இன்று பாரதியின் நினைவு நாள்.

Friday, September 11, 2015 Anisha Yunus 2 Comments


பாரதியின் கவிதைகளைப் படித்துப் பரவசமடைந்து, புரட்சிக்கனவுகளிலும், தேசப்பற்றுத்தீயிலும் சுயமாய் வார்த்தெடுத்துக்கொண்டிருந்தது ஒரு காலம்.
‘காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” 
என்று உச்சரிக்கும்போது உடுமலையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். பாரதியார் எங்கள் ஊரைப் பற்றித்தான் பாடியிருக்கிறார் போல என எல்லாக் கானங்களுக்கும் களமாகக் காட்சியளித்த காலம் அது.
”தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்றால் - அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்...”  
என்று நானும் என் சிநேகிதிகளும் கிட்டத்தட்ட பைபிள் போல தினமும் வாசிப்போம், சுவாசிப்போம், ஆகர்ஷிப்போம்.... சைக்கிள் பயணங்களிலும், நாவல் பழ மரத்தடியிலும், மழைக்காலத்தில் அனைவரையும் முடங்கச் சொல்லும் ஆடிட்டோரியத்தில் குழுவாக அரட்டையடிக்கும்போதும் என எல்லாக் காலங்களிலும் பாரதியை விட வசீகரித்த கவிஞன் இல்லை... பெரியார் பாலிடெக்னிக்கில் படிக்குபோதும், பெரியாரின் அளவிற்கு பாரதியையும் ஒவ்வொரு நிமிடமும் கொண்டாடியுள்ளோம். காளியைப் பற்றிய பாடல்களானாலும் சரி, அகண்ட பாரதக் கனவுப்பாடல்கனாலும் சரி அவனின் எழுத்தில் தொலைத்த பொழுதுகள் ஏராளம்.

காலங்கள் செல்லச் செல்ல எல்லாவற்றின் பூச்சும் சுவற்றினைப் போலவே உதிர்ந்து வீழ ஆரம்பிக்கின்றது. அதே போல்தான் காந்தியுடையதும், பாரதியுடையதும் என்னில் வீழ்ந்தன. இளம்பிராயத்தில் வாசித்த பாரதியின் கவிதைகளில் தீ பெருகியது. சூடான சுவாசமாய் இருந்தது. பின்னர் பாரதியினைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது, என்னில் இருந்த பாரதி உண்மையிலேயே யானை மிதித்தே செத்துப் போயிருக்கலாமே என்று நினைத்துக்கொண்ட காலமும் வந்தது. வறுமையும், கையறு நிலைச் சூழலும், தன் வயிற்றை போலவே தன்னைச் சுற்றியிருக்கும் வயிற்றுக்களின் அவல நிலையும் எத்தனை பெரிய இரும்பு மனிதனையும் ஆட்டுவித்துவிடும் என்பதற்கு பாரதி ஒரு பாரிய உதாரணம் எனக்கு.

இன்றைய தமிழ் தி-இந்துவில் பாரதியின் இன்னொரு முகத்தை ரசிக்க முடிந்தது. ஒரு திராவிடனின் மனநிலையில், தன்னை விட செல்வந்தனின் போலி வாழ்வை, போலி கௌரவத்தை, சோம்பேறிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு எளியவனாய் முழுமையான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையின் ஓரிரு பக்கங்களை பிரசுரித்திருக்கிறார்கள். பாரதியும் ‘உள்குத்து’ கதைகள் எழுதுவாரா என இக்காலத்திய நாம் கேட்கலாம். பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும், உரிமைக்காகவும், சமநீதிக்காகவும் ஓங்கி ஓங்காரமிட்ட பாரதியாய் இராமல், அடுத்த வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்த்த வீட்டுக்கவுண்டரை கிண்டல் செய்யும் ரசனையான மிடில்க்ளாஸ் மனிதனாய் நமக்கு அறிமுகமாகிறார். நிச்சயம் வாசிக்க வேண்டும் இந்தப் புத்தகத்தையும், மீண்டும் அவனின் பாடல்களையும்.

இயன்றவரை போலியாய் வாழாமல், இறக்கும்போது இயலாமையில் இதயம் செத்து வாழ்ந்த உன்னை எண்ணிப் பெருமிதம் நான் கொள்கிறேன் பாரதி. வேஷங்களற்ற மனிதனாய் வாழ திடங்கொண்டதினால்தான் உன் இறுதியை நீ முடிவெடுக்க முடிந்தது.

வாழ்க நீ!
.
.
‪#‎மகாகவி‬ ‪#‎பாரதியார்‬ ‪#‎சுப்ரமணி_பாரதி‬

2 comments:

  1. காக்கையை தன் இனமாக பாவித்தவன் இந்த பாரதி

    வாழ்க நின் தொன்டு

    ReplyDelete
  2. http://www.nambalki.com/2015/09/blog-post_12.html- இதையும் படிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...