மெஹர் - குறும்பட விமர்சனம்.

Friday, September 04, 2015 Anisha Yunus 0 Comments


நெஞ்சார்ந்த ஒரு சல்யூட்டுடன்தான் இந்த குறும்பட விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன். யாருக்கு சல்யூட்??? இயக்குநர் தாமிரா அவர்களுக்குத்தான்...

பின்னே... மொத்த படக்குழுவிலும் ஒரே ஒரு முஸ்லிமை வைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை அவலங்களை மூன்றாம் மனிதராய் நின்று சாட்டையால் விளாசியிருக்கும் இந்த வெற்றிக்கு சல்யூட்தான் தர வேண்டும் அல்லவா.... Heartfelt Salutes Sir!!

But, மிகவும் தாமதமான விமர்சனம்... மன்னிக்கவும்...

இந்தக் குறும்படத்தைப் பற்றி நிறைய பேசலாம் என்றாலுங்கூட ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், உண்மையான இஸ்லாமியராக வாழ்வதெப்படி என்பதனை முஸ்லிம்களுக்கே அடையாளம் காட்டியுள்ளார் இயக்குநர் தாமிரா. சபாஷ்!!!

படத்தின் Flowவில் நடுநடுவே உதிர்க்கப்படும் பல கரிசனங்கள், உண்மையில் தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன என்றால் கொஞ்சமும் மிகையில்லை.

//பக்கத்து வீட்டு கொமரை கரை சேர்த்தினா ஹஜ்ஜோட சவாபு கிடைக்கும்... என் வீட்டைச் சுத்தி எல்லாருமே ஹாஜியாருங்கதான்...//

//மார்க்கத்தை சரியாக் கடைபிடிக்கனும்னா எல்லாருமே சரியா இருக்கணும்...//

//பணத்தை வச்சுகிட்டே இல்லைன்னு சொல்றவந்தான் மிகப்பெரிய நடிகன்...//

//70 வயது மாப்பிள்ளைக்கு பிராயத்துப் பெண் என்பது சாதாரணம்...//

//இல்லாத வீட்டில் பெண் கொமரை படைக்காதே ..//

இந்த வசனங்கள் மூலமாக என்னதான் இஸ்லாம் எளியதொரு மார்க்கமாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் எத்தனை முரணான, எத்தனை சிக்கலான மார்க்கமாக்கி வைத்துள்ளோம் என்பதைப் பரிசீலிக்க வைத்துள்ளது...எதைப் பரவலாக்கியுள்ளோம் எதை தடுத்து வைத்துள்ளோம்.... எது முக்கியத்துவம் வாய்ந்தது... ஆனால் எதனை தாங்கிப் பிடித்துள்ளோம் என சுய பரிசோதனை செய்ய நிறைய கேள்விகளை போகும் வழியில் வீசி விட்டுச் செல்கிறாள் மெஹர்... இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன இது போன்று என்றாலும், சகோதர சமூகத்தை கரிசனத்துடன் இத்தனை அழகான விதத்தில் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் இன்னும் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கமும், பேணுதலும், சகிப்புத்தன்மை நீர்த்துப்போகவில்லை என்பதையும் வெட்டவெளிச்சமாக்குகின்றது.

வேகமாகப் பயணிக்கும்போது திடீரெனத் தோன்றும் மழை போல் ‘ஜாதி டெக்னாலஜி’ நகைச்சுவை, மிக அருமையான சுவை. செம கலக்ஸ் சார்!!

But, படத்தில் ஒரு செயற்கையான இடைச்செருகல் எனக் கருதுவது இரு இடங்களில்... ஏட்டைய்யா சின்னையா பற்றிய சுய அறிமுகத்தின் போதும், கனடா போக இருக்கும் தோழியின் வரவும்.... முழுக்க முழுக்க பூச்சு வேலை போன்றதொரு தோற்றத்தைத் தந்தது. வசனங்களும், கதாபாத்திரங்களின் நளினமும் உள்ளடக்கி. தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் அழகாக செதுக்கியிருக்கலாம். நல்லவேளை குத்துப்பாட்டோ மரத்தைச் சுற்றி ஆடுவதோ இல்லாமல் போனது, பரமதிருப்தி...!

அனைத்து கதாபாத்திரங்களினுடைய அழுத்தமான, பிசிறு தட்டாத, இயற்கையான நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்புக்களும் எனப் பலவும் மெஹருக்கு சபாஷ் சொல்வதற்கான பல காரணங்கள். எனினும், இசையில் ஸ்கோர் செய்யவேண்டிய தூரம் இன்னும் உள்ளது..

மொத்தப் படத்திலும் என்னை உறுத்திய ஒரே விஷயம், சகோதரி, எழுத்தாளர் சல்மாவின் ரோல் தான். காரணம், அவரின் முகம், உடல்மொழி, கம்பீரத் தோற்றம் என எதுவுமே வறுமையில் வாடும், கேவலத்திற்கு பயப்படும், எளிய கொள்கைகளுடன் வாழும் ஓர் குடும்பத் தலைவியின் தோற்றத்திற்கு பொருந்தவேயில்லை. அதற்கு அவர் காரணமில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. அந்த மிடுக்குப்பார்வை, அழுவதில் கூட ஒரு கம்பீரமான முகம், பொலிவான களை, தொய்வற்ற, மிடுக்கான உடல்வாகு என எதுவுமே அவரை அந்த ரோலில் பொருந்த விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வேறு யாரேனும் அதை இன்னும் பெட்டராகச் செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன். சில இடங்களில் movements, body language, reflection எல்லாம் இயந்திரத்தனமாகத் தோற்றமளித்தது, இதன் காரணத்தாலும் இருக்கலாம். நடிப்பதில் இதுதான் முதல்முறை சகோதரி சல்மாவுக்கு என்று வாசித்திருந்தேன். இன்னும் முன்னேறி, மேடை பல காண வேண்டும் சகோதரி. இன் ஷா அல்லாஹ்....!

மொத்தத்தில் மெஹர், ஒரு நிறைவைத் தந்திருக்கிறாள்... யாருடைய சமுதாயமாய் இருப்பினும், குறைகளைக் களைந்து செப்பனிட சகோதர சமூகத்திலிருந்து இன்னும் மனித மனங்கள் தயாராக உள்ளனர் என்பதை தெள்ளெனத் தெளிவுபடுத்தி இருக்கிறாள்.... சகிப்புத்தன்மையை இப்படியே வளர்க்கவும்,இன்னுமின்னும் சமூக நல்லிணக்கம் மேம்படவும், இது போன்ற ஆயிரம் மெஹர்களை எதிர்பார்க்கிறேன் இன் ஷா அல்லாஹ்.

என்னுடைய Wallஇல் ஒரு Timely Status ஆக, மெஹரிலிருந்து ஒரு டயலாக்கை சுட்டுக்கொள்கிறேன் சார்... // நாம பண்ற எல்லா தப்புமே நமக்கு பாடம் சொல்லித் தர்றதோட நிக்கிறதில்லை.... நாம் செய்யிற சில தப்புக்கள், நம்ம வாழ்க்கையையே பழி வாங்கி விட்டுட்டு போயிடும்...// மெய்!!!!!

நன்றிகளும் வாழ்த்துக்களும் மெஹர் டீம், and தாமிரா Sir.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...