லிஃப்ட்டுல ஏறி 4வது மாடி போயாச்சு. போய் சேர்ந்த பின், ரிசப்ஷன்ல தேவையான தகவல்களை சொல்லிட்டு நர்ஸ் வந்தா ரெண்டு நிமிஷம் காத்திருக்க சொல்லுங்க, நான் தொழுதுக்கறேன்னு சொல்லி ரிசப்ஷன்லயே லொஹர் தொழுதாச்சு. அல்லாஹ்விடம் துஆ கேட்டு முடிக்கவும் என்னை பாத்துக்க வேண்டிய நர்ஸம்மா வந்து கூப்பிட்டு போனாங்க. போயி வழக்கம் போல ரத்தக் கொதிப்பு, எடை, சுவாசம் எல்லாம் டெஸ்ட் செஞ்சிட்டு ஆடைகளை மாற்றி ஹாஸ்பிடல் கவுன் தந்துட்டாங்க. அப்புறம் என்னையும் இன்னும் ரெண்டு மூணு மெசினையும் ஒன்னா வயர் வெச்சி பிணைச்சிட்டு போயிட்டாங்க. பசி வேற வயித்த கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. காலைல இருந்து எதுவும் ஆகாரம் இல்ல, மணி 2 ஆகப் போகுது. 2 மணிக்கு எல்லா நர்ஸும், டாக்டருக்கு படிக்கற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஆஜர். டாக்டர் ஸ்டான்சில் மட்டும் வரலை. விசாரிச்சப்ப அவரோட வண்டி டயர் பழுதானதால கொஞ்சம் கழிச்சு வருவாருன்னாங்க. அதுக்குள்ள ஜுஜ்ஜூவை ஹன்னாஹ் வீட்டுல விட்டுட்டு வந்துட்டார். அவரும் எதுவும் சாப்பிடலை. 2:10க்கு ஒரு டாக்டரம்மா வந்தாங்க. அவங்க இந்த ப்ரொசீஜரைப் பத்தி மறுபடியும் விளக்கிட்டு, எனக்கு இப்ப ஒரு ஊசி நரம்புல போடுவாங்கன்னும், அந்த மருந்து இதயத்தை பலமா ஓட வைக்கும்னும், அதனால பயப்பட வேண்டாம்னும் சொன்னாங்க.சரின்னு சொன்ன பின் வேண்டிய ஃபாரங்கள்ல கையெழுத்து வாங்கிட்டு நரம்புல ட்ரிப்ஸுக்கு ஏத்தற மாதிரி செட் பண்ணாங்க. முதல் தடவை ஒரு நர்ஸ் செய்யறப்ப தவறா போயிடுச்சு, எனக்கு பயங்கரமா வலிக்குதே ஒழிய சரியா மருந்து எறங்கலை. அப்புறம் மணிக்கட்டுல இன்னொரு எடம் பார்த்து இன்னொரு வயசான நர்ஸம்மா வந்து போட்டாங்க. போட்டு ரெண்டே நொடிதான், இதயம் வேக வேகமா துடிக்குது, எனக்கு மூச்சு விட சிரமமா இருக்கு. டாக்டரம்மா கிட்ட சொல்லலாம்னா அவங்க சர்வ சாதாரணமா மானிட்டரை பாத்துகிட்டு இருக்காங்க. எனக்கு பேசவும் முடியலை, இதயம் துடிக்கற வேகத்துக்கு மூச்சும் திணறுது. எப்படின்னா, தொட்டபெட்டா சிகரத்துல நின்னு பாத்துகிட்டிருக்கற உங்களுக்கு திடீர்னு கால் கொஞ்சம் ஸ்லிப்பானா எப்படி இதயம் துடிக்கும், அதை விட வேகமா..யப்பா..ரெம்ப கஷ்டமாவும் இருந்தது. அம்மியை ரெம்பவே மிஸ் பண்ண நிமிடங்கள் அது.
பின்ன 2:15க்கு டாக்டர் ஸ்டான்சில் வந்துட்டார். அவர் வந்தவுடன் மறுபடியும் ஒரு தடவை என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்லிட்டு, இப்போ வயித்து மேல(பாப்பா தலைப்பக்கம்) அவர் ஒரு கை, அடி வயித்துல(பாப்பா இடுப்பு பக்கம்) அந்த டாக்டரம்மா ஒரு கை வப்பாங்க, வச்சு தள்ள ஆரம்பிப்போம், எப்ப முடியலையோஅப்ப சொல்லுங்க நிறுத்திடறோம்னு சொன்னார். என்னுடைய ரெண்டு கையவும் கட்டிலுக்கு அடியில் ஒரு பிடிப்பு இருக்கு அதை பிடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டு ஒரியாக்காரரை என் தலைமாட்டுல நிக்க சொல்லிட்டார். அவ்ளோதான், இப்ப ஸ்டார்ட் செய்றோம்னு சொல்லிட்டு தள்ள ஆரம்பிச்சாங்க. அதுவரை வாழ்க்கைல அந்த பிட்ச்சுல நான் கத்தியது இல்ல. உள்ள இருக்கற pancreas, kidney, liver எல்லாத்தையும் எங்கெங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கற மாதிரி வயித்துல எல்லாமே உருளுது. என்னால நார்மலா சுவாசிக்கவும் முடியல, வலியவும் பொறுக்க முடியல, வலிங்கறதை விட, ஒரு அழுத்தம் / Pressure, அப்படின்னு சொல்லலாம். ரெண்டே நிமிஷம்தான். அந்த ரெண்டு நிமிஷத்துல வஸியத்தே நான் ரெடி செஞ்சிட்டேன். இதோ இப்ப உயிர் போயிடும்னு தோணிய நிமிஷம் அது. மலக்குல் மவ்த் சிரிச்ச முகத்தோட வருவாங்களா இல்ல... அப்படின்னு பயந்தும் போயிருந்த நிமிஷம் அது. சுப்ஹானல்லாஹ். நான் போதும், வேண்டாம்னு சொல்ல நினைக்கறப்ப அவங்களே நிறுத்திட்டாங்க. மானிட்டர்ல ஒரு 2 நிமிஷம் மறுபடியும் வெயிட் செஞ்சு பாத்தாங்க, இவன் சொல்பேச்சு கேக்கற பயலா இல்லையான்னு. ஹனீஃபா மறுபடி மேல வரலைன்னவுடனே, எல்லாம் சரியாகிடுச்சு, எதும் சாப்பிடறதுன்னா சாப்பிட்டுக்குங்க, நாம் எபிடோசின் குடுத்து வலியை ஆரம்பிக்கலாம், ஏன்னா ஏற்கனவே டெலிவரி டேட்டுக்கு மேல ரெண்டு நாள் ஆயிடுச்சு. இதுக்கு மேல வெயிட் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார். டாக்டர் டேக் கேர்னு சொல்லிட்டு போனதுதான் தெரியும் மறுபடி மயக்கமா, இல்ல சோர்வால வந்த தூக்கமான்னு தெரியலை. ஒரு அஞ்சு நிமிஷம் ஒலகம் மறந்து கண் மூடியாச்சு. அந்த ப்ரொசீஜர் முடிஞ்சவுடனே என்னை வேற ரூமுக்கு மாத்தணும். ஆனா நான் தூங்கிட்டு இருக்கறதை பார்த்த நர்ஸ், சரி எழுந்ததும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. முழிச்ச பின் மறுபடியும் வேற ரூம்.
இன்னொரு நர்ஸம்மா, கொஞம் வயசானவங்க என்னை இப்ப வேற ரூமுக்கு கொண்டு போயி, கீழ இருக்கற கஃபேக்கு எப்படி ஃபோன் செய்யணும், எப்படி ஆர்டர் செய்யணும்னு எல்லாம் சொல்லிட்டு, ஐ.வி. கனெக்ஷன் குடுத்துட்டு போயிட்டாங்க. அதுலதேன் எபிடோசின் ஏத்துவாங்க. இவருக்கும் எனக்கும் Mac n Cheese, Veg fried rice சொல்லிட்டு அம்மாக்கு மறுபடியும் ஃபோன் செஞ்சு எல்லாம் நல்லபடியா நடந்ததுன்னு சொல்லிட்டு அவங்களுக்கும் ஆறுதலை தந்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸானோம். அதுவரை அம்மா அப்பாவும் தூங்காம இரவு வேர தொழுகை / தஹஜ்ஜத் தொழுது து’ஆ அழுதழுது கேட்டுட்டு இருந்திருக்காங்க. அம்மிதான் பக்கத்துல இருக்க முடியலையேன்னு அழுகை. அவங்களையும் சமாதானப்படுத்தியாச்சு. கொஞ்ச நேரத்துல சாப்பாடும் வந்தது, சாப்பிட்டபின் நர்ஸம்மா எபிடோசின்னையும் ஏத்திட்டாங்க. 4 மணிக்கு டாக்டர் ஸ்டான்சிலும் வந்து எல்லாம் நல்லபடியா போகுதா குழந்தை அதே பொசிஷன்ல இருக்கான்னு எல்லாம் பார்த்துட்டு போயிட்டார். அதன் பின் மறுபடியும் அஸ்ர், மக்ரிப், இஷா எல்லாம் 6:30 மணிக்கு முடிஞ்சிடுச்சு. இவரும் மசூதிக்கு போயிருந்தவர் வந்திட்டார். (இதெல்லாம் எழுதறப்ப, தோபி கட்ன்னு புதுசா வந்த படத்துல ஒரு முஸ்லிம் பொண்ணு அவங்க அண்ணனுக்கு வீடியோ ரெக்கார்டு செய்வாங்களே அந்த ஞாபகம் வருது!! :)
எட்டு மணி போல மறுபடியும் வந்த டாக்டர் ஸ்டான்சில், முன்னேற்றம் எதையும் காணம், எபிடோசின்னை அதிகமாக்குங்கன்னு போயிட்டார். அதிகமாக்கிய ஒடனே பயங்கர வலி, அதுவும் 2 நிமிசத்துக்கு ஒரு தடவை, நர்ஸம்மா டாக்டர்கிட்ட சொல்லவும், வேறெதோ மருந்தை சேர்த்தி அதை கொஞ்சம் கொறைச்சாங்க. மறுபடியும் கொஞ்சம் ரிலாக்ஸாச்சு. அம்மி, அப்பாவை ஸ்கைபில வர சொல்லி பாத்துகிட்டேன். அம்மியும் கொஞ்சம் என்னை பார்த்த பின் ரிலாக்ஸானாங்க. அப்போ அந்த நர்ஸம்மா முடிஞ்சு வேற ஒரு நர்ஸ் ஜெர்மின்னு பேரு. அந்த பொண்ணு வந்தாங்க. அவங்களும் சந்தோஷமா எங்க அப்பா அம்மாகிட்ட பேசினாங்க. 4 டாக்டரம்மா, 2 நர்ஸு, 2 மெடிக்கல் ஸ்டூடண்ட் எல்லாருமே 12 மணிக்குள்ள பேசிட்டு போயிட்டாங்க. அம்மி அப்பாவையும் போயிட்டு காலைல நெட்டுக்கு வாங்கன்னு சொல்லியாச்சு.
அதுவரை எல்லாம் சரியா போச்சு. 1 மணிக்கு வந்த டாக்டரம்மா ரெண்டு பேர் என்னை சோதிச்சிட்டு, முன்னேற்றம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. அதுவுமில்லாம குழந்தையோட இதய துடிப்பு திடீர்னு வெறும் 40ல போயிகிட்டு இருக்கு (150 கிட்ட இருக்கணும்!!), அதனால எபிடூரல் எடுத்துக்குங்கன்னு சொன்னாங்க. அதே நேரம் NICU (NeoNatal Intensive Care Unit)ல இருக்கற டாக்டர்ஸ்க்கும் தகவல் சொல்லி, ஒரு 10 பேர் வந்து பக்கத்து ரூமல் காத்திட்டிருக்காங்க. பிள்ளைக்கு மேற்கொண்டு எதும் ஆயிட்டா ஒடனே பாக்கறதுக்கு. எபிடூரல் எடுத்த பின் அல்ஹம்துலில்லாஹ் இதய துடிப்பு கொஞ்சம் சீராயிடுச்சு. ஆனால் தொப்புள் கொடி லைட்டா சுத்தி இருந்துச்சு. அது, திருப்பி விட்டதால வந்திருக்கலாம், பட் பயப்படற அளவு இல்லைன்னு சொல்லிட்டாங்க. எபிடூரல் எடுத்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் செஞ்சேன். 5 மணி வரை எல்லாம் சுபம், 5 மணிக்கு டாக்டர் ஸ்டான்சில் செக் பண்ண வந்தார். அப்ப ஹனீஃபாவோட இதய துடிப்பு 200ஐ தொட்டுகிட்டு இருக்கு. மேற்கொண்டு எதுவுமே பேசலை டாக்டர். மறுபடியும் ஃபாரம் எல்லாம் வந்தது. என்ன காரணம்னு தெரியலை. ஆனால் குழந்தையோட இதய துடிப்பு இப்படி மேல கீழ போறது நல்லதில்லை, உங்களுக்கு 8செமீ தான் டைலேட் ஆகியிருக்கு. இன்னும் 5 மணி நேரமாவது உங்களுக்கு ஆகும் இயற்கையா பிள்ளை பிறக்கணும்ன்னா ஆனா அப்படி பிறக்கற குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியிருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் குழந்தைக்கு இதய துடிப்பு தாறுமாறாகும். ஏன் இப்படின்னு ஆராய்ச்சி செய்ய நேரமில்ல, என்னை பொறுத்தவரை இன்னும் 5 நிமிஷத்துல குழந்தை வெளில வந்தாதான் நல்லதுன்னு சொல்லிட்டார். எனக்கு ஒலகமே இருண்டு போன மாதிரி ஒரு ஃபீலிங். இந்த ஆபரேஷனை முதல்லயே நான் செஞ்சிருப்பேனே, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்னெல்லாம் மனசுல தோணுது. இவரும் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு நிக்கறார். டாக்டர் எல்லா ஸ்டாஃபுக்கு ஆபரேஷன் ரூமை ரெடி பண்ண சொல்லிட்டிருக்கார். எல்லாரும் என் கையெழுத்துக்கு மட்டும்தான் காத்துகிட்டிருக்காங்க. கண்ணுல தண்ணியோட கையெழுத்தும் போட்டாச்சு. வேற வழி?
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.( ஃபாத்திர்: 2)
அப்புறம் எபிடூரலை அதிகமாக்கிட்டே என் கால்களை அசைத்து பாக்க சொல்லிட்டிருந்தாங்க. ஆப்ரேஷன் தியேட்டர் வரை அப்படி அசைக்க முடிஞ்சது. அதன் பின் நாந்தான் அசைக்க நினைக்கறேனெ ஒழிய கால் நகர மாட்டேங்குது. பின் இங்க குத்துதா அங்க குத்துதான்னு மரத்துப்போன வயித்துமேல ஒரு நர்ஸம்மா என்னை ஊசியால குத்தி குத்தி பாத்துகிச்சு. பின்ன மருத்துவமனைல வர்ற ஸ்பிரிட் மாதிரி வாசனையிருக்கற எதையோ என் வயிறு முழுக்க தடவுனாங்க. ரெண்டு கைகளையும், கால்களையும் வெல்க்ரோ டேப் வெச்சு என்னை நகர முடியாம செஞ்சாங்க. என்னுடைய தலை மாட்டுகிட்ட ஒரு சேர் போட்டு இவருக்கு தந்திட்டாங்க. என்னுடைய நெஞ்சுக்கு நேரா ஒரு திரைச்சீலை போட்டு ஆபரேஷனை மறைச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்க பேசறேதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். விஜயகாந்த் படங்கள்ல வர்ற மாதிரி சிசர்ஸ் குடு, அது குடு, இது குடுன்னு கேட்டுகிட்டிருந்தார் டாக்டர், நர்ஸெல்லாம் ஓடி ஓடி ஒழைச்சுகிட்டிருந்தாங்க. பின்ன ஒரு 2 நிமிஷம் கழிச்சு சள புள சள புளன்னு கொழம்பு கொதிக்கற மாதிரி சத்தம். நானே புரிஞ்சுகிட்டேன், சரி நம்மளை கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கன்னு. பின்ன கர கரன்னு சத்தம். பெரியண்ணன் பூமிக்கு வந்திட்டார். ஜெர்மி நர்ஸ் அது வரை என் தோள்களை ஆதரவா பிடிச்சிட்டிருந்தவங்க காதுல சொன்னாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, பிள்ளை வெளில வந்திட்டான்னு. அப்புறம் இவரை கூட்டிட்டு போயி அவர் முன்னாடியே குழந்தைய தண்ணி ஊத்தி, எடை போட்டு காமிச்சு, பாதுகாப்பு வளையங்களை மாட்டிவிட்டு எனக்கும் காட்ட கூப்பிட்டு வந்தாங்க. அப்புறம் அவர்கிட்ட சொல்லி பேரீச்சையை சப்பி அதை தடவி விடுங்கன்னு சொல்லிட்டு, தொழுகைக்கு குடுக்கற பாங்கையும் ஓதிட ஞாபகப்படுத்தினேன். அவரும் அதன் பின் நர்ஸரிக்கு போயிட்டார்.
பின்ன சில நிமிஷங்கள்ல ஸ்டேப்ளர் அடிக்கற சத்தம் கேட்டது, சரி தெச்சு முடிச்சிட்டாங்கன்னு நினச்சிட்டேன். பின் திரைச்சீலை எல்லாம் நகர்த்திட்டு டாக்டர் ஸ்டேன்சில் மறுபடியும் வந்து ஆறுதல் சொன்னாரு. என்னதான் நாம் ஒரு முடிவெடுத்தாலும், கடைசி நிமிடத்துல குழந்தைக்கு ஏதாவதுன்னா நாம் ஒடனே சில ஸ்டெப்ஸ் செய்ய வேண்டியிருக்கு, அதனால மனசை போட்டு குழப்பிக்காதீங்கன்னு போயிட்டார்.அதுக்கப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு குளிர், டெல்லில காலைல 5 மணிக்கு கூட அப்படி குளிராது. கைகளெல்லாம் வெட வெடன்னு நடுங்குது என்னால இழுக்க முடியல. என்ன ஆகுதுன்னு கேக்கற நர்ஸுக்கு சொல்ல முடியலை. கால்களும் இன்னும் டேப்லயே இருக்கு. குளிருதுன்னு சொல்றதுக்குள்ள நாக்கு குழறுது. நான் செத்தேன்னு நினச்சது ரெண்டே எடங்கள்லதான். ஒன்னு, அந்த ப்ரொசீஜரப்ப, இன்னொன்னு இந்த குளிரப்ப. இந்த மாதிரி நடப்பது சாதாரணம்ன்னு நினைக்கறேன். ஏன்னா குளினு சொன்னவுடனே நர்ஸ் ஜெர்மி, எங்கிருந்தோ சுட சுட, ஆவி பறக்கற பெட்ஷீட்டுக்கள் கொண்டு வராங்க. கிட்டத்தட்ட 10 பெட்ஷீட் போட்டாச்சு...எல்லாத்துல இருந்தும் ஆவி வெளியாகுது, இருந்தும் குளிர் அடங்கலை. டாக்டர் ஏதோ மாத்திரை போட சொன்னார். போட்டும் நிக்கலை. குளிர்ல இங்க நாங்க போடற கோட்டெல்லாம் அவர் கொண்டு வந்து போட்டுவிட்டார், எதுவுமே வேலைக்கு ஆவலை. குழந்தை 6:24க்கு பிறந்தான். 8:30 வரை இந்த கஷ்டத்தை சகிக்க முடியாம திணறி திணறி சகிக்க வேண்டியிருந்தது. 8 மணிக்கு நர்ஸ் ஜெர்மிக்கு ட்யூட்டி முடியறப்ப அவங்களோட ஏதோ ரெக்கார்டுல எழுதக்கூட நேரமில்லை. எங்ககிட்ட அவசர அவசரமா சொல்லிட்டு கிளம்ப வேண்டிய நிலமை. அந்தளவு என்னை பாக்க வேண்டியிருந்தது. பின் 8:30 மணிக்கு மெதுவா தூக்கம் வருது. அப்பதான் ஒரியாக்காரர் எங்கேன்னு கேட்டா பக்கத்து பெட்டுட தூங்கிட்டிருக்கார். பார்த்து, டாக்டர் யாரும் வந்து அவருக்கும் ஊசி போட்டுரப் போறாங்கன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன். பின் 10 மணிக்கு அம்மி ஃபோன் செய்யறப்பதான் நடந்த எல்லா விஷயமும் சொன்னோம். கேட்டவுடனே அவங்களுக்கு அங்க ஐவி ஏத்த வேண்டியதாயிடுச்சு. எங்க மாமிக்கு சொன்னவுடனே அவங்களும் அழுகை. ரெண்டு பேரும் தனியா இருந்துட்டு இவ்ளோ கஷ்டப்படணுமான்னு. பின்ன மூணு நாள் ஹாஸ்பிடல் வாசம், ஜுஜ்ஜூவுக்குதான் கஷ்டம். தினம் கொஞ்ச நேரம் வந்து பாத்திட்டு போறப்ப, போக மாட்டேன்னு அழுகை, அப்படி இப்படின்னு தேத்தி அவர் கொண்டு போயி விட்டாலும் காரிலிருந்து எறங்க மாட்டேன்னு அழுகை. ஹன்னாஹ் வீட்டிலும் ஒரு நாள் சாயந்திரம் முழுக்க யாருடனும் பேசாமல், விளையாடாமல் ஹன்னாஹ் வீட்டுக்காரர் மடியிலேயெ அழுதழுது தூங்கியிருக்கான். எப்படியோ இதெல்லாம் கழிஞ்சுது. அல்ஹம்துலில்லாஹ். இப்ப ரெண்டு மாசம் ஆகற ஹனீஃபா சிரிச்சு சிரிச்சு வலியெல்லாம் மறக்க வெச்சிட்டிருக்கார். :))
...
 |
ஹனீஃபாவும், ஜுஜ்ஜூவும் :) |
...
...
இருங்க இருங்க போயிடாதீங்க. இந்த இவ்வளவு கஷ்டமான வேளைகளிலும் அடிக்கடி எனக்கு மெயில் செஞ்சு, மெயில்ல கர்ப்பிணிப் பெண்களுக்கான டிப்ஸ், ரெசிபி எல்லாம் தந்து, சுகப்பிரசவம் ஆக ஆறுதலெல்லாம் தந்து, டெலிவரி ஆன பின்னும் ஒரு நாள் எனக்காக் நெடு நேரம் இரவு கண் முழிச்சு சாட் Chat மூலமா ஆதரவு தந்துன்னு...இன்னும் நிறைய நிறைய உதவிகள் செஞ்ச ஒருத்தங்களுக்கு ஒரு அவார்டு தரப்போறேன். நீங்களும் வாங்க. பக்கத்தில இருந்தால் உண்மையாகவே தந்திருப்பேன், அவங்க அன்புக்கு என் து’ஆக்களும், நன்றிகளும். தூரமா இருப்பதால், எப்ப முடியுதோ அப்ப இன்ஷா அல்லாஹ் நானும் உதவிட முயல்கிறேன். யாருன்னு யூகிச்சீங்களா???
..
..
வேற யாரு, நம்ம ஜலீலாக்காதான். அல்ஹம்துலில்லாஹ், அவர்களுடைய அன்பு, அள்விட முடியாதது. அக்கா, இந்த அவார்டு உங்களுக்காகவே. இப்போதைக்கு இதுதான் தர முடிந்தது :( இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு தக்க கூலி தருவானாக. :)
31 comments:
உங்கள் கருத்துக்கள்...