Showing posts with label அப்டேட். Show all posts

ரயில் பெட்டி - 002 (007 மாதிரி ஒரு ரேஞ்சுக்கு போகும்னுதேன் :)



தினம் தினம் சமைக்க ஒன்னு இந்தியாவுக்கு அரை மணி நேரம் ஃபோன் போட்டு குறிப்பு எழுதறது இல்லைன்னா எல்லார் ப்லாகையும் தோண்டி துருவி சமைக்கிறதுன்னு முக்காவாசிப்பேர் (சரிப்பா... நானும்தேன்.... அதுக்கு ஏன் கோவிச்சுக்கிறீங்???) இருக்கிற காலத்துல, வேலைக்கும் போயிட்டு, கிட்டத்தட்ட 4 ப்லாக் எழுதி, ஃபோட்டொ புடிச்சு போட்டு, அதுக்கு அலங்கரிக்க, பரபரப்பான நேரத்திலும் குறிப்பு எழுதி வைக்கன்னு மெனக்கெட்ட, மெனக்கெடும் எல்லோருக்கும் என் வயிறார்ந்த (ஹி ஹி ஹி அனுபவம்!!) வாழ்த்துக்கள். அதிலும், ஆல் இந்தியா லெவலில் ஒரிஜினலாய் குறிப்பு குடுத்து முதல் இரண்டு பரிசையும் பெற்றிருக்கும் என் அன்பார்ந்த ஜலீலாக்காவுக்கு வாழ்த்தோ வாழ்த்து.... அண்மையில் அதிகம் சந்தோஷப்பட்ட விஷயம் இதுதான்க்கா.... பக்கத்தில இருந்திருந்தால் அதற்கும் ஒரு பார்ட்டி குடுங்கன்னு கதவை தட்டியிருக்கலாம்... ஹ்ம்ம்... கொடுப்பினை இல்லை :(

அதே நேரம் நீண்ண்ண்ண்ண்ட நெடுங்காலமாக இல்லாவிட்டாலும் சிறிது காலமாகவே நட்பில் ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஹுஸைனம்மா அக்காவை.................யக்க்க்க்க்க்க்க்காஆஆஆஆ.... இவ்ளோ நாள் பழகியும் ஒரு சமையல் குறிப்பு கூட குடுக்காமல் ஏமாற்றியதால் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

(ஏனுங்.... ஷார்ஜாவிலிருந்து கரண்டி வீசுனா அமெரிக்கா வரை வருமோ???)

--------------------------------------

காலைல 5 மணிக்கு (ஹி ஹி, அதோட ஒன்றரை மணி நேரம் சேர்த்துக்குங்க...) எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சாலும், இரவு 11 மணிக்குள் தூங்க முடிவதில்லை.... கார்ப்பரேட் வேலை பளு, வீட்டு வேலை பளு, என்னை தூக்கிக்கோ என மாலை வந்ததும் கால்கள் பின்னேயே சுற்றும் இரண்டு சுட்டிகளின் பளு என எல்லாம் சேர்ந்து பதிவுலகம் பக்கம் வர விடாமலெ செய்கின்றன. இப்பவும். மதிய லஞ்சில் உட்கார்ந்து வேஃபில் இரண்டு சாப்பிட்டுக் கொண்டே எழுதுகின்றேன். அதுவுமன்றி அண்மைக்காலமாக புதிது புதிதாய் உடல்நலனில் குறைகளின் பேரை சொல்லி கிட்டத்தட்ட தினம் தினம் ஊசி போட வேண்டிய நிலைக்கு போய் இப்பொழுதுதான் மீண்டு வந்து கொண்டுள்ளேன் அதுவும் தாமத பதிவுக்கு காரணம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... சோடா எங்கப்பா???)

---------------------------------------------

உடல் சோர்வு, அதிக தூக்கம், எதிலும் பிடிப்பில்லாமை (இப்படி ஒரு வார்த்தை இருக்கா??) அடிக்கடி காய்ச்சல், உடல் தளர்வு எல்லாம் இருந்தால், உங்கள் வீட்டு பெண்ணை முதலில் தைராய்டு / விடமின் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். தைராய்டு குறையை கண்டுக்காம விட்டா குழந்தைப்பேறின்மை முதற்கொண்டு, கோமா ஸ்டேஜில் போட்டுத் தள்ளும் நிலை வரை வரலாம். நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்க Google நாடாம டாக்டரை நாடுங்க சகோக்களே...

#காலம் கடந்த ஞானம் (அமெரிக்காவுல எங்கயுமே போதி மரம் ஒன்னு காணமே....)
------------------------------

இந்தியர்களின் வீட்டை குறி வைத்து, திருடுவதைப் பற்றி ஹுஸைனம்மாக்கா எழுதியிருந்தாங்க. உண்மைதான். இங்கே எஃப்.பி.ஐ யிலிருந்து கசிந்த ஒரு உண்மை என்னவெனில், இந்த அலங்காரங்கள் எதுவுமில்லாவிட்டாலும், 22 கேரட் இருப்பதை கண்டுபிடிக்கும் கையடக்க ரேடார்கள் இங்கு கிடைப்பதும் ஒரு காரணம். என்ன செய்ய, தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிக்க ஒரு க்ரூப்பாவது இருக்கோணுமில்லை. (இது நான் இதுவரை விசாரிக்காத விஷயமே.... யாருக்காவது விஷயம் தெரிஞ்சா சொல்லுங்க....)

---------------------------------------

அங்கங்க கரண்ட் கட் பத்தி தீவிரமா புயல் பறக்க பதிவுகள் இருந்தாலும், அப்பிடி எழுதறவங்க வீட்டுல கரண்ட் இருந்தா இரவு 11 மணிக்கு உட்கார்ந்து முகப்புத்தகத்துல (மரண மொக்கை!!!) கவித எழுதறாங்கப்பா.... அப்ப என்ன அர்த்தம்??? 

#ஆமி, சரிதானே??? ...........ஹி ஹி .....  :))

--------------------------------

ஜுஜ்ஜூ சில சமயம் கூப்பிட்டால் கூட திரும்பாம ஏதேனும் விளையாண்டு கொண்டிருந்தால், அவனிடம் கோபமாய் ஏன்டா திரும்பலை என்பேன். அவனும், சாரி அம்மீ.... எதுக்கு கூப்பிட்டீங்க என்பான், எனக்கிருக்கும் கோபத்தில், ம்ம்ம்ம்.... பருப்பில உப்பிலைன்னு சொன்னேன் என்பேன்..... அதன் எஃபெக்ட்டாக இப்பவெல்லாம் அவன் நான் கூப்பிடும்போதெல்லாம் பருப்புக்கு உப்பில்லையா என கேட்கிறான்......

#That doesn't mean I am an Angry Bird................!!!!!!!!!!!!!
--------------------------------------------------

அண்மையில் வாழ்வின் இரண்டாவது தடவையாய் பாலகுமாரனின் நாவல் ஒன்று படித்தேன். அதில் மனிதர் அப்பட்டமாய் (ஆண்/பெண் பற்றிய‌)  உண்மைகளை போட்டுடைக்கிறார். சில சமயம் சர்கஸ்டிக்காக தோன்றினாலும், பல சமயம் ஆமாம் போட வைக்கிறது. அதில் ஒன்று.

//பெண்ணொருத்திக்கு...தன் துக்கம் பற்றி, முகவாயில் கை வைத்து வாசல் பக்கம் நின்று பக்கத்து வீட்டுப் பெண் விசாரிப்புக்கு நொந்து கொண்டு பதில் சொல்வதே பெரிய விடுதலை. அப்படி யாரும் கேட்கவில்லையெனில் இதைக் கேட்கக்கூட நாதியத்துப் போயிட்டேனே என தானே புலம்பிக்கொள்வது சிறிய விடுதலை.//

ஹி ஹி ஹி.... எப்படி சார்??????
------------------------------------------------

அடுத்த பதிவு எப்ப்போன்னு எல்லாரும் அழுவக்கூடாது.... ஆமா....  அதெல்லாம் தானா வர்ற விஷயம்... என்ன நான் சொல்றது :))

:))


.

வலை டீவியில் அன்னுவின் பேட்டி....

(இது சுய விளம்பரமில்லை. இந்த நிகழ்ச்சியை வலையுலகினருக்கு அளிப்பது, அன்னு அண்டு கம்பெனி.... ஹி ஹி)


நிருபர்: ஹெலோ மேம்.
அன்னு: யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............... ப்ரொசீட்...

நிருபர்: எப்ப வலைல திரும்ப எழுதப்போறீங்க??
அன்னு: அவ்ளோ பேர் எனக்காக வெயிட்டீஸா?? யூ நோ... நான் இப்ப கூட எழுதலாம்... ஆனா இப்பதான் வேலைல சேர்ந்தேனா... அதுல கம்பெனி மெயிலுக்கு பதில் சொல்லவே நேரம் சரியா போகுது... சோ அதெல்லாம் முடிச்சிட்டு, அடுத்த வாரம் முதல் ரம்ஜானும் வருதே... அதையும் முடிச்சிட்டு எழுதறேன்... அது வரை வெயிட் பண்ணுங்க நேயர்களே...

நிருபர்: அதை நாங்க சொல்லிக்குவோம்... தொடரெல்லாம் எப்ப முடியும்??
அன்னு: இல்லை, தொடரை முடிக்காம இருந்தாத்தான் ‘கெத்’துன்னு...

நிருபர்: என்னது .. ??????
அன்னு:... இல்லை... நினைச்சேன்னு சொல்ல வந்தேன்...

நிருபர்: அடுத்த ரம்ஜான் வரை பதிவே எழுதலைன்னாலும் பதிவுலகம் சந்தோஷமா...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்... அதை நாங்க மக்களுக்கு சொல்லத்தான் இந்த பேட்டி...
அன்னு: GRRRRRrrrrrrrrrrrrrrrrrrrr...........................






===========================================================================
சகோதர சகோதரிகள் அனைவருக்கும், நெருங்கிக் கொண்டிருக்கும், இனிய ரமதான் மாத நல்வாழ்த்துக்கள். :)
ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்

.

.

என்ன சொல்ல

போன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...

வழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும், பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.

தனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

இத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.

பாடங்கள்:
  • உங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே?
  • தன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
  • இந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே!! எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.
  • குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
  • இன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.
 

பிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே!! 


.