திருநங்கைகளும் நானும்...

Tuesday, July 21, 2015 Anisha Yunus 1 Comments

நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து சென்னை நோக்கிய ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போதுதான் அது நிகழ்ந்தது. வழக்கம் போல ரயிலில் பயணிக்கும் ஆண்களிடம் மிரட்டி, அருவருப்பாக பேசி, தொட்டு, கலவரப்படுத்தி பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் சிலர் நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியிலும் ஏறினார்கள். அதுவரையிலும் முஜாஹித் சீட்டின் ஓரத்தில் நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் அடித்துக்கொண்டிருந்தான். (அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க.... எப்போ எங்களை எல்லாம் நடுரோட்டுல கட்டி வெச்சு அடிக்கப்போறாங்கன்னுதான் தெரியல)கடைசியாக வந்த திருநங்கை, முந்தைய வகுப்பில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிவிட்டு வரும்போது முஜாஹித் அவரையும் அடித்தான். உடனே அவர் கடந்து செல்லாமல் முஜாஹிதின் சீட்டின் அருகிலேயே நின்று கொண்டார். முஜாஹிதும் வரிசையாக சில அடிகள் போட்டுவிட்டு, அவரின் கன்னத்தைக் கிள்ளி சிரித்துக்கொண்டிருந்தான். அந்தத் திருநங்கை முஜாஹிதிடம் பெயர் கேட்டதும், இவனும் ’முஜாயித்’ என்றான். பின் ‘என்னுடன் வந்து விடுகிறாயா’ என்றதும், விரைந்து தலையாட்டினான். (அடப்பாவி!!!!!) ‘மம்மியிடம் சொல்லிவிட்டு வா’ என்றதும், என்னை நோக்கி, ‘அம்மீ....டாட்டாஆ....’ என்றான். (வீட்டுக்கு போனப்புறம் இருக்கு உனக்கு....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....). பின்னர், அந்தத் திருநங்கை, வா, வர்றியா என்றதும், முடியாது என்று தலையாட்டிவிட்டு, அடுத்து நின்று கொண்டிருந்தவரை அடிக்க தயாரானான்.

அதன் பின் என்னைக் கடந்து வெளியேறினார், அந்தத் திருநங்கை. அதுவரையிலும் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள் முட்டி மோதின. அவரை அழைத்து ஒரு நிமிடமாவது பேச வேண்டும், இறைவன் தந்த கண்ணியமான் உடலை, இப்படி காட்சிப்பொருளாக ஆக்கி, கண்டவரும் தன் இச்சையைக் கண்கள் வழியே தீர்ப்பவர்களுக்கு உணவாக்கி, ஏன் உங்கள் சுய கௌரவத்தை, உங்களின் தன்மானத்தை பலியிடுகிறீர்கள் நீங்களே, இதுவும் ஒரு படைப்பினம் எனும்போது ஏன் பல திருநங்கைகளும் கௌரவமாக சுய சம்பாத்தியத்தில் அல்லது கண்ணியமான பணிகளில் ஈடுபடுவதைப் போல நீங்களும் ஈடுபடக்கூடாது, ஏன் உங்களின் மதிப்பை, கண்ணியத்தை நீங்களே விலை பேசுகிறீர்கள் என்றெல்லாம் பேச நினைத்தேன். எனினும், தனியே பயணிக்கும்போது இருக்கும் தைரியமும், செயல்வீச்சும், குழந்தைகளோடு பயணிக்கும்போது இருப்பதில்லை. அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகி விடுகின்றது. அந்தத் திருநங்கை அடுத்த பெட்டியில் போய்ச் சேர்ந்த பின் நினைத்துக்கொண்டேன், கடைசியில், நானும் ஒரு முகநூல் போராளி மட்டுமே என..... இந்த ஒரு சிறு போராட்டத்தில் கூட என் ஈமானை, என் தாவாஹ்வை செயலாற்ற முடியவில்லை எனும்போது, ஜிஹாதுன் நஃப்ஸின் (தன் ஆன்மாவுக்கான) போராட்டத்தில் தோற்றவளாகவே காட்சியளிக்கிறேன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

படம் உதவி கூகுள்

1 comment:

  1. எல்லாம் சரி . "என் ஈமானை, என் தாவாஹ்வை" அப்படி என்றால் என்னவென்று அடைப்பு குறிக்குள் கொடுத்தாலாவது என் போன்ற சாமான்யனுக்கு புரியும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...