இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வாங்க (1)

Thursday, June 14, 2012 Anisha Yunus 2 Comments



என்னடா, இவள் நல்லாத்தானே இருந்தா, இப்ப என்னாச்சு திடீர்ன்னு யோசிக்கிறீங்களா? இது மாதிரி நிறைய பார்த்த்துட்டோம், ஆளை விடுன்னு சொல்றீங்களா? எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க, "நோகாம நொங்கெடுக்க ஆசை"ன்னு. இந்தப் பதிவு அந்த மாதிரி ஆட்களுக்காக இல்லை. ஸாரி. வேற எடத்துல கடை போட்டுக்குங்க. இந்த பதிவு, வீட்டிலிருந்தே கூட கடுமையா உழைக்கணும், நம்ம திறமையை உபயோகித்து சம்பாதிக்கணும், அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு மட்டும். மத்தவங்கெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் ப்ளீஸ். :))


இணையத்துல வேலை செய்யலாம், விளம்பரத்தை கிளிக்கினால் பத்து காசு, நூறு பேருக்கு மெயில் அனுப்பினால் இருபத்தஞ்சு காசு --- என்னங்க இதெல்லாம்? லட்சக்கணக்குல செலவு செய்துதான் 12ம் வகுப்பு வரையோ இல்லை ஏதாவது ஒரு காலேஜ் வரையோ படிக்கிறோம். ஆனால் நோகாம வேலை செய்யணும்னு நினைச்சு இப்படி ராவு பகலா விளம்பரங்களை கிளிக்கி (அதன் மூலம் ஏகப்பட்ட வைரஸையும் கம்ப்யூட்டரில் ஏற்றி) மிஞ்சி மிஞ்சி போனால் 25 ரூபாய் அல்லது 50 ரூபாய் சம்பாதிப்போமா, ஒரு வாரத்துக்கு / ஒரு மாதத்துக்கு?

இதனால் எவ்வளவு கரண்ட் செலவு, இன்டர்நெட் பில் செலவு, உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை செலவு. யோசிச்சு பாருங்க சகோ...


இப்ப, உன்னுடைய பதிவுல மட்டும் சென்ன புதுசா சொல்லப்போறே? அரைச்ச மாவுதானே...? அப்படின்னு நினைக்கிறவங்க.... ஏற்கனவே சொன்னேன், ஒன் ஸ்டெப் பேக் ப்ளீஸ். :)

இந்த பதிவு திறமையுள்ளவர்களுக்கு மட்டும். வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல், அதே நேரம் திறமைகளை வைத்துக் கொண்டு தவிக்கும் தாய்மார் / தந்தைமார் / சகோதரர்(ரி)மார்களுக்கு மட்டும்.

என்னென்ன திறமை தேவை? 

நாங்க என்ன கம்ப்யூட்டரா படிச்சோம்? அப்படிங்கறவங்களுக்கு...இல்லை சகோஸ்... உங்களுக்கு கைவேலை தெரியுமா? மரவேலை தெரியுமா? விதவிதமாக தைக்க தெரியுமா? சோப்பு போட....ஸாரி ஸாரி... சோப்பு தயாரிக்க தெரியுமா? அட... பேப்பர் பேக், அழகிய மெழுகுவர்த்தி என என்னென்ன தெரியுமோ, அதெல்லாம் உங்களுக்கு சம்பாத்தியம் தரும், பொறுமை, விடா முயற்சி, உலகத்தரமான பொருள், கொஞ்சமேனும் ஆங்கிலம், இதை விட அதிகமாக தன்னம்பிக்கை...இதெல்லாம் இருந்தாலே போதும். அதுக்காக கம்ப்யூட்டர் கத்துகிட்ட நாங்க என்ன செய்யன்னு கேட்காதீங்க... அவங்களுக்கும் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழி உண்டு சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

முதலில் நாம் பார்க்க இருப்பது தையல், எம்ப்ராய்டரி, கைவேலை, போன்ற இத்யாதி திறமைகள் கொண்டவர்களுக்கான வேலை வாய்ப்பு. அடுத்த பாகம் போவதற்கு முன்னாடி முதல் விஷயமாக ஒரு நல்ல கேமரா தயார் செய்துக்குங்க. இந்த தளத்துல நிறைய டிப்ஸ் இருக்கு உபயோகப் படுத்திக்குங்க :)







கெட்... செட்... ரெடி....


.

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

பெற்றோரா ??? இறைவனுக்கா ????

Thursday, June 14, 2012 Anisha Yunus 10 Comments

 

 இறைவனுக்கு குழந்தை தேவையா?இறைவனுக்கு என்ன தேவை இருக்கக்கூடும்? இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா? இறைவனுக்கு பெற்றோர் இருக்கலாமா?

யோசித்துப் பாருங்கள் மேற்கண்ட கேள்விகளை...

ஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா? அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா? உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும்? தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது? அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே? நிகழவே முடியாத நிலையாகிறதே? எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல. அல்லாஹ், குர்'ஆனில் கூறுகின்றான்,
"அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்'ஆன் 112:1)"

இறைவன் சோர்வடையக் கூடுமா? இறைவன் மறக்கவோ அல்லது தவறிழைக்கவோ முடியுமா?

"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (குர்'ஆன் 2:255)"

இறைவனுக்கு ஈடு / இணை உண்டா?

"(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)"

நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் உண்டா?

நாம் முன்னரே சொன்னது போல், நம்மை சுற்றியுள்ள பொருட்களைப் பார்ப்போம். அவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நோக்கம் இல்லாமல், அதன் இருத்தலுக்கான ஒரு காரணம் இல்லாமல் இருக்கிறதா? நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே? ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா? இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா? பகுத்தறிவுள்ள எந்த மூளையும் இதை ஒத்துக் கொள்ளும், இவ்வுலகில் வாழும் நமக்கு ஒரு நோக்கம் / காரணம் இருப்பதை.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை யார் முடிவு செய்வது? நாமா அல்லது நம்மை படைத்தவனா?

சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் எழுதுகோலையே எடுத்துக் கொள்வோமே? அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன? அதன் உண்மையான நோக்கம், "எழுதுவது" அல்லது "எழுத உதவுவது". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது? முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா? எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே? நம் வாழ்க்கையின் சரியான / உண்மையான நோக்கம் என்ன என்பதை நம்மைப் படைத்த இறைவனிடமிருந்து மட்டுமே அறிய முடியும்.

வாழ்வின் நோக்கம் என்ன?

இதற்கான பதிலை இறைவன் குர்'ஆனில் தெளிவாக கூறுகின்றான்,
"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(குர்'ஆன் 51:56)"

இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என இறைவன் ஏன் எதிர்பார்க்கிறான்?

ஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் குழந்தை தமக்கு கட்டுப்பட்டு வளர வேண்டும் என எதிர்பார்ப்பது நிதர்சனம். ஒரு ஆசிரியர், தம மாணவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சாதாரணம். அதே ரீதியில்தான் நம்மைப் படைத்த இறைவனும், அவனை மதித்து, அடி பணிந்து நாம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறான். வணக்கத்திற்குரிய தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது, எனவே நாம் அவனை வணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இன்னும் வேறு விதமாக சொன்னால், நம் வாழ்வே ஒரு சோதனைதான். நாம் இறைவனை அஞ்சி, வணங்கி நடக்கிறோமா என பரீட்சித்து பார்க்கும் ஒரு சோதனைக்களம்தான் இவ்வுலக வாழ்வு. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (குர்'ஆன் 67:2)"


இனி, நபிமார்கள் என்றால் யார்?
.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

'முஸ்லிம்' என்றால் யார்?

Tuesday, June 12, 2012 Anisha Yunus 3 Comments




பல தெய்வங்கள் இருப்பின் ??????
 இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம். எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். அதாவது ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதை அடிபணிந்து நடப்பவரையே நாம் முஸ்லிம் என்கிறோம்.

பாடல்கள் பாடும் ஒருவரை நாம் 'பாடகன்' என்றே அழைக்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், எந்த மொழி பேசுபவராயினும் சரி. அது போல், எந்த ஒரு மனிதன், நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரை நாம் முஸ்லிம் என்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், அவரின் தோலின் நிறம் எப்படி இருப்பினும், அவர் எந்த மொழி பேசினாலும், அவர் முஸ்லிமே!!

இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு நபருக்கு அப்துல்லாஹ் எனவோ, இப்ராஹீம் எனவோ பெயரிருப்பதாலோ அல்லது அந்த நபர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ மட்டுமே அவர் முஸ்லிமாகி விட முடியாது. 'முஸ்லிம்' என்னும் பட்டம் வாரிசுரிமை போன்றதல்ல; மாறாக யாரொருவர் நம்மைப் படைத்த இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரையே குறிக்கும்.

குர்'ஆன் என்றால் என்ன?

ஏக இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி அவர்களுக்கு தரப்பட்ட இறுதி இறை வேதமே குர்'ஆன் ஆகும்.  முழு குர்'ஆனும் இறைவனின் வாக்கன்றி வேறில்லை. குர்'ஆனில் முஹம்மது நபியின் வார்த்தைகள் இல்லவே இல்லை. அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்கென்றே குர்'ஆன் உள்ளது, எனினும் அதன் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும் உள்ளது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் (இறைவன்) கூறுகின்றார், 
 "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (குர்'ஆன் 4:82)

இஸ்லாத்தின் அடிப்படை செய்தி என்ன?

இஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன? "படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே" என்பதே அது. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், 
 "இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்." (குர்'ஆன் 41:37)

வணக்கம் - என்பது இங்கே சடங்குகள் செய்வதையோ மந்திரங்கள் சொல்வதையோ குறிக்கவில்லை. மாறாக வணக்கம் எனபது இறைவனுக்கு அடிபணியும் ஒரு ஒழுக்கம், மனிதனின் ஒவ்வொரு காரியத்திலும் அந்த ஒழுக்கத்தை பிரதிபலிப்பதே வணக்கமாகும்.

இறைவனுக்கான குணாதிசயங்கள் என்னென்ன?

இஸ்லாம் நமக்கு கூறும் இறைவனின் குணாதிசயங்கள் என்னவெனில்:
1 இறைவன், ஏகன்.
2.இறைவனுக்கு தேவைகள் ஏதுமில்லை (அல்லது) தேவைகளற்றவனே இறைவன்.
3.இறைவனுக்கு பெற்றோரோ, மனைவியோ, குழந்தைகளோ கிடையாது.
4.இறைவனின் இயல்புகளான ஆற்றல், ஞானம், மன்னிப்பு போன்றவற்றில் அவனுக்கு நிகர் வேறெவருமில்லை.
5. இறைவனுக்கு சோர்வில்லை.
6. இறைவனுக்கு மறதியில்லை.
7. இறைவன் தவறு செய்பவனல்ல.
8.இறைவன், மக்களனைவரையும் நேசிப்பவனே அன்றி குலம், கோத்திரம் , சமூகம், வம்சம் போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பவனல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான், "(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)

பல இறைவன்கள் சாத்தியமா?

உதாரணத்துக்கு ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அதிபர்களோ, அல்லது ஒரு கல்விக்கூடத்தில் இரண்டு தலைமையாசிரியரோ இருப்பது சாத்தியமா? பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம்? ஒரு வாகனத்துக்கு இரு ஓட்டுனர்கள் போன்ற உதாரணம்தான் அது. ஒரே வாகனத்தை இருவரும் ஓட்டும்போது, அவர்கள் எத்தனை திறமைசாலியாய் இருப்பினும் விபத்து ஏற்படுவது உறுதி.

"(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்." (குர்'ஆன் 21:22) "


இனி, பெற்றோரா? இறைவனுக்கா????


.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...