் அஸார்’உடன் பயணம் செய்து ஆஃப்கானிஸ்தான் வரைப் போக வேண்டும் என யோசனை தந்ததா? முன்மொழிந்ததா? அல்லது மறைமுகமாக திணித்ததா? எதுவுமே இல்லை. எனினும், அரசாங்கத்தின் மீது வலுக்கட்டாயமாக அழுத்தத்தை தந்து கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு பணிய வைத்தவர்கள் ஊடகங்களே என வேகமாய் சுட்டு விரல் நீட்டினார்கள்.

இப்பொழுது குஜராத்தில் இன வெறியை பற்ற வைத்ததும் ஊடகங்களே என்கிறார்கள்....? ஆனால் உண்மை என்ன...? காந்திநகரிலிருந்து ஆளும் அரசின் ஆதரவு பெற்ற கும்பல்களில் ஒரு பிரிவே, சமூகத்தின் நடுவே பிரிவினையையும், குறிப்பிட்ட இனத்தவர் மீது வெறுப்பையும் பற்ற வைக்க உந்துசக்தியாக இருந்தது என்றால் அதில் மிகை இல்லை.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஊடகங்கள் நடத்தினவா?
வன்முறை கைக்கடங்காமல் வெடிக்கிறது என்று தெரிந்த பின்னும், ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அடுத்த நாளே 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது ஊடகங்களா?
குறிப்பிட்ட இனத்தவரின் கடைகளையும் அமைப்புக்களையும் கொள்ளையிடுமாறு மக்களிடம் விண்ணப்பித்தது ஊடகங்களா??
சர்வ நிச்சயமாக, அஹ்மதாபாதிலும், வடோதராவிலும், இன்னும் மாநிலத்தின் பல இடங்களிலும் குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிராக, இனச்சுத்திகரிப்பை செய்யச் சொல்லி ஊக்குவித்ததும்..... 
...ஊடகங்கள் அல்ல!

படுகொலைகளை எல்லாம் செய்தி சேனல்கள் திரும்ப திரும்பக் காட்டிக்கொண்டே இருந்ததுதான் வன்முறை அதிகம் வெடிக்கக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆனால், யாரேனும் இதை நம்புகிறீர்களா??? ஊருக்குள் ஒரு கும்பல் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தீக்கிரையாக்குகிறார்கள் என்றதும் யாரேனும் எழுந்து, உடனே வெளியே சென்று, அது போன்றே ஒரு தீயை பற்றவைப்பார்களா?? உண்மை என்னவென்றால், அன்று நடந்த சம்பவங்களின் தீவிரத்தையும், திசைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தது, அந்தக் கும்பலே தவிர, களத்திலிருந்து நேரடி ஒளி/ஒலி பரப்பு செய்துகொண்டிருந்த செய்தி ஊடகங்கள் அல்ல.

செப்டம்பர் 11க்கு பிறகிலிருந்து, இந்திய அமைச்சர்கள் எல்லோரும், “செய்தித் தொடர்பு ஒழுக்கங்கள்” என்றால் அது அமெரிக்க ஊடகங்களை பாரமானியாகக் கொண்டு கற்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதனால்தான் குஜராத் பற்றிய இந்திய ஊடகங்களின் ஆவணம் எல்லாவற்றையுமே குற்றம் சாட்ட முடிகிறது அவர்களால். அவ்வாறெனில் ரோட்னி கிங்கை (Rodney King) கண்டித்ததற்காக வன்முறை வெடித்ததே லாஸ் ஏஞ்சல்ஸில்... பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்காவையே உலுக்கிய அந்த இனக்கலவரத்தை ஊடகங்கள் எப்படி செய்தியாக்கின என்பதையும் சேர்த்தே அவர்கள் பார்க்கட்டும்.

செய்தித் தொடர்பு ஊடகங்களை அன்று கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தால், வெறி பிடித்தலைந்த கும்பலை இல்லாமல் ஆக்கியிருக்கலாம் என்கின்றது அரசு. அன்றைய தினத்தில், ஊடகங்களைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடு இருந்ததாகவே காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மை....?? அரசின் அறிக்கைகளை விடவும் பன்மடங்கு தூரத்தில் அது இருக்கிறது. அதுவும் வன்முறை வெடிக்க ஆரம்பித்த முதல் 48 மணி நேரத்தில்....? உதாரணமாக போலீசாரையே எடுத்துக் கொள்வோம். அன்றைய தினத்தில் போலீசார் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர் என்று சொன்னால், உடனே காவல்துறையின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறோம் என்று குமுறுவார்கள். ஆனால் நிஜத்தில், ஒவ்வொரு தெருவிலும், அராஜகம் செய்யும் கும்பல்களுக்கு, அவர்களின்  செயல்களுக்கு பாதகம் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாத்தார்கள் என்பதே உண்மை!

பன்மடங்கு பெருகிய அளவில் ஒரு வன்முறை வெடிக்கும்போதும், ஊடகங்கள் அரசின் பைனாகுலர்களை வாங்கி, அது சொல்லும் எண்களிலேயே நிஜத்தைப் பதிவு செய்யவும், வீரியமான, கடினமான உண்மையை மறைக்கவும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்களா?? மாநிலத்தில் பல இடங்களிலும் வன்முறை ஒரு தொடராக வெடித்துக்கொண்டே இருக்கும்போது, மாநில முதலமைச்சர் தொலைக்காட்சியில் வந்து, “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று சொன்னால், உடனே பொய்யை வெளிக்கொணராமல் இருந்து விட வேண்டுமா?? அரசு, இராணுவம் வந்து விட்டது என்று செய்தி ஒளிபரப்ப சொல்லும்.... ஆனால் உண்மையில் இராணுவம், வெறி பிடித்த கும்பல்கள் பயணம் செய்யும் லாரிக்களுக்குப் பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கும்.... இதில் எந்த உண்மையை நாங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்வது??

‘ஹிந்துக்கள்’, ‘முஸ்லிம்கள்’ என்ற சொற்களை தொலைக்காட்சி நிருபர்கள் அடிக்கடி உபயோகித்ததனால்தான் சூழ்நிலை கெட்டுக்கொண்டே போனது என குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். உண்மையில், சமூகங்களுக்கு / மதங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும்போது இரு தரப்பினரின் பெயரையும் வெளியிடக்கூடாது என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஊடகவிதிதான். எனினும், ஒரு ‘போஹ்ரா முஸ்லிம்’இன் கடை சூறையாடப்படும்போது, ‘சிறுபான்மை சமூகத்தினரின் சிறுபான்மைப் பிரிவினரின் ஓர் உறுப்பினரின் கடை’ என்றா செய்தி வாசிக்க முடியும்??

இதை விட துக்ககரமான செய்தி என்னவென்றால், முழுக்க முழுக்க குஜராத் மாநில அரசுக்கு எதிராகவும், பொதுவாகவே ‘ஹிந்துக்களுக்கு’ எதிராகவுமே ஊடகங்கள் இருக்கின்றார்கள் என்கின்றார்கள்.  செய்தி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஆங்கில வழி செய்தி ஊடகங்களுக்கு (அச்சு + தொலைக்காட்சி) எதிராக சங் பரிவாரங்கள் காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டு அதுவே. ஊடகங்களில் ஒரு பிரிவினரை இப்படி அழுத்தம் கொடுத்து நெருக்குவதாலும், மதச்சார்பற்ற ‘தலிபான்கள்’ எனப் பெயரிடுவதாலும் ‘ஹிந்துத்துவ தேசபக்தியாளர்களுக்கும்’, ‘தேச - விரோத - போலி - மதச்சார்பின்மையாளர்களுக்கும்’ இடையில் ஒரு கோட்டை எழுப்பிவிடலாம் என்றே சங் பரிவாரம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதுதான் அதன் பிரச்சாரத்தின் உயிர் துடிப்பாகவும் உள்ளது.

மாறாக சங் பரிவாரத்தின் இந்த அடிமுட்டாள்தனமான பிரச்சாரத்தால் ஊடகங்கள் தற்காப்பு நிலையைக் கையிலெடுத்து, பாரபட்சம் காட்டாமல் இருப்பதின் தேவையுணர்ந்து, எத்தகைய சூழ்நிலையிலும் நடுநிலை செய்திகளையே பரப்பவேண்டும் எனத் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளன. கோத்ராவின் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னே சில உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் இருந்ததை** யாரும் மறுக்க  இயலாது எனினும் முஸ்லிம்களைச் சூறையாடிய பல இடங்களிலும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் தலைவர்களே முன்நின்று கும்பல்களை வழிநடத்தினார்கள் என்பது மறுக்க இயலா உண்மை. அந்த அராஜகத்தை, நியூட்டனின் விதியின் படி, விளைவின் எதிர்விளைவு என்று கூறி முதலமைச்சர் மோடி சமாளிக்க முயன்றிருக்கலாம் ஆனால் ஊடகங்களின் கண்களுக்கு, தன்னுடைய இயலாமையை, கோழைத்தனத்தை மறைக்க அரசு அளித்த வெட்கக்கேடான பதிலே அது என்பது தெள்ளெனத் தெரியும். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டையும் ஊடகங்களின் வாசற்படியில் வீசுகிறார்கள்.... அங்கே வீசாதீர்கள், மாறாக வன்முறையின் போது வி.இ.பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்ளின் பின்னே அமர்ந்து பயணம் செய்துவிட்டு, தற்போது அவசர அவசரமாக கீழே இறங்க முயற்சிக்கும் அரசின் வாயிற்படியில் வீசுங்கள்..!

இதனாலெல்லாம் ஊடகங்கள் தம்மைத்தாமே சுயபரிசோதனை செய்யக்கூடாது என சொல்லவில்லை. போர், வன்முறை, தீவிரவாதம்---இது போன்றவைதான் 24 மணி நேர செய்தி ஊடகங்களுக்கு உணவாகும். காணபவர்களை விடாமல் இழுத்து ஓரிடத்தில் வைக்க வேண்டும் என்றால் இது போன்ற செய்திகளை சுண்டி இழுக்கும் பலம் வாய்ந்த நிழற்படங்களை / காணொளிகளுடன்தான் சொல்ல இயலும். இந்த மாதிரியான நேரங்களில் செய்திகளைச் சொல்லும் ஓர் ஊடகம் என்னும் தகுதியில் இருந்து இறங்கி, கவர்ச்சியை நம்பி, பரப்பப்படும் செய்தியின் சாராம்சத்தில் சமரசம் செய்யும் நிலையும் வரும். இது மிக கவனிக்கப்படவேண்டிய ஆபத்தாகும். செய்தி ஊடகங்கள், வாராந்தரிகளைப் போல் நடந்து கொள்வது என்பது லேசான விஷயமல்ல.... இப்படியான நேரங்களில் சுயமாகவே தம்மை தணிக்கைக்கு உட்படுத்துவது மிக அவசியமாகிறது.

ஆயினும், எப்படி செய்தி ஊடகங்கள் பரிமாணமடைந்து வருகின்றனவோ, அதே போல், ஊடகங்களின் இந்த புதிய தலைமுறைக்கு ஏற்ப பதில் சொல்வதும் அரசின் மீது தார்மீகக் கடமையாகிறது. 24 மணி நேர செய்தி ஊடகங்களை இந்த அரசுதான், இந்திய வரலாற்றில் முதன்முறையாக எதிர்கொள்கிறது. குஜராத்தில், அரசு தரப்பு செய்திகளில் கூட ஆதாரப்பூர்வ / சரியான தகவல்களைத் தருவது என்பது இல்லாமல் போய்விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில், ஊடகங்களைப் பயன்படுத்தியே ஒரு சம்பவத்தின் போக்கை அறிந்து கொள்ளவும், அதைக் கட்டுக்குள் கொண்டு வரவும் அரசு தன் வலிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் இங்கேயோ, கிடைக்கும் சொற்ப தகவல்களுக்கே, ரிஷி மூலம், நதிமூலம் பார்ப்பதும், அதிகார வர்க்கத்தின் மூலம் நிருபர்களின் சான்றுகளை / ஆவண / அத்தாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவதுமே அரசின் மனப்பான்மையாக உள்ளது. வேதனையான விஷயம் என்னவெனில், இந்திய அரசியல்வாதிகளிலேயே நியூ யார்க் வரை சென்று ஊடக மேலாண்மை பற்றிய படிப்பைப் படித்ததும், அதைப் பற்றிய அதிக அறிவும் படைத்தவர் என்றும் கருதப்படுகிறவரே நரேந்திர மோடிதான். ஆனால், நினைத்துப் பார்த்தால், அவருக்குத்தான் மீண்டும் ஒரு முறை அந்தப் படிப்பை படிப்பது நல்லதெனத் தோன்றுகிறது..... தொலைக்காட்சிகளைத் தடை செய்யும் ஆணையை பிறப்பிப்பதற்கு முன்!!

--------------------
கட்டுரையாளர், ராஜ் தீப் சர்தேஸாய் 1994இலிருந்து செய்தி ஊடகங்களில் பணி புரிய ஆரம்பித்து, 2008இல் எல்லாம் தனக்கென தனி செய்தி ஊடகத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு வேகத்திலும், விவேகத்திலும், தொழில்நுட்பத்திலும் பரிணாமம் பெற்ற ஊடகவியலாளர். தனக்கென தனி செய்தி-ஊடகம் ஆரம்பிக்கும் வரை இவரின் செய்தியில் நடுநிலைத்தன்மையும் உண்மையும் 100% இருந்தன என்றால் அது மிகையல்ல. இப்போதில்லையா என்றால், அவரின் தற்போதைய எழுத்துக்களே அதற்கு பதில் சொல்லும். :)

இந்தக் கட்டுரையை தற்போது பதிவிடக் காரணம், ஒரு ஊடக- நடுநிலையாளர் குஜராத் அரசைப் பற்றியும், திரு.மோடியைப் பற்றியும் என்ன கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதை நினைவூட்டுவதற்கே. இன்றைய ஜொலிஜொலிப்பில், நேற்றைய கசடுகளை மறப்பது பகுத்தறிவல்லவே... :)

மோடியின் / குஜராத் மாநில வளர்ச்சியின் சுயத்தை வெளிப்படுத்தும் நடுநிலையாளர்களின், குறிப்பாக இஸ்லாமியரல்லாதவர்களின் கட்டுரைகள் தொடரும். இது தமிழ் சமூக மக்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே. கருத்துக்களை வரவேற்கிறேன். 

*ஆங்கில மூலம்:  Did the media ransack shops, take lives, Mr Modi? | http://bit.ly/19r5qKf

(**உம்ம் ஒமர்: இது மிக மிக தவறான கூற்று. இதுவும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்களின் கயமைத்தனமே என்பதற்கு மறுக்க இயலாத அனைத்து ஆதாரங்களும் இணையம் / அச்சு ஊடகங்களில் பரவியுள்ளது.)

0 comments:

உங்கள் கருத்துக்கள்...