Showing posts with label குழந்தைகள். Show all posts

பல்லிடுக்கில் போராளிகள்...


.
கற்களுக்கு அஞ்சி
தோட்டாக்களுடன் கைகுலுக்குகிறோம்

.
காயங்களுக்கு அஞ்சி
கொலைகளை முத்தமிடுகிறோம்

.
விழிகளைச் சந்திக்க
திராணியற்று
வேஷங்களை
மேடையேற்றுகிறோம்

.
விரியும் முன்
சுருளும் மலர்களை
குப்பைக்கூடையின் உள்ளே
கசங்கிய காகிதமாய்ப்
புதைக்கிறோம்

.
சுயத்தை உள்ளங்களில்
பூட்டி வைத்து
பல்லிடுக்கில் போராளிகளாய்
கொக்கரிக்கிறோம்

.
எம்மவர் யாருமில்லையே
கிசுகிசுத்துக்கொள்கிறோம்

.
இறப்பும் இழப்பும்
எண்களாகின்றன

.
நரிகளை
இறையாக்குகிறோம்.

.
ஆடுகள்
இரையாகின்றன.



.
#‎நான்‬
‪#‎Thoughts‬ over ‪#‎Palestine

புன்னகைகள்

 
 
புன்னகைகள்
புரியப்படுகின்றன

வாழ்வாக,
சாபமாக,

துயரமாக,
சுமையாக,

புறக்கணிப்பாக,
கரிசனமிக்கதாக,

அன்பின் விளைவாக,
அலட்சியத்தின் பரிசாக,

சொல்ல ஏதுவுமில்லா
தருணங்களில்
மௌனத்தின்
சாவியாக,

வெறுமையாக,
பசுமையாக,

ஏதேனும் ஓர் வடிவைத் தாங்கியபடி
புன்னகைகள்
புரியப்படத்தான் செய்கின்றன.

வறண்ட காணியின்
வேரற்ற பெருமூச்சாய்
வெளிப்படும் ஒரு புன்னகை -

ஈரம் தேடும்
பிஞ்சுக்கண்களுக்கு
வாழ்வின் அர்த்தத்தை
மீட்டுத் தரும் என்றால்,

விட்டுச் செல்வோமே
வெறுமனே ஓர்
புன்னகையை...
 
# Deepதீ

இதமாய்... இதமாய்...


தீயின்
கருநாக்கு
தழுவி
நிற்கின்றது.

கண்ணீரின்
ஆழிப்பெருவலை
மூச்சை உள்ளடக்கும்
பெருமுயற்சியில்
களைக்கின்றது.

மாயையின்
பெருங்குரல்கள்
செவியை அடைத்தபடி...

உண்மையின்
உலர்நாக்கு
சப்தத்தின் முகவரியைத்
தொலைத்தபடி...

யுகங்கள் முழுதும்
அக்கினிக்கு
தாரைவார்த்து
தொலைந்து போகின்றேன்
நான்...
அணுஅணுவாய்,
செதில் செதிலாய்,

சாம்பலாய்ச் சரிந்தேன்
இனி
துயரில்லை,
துன்பமில்லை,
என இன்புறும்
வேளையில்,

மீண்டும்
வருகின்றாய்
உன் பிஞ்சு விரல்களால்
மீட்டு என்னை....

இரக்கமற்ற இவ்வுலகிற்கு
இதமாய்....
இதமாய்...

#Deepதீ

அந்த ஜன்னல்...

(*சிறுகதை முயற்சி)


எப்பொழுதும் போல முன்னதாகவே கிளம்பி விட்டேன் அந்த அலுவலகத்திற்கு. எல்லா “தொழில்நுட்ப பூங்கா” கட்டிடச் சிறைகளைப் போலவே அந்தப் பூங்காவும் இருந்தது. வழக்கம் போல், என் இடத்திலிருந்து அந்தப் பூங்காவை தேடுவதை விடவும், பூங்காவினுள் அந்த அலுவலகத்தைத் தேடுவது மிகக் கடினமாக இருந்தது.

மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது. நான் பத்தரை மணிக்கே வந்திருக்க வேண்டும். என் தைராய்டையும், அதன் பெயரைச் சொல்லியே காலம் தாழ்த்தும் சோம்பேறித் தனத்தையும் நொந்து கொண்டே வாகனத்தை பார்க் செய்துவிட்டு, கீழ் தளத்தில் சென்று விசாரித்தேன். ‘உள் நுழை’ அட்டையைப் பரிசோதித்த பின் நான்காவது மாடி, இடது புறம் உள்ள மின்தூக்கியில் (elevator) ஏறினேன். ஒன்று. இரண்டு.. மூன்று... நான்கு.... தளம் வந்து விட்டது. கதவுகள் திறந்ததும், மீண்டும் ஒரு முறை தேவையான ஆவணங்கள் எல்லாம் சரியாய் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். எதனையோ இழந்த வலி ஒன்று மின்சாரம் போல் தாக்கிச் சென்றது. நொடியில் அதிலிருந்து மீண்டு மீண்டும் தோள்ப்பையை பூட்டிவிட்டு, வலது புறம் நோக்கினேன். வாயிற்காப்பாளர்கள் குளிர்ந்த வரவேற்பறையில் விறைத்த சீருடையில் கறிக்குதவாத எதோ ஓர் விஷயத்தை மென்று கொண்டிருந்தார்கள். இங்கேதான் செல்ல வேண்டும். ரோட்டைக் கடக்கும் முன்னர் இரு பக்கமும் பார்ப்பது போல் என் கண்கள் தானாக என் இடப்புறத்தை நோக்கியும் சென்றன. அது...

வியர்த்தது எனக்கு.
கால்களின் அடியில் பூமி பறிக்கப்பட்டது போலிருந்தது.
கண்களின் உள் சுரப்பிகள் வேலைநிறுத்தம் செய்து விட்டதாக நினைத்திருந்தேனே... இது என்ன? என் கண்கள் நீரினால் நிரம்புகிறதே...
மின்னல் ஒன்று என்னை வெட்டி, இன்னும் என்னைக் கடக்காமலே உயிர் அனைத்தையும் உறைய வைக்கின்றதே....
நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...

---------- ---------- ---------- ---------- ----------

“...எல்லாம் சரியாய் இருக்கிறதா?”
“ஆமாம் அய்யா....ஆமாம்....எல்லாம் சரியாக இருக்கிறது.
அங்கே கூட யாரும் இத்தனை காகிதங்களையும் கேட்க மாட்டார்கள், உங்கள் தொல்லை தாங்க இயலவில்லை...”

“உன் மறதியைப் பற்றி எனக்குத்தானே தெரியும்...”
”சரி விடுங்கள்... குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். பால் ஃப்ரிட்ஜில் இருக்கிறது. பாட்டில்களைக் கழுவி வைத்துள்ளேன். கொஞ்சமாக சூடாக்கி தந்தால் போதும். சர்க்கரை சேர்த்தாதீர்கள். மதியம் வந்து சாப்பாடு வைத்தால் போதும்தானே? அதற்குள் பசித்தால் ஃபிரிட்ஜிலிருக்கும் எதையேனும் சாப்பிடுங்கள். சரியா...”

“சரி...சரி... என்னைப் பற்றியே பேசிக்கொண்டு முதல் நாளே தாமதமாக செல்லாதே... வழி நினைவிருக்கிறது அல்லவா.... என் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் கொண்டு வந்து விட்டிருப்பேன்...”
“இல்லை இல்லை.... இப்பொழுதுதான் கொஞ்சம் தேறியுள்ளீர்கள். அதுவும் மழை வேறு பெய்து கொண்டே இருக்கிறது, ஓய்வெடுங்கள். இரண்டு நிமிட தூரம்தானே அலுவலகம் வந்து விடுவேன் உடனே... சரியா...”

“சரி... பார்த்து மெதுவாக டிரைவ் செய்.”
“ம்ம்...ஓக்கே...பை..”

அது ஒரு மழைக்காலம். சிகாகோவின் மழைக்காலம் அவ்வளவு ரம்மியமானதல்ல எனறாலும், நாங்கள் வாழும் நேபர்வில் எனும் மிகச் சிறிய கிராமத்தில் உற்சாகம் தரும் காலம். ஒவ்வொரு நகரிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத் தடாகங்கள், இயற்கையாக ரோட்டின் அருகேயே உள்ள கால்வாய்கள், சில மணி நேரப் பயணத்திலேயே மணிக்கணக்கில் பயணம் செய்தாலும் தீராத நெற்பயிர்-வயல்கள் என மனம் மயக்கும் அழகிய கிராமம். சிகாகோ நோக்கிச் செல்பவர்களைக் கூட, டவுனுக்கு போறீங்களா என்றுதான் கேட்பார்கள். அன்பும், பண்பும் மிக்க அழகிய குக்கிராமம். அங்கே மூன்றாண்டுகள் வசித்து, குழந்தை அப்துலும் பிறந்த பின் வேலைக்குச் செல்லும் தேவை ஏற்பட்டது. அவரின் அலுவலகத்திலேயே வேலை கிட்டியது இன்னும் வசதியாகிப் போனது. இன்றுதான் சேர வேண்டும். அதற்குள் இவருக்கு சின்னம்மை தாக்கிவிட்டது. ஒரு வாரமாக அவர் படும் பாடு மிகக் கடினமாக இருந்தது. வீட்டில் வெளியில் என என் வேலையும் கூடினாலும், அவரின் சட்டென மெலிந்த உடலும் சுமையைக் கூட்டியது. எனினும், முதல் நாளே விடுமுறை கேட்கவேண்டாம் என்றதால் வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

அதோ, அந்த வெஸ்ட்ப்ரூக் வளைவில் திரும்பியதும் அலுவலகம். அந்த வீதி முழுக்க எங்கள் அலுவலகமே பலப் பிரிவுகளாக நிறைந்துள்ளது. அதில் மூன்றாவது கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் என் கேபின். முதல் நாள் என்பதால் மனிதவளத் துறையினரிடம் சில பல வேலைகள் இருந்தன. எல்லாம் முடித்துக் கொண்டு வரவே பத்தரை மணி என்பது பத்தேமுக்கால் ஆகிவிட்டது. முதல் தளத்தில் இருந்த ஒரு அமெரிக்கப் பென், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதால் ஒவ்வொரு தளத்தையும், அதிலுள்ள ஒவ்வொரு இடத்தையும், எல்லா துறைகளையும் சுற்றிக்காட்டி விட்டு இரண்டாம் தளத்தில் என் சீட் எதுவென்றறிந்து அது வரை கையோடு அழைத்து வந்து விட்டார். அடுத்த பத்து நிமிடங்களில் மேனேஜர் கென் டார்பி, மிக்கேல், ஜான், ஷுபா, ஆஸ்டின் என என்னுடன் வேலை செய்யும் அனைவரையும் அறிமுகம் கொண்டு அளவளாவ ஆரம்பித்தாயிற்று.

மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்ல அலுவலகத்திலிருந்து இரண்டே நிமிடங்கள்தான். சென்றதும் எலெக்ட்ரிக் குக்கரில் அரிசியிட்டு, அளவாக ரசம் செய்து, மைக்ரோவேவிலேயே சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அலுவலகம்.

மதியம் காஃபி குடிக்கும் போதுதான் கவனித்தேன். என் கேபினை ஒட்டியிருந்த அந்த ஜன்னலை. அழகிய ஜன்னல். அதை விட அழகு, அங்கே அமர்ந்து ஓய்வாக காஃபி குடிப்பதற்காக போடப்பட்டிருந்த பார் நாற்காலிகளும், ஒரு வட்ட மேஜையும். அதை விடவும் அழகு, அந்த ஜன்னலின் வழி தெரியும் காட்சி.

சில நாட்களிலேயே அந்த ஜன்னலுக்கும் எனக்கும் சொல்லப்படாத ஓர் உறவு உண்டாகிப் போனது. மகிழ்வோ, வருத்தமோ, அந்த ஜன்னலின் அருகில் உள்ள சேரில் அமர்ந்து, வெளியே தெரியும் தொலைபேசி டவரையும், வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும், பனியிலும், வெயிலிலும், இலையுதிர்காலத்திலும் அழகை இழக்கவே இழக்காத வரிசையாய் வீற்றிருக்கும் பைன் மரங்களின் வசந்தத்தையும் ரசித்துக்கொண்டே இருப்பேன். ரம்மியம். ரம்மியம். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அங்கிருந்து பார்த்தால் என் ரேவ்4 தெரியும். கடும் பனி இருந்தால் மட்டுமே அருகில் இருக்கும் பார்க்கிங் கட்டிடத்தினுள் நிறுத்துவேன். இல்லையெனில், திறந்த வெளியில் என் ஜன்னலுக்கெதிரிலேயே தெரியும்படிதான் நிறுத்தியிருப்பேன். “என்றைக்காவது ஒழுங்காக பார்க் செய்கிறாயா, என்றைக்கும் கோணலாகத்தான் இருக்கிறது” என்பார் அவர். “என்னுடையது எனத் தனியாகத் தெரிய வேண்டாமா...” எனத் தோல்வியை மறைக்க ஒரு நகைச்சுவையை துணைக்குத் தேடுவேன். வாழ்க்கை மிக அழகியதாக இருந்தது. நாட்கள் ஓடியதே தெரியவில்லை. வருடங்கள் ஓடியது. என் வாழ்விலும், வசந்தம், வெயில், பனி, என எல்லாம் முடித்து இலையுதிர ஆரம்பித்திருந்தது.

அப்துலுக்குப் பிறகு ஹீராவும் வந்து விளையாட ஆரம்பித்திருந்தாள். ஒட்டுவதற்குப் பதில் கண்ணாடியில் விரிசல் கூடிக்கொண்டே போனது. ஒவ்வொரு மதியமும், அந்த ஜன்னலிடம் என் ஆசை, நிராசை, சுகம், துக்கம் என எல்லாம் சொல்வதே வேலையானது. கூடிய விரிசல்கள் எல்லாம் சேர்ந்து வாழ்க்கைக்கண்ணாடியை பதம் பார்த்தன ஓர் நாள்.

உயிரைக் கொடுத்து உருவாக்கிய உறவுகள், காகித வழி எழுத்துக்களின் மூலம் பிரிந்து சென்றன. ஹீரா அவருடனும், அப்துல் என்னுடனும் என முடிவாயிற்று. இதோ, அத்துடன் இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இது, அது என எல்லா வேலையிலும் ஏதேனும் ஒரு காரணம் அவ்வேலையை விட்டுவிட வைத்தது. ஆசிரியரான என் தந்தையின் காரணத்தால், அவரின் பள்ளியிலேயே அப்துலும் படிக்க ஆரம்பித்திருந்தான். பளு என எதுவும் இல்லாதிருந்தது.

பணம் இருந்தது. எதிலும் செலுத்தும் மனம்தான் இல்லாமல் போனது. எனவே மீண்டும் மீண்டும் வேலை தேடுவது வழமையாகிப் போனது.

அப்படியொரு நாளில்தான் இந்த அலுவலகம் வந்து சேர்ந்தேன். என் இடதுபுறத்தில் தெரிந்ததும், அதே போன்றொரு ஜன்னல். என் மனதைரியத்தை எல்லாம் சுக்கு நூறாக்கியது. என் கைகள் பரபரத்தன. கால்கள் அத்திசையில் செல்ல தடை விதித்தன. மீண்டும் வலது புறம் திரும்பியதோ, அலுவலகத்தினுள் சென்று இண்டர்வியூவில் பேசியதோ, இண்டர்வியூ ரிசல்ட் தெரியும் வரை மீண்டும் வரவேற்பறையில் வந்து ஜன்னல் வழியாக நேபர்வில்லைத் தேடியதோ...எல்லாமே இயந்திர கதியில் நடந்தது.

இதோ.... எல்லாம் ஒரு கெட்ட கனவுதான். அது முடிந்து விட்டது. இப்பொழுதே மின்தூக்கியில் கீழே செல். உன் கார் காத்திருக்கிறது. இரண்டு நிமிடங்களில் உன் வீட்டில், உன் படுக்கையில் களைப்புத் தீர உறங்கலாம். இது வரை நடந்த எல்லாக் கனவும் சிதறி விடும்... மாலையில் ஹீராவும், அவரும் வந்து விடுவார்கள்...

...கதறியது மனது.
...கரை புரண்டது கண்கள்.
எனினும் நிஜத்தில் கடிகார முள் நகரக்கூட இல்லை. நிகழ்காலத்தின் கோரப்பிடியில் இறந்த காலம், இன்னொரு முறை இறந்தது. இதயம் மட்டும் சிக்கித் தவித்தது.

---------- ---------- ---------- ---------- ----------

“மேடம்.... கோபால் சார் அழைக்கிறார்”...


“...சார்...உள்ளே வரலாமா??”
“வாருங்கள் நஸீஹா. வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட 280 விண்ணப்பங்கள் வந்திருந்தன இந்த வேலைக்கு. எனினும் யாவரையும் தோல்வியுறச் செய்து நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். வருடம் எட்டு லட்சம் சம்பளத்தில் நாளைக்கே ஜாயின் செய்து விடலாம்.”

“...இல்லை சார். எனக்கு இந்த வேலை வேண்டாம்...”
“எக்ஸ்கியூஸ்மீ.... என் காதுகளில் சரியாக விழவில்லை.... என்ன சொன்னீர்கள்...?”

“...எனக்கு இந்த வேலை வேண்டாம் என்றேன் சார்...”
“...ஏன் சம்பளம் குறைவாக இருக்கிறதா? வேறு ஏதேனும் அலவன்ஸ் சேர்த்த வேண்டுமா?? கையில் வேறு ஏதும் ஆஃபர் இல்லை என்றுதானே சொன்னீர்கள்?? ஒரு வருடத்திற்குள் சீனியாரிட்டியும் கிடைத்து விடும். தங்களைப் போல அறிவார்ந்தவர்கள் ஒரே வருடத்தில் வெற்றிக்கனிகளை பறித்துக்கொண்டே செல்லலாம்....”

“...இல்லை சார். என்னிடம் அறிவில்லை. என் தோல்விகள் எனக்கு மட்டுமே தெரியும்... இந்த வேலையை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னிடம்... மன்னியுங்கள். வேறு எதுவும் பேசுவதற்கில்லை.... நான் செல்கிறேன்...”
“...”

மீண்டும் வரவேற்பறை.
மீண்டும் ஜன்னல்.
யாருமில்லா மின்தூக்கியினுள் அரவமில்லாமல் ஓர் பெருவெள்ளம்.
இறுமாந்திருந்த இதயம் தோல்வியுற்றது மீண்டும்...
கண்முன்னே கனவுகள் தோன்றி மறைந்தன மீண்டும்...

எதுவும் இனி கிடைப்பதற்கில்லை....
எதுவும் இனி மீண்டு வருவதற்கில்லை...
எதுவும் இனி தொடர்வதற்கில்லை....
முற்றுப்புள்ளியை தொடர்ந்து விட அவளாலும் முடியவில்லை...
காய்ந்து போன காயங்கள் என அவள் நினைத்த நினைவுகள் ஈரமண்ணில் ஒட்டிக்கொண்ட பாதங்களைப் போல் நிலைத்திருந்தன. அழுத்தமாக தம் பதிவுகளை விடாமலே வீற்றிருந்தன.

ஜன்னல்கள் காத்திருக்கின்றன...

ரயில் பெட்டி - 3

ஸ்ஸ்ஸ்.... ஹுசைனம்மா அக்கா டிரங்குப் பெட்டிய போட்டாதான் எனக்கு ட்ரெயின் பொட்டி பதிவு போடவே நினைவு வருது .... ஹி ஹி ஹி.... என்ன செய்ய... அங்கங்க கொஞ்சம் அலாரம் வெச்சிருக்கணும் இல்லைன்னா.... இப்படித்தான்....

--- ------ ------------ ----- ---


ரொம்ப நாள்... இல்ல இல்ல மாதம்... இல்ல இல்ல... கிட்டத்தட்ட வருடங்களுக்கு பிறகு என்னுடைய தோழி ஒருத்திக்கு போன் செய்து பேச முடிந்தது. (வருஷக்கணக்கா அதே நம்பர் அவளும் வச்சிருக்கா... என்னிடமும் அது இருக்கு.... ஹி ஹி) அததற்கு நேரம் வரணும் இல்ல.....அதான் லேட்டு.  ஆனா என்ன, நான் பேசிய நேரம் ஏண்டா இவ்ளோ நாள் பேசலைன்னு ஆயிடுச்சு. இப்போதான் ஒரு வாரம் முன்னாடி அவளுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கு. அதற்கு ஹைட்றேசெபலஸ்ன்னு ஒரு வியாதி (Hydrocephalus). புதுசா இப்போதான் இது மாதிரி எல்லாம் கேட்கிறோம் இல்லியா? அது எப்படிப்பட்ட வியாதின்னா மூளையில் இருக்கும் நீர் அதிகமாக இருப்பது. சாதாரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு 12 - 14மிலி மட்டும்தான் தண்ணீர் இருக்கணும் மூளையில். ஆனால் இந்த பாப்பாக்கு 16மிலி தண்ணீர் இருக்கு. அல்லாஹு அக்பர். முன்று மாதம் மானிட்டர் செய்துட்டு அந்த தண்ணி வத்திருமா இல்லை ஆபரேஷன் செய்யிறதான்னு பார்க்கலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. இந்த பக்கத்துல அது பற்றிய தகவல்களை படிச்சு உயிர் போயி உயிர் வந்த நிலைதான் எனக்கு. ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு இதைப்பற்றி பேசலாம். ஆனால் இந்த விவரம் எதுவுமே இன்னும் என் தோழிக்கு தெரியாது. ஆபரேஷன் செய்தால் சரியாயிடும்னு மட்டும்தான் தெரியும். எல்லாரும் இறைவனிடம் இதற்காக வேண்டிக்குங்க ப்ளீஸ்.
#ஆனா ஆளானப்பட்ட இந்த வியாதிக்கு அரை நுற்றாண்டு முன்னமே மருந்தும், வியாதியைப் போக்கும் வழிமுறையையும் கண்டுபிடிச்சிருக்காங்கன்னா என்ன சொல்ல :) :)

--- ------ ------------ ----- ---

ரயில் பெட்டின்னு சொன்ன பின்தான் நினைவுக்கு வருது. யாருக்கெல்லாம் ரயில் பயணம் பிடிக்கும்? முதல் முதல்ல குதிரைகளை வைத்துதான் ரயில்வண்டி இழுத்தாங்க என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி அதுல பயணம் செய்திருப்பாங்கன்னு யோசிக்கறேன். நடந்து போக முடியாது. எழுந்து நிக்க முடியாது. குறைந்த தூரங்களை வேண்டுமானால் இப்படி கடந்திருக்கலாம். அதிக தூரத்தை எப்படி கடக்க முடியும்? அரதப் பழசான ரயில் சிஸ்டம் இன்னும் ஆஸ்திரியாவுல இருக்காம். அங்க யாராவது போயி வந்திருந்தால் போட்டோ போடுங்க. :))))))
--- ------ ------------ ----- ---

ரொம்ப சிறிய கதைகளை எழுதிப் பார்க்க சொல்லி ஹரீஷ்ண்ணா அவர் வலைப்பூவில சொல்லி இருந்தார். அப்ப இருந்து நானும் முயற்சிக்கிறேன். சரியா வந்திருக்கா பாருங்க.

"எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது இன்னிக்காவது சரியா இருக்கணும்..." பாக்கெட்டிலிருந்த ரிப்போர்ட் கார்டை எடுத்து 'பெற்றோர் கையெழுத்து பகுதி"யை பார்த்துக் கொண்டான்.
"போன தடவை பெயில் ஆன மாதிரி இருக்ககூடாது. இந்த தடவை எவ்ளோ முயற்சி, எவ்ளோ கஷ்டப்பட்டோம்... ".... டீச்சரிடம் அதை தரும்வரை மனது நடுங்கியது.
"...ம்ம் இந்த தடவ உங்கப்பா ஒன்னும் சொல்லலியா? கையெழுத்து போட்டு தந்துட்டாரா...?? போ... போயி உக்காரு.."
"ஹப்பாடா.... பாஸாயிட்டோம்..!!"

--- ------ ------------ ----- ---
நாங்கள் இருவருமே வேலைக்கு போவதால் ஜுஜ்ஜுவும் இப்ராஹீமும் டே கேருக்கு(Day Care) போகின்றனர். அந்த டே கேரை  நிர்வகிப்பது ஒரு அரபி பெண். சில நாள் முன்பு மாலையில், அவர்களுக்கு கொடுத்தனுப்பும் உணவுப்பையை செக் செய்யும்போது ஒரு தயிர் டப்பாவும் அதனுடன் ஒரு குறிப்பும் இருந்தது. அந்தத் தயிரை இப்ராஹீம் மிக விரும்பி சாப்பிடுவதாகவும் அதை கடையில் வாங்கி அனுப்புமாறும் எழுதி இருந்தது. எப்பொழுதும் போல அதில் என்னென்ன சேர்த்திருக்கிறது என்று நெட்டில் தேடிப் பார்த்தேன். ஜெலட்டின் இல்லை, ஆனால் தயிரை நன்கு கெட்டியாக வைக்க மாட்டின் தோலிலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளை (Gelatin made  from Cow Hide)அதில் உபயோகப்படுத்துவதாக அந்த தயிர் கம்பெனி வெப்சைட்டில் எழுதி இருந்தது. அதுவும் மாட்டுத் தோலிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பொருள், 'உண்பதற்குரியது அல்ல'  (Gelatin made from Inedible Cow Hide !!!) என்கிற காரணத்தால் அதற்கு யூத ராப்பாய் (Jewish Rabbi) ஒருவர் 'கோஷேர்' (Kosher)எண்ணும் அனுமதியை வழங்கியுள்ளார்.. அதைப் பார்த்ததும் எப்பொழுதும் போல அமெரிக்க நாட்டாமையான பிபிபிக்கு(BBB.org) ஒரு கம்ப்ளைன்ட் செய்தேன். உண்ணத் தகுதி இல்லாத பொருளை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்லி. அவர்கள் தயிர் கம்பெனிக்கு எழுதியதற்கு, இந்தப் பொருள் 'GRAS' எண்ணும் தகுதியின் கீழ் அமெரிக்க உணவுத்துறை (FDA.GOV) அனுமதி வழங்கியிருக்கிறது என்று தயிர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. 

வேதனை என்னவென்றால் அந்த  'GRAS' எண்ணும் தகுதியுடைய பொருட்களை உணவுத்துறை முக்கால்வாசி நாட்கள் பரிசோதிப்பதே இல்லை.  சரி என்று அமெரிக்க உணவுத்துறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் தந்த பதில் அதுதான். ஒரு குறிப்பிட்ட பிராசஸ்(process) மூலம் உண்ணுவதற்கு தகுதியற்ற அந்த ஜெலடினை உண்ணத்தகுந்ததாக மாற்றலாம் என(Inedible to edible). அது என்னப்பா அப்படி ஒரு பிராசஸ்னு கேட்டு எழுதினா நெட்டுல தேடிக்குங்க. அது பற்றிய விவரம் எங்ககிட்ட இல்லைன்னு எழுதறாங்க.... 

இது என்ன சின்னப்பசங்க விளையாட்டா??? எங்கே இதை கொண்டு போறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். அதை பத்தி தேடினப்ப இன்னொரு யூத ராப்பாயே கிண்டலாக எழுதியிருந்த ஒரு பதில் கிடைத்தது இங்கே... 

ஙே..... :((
#எங்கே போகும் இந்தப் பாதை?


--- ------ ------------ ----- ---

உங்க வீட்டில் இதுக்கும் வாண்டுக்கு கலர் செய்வது பெயிண்ட்டிங் எல்லாம் பிடிக்குமா? அப்படின்னா இதை தெரிஞ்சுக்குங்க. ஒரு வருடத்துக்கு Crayola தயாரிக்கிற கலர் மார்க்கர்ஸ் அரை பில்லியன் எண்ணிக்கை அளவு.  அதில் விசேஷம் என்னவென்றால் அத்தனையும் ஒரே லைன்ல வெச்சா மொத்த பூமியை மூணு தரம் சுத்தி வந்துரலாம். இதிலென்ன எனக்கு பிரச்சினைன்னு யோசிக்கிறீங்களா? அரை பில்லியன் மார்க்கருல ஒன்னு கூட மண்ணில் மக்கும் பொருளால் ஆனது கிடையாது!!!!!!!!!!!!!!!!! ரத்தம் கொதிக்குதா? என்ன செய்யனும்னு யோசிக்கிறீங்களா? எனக்கு தெரிஞ்ச்க ஒரு வழி, இங்கன போயி தோள் குடுப்பது. இதுக்கும் மேல செய்ய வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பா செய்ங்க,,,, நம் பூமி நம் அக்கறை மிக மிக முக்கியம் !! :)


சரி, இன்னும் கொஞ்சம் கழிச்சு அடுத்த அலாரம் அடிக்கிறப்ப அடுத்த பதிவு... :)

அதுவரை.........ஸலாம்.  :)


.



.

சாட்சிகள் எல்லாம் பேசும்...

பட்டப்பகலிலும் வெளிச்சத்தை
உமிழும் Tube light,

அவ்வப்போது முழுதாய்
நனைந்து போயிருக்கும்
Toilet Roll,

நிசப்த வேளைகளிலும்
மௌனமாய் கசிந்து கொண்டிருக்கும்
Tap Water,

வெகு நாட்களாய் சீண்டுவார்
யாருமில்லாமல் போன
Diaper Genie,

ஆங்காங்கே தரையெங்கும்
சிதறிக் கிடக்கும்
Hand Soap,

அவசரமாய் உள்நுழைகையில்
அமர்க்களமாய் வீற்றிருக்கும்
Potty Seat,

எல்லாம் பறைசாற்றுகின்றன
ஜுஜ்ஜூ தேறிவிட்டதை
Potty Trainingஇல்...


ஹி ஹி ஹி... யாருப்பா அது இதுக்கெல்லாம் கவிதையான்னு கேக்கறது. எல்லாம் அமெரிக்க / வளைகுடா வாழ் தாய்மார்களின் சார்பாக பொறுத்துக்கொள்ளுங்களேன்.. ஹெ ஹெ ...

தாய்மை எனப்படுவது யாதெனில்... (இறுதி) + அவார்டு, யாருக்கு?


லிஃப்ட்டுல ஏறி 4வது மாடி போயாச்சு. போய் சேர்ந்த பின், ரிசப்ஷன்ல தேவையான தகவல்களை சொல்லிட்டு நர்ஸ் வந்தா ரெண்டு நிமிஷம் காத்திருக்க சொல்லுங்க, நான் தொழுதுக்கறேன்னு சொல்லி ரிசப்ஷன்லயே லொஹர் தொழுதாச்சு. அல்லாஹ்விடம் துஆ கேட்டு முடிக்கவும் என்னை பாத்துக்க வேண்டிய நர்ஸம்மா வந்து கூப்பிட்டு போனாங்க. போயி வழக்கம் போல ரத்தக் கொதிப்பு, எடை, சுவாசம் எல்லாம் டெஸ்ட் செஞ்சிட்டு ஆடைகளை மாற்றி ஹாஸ்பிடல் கவுன் தந்துட்டாங்க. அப்புறம் என்னையும் இன்னும் ரெண்டு மூணு மெசினையும் ஒன்னா வயர் வெச்சி பிணைச்சிட்டு போயிட்டாங்க. பசி வேற வயித்த கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. காலைல இருந்து எதுவும் ஆகாரம் இல்ல, மணி 2 ஆகப் போகுது. 2 மணிக்கு எல்லா நர்ஸும், டாக்டருக்கு படிக்கற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஆஜர். டாக்டர் ஸ்டான்சில் மட்டும் வரலை. விசாரிச்சப்ப அவரோட வண்டி டயர் பழுதானதால கொஞ்சம் கழிச்சு வருவாருன்னாங்க. அதுக்குள்ள ஜுஜ்ஜூவை ஹன்னாஹ் வீட்டுல விட்டுட்டு வந்துட்டார். அவரும் எதுவும் சாப்பிடலை. 2:10க்கு ஒரு டாக்டரம்மா வந்தாங்க. அவங்க இந்த ப்ரொசீஜரைப் பத்தி மறுபடியும் விளக்கிட்டு, எனக்கு இப்ப ஒரு ஊசி நரம்புல போடுவாங்கன்னும், அந்த மருந்து இதயத்தை பலமா ஓட வைக்கும்னும், அதனால பயப்பட வேண்டாம்னும் சொன்னாங்க.சரின்னு சொன்ன பின் வேண்டிய ஃபாரங்கள்ல கையெழுத்து வாங்கிட்டு நரம்புல ட்ரிப்ஸுக்கு ஏத்தற மாதிரி செட் பண்ணாங்க. முதல் தடவை ஒரு நர்ஸ் செய்யறப்ப தவறா போயிடுச்சு, எனக்கு பயங்கரமா வலிக்குதே ஒழிய சரியா மருந்து எறங்கலை. அப்புறம் மணிக்கட்டுல இன்னொரு எடம் பார்த்து இன்னொரு வயசான நர்ஸம்மா வந்து போட்டாங்க. போட்டு ரெண்டே நொடிதான், இதயம் வேக வேகமா துடிக்குது, எனக்கு மூச்சு விட சிரமமா இருக்கு. டாக்டரம்மா கிட்ட சொல்லலாம்னா அவங்க சர்வ சாதாரணமா மானிட்டரை பாத்துகிட்டு இருக்காங்க. எனக்கு பேசவும் முடியலை, இதயம் துடிக்கற வேகத்துக்கு மூச்சும் திணறுது. எப்படின்னா, தொட்டபெட்டா சிகரத்துல நின்னு பாத்துகிட்டிருக்கற உங்களுக்கு திடீர்னு கால் கொஞ்சம் ஸ்லிப்பானா எப்படி இதயம் துடிக்கும், அதை விட வேகமா..யப்பா..ரெம்ப கஷ்டமாவும் இருந்தது. அம்மியை ரெம்பவே மிஸ் பண்ண நிமிடங்கள் அது.

பின்ன 2:15க்கு டாக்டர் ஸ்டான்சில் வந்துட்டார். அவர் வந்தவுடன் மறுபடியும் ஒரு தடவை என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்லிட்டு, இப்போ வயித்து மேல(பாப்பா தலைப்பக்கம்) அவர் ஒரு கை, அடி வயித்துல(பாப்பா இடுப்பு பக்கம்) அந்த டாக்டரம்மா ஒரு கை வப்பாங்க, வச்சு தள்ள ஆரம்பிப்போம், எப்ப முடியலையோஅப்ப சொல்லுங்க நிறுத்திடறோம்னு சொன்னார். என்னுடைய ரெண்டு கையவும் கட்டிலுக்கு அடியில் ஒரு பிடிப்பு இருக்கு அதை பிடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டு ஒரியாக்காரரை என் தலைமாட்டுல நிக்க சொல்லிட்டார். அவ்ளோதான், இப்ப ஸ்டார்ட் செய்றோம்னு சொல்லிட்டு தள்ள ஆரம்பிச்சாங்க. அதுவரை வாழ்க்கைல அந்த பிட்ச்சுல நான் கத்தியது இல்ல. உள்ள இருக்கற  pancreas, kidney, liver  எல்லாத்தையும் எங்கெங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கற மாதிரி வயித்துல எல்லாமே உருளுது. என்னால நார்மலா சுவாசிக்கவும் முடியல, வலியவும் பொறுக்க முடியல, வலிங்கறதை விட, ஒரு அழுத்தம் /  Pressure,  அப்படின்னு சொல்லலாம். ரெண்டே நிமிஷம்தான். அந்த ரெண்டு நிமிஷத்துல வஸியத்தே நான் ரெடி செஞ்சிட்டேன். இதோ இப்ப உயிர் போயிடும்னு தோணிய நிமிஷம் அது. மலக்குல் மவ்த் சிரிச்ச முகத்தோட வருவாங்களா இல்ல... அப்படின்னு பயந்தும் போயிருந்த நிமிஷம் அது. சுப்ஹானல்லாஹ். நான் போதும், வேண்டாம்னு சொல்ல நினைக்கறப்ப அவங்களே நிறுத்திட்டாங்க. மானிட்டர்ல ஒரு 2 நிமிஷம் மறுபடியும் வெயிட் செஞ்சு பாத்தாங்க, இவன் சொல்பேச்சு கேக்கற பயலா இல்லையான்னு. ஹனீஃபா மறுபடி மேல வரலைன்னவுடனே, எல்லாம் சரியாகிடுச்சு, எதும் சாப்பிடறதுன்னா சாப்பிட்டுக்குங்க, நாம் எபிடோசின் குடுத்து வலியை ஆரம்பிக்கலாம், ஏன்னா ஏற்கனவே டெலிவரி டேட்டுக்கு மேல ரெண்டு நாள் ஆயிடுச்சு. இதுக்கு மேல வெயிட் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார். டாக்டர் டேக் கேர்னு சொல்லிட்டு போனதுதான் தெரியும் மறுபடி மயக்கமா, இல்ல சோர்வால வந்த தூக்கமான்னு தெரியலை. ஒரு அஞ்சு நிமிஷம் ஒலகம் மறந்து கண் மூடியாச்சு. அந்த ப்ரொசீஜர் முடிஞ்சவுடனே என்னை வேற ரூமுக்கு மாத்தணும். ஆனா நான் தூங்கிட்டு இருக்கறதை பார்த்த நர்ஸ், சரி எழுந்ததும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. முழிச்ச பின் மறுபடியும் வேற ரூம்.

இன்னொரு நர்ஸம்மா, கொஞம் வயசானவங்க என்னை இப்ப வேற ரூமுக்கு கொண்டு போயி, கீழ இருக்கற கஃபேக்கு எப்படி ஃபோன் செய்யணும், எப்படி ஆர்டர் செய்யணும்னு எல்லாம் சொல்லிட்டு, ஐ.வி. கனெக்‌ஷன் குடுத்துட்டு போயிட்டாங்க. அதுலதேன் எபிடோசின் ஏத்துவாங்க. இவருக்கும் எனக்கும்  Mac n Cheese, Veg fried rice  சொல்லிட்டு அம்மாக்கு மறுபடியும் ஃபோன் செஞ்சு எல்லாம் நல்லபடியா நடந்ததுன்னு சொல்லிட்டு அவங்களுக்கும் ஆறுதலை தந்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸானோம். அதுவரை அம்மா அப்பாவும் தூங்காம இரவு வேர தொழுகை / தஹஜ்ஜத் தொழுது து’ஆ அழுதழுது கேட்டுட்டு இருந்திருக்காங்க. அம்மிதான் பக்கத்துல இருக்க முடியலையேன்னு அழுகை. அவங்களையும் சமாதானப்படுத்தியாச்சு. கொஞ்ச நேரத்துல சாப்பாடும் வந்தது, சாப்பிட்டபின் நர்ஸம்மா எபிடோசின்னையும் ஏத்திட்டாங்க. 4 மணிக்கு டாக்டர் ஸ்டான்சிலும் வந்து எல்லாம் நல்லபடியா போகுதா குழந்தை அதே பொசிஷன்ல இருக்கான்னு எல்லாம் பார்த்துட்டு போயிட்டார். அதன் பின் மறுபடியும் அஸ்ர், மக்ரிப், இஷா எல்லாம் 6:30 மணிக்கு முடிஞ்சிடுச்சு. இவரும் மசூதிக்கு போயிருந்தவர் வந்திட்டார். (இதெல்லாம் எழுதறப்ப, தோபி கட்ன்னு புதுசா வந்த படத்துல ஒரு முஸ்லிம் பொண்ணு அவங்க அண்ணனுக்கு வீடியோ ரெக்கார்டு செய்வாங்களே அந்த ஞாபகம் வருது!! :)

எட்டு மணி போல மறுபடியும் வந்த டாக்டர் ஸ்டான்சில், முன்னேற்றம் எதையும் காணம், எபிடோசின்னை அதிகமாக்குங்கன்னு போயிட்டார். அதிகமாக்கிய ஒடனே பயங்கர வலி, அதுவும் 2 நிமிசத்துக்கு ஒரு தடவை, நர்ஸம்மா டாக்டர்கிட்ட சொல்லவும், வேறெதோ மருந்தை சேர்த்தி அதை கொஞ்சம் கொறைச்சாங்க. மறுபடியும் கொஞ்சம் ரிலாக்ஸாச்சு. அம்மி, அப்பாவை ஸ்கைபில வர சொல்லி பாத்துகிட்டேன். அம்மியும் கொஞ்சம் என்னை பார்த்த பின் ரிலாக்ஸானாங்க. அப்போ அந்த நர்ஸம்மா முடிஞ்சு வேற ஒரு நர்ஸ் ஜெர்மின்னு பேரு. அந்த பொண்ணு வந்தாங்க. அவங்களும் சந்தோஷமா எங்க அப்பா அம்மாகிட்ட பேசினாங்க. 4 டாக்டரம்மா, 2 நர்ஸு, 2 மெடிக்கல் ஸ்டூடண்ட் எல்லாருமே 12 மணிக்குள்ள பேசிட்டு போயிட்டாங்க. அம்மி அப்பாவையும் போயிட்டு காலைல நெட்டுக்கு வாங்கன்னு சொல்லியாச்சு.

அதுவரை எல்லாம் சரியா போச்சு. 1 மணிக்கு வந்த டாக்டரம்மா ரெண்டு பேர் என்னை சோதிச்சிட்டு, முன்னேற்றம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. அதுவுமில்லாம குழந்தையோட இதய துடிப்பு திடீர்னு வெறும் 40ல போயிகிட்டு இருக்கு (150 கிட்ட இருக்கணும்!!), அதனால எபிடூரல் எடுத்துக்குங்கன்னு சொன்னாங்க. அதே நேரம் NICU (NeoNatal Intensive Care Unit)ல இருக்கற டாக்டர்ஸ்க்கும் தகவல் சொல்லி, ஒரு 10 பேர் வந்து பக்கத்து ரூமல் காத்திட்டிருக்காங்க. பிள்ளைக்கு மேற்கொண்டு எதும் ஆயிட்டா ஒடனே பாக்கறதுக்கு. எபிடூரல் எடுத்த பின் அல்ஹம்துலில்லாஹ் இதய துடிப்பு கொஞ்சம் சீராயிடுச்சு. ஆனால் தொப்புள் கொடி லைட்டா சுத்தி இருந்துச்சு. அது, திருப்பி விட்டதால வந்திருக்கலாம், பட் பயப்படற அளவு இல்லைன்னு சொல்லிட்டாங்க. எபிடூரல் எடுத்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் செஞ்சேன். 5 மணி வரை எல்லாம் சுபம், 5 மணிக்கு டாக்டர் ஸ்டான்சில் செக் பண்ண வந்தார். அப்ப ஹனீஃபாவோட இதய துடிப்பு 200ஐ தொட்டுகிட்டு இருக்கு. மேற்கொண்டு எதுவுமே பேசலை டாக்டர். மறுபடியும் ஃபாரம் எல்லாம் வந்தது. என்ன காரணம்னு தெரியலை. ஆனால் குழந்தையோட இதய துடிப்பு இப்படி மேல கீழ போறது நல்லதில்லை, உங்களுக்கு 8செமீ தான் டைலேட் ஆகியிருக்கு. இன்னும் 5 மணி நேரமாவது உங்களுக்கு ஆகும் இயற்கையா பிள்ளை பிறக்கணும்ன்னா ஆனா அப்படி பிறக்கற குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியிருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் குழந்தைக்கு இதய துடிப்பு தாறுமாறாகும். ஏன் இப்படின்னு ஆராய்ச்சி செய்ய நேரமில்ல, என்னை பொறுத்தவரை இன்னும் 5 நிமிஷத்துல குழந்தை வெளில வந்தாதான் நல்லதுன்னு சொல்லிட்டார். எனக்கு ஒலகமே இருண்டு போன  மாதிரி ஒரு ஃபீலிங். இந்த ஆபரேஷனை முதல்லயே நான் செஞ்சிருப்பேனே, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்னெல்லாம் மனசுல தோணுது. இவரும் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு நிக்கறார். டாக்டர் எல்லா ஸ்டாஃபுக்கு ஆபரேஷன் ரூமை ரெடி பண்ண சொல்லிட்டிருக்கார். எல்லாரும் என் கையெழுத்துக்கு மட்டும்தான் காத்துகிட்டிருக்காங்க. கண்ணுல தண்ணியோட கையெழுத்தும் போட்டாச்சு. வேற வழி?

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.( ஃபாத்திர்: 2)
அப்புறம் எபிடூரலை அதிகமாக்கிட்டே என் கால்களை அசைத்து பாக்க சொல்லிட்டிருந்தாங்க. ஆப்ரேஷன் தியேட்டர் வரை அப்படி அசைக்க முடிஞ்சது. அதன் பின் நாந்தான் அசைக்க நினைக்கறேனெ ஒழிய கால் நகர மாட்டேங்குது. பின் இங்க குத்துதா அங்க குத்துதான்னு மரத்துப்போன வயித்துமேல ஒரு நர்ஸம்மா என்னை ஊசியால குத்தி குத்தி பாத்துகிச்சு. பின்ன மருத்துவமனைல வர்ற ஸ்பிரிட் மாதிரி வாசனையிருக்கற எதையோ என் வயிறு முழுக்க தடவுனாங்க. ரெண்டு கைகளையும், கால்களையும் வெல்க்ரோ டேப் வெச்சு என்னை நகர முடியாம செஞ்சாங்க. என்னுடைய தலை மாட்டுகிட்ட ஒரு சேர் போட்டு இவருக்கு தந்திட்டாங்க. என்னுடைய நெஞ்சுக்கு நேரா ஒரு திரைச்சீலை போட்டு ஆபரேஷனை மறைச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்க பேசறேதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். விஜயகாந்த் படங்கள்ல  வர்ற மாதிரி சிசர்ஸ் குடு, அது குடு, இது குடுன்னு கேட்டுகிட்டிருந்தார் டாக்டர், நர்ஸெல்லாம் ஓடி ஓடி ஒழைச்சுகிட்டிருந்தாங்க. பின்ன ஒரு 2 நிமிஷம் கழிச்சு சள புள சள புளன்னு கொழம்பு கொதிக்கற மாதிரி சத்தம். நானே புரிஞ்சுகிட்டேன், சரி நம்மளை கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கன்னு. பின்ன கர கரன்னு சத்தம். பெரியண்ணன் பூமிக்கு வந்திட்டார். ஜெர்மி நர்ஸ் அது வரை என் தோள்களை ஆதரவா பிடிச்சிட்டிருந்தவங்க காதுல சொன்னாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, பிள்ளை வெளில வந்திட்டான்னு. அப்புறம் இவரை கூட்டிட்டு போயி அவர் முன்னாடியே குழந்தைய தண்ணி ஊத்தி, எடை போட்டு காமிச்சு, பாதுகாப்பு வளையங்களை மாட்டிவிட்டு எனக்கும் காட்ட கூப்பிட்டு வந்தாங்க. அப்புறம் அவர்கிட்ட சொல்லி பேரீச்சையை சப்பி அதை தடவி விடுங்கன்னு சொல்லிட்டு, தொழுகைக்கு குடுக்கற பாங்கையும் ஓதிட ஞாபகப்படுத்தினேன். அவரும் அதன் பின் நர்ஸரிக்கு போயிட்டார்.

பின்ன சில நிமிஷங்கள்ல ஸ்டேப்ளர் அடிக்கற சத்தம் கேட்டது, சரி தெச்சு முடிச்சிட்டாங்கன்னு நினச்சிட்டேன். பின் திரைச்சீலை எல்லாம் நகர்த்திட்டு டாக்டர் ஸ்டேன்சில் மறுபடியும் வந்து ஆறுதல் சொன்னாரு. என்னதான் நாம் ஒரு முடிவெடுத்தாலும், கடைசி நிமிடத்துல குழந்தைக்கு ஏதாவதுன்னா நாம் ஒடனே சில ஸ்டெப்ஸ் செய்ய வேண்டியிருக்கு, அதனால மனசை போட்டு குழப்பிக்காதீங்கன்னு போயிட்டார்.அதுக்கப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு குளிர், டெல்லில காலைல 5 மணிக்கு கூட அப்படி குளிராது. கைகளெல்லாம் வெட வெடன்னு நடுங்குது என்னால இழுக்க முடியல. என்ன ஆகுதுன்னு கேக்கற நர்ஸுக்கு சொல்ல முடியலை. கால்களும் இன்னும் டேப்லயே இருக்கு. குளிருதுன்னு சொல்றதுக்குள்ள நாக்கு குழறுது. நான் செத்தேன்னு நினச்சது ரெண்டே எடங்கள்லதான். ஒன்னு, அந்த ப்ரொசீஜரப்ப, இன்னொன்னு இந்த குளிரப்ப. இந்த மாதிரி நடப்பது சாதாரணம்ன்னு நினைக்கறேன். ஏன்னா குளினு சொன்னவுடனே நர்ஸ் ஜெர்மி, எங்கிருந்தோ சுட சுட, ஆவி பறக்கற பெட்ஷீட்டுக்கள் கொண்டு வராங்க. கிட்டத்தட்ட 10 பெட்ஷீட் போட்டாச்சு...எல்லாத்துல இருந்தும் ஆவி வெளியாகுது, இருந்தும் குளிர் அடங்கலை. டாக்டர் ஏதோ மாத்திரை போட சொன்னார். போட்டும் நிக்கலை. குளிர்ல இங்க நாங்க போடற கோட்டெல்லாம் அவர் கொண்டு வந்து போட்டுவிட்டார், எதுவுமே வேலைக்கு ஆவலை. குழந்தை 6:24க்கு பிறந்தான். 8:30 வரை இந்த கஷ்டத்தை சகிக்க முடியாம திணறி திணறி சகிக்க வேண்டியிருந்தது. 8 மணிக்கு நர்ஸ் ஜெர்மிக்கு ட்யூட்டி முடியறப்ப அவங்களோட ஏதோ ரெக்கார்டுல எழுதக்கூட நேரமில்லை. எங்ககிட்ட அவசர அவசரமா சொல்லிட்டு கிளம்ப வேண்டிய நிலமை. அந்தளவு என்னை பாக்க வேண்டியிருந்தது. பின் 8:30 மணிக்கு மெதுவா தூக்கம் வருது. அப்பதான் ஒரியாக்காரர் எங்கேன்னு கேட்டா பக்கத்து பெட்டுட தூங்கிட்டிருக்கார். பார்த்து, டாக்டர் யாரும் வந்து அவருக்கும் ஊசி போட்டுரப் போறாங்கன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன். பின் 10 மணிக்கு அம்மி ஃபோன் செய்யறப்பதான் நடந்த எல்லா விஷயமும் சொன்னோம். கேட்டவுடனே அவங்களுக்கு அங்க ஐவி ஏத்த வேண்டியதாயிடுச்சு. எங்க மாமிக்கு சொன்னவுடனே அவங்களும் அழுகை. ரெண்டு பேரும் தனியா இருந்துட்டு இவ்ளோ கஷ்டப்படணுமான்னு. பின்ன மூணு நாள் ஹாஸ்பிடல் வாசம், ஜுஜ்ஜூவுக்குதான் கஷ்டம். தினம் கொஞ்ச நேரம் வந்து பாத்திட்டு போறப்ப, போக மாட்டேன்னு அழுகை, அப்படி இப்படின்னு தேத்தி அவர் கொண்டு போயி விட்டாலும் காரிலிருந்து எறங்க மாட்டேன்னு அழுகை. ஹன்னாஹ் வீட்டிலும் ஒரு நாள் சாயந்திரம் முழுக்க யாருடனும் பேசாமல், விளையாடாமல் ஹன்னாஹ் வீட்டுக்காரர் மடியிலேயெ அழுதழுது தூங்கியிருக்கான். எப்படியோ இதெல்லாம் கழிஞ்சுது. அல்ஹம்துலில்லாஹ். இப்ப ரெண்டு மாசம் ஆகற ஹனீஃபா சிரிச்சு சிரிச்சு வலியெல்லாம் மறக்க வெச்சிட்டிருக்கார். :))


...
ஹனீஃபாவும், ஜுஜ்ஜூவும் :)
...
...

இருங்க இருங்க போயிடாதீங்க. இந்த இவ்வளவு கஷ்டமான வேளைகளிலும் அடிக்கடி எனக்கு மெயில் செஞ்சு, மெயில்ல கர்ப்பிணிப் பெண்களுக்கான டிப்ஸ், ரெசிபி எல்லாம் தந்து, சுகப்பிரசவம் ஆக ஆறுதலெல்லாம் தந்து, டெலிவரி ஆன பின்னும் ஒரு நாள் எனக்காக் நெடு நேரம் இரவு கண் முழிச்சு சாட்  Chat மூலமா ஆதரவு  தந்துன்னு...இன்னும் நிறைய நிறைய உதவிகள் செஞ்ச ஒருத்தங்களுக்கு ஒரு அவார்டு தரப்போறேன். நீங்களும் வாங்க. பக்கத்தில இருந்தால் உண்மையாகவே தந்திருப்பேன், அவங்க அன்புக்கு என் து’ஆக்களும், நன்றிகளும். தூரமா இருப்பதால், எப்ப முடியுதோ அப்ப இன்ஷா அல்லாஹ் நானும் உதவிட முயல்கிறேன். யாருன்னு யூகிச்சீங்களா???

..



..
வேற யாரு, நம்ம ஜலீலாக்காதான். அல்ஹம்துலில்லாஹ், அவர்களுடைய அன்பு, அள்விட முடியாதது. அக்கா, இந்த அவார்டு உங்களுக்காகவே. இப்போதைக்கு இதுதான் தர முடிந்தது :( இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு தக்க கூலி தருவானாக. :)






தாய்மை எனப்படுவது யாதெனில்... (4)


ஹ்ம்ம்.. ப்ரீச் பேபின்னு தெரிஞ்சப்புறம் என்ன செய்ய, சில வலைப்பக்கங்களை பார்த்த பொறவுதேன் கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சது. இதுல மூணு வகை இருக்கே, இதுல முதல், மற்றும் ரெண்டாவது பொசிஷன் பரவாயில்லை(Complete and Frank position), செய்யற சில டாக்டர் இதை நார்மலா ஆப்ரேஷன் இல்லாமலே பிரசவத்தை இயற்கை முறைல அனுமதிப்பாங்க. (எல்லாரும் இப்படிப்பட்ட பிள்ளைகளை இயற்கைல பிரசவிக்க அனுமதிக்கறதில்லை. கண்டிப்பா உங்க டாக்டரிடம் முதலிலேயே கேட்டுக்கணும், இப்படி இருந்தால் அவங்க என்ன செய்வாங்கன்னு!!) அதாவது குழந்தையோட இடுப்பு பகுதியும் தலைப்பகுதியும் ஒரே சைஸா இருக்கறதால‌ (கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை) வலி எடுத்து பிரசவத்துக்கு தயாரானா குழந்தையை அதே பொஸிஷன்ல வெளி வர விடுவாங்க. கொஞ்சமா தலை பெரிதா இருந்து மாட்டிகிட்டா அந்த வாசல்லே இடுக்கி- forceps போட்டு எடுப்பாங்க. ஆனா மூன்றாவது பொஸிஷன்ல (Incomplete Breach) 100க்கு 99 டாக்டர் ஆப்ரேஷந்தான் சொல்வாங்க. வெகு சிலர் அந்த நேரத்திலும் இயற்கையா செய்ய முன் வரலாம். இந்தியாவில் இதுக்கு எல்லாம் எவ்வளவு சான்ஸ்னு தெரியாது..!!

காலைல 8:30க்கே அப்பாயிண்ட்மென்ட்டுங்கிறதால சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியாச்சு. ஜுஜ்ஜூ வண்டியிலேயே தூங்கிட்டதால அவனை அப்படியே கொண்டு வந்து பெட்டுல போட்டாச்சு. இவரும் லொஹர் தொழுகை தொழறதுக்கு கிளம்பி போயிட்டார். எல்லா குழப்பங்களையும் இன்னும் குழப்பிட்டே நான் நெட்டுல இயற்கை வழிமுறைகள் என்னன்னு பாக்கறேன்.
நம்ம ஊர்ல எல்லாம் வருசங்களுக்கு முன்னாடி தாதின்னு ஒரு பழக்கம் இருந்தது. அந்த தாதிதேன் வந்து கர்ப்ப காலத்துல தாயை எல்லாம் நல்லா இருக்கான்னு பாப்பாங்க, பின்ன பிரசவமும் முடிச்சு வப்பாங்க, வீட்டுலயே. பொறவு ஹாஸ்பிடல் எல்லாம் வரப்போயி இந்த நிலமை மாறிடுச்சு. ஆனா அந்த வழக்கம் இன்னும் அமெரிக்காவுல இருக்கு. நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு பயம் என்னன்னா, பிரவத்துலயோ, பிரசவம் முடிஞ்சோ சிக்கலாயிட்டா என்ன பண்ணறதுன்னு. அதனாலேயே, வெறுப்பா இருந்தாலும் டாக்டரம்மாக்களை பார்ப்பது. அந்த மாதிரி தாதிக்களை அப்படின்னு கூப்பிடுவாங்க. நான் இந்த குழந்தைய பத்தி internetல தேடறப்ப ஒரு எடத்துல ஒரு அம்மா, இப்படி ஒரு குழந்தை இருந்து அதை தாதி இயற்கையா பிரசவம் பார்த்ததை படிச்சேன். ஒடனே ஒரு நப்பாசை, அப்படி யார்கிட்டயாவது போயி பிரசவம் பாத்துக்கலாமான்னு. சரின்னு ஒமஹாவில் இருக்கற எல்லாரையும் நெட்டுல தேடி அவங்க பேரை போட்டு reviewsஉம் எப்படி இருக்குன்னு படிச்சு வச்சேன். ரெண்டு மூணு பேர் ரெம்ப நல்லவங்களா தெரிஞ்சாங்க. அவங்களுக்கு எல்லாம் மெயிலனுப்பி, ஃபோனும் செஞ்சேன்...என் சோக கதைய கேளு தாய்க்குலமேன்னு. அதுல ஒருத்தர் மட்டும் பதில் எழுதினாங்க. கேரி லாஃபிங் (Carrie Laughlin) அப்படின்னு பேர். அவங்க சொன்னாங்க, இதுல‌ ரொம்ப காலம் கழிஞ்சிருச்சு, இருந்தாலும் நான் என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். கொஞ்சம் பொறுங்க, ஒரு வேலையை முடிச்சிட்டு செய்யறேன்னு. இன்னொருத்தங்க ஊர்ல இல்ல. சரின்னு அந்த மெயிலுக்கு பதில் சொல்லிட்டு மத்த டாக்டருங்களுக்கு ஃபோன் செய்யறேன், யாராவது என் கேஸை எடுத்துகிட்டு நார்மல் டெலிவரி செஞ்சு குடுங்கன்னு. ஜுஜ்ஜூவின் போது என்ன பிரச்சனையோ அதேதான் இப்பவும். டெலிவரி டேட் தாண்டியதால யாரும் எடுத்துக்கலை. நேரம் போயிட்டே இருக்கு, சாயங்காலம் 5 மணிக்குள்ள எதுவும் முடிவு தெரியலைன்னா பொறவு வேற வழியில்லை, அடுத்த நாள் ஆப்ரேஷந்தேன்.

3 மணி போல கேரி பதிலெழுதினாங்க. ஒமஹாவில 4 டாக்டர் மட்டும்தேன் இந்த மாதிரி பிள்ளைங்களை நார்மலா டெலிவர் செய்யறதாகவும், அவங்க நாலு பேருக்கு ஃபோன் செய்ங்கன்னும். கேரியோட ஃப்ரெண்டு ஒரு பொண்ணு கைரோப்ராக்டர், அது மூலமாகவும் சில சமயம் குழந்தை கீழே திரும்பும்னு அவங்க அட்ரஸும், இன்னொரு நபரின் பேரும் சொன்னாங்க. அது, ஹெதர் ராம்சே(Heather Ramsay). அவங்களும் ஒரு தாதிதேன். தனியா பக்கத்து ஊர்ல ஒரு கிளினிக்கே வச்சிருக்காங்க. (தாதிகள் கிளினிக் வைப்பது வழக்கம் கிடையாது. இவங்க ரெம்ப பிரசித்தம்!!) அவங்களுக்கு ஃபோன் செஞ்சு கேளுங்கன்னு சொன்னாங்க. அவங்களுக்கு ஃபோன் செஞ்சா அவங்களோட பி.ஏ எல்லாம் கேட்டுட்டு, நான் அவங்ககிட்ட சொல்றேன், அவங்க இந்த கேஸை எடுத்துப்பாங்களான்னு தெரியலை, எடுத்துகிட்டா உங்களுக்கு சொல்றோம்னு. சரின்னு சொல்லிட்டு நானும் ஒரியாக்காரர் வந்த ஒடனே அவர்கிட்ட இதையெல்லாம் விளக்கமா சொல்லிட்டு, சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன். மணி 4:45க்கு ஒரு ஃபோன். இவர்தான் எடுத்தார். இங்க அலுவலக ரீதியா யார்கிட்டயாவது பேசணும்னா அவங்க கணவர், மனைவிகிட்ட கூட அதை பேச மாட்டாங்க. சம்பந்தப்பட்ட ஆள்கிட்டதான் சொல்வாங்க. ஜுஜ்ஜூவின் போது எனக்கு கர்ப்பமா இருக்கறதை கன்ஃபர்ம் செஞ்ச அந்த நர்ஸம்மாவும் என்னை மட்டும் தனியா ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போயி ஒரு கவர்ல ரிசல்ட் எழுதி அதை சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. நானும் பயந்திட்டே போறேன்...ஒரு வேளை இல்லைன்னு சொல்லிடுவாங்களோ..இல்லைன்னா ஏதும் பிரச்சினை இருக்குன்னு சொல்வாங்களோன்னு...அவங்க இதெல்லாம் எதுவும் இல்லாம நீங்க தாயாகப் போறீங்கன்னு சொன்ன மறு நிமிஷம் அழுதிட்டேன். இப்ப மாதிரி வலைப்பூவில எழுதிட்டிருந்திருந்தா, அடங்கொய்யால... இதுக்குதேன் இந்த பில்டப்பான்னு வந்திருப்பேன்... அப்ப சந்தோஷம் மட்டும்தேன் இருந்தது...!! :))

அது மாதிரி, இவர் ஃபோன் எடுத்தவர், என்னிடம் ஃபோன் குடுத்தார், உன்கிட்டதான் பேசணுமாமான்னு. நான் ஃபோனை வாங்கினால், பேசறது ஹெதர் ராம்சே, என்கிட்ட அவங்களுக்கு தந்த தகவல் எல்லாம் சரியான்னு கேட்டுட்டு, என்னை பொறுமையா கேக்க சொல்லி இந்த மாதிரி பிரசவங்களை பத்தி சொன்னாங்க. அதுல கேரி சொன்ன நாலு டாக்டர்ல ரெண்டு பேர்ஊர்ல இல்லைன்னும், இன்னொருத்தர் ஆப்ரேஷந்தேன் செய்யறாதாகவும், இன்னுமொருத்தர் நார்மலா பாப்பார்ன்னும். அவர்கிட்ட நான் போகலாம், அவர் எந்த நிலையிலும் கேஸை எடுத்துப்பான்னு. இதை அவங்க சொல்றப்பவே மணி 5 ஆயிடுச்சு. இங்கே எல்லாம் 9 மணியில இருந்து 5 மணி வரைதேன் கிளினிக்கும். அதன் பின் உங்களுக்கு என்ன ஆனாலும் ஹாஸ்பிடல்ல எமெர்ஜென்சிக்குதேன் போகணும். உங்களால முடிஞ்சா அடுத்த நாள் வரை உயிரையும் வலியையும் தாங்கலாம். நானும் மணி 5 ஆயிடுச்சே எப்படி அடுத்த நாள் அப்பயிண்ட்மெண்ட் போடறது, நாம போகறதுன்னு நினைக்கற‌ப்ப அந்தம்மா எனக்காக அந்த டாக்டர்கிட்ட பேசிட்டதாகவும், அடுத்த நாள் 11 மணிக்கு அப்பயிண்ட்மெண்ட் தந்திட்டதாகவும் சொன்னாங்க. எனக்கு கூரையை பிச்சிட்டு மழை கொட்டாத கொறைதான். ஏன்னா, நார்மல் டாக்டருக்கே ஒரு வாரத்தில அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது. இதுல ஹை ப்ரொஃபைல் டாக்டரை எப்படி அதே நாள்ல பாக்க முடியும் சொல்லுங்க. எனக்கு ரெம்ப சந்தோஷமா போச்சு. ஒரு பத்து நிமிஷம் நன்றி மட்டுமே சொல்லிகிட்டிருந்தேன், அவங்களுக்கும், அவங்களையும் நம்மையும் படைச்ச இறைவனுக்கும். அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன். (மனித குலத்தையெல்லாம் படைத்த இறைவனுக்கே புகழனைத்தும்!!)

dr. marvin stancil
ஃபோன்ல பேசின பிறகு 7 மணிக்கு கேரி சொன்ன அந்த கைரோப்ராக்டரை போய் பாத்தோம். ஓமக்குச்சியாட்டம் இருந்துட்டு அந்த பொண்ணு நம்மளை அன்னேரத்துல இப்படி எக்ஸர்ஸைச் செய்யி, அப்படி செய்யின்னு. அதையும் செஞ்சேன். பொறவு வீட்டுக்கு போயி படியில(staircase) கையால எறங்கவும், எக்ஸர்ஸைஸ் பால்'ல உக்காந்து ஜம்ப் செய்யவும் சொல்லுச்சு. கைரோப்ராக்டர் கிட்டத்தட்ட நம்ம ஊரு கை வைத்தியம் மாதிரி, அக்கு பன்சர் மாதிரின்னு வச்சிக்குங்களேன். சரின்னு அது சொன்னதெல்லாமும் செஞ்சேன். அந்த இரவு அம்மாகிட்ட விஷயம் சொல்லியாச்சு. மாமிகிட்ட சொல்லலை. அந்தளவு செய்திகளை அவங்களால தாங்க முடியாது. அடுத்த நாள் காலைல எந்திரிச்சி, முன்னமே சொல்லி வச்சிருந்த ஃப்ரெண்டு ஹன்னாக்கு ஃபோன் செஞ்சு ஜுஜ்ஜூவை 10 மணிக்கு கொண்டு வந்து விடுவார்ன்னு சொல்லிட்டு, அவனுக்கு 2, 3 நாள் போடற ட்ரெஸ், தேவையானெ எல்லாம் பேக் செஞ்சாச்சு. டாக்டர்கிட்ட போன பொறவு எதுவும் ஆகலைன்னா திரும்பி வரலாம்ன்னு. இல்லைன்னா, அங்கயே தங்கும்படி ஆனா ஜுஜ்ஜூ ஹன்னாகிட்ட இருக்கட்டும்னு. கிளம்பவே லேட் ஆனதால் ஜுஜ்ஜூவையும் கூட்டிட்டே டாக்டரிடம் போயாச்சு. அவர் பெயர், மார்வின் ஸ்டான்சில் (Marvin Stancil).

போயி பத்து நிமிஷத்துல உள்ள கூப்பிட்டாங்க. டாக்டரை பாத்தவுடனே ஒரு நம்பிக்கை மனசுல, கண்டிப்பா அல்லாஹ் நமக்கு இவர் மூலமா ராஹத்தாக்கி குடுப்பான்னு. அவரும் வந்து பேசி, சகஜ நிலமைக்கு கொண்டு வந்த பின்ன மேல முதல் பாராவில் எழுதியிருக்கற சேதிய சொன்னாரு. அதுவரை இந்த பொசிஷன் பத்தியும் எதுவும் தெரியாது, கவலையும் இல்ல. இப்ப கவலை ஆரம்பிக்குது, எந்த பொசிஷன்ல இருப்பான்? ஸ்டான்சில் டாக்டர் என்னிடம் பொசிஷன் பத்தி கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். ஒடனே அவரு அல்ட்ராசவுண்டு கொண்டு வந்து அதே ரூம்ல வச்சு பாத்திட்டு குழந்தை மொத பொஸிஷன்ல இருக்கறதா சொன்னாரு. அப்புறம் பிரசவம் எப்படியெல்லாம் இயற்கையா கொண்டு வரலாம்னு சொல்லிட்டு, ஒரு வழிமுறைல இப்ப‌வும் குழந்தைய கீழ திருப்ப முடியும்ன்னாரு. அதுக்கு பேர் சுருக்கமா வெர்ஷன் ப்ரொசீஜர் (external version procedure). அதுல தாயோட வயிறு மேல கைய வச்சு குழந்தைய கீழ திருப்பி விடுவாங்க. அப்படி அந்த குழந்தைய திருப்ப முடிஞ்சா வெற்றி. ஆனால், பல சமயம் குழந்தை மறுபடியும் அதே பொசிஷனுக்கு வர சான்ஸ் இருக்கு. அதனால அவங்களுக்கு சான்ஸ் தராம நாம நினைச்ச மாதிரி நார்மலாக்கணும்னா அந்த ப்ரொசீஜருக்கு அப்புறம் எபிடோசின் போட்டு வலிய செயற்கையா ஆரம்பிச்சிடுவாங்க. அதே போல, இந்த ப்ரொசீஜராலயோ அல்லது ப்ரொசீஜர் இல்லாம குழந்தை அப்படியே பிறந்தாலோ, பிரச்சினை குழந்தைக்கு வர வாய்ப்பில்ல, எந்த சேதம் வந்தாலும் அது  தாய்க்குதான். இதையெல்லாம் நல்லா புரிஞ்சு சம்மதம்ன்னா நாம் மதியம் ரெண்டு மணிக்கு அந்த ப்ரொசீஜரை செய்யலாம்ன்னார். என்ன என்ன விளைவுகள்,

1. பனிக்குடம் ஒடையலாம். உடனே பிரசவ வலி ஏற்படலாம்.
2. கர்ப்பபைலயோ, அல்லது அதை சுத்தியிருக்கும் நாளங்களிலோ சிராய்ப்பு, வீக்கம் ஏற்படலாம்.
3. வேறேதும் உள்ளுறுப்பில் அடி பட்டோ/ குழந்தை இடி பட்டோ சாவு நிகழலாம் (மிக மிக மிக கம்மியான சான்ஸ்தேன். பயம் வேண்டாம்!!)

இதெல்லாம் யோசிச்சு, சரின்னு சொல்லி, மதியம் ரெண்டு மணிக்கு சரின்னு சொல்லிட்டு வெளில வர்றப்ப மணி 12. ஃபோன் செஞ்சு யார்கிட்ட சொன்னாலும் அதெல்லாம் வேண்டாம், பேசாம ஆப்ரேஷன் செஞ்சுக்கன்னு சொல்றாங்க. இன்னொரு தெரிஞ்ச டாக்டர், அந்த ப்ரொசீஜர் எல்லாம் உன்னால தாங்க முடியாது, அதுக்கு ஆபரேஷன் வலியே பொறுத்துக்கலாம்னு.எல்லாத்தையும் கேக்கறேனே ஒழிய மனசுல முடிவெடுத்தது எடுத்ததுதேன். ஒரியாக்காரர், ஜுஜ்ஜூவை ஹன்னாகிட்ட விட்டுட்டு வர போயிட்டார். (டாக்டரிடம் பேசி முடிக்கறதுக்குள்ள ரூமெல்லாம் தண்ணி ஊத்தி, ஜாலியா எஞ்சாய் பண்ணார். என் நிலமைய விட டாக்டருக்கு ஜுஜ்ஜூவை அந்த நேரத்துல ஹாஸ்பிடல் விட்டு வேறெங்கிலும் வெப்பீங்களானுதேன் கவலை!! :)

ப்ரொசீஜர் செய்யறதுக்கு முன்னாடி சாப்பிடக் கூடாதுன்னு சொன்னதால சாப்பிடற பிரச்சினையில்ல. ஒரியாக்காரரை மட்டும் வீட்டுல ஏதாவது சாப்பிட்டு வாங்கன்னு விட்டாச்சு. இங்கே ஃபோனை வாங்கி அப்பாவிடம் பேசறப்ப கட்டுப்படுத்த முடியாம அழுகறேன். காய்ச்சல் என்றாலும் என்னை விட்டு எங்கம்மாவோ அப்பாவோ நகரவே மாட்டாங்க. அப்படி இருந்தவ, இங்க தனியா இப்படிப்பட்ட சோதனை எல்லாம் பாக்க வேண்டி இருக்கேன்னு அழுகை. அப்பாவும் ஆறு
ல் சொல்லி, அங்கே இருந்தே து'ஆ செஞ்சு ஃபோன் மூலமாகவே ஊதினாங்க. இதெல்லாம் இன்னொரு சமயமா இருந்திருந்தா நானே கமெண்ட் செஞ்சிருப்பேன். நானிருந்த நிலைல, இன்னொரு முறை ஃபோன் பேசுவேனான்னே மனசுல தோணிடிச்சு. அம்மி அப்பாவும் அழுக, நானும் இங்கே அதே நிலைமை. சரி, ரெம்ப பேசினா நமக்குதானே கஷ்டம்னு வெச்சிட்டேன். பின்ன டாக்டர் சொன்ன 4வது மாடிக்கு லிஃப்ட்டுக்கு போறேன்....



.

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)


3. உளவியல் குறைபாடுகள்

இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.

a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷய‌ங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.

ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.

a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவந‌ம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.


a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.

தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!

தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.

லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவ‌னே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தன‌க்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??

இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)


தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.  இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!

இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???

நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.

மீண்டும் குழந்தைவதை...


news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327

கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.


------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------


பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.

அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.

நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு

பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்

கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது


 
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????




குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)

 
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள்.  அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.

  • ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
  • இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
  • மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.

இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.


கட்டுரை விதிகள்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களுக்கான எச்சரிக்கை:
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
==========குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)============

மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென.  காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.

குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.

இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.

ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!

இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.

நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.

அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?

இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,

1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?

என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.