டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமை -1

Saturday, June 27, 2015 Anisha Yunus 0 Comments

பொதுவாகவே ரமழானில் என் வாசிப்பு வெகுவாக குறைந்து போய் விடும். மற்ற நாட்களில் விடுபட்ட இபாதத்துக்களையும், இன்னும் செய்ய விரும்பும், அடைய விரும்பும் இலக்குகளுக்காகவும் இபாதத்துக்களுக்காக மட்டுமே என இந்த மாதத்தினை தேர்வு செய்வது வழக்கம். எனினும் இந்த வருடம், ஒவ்வொரு முறையும் தொலைபேசும்போது இன்று என்ன வாசித்தீர்கள் என்னும் Lafees Shaheed இன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கடத்துவது மிக அசௌகரியமாக இருந்ததால், வேறு வழியே இன்றி  இந்த மாதத்திலும் வாசிப்பிற்கென கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

தய்யிப்.

 எனக்கு டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமையின் பரிச்சயம் 2008க்களில் ஆரம்பித்தது. அப்பொழுது அதிக அளவு பாகிஸ்தானி நட்பு வட்டம் இருந்தது ஒரு காரணம், ICNA Sisters wingஇல் இருந்த ஈடுபாடு இன்னொரு காரணம். இதனால் டாக்டர் இஸ்ராரின் குர்’ஆன் விளக்க உரைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என் கணிணியில். அவருடைய பின்புலம்

அறிவியலும், மருத்துவமும் என்பதால், ஆங்கிலமும் தூய உருதூவும் கலந்து அவர் தரும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் அனைத்தும், மறுத்து கேள்வி எழுப்ப முடியாதவையாய் இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டு விட்டு சில சமயம் அதனை கவனமாக செவிமடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சரிபார்க்கவே நேரம் போய்விடும்.


அன்னாரின் target, elite and educated families of Pakisthan என்றிருந்ததாலோ என்னவோ, அவரின் உரைகள் எல்லாம் தகவல் சார்ந்த அடித்தளத்தை விடவும், மனித, சமூக உளவியல், சார்ந்த அடித்தளத்தை ஒற்றியே அமைந்திருக்கும். அவரின் குரலும், உடல்மொழியும், எடுத்து வைக்கும் வாதங்களும் என எல்லாமே அவரை ஓர் கர்ஜிக்கும் ஆளுமையாகத்தான் மக்களுக்குக் காட்டியது. அதிக அளவு விமர்சனத்துக்கும் உள்ளான உரைகள் அவருடையது.
அவரின் அதீத வேகம், விவேகம், பல்துறைப் புலமை இவற்றின் காரணமாகவே இந்த சமூகத்தின் பெரும்பிணியான ‘புறக்கணிப்பு’ என்னும் அங்கீகாரம் இவருக்கும் தரப்பட்டதோ என எண்ண வைக்கும். ஆம், பின்னே உர்தூவில் அவர் எழுதிய 64 நூற்களில் 10 புத்தகங்கள் கூட பிறமொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது??? 9 புத்தகங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. அதில் ஒன்று, ‘The responsibilities muslim owe to the quran'. அதனின் தமிழாக்கமே இந்தப் பதிவின் நோக்கம்.
க்ஹைர், புத்தகத்திற்குப் போகும் முன் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் டாக்டர் இஸ்ரார் அவர்களைப் பற்றி. எனக்குத் தெரிந்து அன்னாரைப் பற்றி இன்னும் தமிழில் ஒரு சிறு அறிமுகப் புத்தகம் கூட இல்லை. அவர் இறந்து ஐந்து வருடங்கள்தானே ஆகிறது அதற்குள்ளாக கிடைக்குமா என்கிறீர்களா.... அதுவும் சரிதான்.
=====================
டாக்டர் இஸ்ரார் இன்றைய இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஹிஸார் என்னும் சிற்றூரில் 1932இல் பிறந்தார். வளர்ந்ததே இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்காலத்தில் எனும்போது அதன் தாக்கம், அந்தக் காலத்தில் ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கின் தாக்கம் என எல்லாமே மிக அதிகமாகவே அவரை பாதித்திருந்தது, பிற்காலத்தில் ஒரு இராணுவ கட்டமைப்பில் தன்ஸீமே இஸ்லாமினை உருவாக்கும் வரையிலும் கூட.
அடிப்படையில் ஆங்கில மருத்துவராக பட்டம் பெற்றிருப்பினும், 1965இல் லாஹூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இஸ்லாமியக் கல்வியில் பட்டம் பெற்றார். மௌலானா அபுல் அலா மௌதூதியின் குர்’ஆன் விளக்கவுரைகளே இஸ்லாமியப் பணியில் டாக்டர் இஸ்ரார் காலடி எடுத்து வைக்கக் காரணமாயிருந்தது என்றால் அது மிகையல்ல. ஒரு மாணவராக டாக்டர் இஸ்ரார் அவர்கள் யாரிடமுமே முறையான மார்க்கக் கல்வி கற்கவில்லை எனினும், அல்லாமா இக்பால், டாக்டர் முஹம்மத் ரஃபியுத்தீன், மௌலானா ஹமீதுத்தீன் ஃபராஹி, மௌலானா அமீன் அஹ்ஸான் இஸ்லாஹி என மிக நீளமான பட்டியல் உண்டு, இவருக்குள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் என. மௌலானா அபுல் கலாம் ஆஸாதும், முஹம்மத் அலி ஜின்னாஹ்வும் அவர்களில் அடக்கமே.

மௌலானா மௌதூதியை தன்னுடைய மானசீக குருவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரகடனப்படுத்திய அதே வேளையில் அவரின் எல்லா கருத்துக்களுடனும், மார்க்க நிலைப்பாடுகளுடனும் டாக்டர் இஸ்ரார் ஒத்துப் போகவில்லை என்பதும் மிக உண்மை. மௌலானா மௌதூதியால் ஆரம்பிக்கப்பட்ட ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்துக்கும், டாக்டர் இஸ்ரார் அஹ்மதால் ஆரம்பிக்கப்பட்ட தன்ஸீமே இஸ்லாமிக்கும் இடையில் உள்ள செயல்பாடு ரீதியான, கொள்கை ரீதியான, கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்களே போதுமானவை அவர்களின் இருவரின் கோணங்களையும் அறிய.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், முஸ்லிம் உம்மத்தின் சீரமைப்பிற்கும், புனர் நிர்மாணத்திற்கும் அரசியல் அங்கீகாரமும், பொது அரசியலில் பங்களிப்பும் அவசியம் என்பது மௌலானா மௌதூதியின் வாதம். முஸ்லிம் சமூகம் தான் இழந்த அங்கீகாரத்தை, அதிகாரத்தை திரும்பப் பெற, ஒவ்வொரு தனி மனிதனின் ஈமானையும் மீளாய்வு செய்வதும், தனி மனித இஸ்லாத்தில் பூரணம் பெற விழைவதுமே அவசியம் என்பது டாக்டர் இஸ்ராரின் வாதம். ஆனால் மாணவப்பருவத்தில் டாக்டர் இஸ்ராரும் ‘இஸ்லாமிய தேசியம்’ என்றொரு கொள்கையைத் தாங்கிப் பிடித்திருந்தார் என்பதையும், வயது/காலம்/சூழல் போன்ற காரணிகளின் பக்குவத்தினால் அரசியலில் கால் வைக்கும் முன் சுயசீர்திருத்தமே முக்கியம் என்னும் கொள்கைக்கு மாறிவிட்டிருந்தார் என்பதையும் கவனம் கொள்ளவேண்டும். இந்த மாற்றங்களைப் பற்றியும் உள்ளதை உள்ளபடி டாக்டர் இஸ்ரார் அவர்கள் பல கேள்வி-பதில் பேட்டிகளிலும் கூறியதுண்டு. (Please correct me here, if am wrong.)

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் வகிபாகத்தை வைத்தும், பெண்களைப் பற்றிய மார்க்கப் பார்வையிலும் மிகப் பழைமைவாத கருத்துக்களே டாக்டர் இஸ்ரார் அஹ்மதுடையது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தன்ஸீமே இஸ்லாமி வெறுமனே ஆண்களுக்கான அமைப்பாக இருந்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. (இப்போ இருக்கும் எல்லா இஸ்லாமிய அமைப்புக்களிலும் மட்டும், முஸ்லிம்களாலான அரசியல் கட்சிகளிலும் மட்டும் பெண்களுக்கான அங்கீகாரம் என்னவாய் இருக்கின்றது என ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது..... சொல்லிட்டேன்!!!) எனினும் எங்கும் எப்போதும் தன்னுடைய இஸ்லாமிய அறிவுத்தேடலுக்கு விதை மௌலானா மௌதூதியின் எழுத்துக்களே என்பதை அங்கீகரிக்க டாக்டர் இஸ்ரார் அவர்கள் எப்போதும் தவறியதில்லை.

சமூக ரீதியாக, தப்லீக் ஜமா’அத்தின் அங்கத்தினராகத்தான் அவரின் பணி ஆரம்பித்தது என்றாலுங்கூட பிற்பாடு ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தில் இருந்து கருத்து மோதலின் காரணமாய் பிரிந்து தன்ஸீமே இஸ்லாமி என்னும் அமைப்பை நிறுவியது. அதே காரணத்தை முன் வைத்து கிலாஃபத்தினை மீட்டெடுப்போம் என தஹ்ரீக்கே கிலாஃபத் என இன்னுமோர் அமைப்பை உருவாக்கியது என டாக்டர் சாஹிபின் சமூகப் பங்களிப்புக்கள் அளப்பரியது. Controversyக்களும்..!!

வானொலியையும், தொலைக்காட்சியையும் இஸ்லாமிய விளக்கவுரைகளுக்கான ஒரு சாதனைக் களமாய் மாற்றிய பெருமையும் டாக்டர் இஸ்ரார் அஹ்மதிற்கே உண்டு. பல்வேறு ஒலி/ஒளித் தொடர்கள் மட்டுமன்றி புகழ் வாய்ந்த ஆங்கில, உர்தூ பத்திரிக்கைக்களிலும், நாளிதழ்களிலும் பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகளும் எழுதிய பின் சொந்தமாய் பத்திரிக்கையும் நடத்தியுள்ளார். மார்க்கத்தை எத்தி வைக்கவும், சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், கடைசி காலத்தில் குர்;ஆனுடன் தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய பாலத்தினை சரி வரக்கட்ட வேண்டிய அவசியத்தை, வழிமுறையை எத்தி வைப்பதற்காகவும், உறங்கிக்கொண்டிருக்கும் உம்மத்தை எழுப்பி விடவும் என டாக்டர் இஸ்ரார் அஹ்மத்தின் கால்கள் பாயாத இடமே இல்லை எனலாம். Kinda, You name it, and he is there already. எனினும் ஏற்கனவே பல ஆளுமைகளின் வாழ்வைப் படித்தபோது மனக்கண்ணில் தோன்றியதுதான், அன்னாரின் விடயத்திலும் தோன்றியது, in this community, gifted minds are pure show stoppers; it is cursed to be a brainchild in this Ummah. Nothing else. Period. Subhanallaah.

Anyways, கிட்டத்தட்ட அறுபது வருடத்திற்கும் மேலான பொது, சமூக, மார்க்கச் சேவைகள் புரிந்த பின் ஏப்ரல் மாதம் 2010இல் டாக்டர் இஸ்ரார் அவர்கள் இறைகட்டளையை ஏற்று அவன்புறம் திரும்பிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். இன்னமும் அவரின் நூல்களில் கால் பங்கு கூட முழு சமுதாயத்திடமும் போய்ச் சேரவில்லை. சேர்ந்திருக்கும் நூற்களிலிலிருந்து வாசிக்கக்கிடைத்த ஒரு நூலின் விமர்சனத்தை, அடுத்த பதிவில் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
வஸ் ஸலாம்.

( குறிப்பு - டாக்டர் இஸ்ராரின் அறிமுகம் பெரும்பாலும் இணைய தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. தவறிருப்பின் சுட்டிக்காட்டவும். மிக்க நன்றி. )

0 comments:

உங்கள் கருத்துக்கள்...