Showing posts with label கற்பழிப்பு. Show all posts

என்ன சொல்ல

போன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...

வழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும், பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.

தனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

இத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.

பாடங்கள்:
  • உங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே?
  • தன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
  • இந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே!! எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.
  • குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
  • இன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.
 

பிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே!! 


.

மீண்டும் குழந்தைவதை...


news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327

கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.


------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------


பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.

அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.

நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு

பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்

கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது


 
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????




குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)

 
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள்.  அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.

  • ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
  • இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
  • மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.

இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.


கட்டுரை விதிகள்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களுக்கான எச்சரிக்கை:
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
==========குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)============

மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென.  காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.

குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.

இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.

ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!

இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.

நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.

அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?

இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,

1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?

என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.

குழந்தைகளின் பருவம் எங்கே போனது?

நன்றி : உணர்வலைகள்

இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர்றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்ப‌டியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.

குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது?

இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது?

இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:

1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.

2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்ல‌து அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.

இந்த பதிவின் நோக்கம்,

1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்?

2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண‌ மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது?

3. மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?

பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.