Showing posts with label Know The Truth. Show all posts

மரணத்திற்குப் பிறகு வாழ்வா?? -- இறுதி பாகம்

முந்தைய பதிவுகள்

மரணத்திற்குப் பிறகு வாழ்வா??

சகோஸ், ஒவ்வொரு உடைமைக்கு பின்னாலும் ஒரு பொறுப்புடைமை உள்ளது. நீங்கள் சொந்தம் கொள்ளும் ஒவ்வொரு பொருளிற்கும் உயிருக்கும் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பு, கட்டாயம் உள்ளது. ஒரு தொழிலாளி தன்னுடைய எஜமானிடத்தில் தன் வேலைகளைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியிருப்பதைப் போல, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் யாரேனும் ஒருவருக்கு கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பை சுமந்தே உள்ளனர். வாழ்வின் அடிநாதம் இது. இதே போல்தான் நம்மைப் படைத்த உண்மையான, உயர்ந்த, மூலாதார எஜமானான நம் இறைவனுக்கு நாம், நம் வாழ்க்கையைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியுள்ளது. கணக்கு காட்டும் பொறுப்பே இல்லாவிடில், நீதிக்கும், நியாயத்திற்கும் இடமே இல்லாமல் போய் விடும். இல்லையா??

இந்த உலகமானது ஒரு நாள் அழிந்தே தீரும் என்றுதான் குர்’ஆன் நமக்கு போதிக்கின்றது. ஆதி மனிதன் முதல் இறுதி மனிதன் வரை அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் செயல்களைப் பற்றி விசாரிக்கப்படுவர். யாரெல்லாம் இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதன் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரோ அவர்களுக்கெல்லாம் நற்கூலியும், யாரெல்லாம் இதற்கு மாறாக இறைவனை அஞ்சாமல் வழிகேட்டில் வாழ்ந்தாரோ அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையும் அளிக்கப்படும்; சுவர்க்கம் நற்கூலியாகவும், நரகம் தண்டிக்கும் இடமாகவும். சுவர்க்கத்திலோ, நரகத்திலோ பின் அது அமரவாழ்வாகிவிடும், முடிவே இல்லாத ஒன்றாக.


மரணத்திற்குப்பின் உயிர்ப்பித்தல் சாத்தியமா?

முதல்முறையாக நமக்கு யார் உயிர் தந்தாரோ அதே இறைவன், நம் மரணத்திற்குப் பின் மீண்டும் இரண்டாம் முறையாக உயிர் தருவான் என்று குர்’ஆன் கூறுகிறது. ஒரு பொருளை புதிதாய் முதன்முதலாக உருவாக்குவது என்பதுதான் கடினம். ஆனால் அதே பொருளை மீண்டும் இன்னொருமுறை உருவாக்குவது என்பது கடினமல்ல, மாறாக மிக சுலபமானது.

ஆனால் சகோஸ், நம்மை முதன்முறை படைப்பதே இறைவனுக்கு கடினமற்ற செயல் எனும்போது மீண்டும் நம்மை (மரணத்திற்குப் பின்) படைப்பது எவ்வாறு சிரமமாகக்கூடும்? இறப்புக்கு பின் நம்மை உயிர்ப்பிப்பது என்பது இறைவனுக்கு இன்னும் எளிதானதே. யோசியுங்கள்.?

அல்லாஹ், தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்,
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (திருக் குர்’ஆன் 36:79)

நியாயத்தீர்ப்பு நாளும், உயிர்ப்பிப்பதும் கட்டாயம் நமக்கு தேவையா?
ஒவ்வொரு மனிதனும் நீதி தழைத்தோங்குவதை விரும்புகிறான் சகோஸ், மற்றவருக்காக இல்லை என்றாகிலும் தனக்காகவாவது கட்டாயம் நீதி ஓங்கி ஒலிக்க வேண்டும் என ஏங்குகிறான்.

சமூக அந்தஸ்தினாலோ, பொருளாதார பின்னடைவினாலோ அநீதி இழைக்கப்படும் ஒவ்வொருவரும் அநீதியை தழைக்க வைக்கும் கொடியவர்களை எப்படியாயினும் தண்டித்திட விரும்புகிறார்கள். கற்பழிப்பு, திருட்டு போன்ற மாபாதகங்களை செய்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும் என ஒவ்வொரு சாமான்யனின் எண்ணமும் இருக்கிறது.  இவ்வுலகில் தண்டனைகள் கொடுப்பதன் மூலம் மட்டுமே அப்பழுக்கில்லாத நீதியை நிலை நாட்ட முடியுமா சகோஸ்?? யோசியுங்கள்...

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின்போது எண்ணிலடங்கா யூதர்களை கொன்றொழித்தான். (இன்று யூதர்கள் அவனைவிட கொடிய பாதகங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளனர் என்பது வேறு விஷயம்..!!) ஹிட்லரின் காலத்தில் காவல்துறை அவனை கைது செய்தது என்றே வைத்துக் கொள்வோம். என்ன தண்டனை கொடுத்திருக்க முடியும் அவனுக்கு? அவன் செய்தது போலவே ஒரு அறையிலிட்டு விஷவாயுவை செலுத்தியிருக்கக் கூடும். அதனால் நீதி நிலைநாட்டப்பட்டு விடுமா? காரணமின்றி கொலை செய்யப்பட்ட ஒரே ஒரு யூத உயிருக்கு வேண்டுமானால் அது சமமாகும். மற்ற அத்தனை உயிர்களுக்கு?????????????????????????????

சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 100 வருடம் அல்லது அதற்கு மேல் கூட போகக்கூடிய தீர்ப்புகளைப் பார்க்கிறோம். அந்த குற்றவாளி எத்தனை பாதகங்கள் செய்தானோ அத்தனை பாதகங்களுக்கும் சேர்த்து அந்தளவு வருடங்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு குற்றவாளியும் அத்தனை வருடங்கள் உயிரோடாவது இருப்பானா? எத்தனை பேர் அப்படி அத்தனை வருடங்களையும் தண்டனையில் கழிக்கின்றனர்.

அது மட்டுமல்ல. தூய்மையான, அப்பழுக்கற்ற நியாயத்தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்டோரையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். இதோ மாயாபென்னை 28 வருடங்களுக்காக சிறையில் அனுப்பியிருக்கிறார்கள். இன்றோ நாளையோ அவர் பெயிலில் வெளிவரக்கூடும் என்பது தனி விஷயம். ஆனால் அவர் கண்காணிப்பில் நடந்த கற்பழிப்புக்களுக்கும், கொலைகளுக்கும் அது துளியாவது ஈடாகுமா??

யோசித்துப் பாருங்கள் சகோஸ், ஹிட்லர் போன்ற ஆட்களால் கொல்லப்பட்ட மாசற்ற உயிர்களுக்கு என்ன ஈடு தர முடியும்?? எவ்வளவு முயன்றாலும் காரணமின்றி கொல்லப்பட்ட ஒரு உயிருக்குக் கூட நம்மால் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இதுதான் உண்மை சகோஸ்...!!

நேர்மையாளர்களாக வாழ்ந்த மக்களையுமே கொடுமை பல செய்தும் கொன்றும் இவ்வுலகம் வந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட அந்த நேர்மையாளர்களின் நேர்மைக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்??

பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்தான் சகோஸ் இது புரியும். இறப்பிற்கு முன் ஒவ்வொருவரும் செய்த நியாய/அநியாய செயல்களுக்கு ஈடான கூலியைத் தர, இறப்பிற்கு பின் உள்ள வாழ்வினால் மட்டுமே முடியும். தண்டனையோ, தக்க கூலியோ தரப்படாமல் ஒரு ஜீவனும் அழிந்திடாதபடி இறைவன் ஒருவன் மட்டுமே தீர்ப்பு வழங்க முடியும்.

யோசித்துப் பாருங்கள். முடிவே இல்லாத வாழ்வாக நரகமும் சுவர்க்கமும் அமைக்கப்ப்ட்டிருப்பதால்தான் ஹிட்லரும் அவனைப் போன்ற கொடுஞ்செயல்கள் செய்வோரும் ஆறு மில்லியன் தடவை என்ன அதற்கு மேல் கூட தீயில் வாட்டப்படுவார்கள். அதேபோல் அவர்களின் கையினால் அழிந்த மாசற்றோருக்கு இறைவன் எத்தனை விரும்புவானோ அத்தனை நற்கூலிகளையும் தர இயலும்.

எனவே அணுவளவு நல்லறம் புரிந்தோருக்கான கூலியைத் தரவும், இப்படி எந்த வித மாபாதக செயலும் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனையும் இறைவனிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறாக இறைவன் எல்லா செயல்களையும் தண்டிப்பவனாகவும், தன் செயலுக்கு வருந்தி நல்வழியில் செல்வோருக்கு மன்னிப்பையும் தருபவனாக இருக்கிறான். ஆனால்...

இறைவன் மன்னிக்கவே மாட்டாத ஒரு பாவம் எது??

ஷிர்க்.
ஷிர்க் செய்யும் மக்களை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான் என திருக் குர்’ஆன் கூறுகிறது. ஷிர்க் என்றால் இறைவனுக்கு இணை கற்பிப்பது, இறைவனையற்ற மற்றெதையும் வணங்குவது, இறைவனுக்கு இணையாக சமர்ப்பிப்பது என்று அர்த்தம். அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.” (திருக் குர்’ஆன் 4:116)

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்றால் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்படாமல் போவதும் அவனுக்கு அடி பணியாததுமாகும். கீழ்க்கண்டவை யாவும் அதில் அடங்கும்:
1. காற்று, நீர், நிலம், நெருப்பு, தீ போன்ற இயற்கையான படைப்புக்களை வணங்குவதும், அவற்றுக்கு தலை வணங்குவதும், அதீத அன்பில் அவற்றுக்கு முதன்மைத்தன்மை அளிப்பதும் இன்னும் பிற மனிதனின் கைகளாலான பொருட்களுக்கு, உருவச்சிலை, உரவப்படம், வரைபடம், கல்லறை போன்றவற்றுக்கு மரியாதை அளிப்பதுவும்.
2. இறைவனின் இருப்பை மறுத்தல் (குஃப்ர்)
3. இறைவனின் திருமறையாம் திருக்குர்’ஆனின் கட்டளைகளுக்கு மாறாக மனிதனின் கட்டளைகளுக்கு அடங்கி அஞ்சி நடப்பது.
4. பிறப்பும் இறப்பும் கொண்ட மனிதர்களுக்கு இறைவனின் மகன் என்றோ, மகள் என்றோ, மனைவி என்றோ இணை கற்பிப்பதும், அவர்களுக்கும் தெய்வீக ஆற்றல் உண்டு என நம்பிக்கை கொள்வதும்.
5. மலக்குமார்களையோ / தேவதைகளையோ அல்லது இறைவனின் சேவை செய்யும் பஞ்ச பூதங்களையோ வணங்குவதும். (இவைகளெல்லாம் தன் சொந்த விருப்பு வெறுப்புக்கள் இல்லாமல் ஒரே சிந்தனையில் இறைவனை வணங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை என்பதையும் நினைவில் வையுங்கள்.)

இறைவனுக்கு இணை கற்பிப்பது அத்தனை பெரிய குற்றமா???

சகோஸ்.... கொஞ்சம் உங்களைச் சுற்றியுள்ள உலகை உற்று நோக்குங்கள், அழகிய வண்ணத்துப்பூச்சிகளும், கறையற்ற போர்வை போல நீல வானமும், மனம் மயக்கும் சூர்யோதயமும், வண்ணச்சோலைகளும் அதில் கொள்ளை கொள்ளும் அழகில் சுற்றும் பறவைகளும், விலங்குகளுமாய் எத்தனை எத்தனை வண்ணங்களையும் இனிமையையும் கலந்து இந்த உலகை இறைவன் படைத்துள்ளார்??

நம்மையே எடுத்துக்கொள்வோமே.... படபக்கும் கண்களும், பல்வேறு ஒலிகளை சுவைக்க வைக்கும் செவிகளும், இவற்றையெல்லாம் நொடி விடாமல் சீராக பாதுகாக்கும் உள்ளுறுப்புக்களும் என எவ்வாறெல்லாம் கவனமாக படைக்கப்பட்டுள்ளோம். நாம் பிறந்தது முதல் இந்த நொடி வரை உடலில் உள்ள எதுவும் நிற்காமல் இயங்கிக் கொண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றையாவது இறைவனிடம் நாம் கேட்டு வாங்கினோமா? அல்லது நாம் தினமும் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர் என எதற்காவது அனுதினமும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டியுள்ளதா? இல்லையே..... ஆனால் அனைத்து ஜீவராசிகளும் இத்தகைய அருட்செல்வங்களையும், அன்பளிப்புக்களையும் அனுபவித்துக் கொண்டேதான் உள்ளன. ஒரு மைக்ரோ நொடியில் இதயம் தன் வேலையை நிறுத்தினால் கூட நம் இருப்பு, இறப்பாகிவிடும். அளவற்ற அருளாளனும் நிக்ரற்ற அன்புடையோனுமாக அவன் இருப்பதனால்தான் நாம் கவலையற்று ஜீவித்திருக்கிறோம்.

சகோஸ், இவ்வாறெல்லாம் நம்மைப் படைத்தும் பரிபாலித்தும் இருக்கும் இறைவனுக்கு நாம் என்ன செய்கிறோம்??? எப்படி அவனைத் தவிர்த்து வேறெதற்கேனும் தெய்வீகத்தன்மையை அளிக்க முன்னேறிவிடுகிறோம்?? எத்தனை எளிதாக அவனின் ஒப்பற்ற தன்மையை அழுக்காக்கிவிடுகிறோம்?? இதெல்லாம் அவனின்  எல்லையற்ற அன்பிற்கும் அருளிற்கும் நாம் புரியும் அநீதியாக இல்லையா?? இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தும் அலட்சியப்படுத்தியும் வாழும் நாம், நம்மை நாமே இறையடியார் என எப்படி கூறிக்கொள்ள முடியும்?? இறைவனுக்கும் அவனின் தெய்வீகத்தன்மைக்கும் தகாத செயல்களை நாம் செய்வதன் மூலம் எந்த விதத்தில் நாம் நம்மை வெளிக்காட்டுகிறோம் சொல்லுங்கள்...??

எனினும் இறைவன் நம்முடைய புகழுக்கோ, நன்றி கூறலுக்கோ தேவையுடையவனாக இல்லை... இதையே இறைவன் தன் மாமறையில் அறிவிக்கிறான், “நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்;” (திருக் குர்’ஆன் 39:7) சொல்லப்போனால் மனிதன், தன்னுடைய தேவைகளுக்காகவே இறைவனை வழிபடுபவனாக இருக்கிறான்.

ஏக இறைவன் என்னும் மதக் கோட்பாட்டில் கீறல் விழுந்ததுதான் போலி சாமியார்களும், நிறம், ஜாதி, இனத்தைக் கொண்டான வகுப்புக்கோட்பாடுகளும் உருவாக காரணமும்.  இதே காரணத்தினால்தான் சமூகம், ஊழல், சீர்கேடு என இன்னும் எல்லா வித அனாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கிறது. இதே காரணத்தினால்தான் மனிதன் கற்களின் முன்னும், மரக்கட்டைகளின் முன்னும் தலைகுனிந்து நிற்கிறான். இறுதியில் அவன் தன் கைகளால் செய்தவற்றை தானே வணங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். தன் இச்சைகளுக்கு அடி பணிந்து எல்லா தீய காரியங்களிலும் ஈடுபட்டுள்ளான்.

இறைவனை அஞ்சாமை என்பது தற்போது ஒரு ஃபேஷனாக, சமகால சமூக நியதியாக போற்றப்படுகிறது. இதனால் இறைவனின் கட்டளைகளை கீழே தள்ளி மனிதனின் சட்டங்கள் உலகாளும் நிலைக்கு முன் தள்ளப்பட்டுள்ளது. இதே கோட்பாடுகளில் ஊறித்திளைத்து வளர்ந்த மக்கள் தலைவர்களாக மாறி மக்களை இன்னும் வழிகேட்டில் கொண்டு சென்றுகொண்டுள்ளனர். சமூக அமைதி சீர்குலைந்து போனது. மனிதர்கள் இறுதியில் இனத்தின் பேராலும், நாட்டின் பேராலும், வம்சத்தின் பேராலும் போர்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்று வரையிலும் இந்த பேரிடியிலிருந்து மீண்டு வர முடியாமல் நம் சமூகம் தத்தளித்துக் கொண்டுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையாம் குர்’ஆனில் கூறுகிறான், “...நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்...”(திருக்குர்’ஆன் 31:13).

இத்தனை விதமான சமூக / தனி மனித சீர்கேடுகளையும் சீராக்கும் ஒரே வழி, மனிதன் தன்னைப் படைத்த இறைவனை அங்கீகரித்து, தன்னை படைத்து, பரிபாலித்து, உணவளிப்பவன் என்னும் உண்மையை மனதார ஏற்று, இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும்.

இது மட்டுமே, ஏக இறைவனை அங்கீகரித்து, அவன் வழி நடப்பது மட்டுமே உலகின் தலையாய தேவையான அமைதியையும், நீதியையும் நிலை நாட்டும். மற்றும் இது மட்டுமே மனிதனுக்கு, மரணத்திற்கு பின் உண்டான வாழ்வில் என்ன காத்திருக்கிறதோ அதற்கு வழி காட்டும். எனவே அல்லாஹ் தன் திருமறை மூலம் மக்களுக்கு நன்மாராயம் கூறுகிறான்,
“எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.” (திருக்குர்’ஆன் 95:6)

முடிவுரை:

இந்த தொடர் நம்முடைய எந்த சகோதர சகோதரிகளையும் காயப்படுத்துவதற்காகவோ, யாருக்கும் தீங்கிழைப்பதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக இறைவனின் நற்செய்தியை அறிவிப்பதற்கும், இதனைப் படிப்பவர் மனதில் வாழ்வின் தேவையை உணரச்செய்யவும், அவர்தம் வாழ்வை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப கொண்டு செல்லவும் அறிவுறுத்துவதே இந்தத் தொடரின் குறிக்கோளாகும்.

ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்கி, வாழ்க்கையை அவன் கட்டளைகளுட்பட்டு கொண்டு செல்வதே உலகை வாழத்தகுந்ததாகவும், வாழச்சிறந்ததாகவும் மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. இந்த தொடர் உங்களின் வாழ்வின் பொருள் தேடியும் மற்றும் இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆவலையும், அதன் மூலம் இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவிலான உறவையும் புரிந்து கொள்ளும் பேராவலை உண்டாக்கி இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

அல்லாஹ், தன் திருமறை குர்’ஆனில் வழிகாட்டுகிறான், 
“நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்;” (திருக் குர்’ஆன் 41:53)

நபிமார்கள் என்றால் யார்?

  முந்தைய பதிவுகள்

 

 

ஒரு மனிதன், இறைவனுக்கு அஞ்சி, வழிபட்டு நடக்க வேண்டுமெனில், இறைவன் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியவேண்டும். நம்மை வெறுமனே படைத்து வழிகாட்டாமல் இறைவன் விட்டுவிடவில்லை... மாறாக மனிதர்களிடையே சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தன்னுடைய ’தூதர்’களாக ஆக்கினான். இந்த தூதர்களும் மனிதர்களே அன்றி தெய்வாம்சம் பொருந்திய எந்த தனித்துவமும் இல்லாதவர்கள். சம்ஸ்கிருதத்தில் இவர்களையே நாம் ‘ரிஷிமார்கள்’ என்கிறோம். ஏனைய மனிதர்களுக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாகவும், தலைவர்களாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்த உலகில் வாழ்ந்த / வாழும் ஒவ்வொரும் சமுதாயத்திற்கும் ‘இறைத்தூதர்’ அனுப்பப்பட்டுள்ளார். சில உதாரணங்கள், நூஹ்(நோவா), இப்றாஹீம்(ஆபிரகாம்), தாவூத்(டேவிட்), சுலைமான்(சாலமன்), மூஸா(மோஸெஸ்), ஈஸா(இயேசு) -- அனைவரின் மேலும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. இந்த வரிசையில் கடைசியாகவும், உலகிற்கு இறுதித்தூதராகவும் இறைவனால் அனுப்பப்பட்டவர், நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர்மீது உண்டாவதாக). அவருக்கு முன் அனுப்பப்பட்ட மற்ற இறைத்தூதர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் மட்டுமே அனுப்பப்பட்டனர். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) அவர்கள், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு, உலகின் இறுதி வரைக்கும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம்(இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) எந்த ஒரு புதிய செய்தியையும் கொண்டு வரவில்லை. மாறாக முந்தைய இறைத்தூதர்கள் என்ன செய்தியை கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் மீண்டும் தழைக்கச்செய்தார்.

தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்,

 “(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதே(உபதேசமே)யன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.” (திருக் குர்ஆ’ன் 41:43)

ஏன் மனிதர்கள் இறைத்தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?

ஒரு சாதாரண துணி துவைக்கும் எந்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்... அதை எப்படி உபயோகிப்பது என்பதை ‘துணி துவைக்கும் எந்திரத்தை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா அல்லது ‘அடுப்பை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா?? அதுபோல மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென மனிதர்களையே வைத்து கற்றுக்கொடுப்பதுதானே சிறந்தது? எனவே இறைவன் மனிதர்களையே மனிதர்களுக்கான முன்மாதிரிகளாக அனுப்பினான்.

இறைவேதமாம் திருக்குர்ஆ’னில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்,
“(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று..” (திருக் குர்ஆ’ன் 17:95)

ஏன் இறைவன் அவதாரம் எடுக்க மாட்டான்??

இறைவன் என்பவன் மனிதர்களை விட மிக மிக உயர்ந்தவன். இறைவன் ஒரு மனிதனாக முடியுமெனில், பின் அவன் இறைவனாக இருக்கவே முடியாது. ஏன்? சிந்தனை செய்யுங்களேன், இறைவனுக்கு இறப்பு கிடையாது. மனிதன் மரிக்கக்கூடியவன். இறைவன் காலத்திற்கும் வெளிக்கும் கட்டுப்பட்டவனல்லன். மனிதனோ இவற்றுக்கு கட்டுப்பட்டவன். இதையெல்லாம் விட மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. உதாரணமாக ஒரு நாய்க்கு இருக்கும் செவியேற்கும் திறன் மனிதனுக்கு இல்லை... நாய் செவியேற்கும் அத்தனை ஒலிகளும் அவன் செவியேற்க முடியாது. ஒரு ஈயோ அல்லது ஆந்தையோ காண்பவற்றை மனிதனின் கண்களால் காண இயலாது. இப்படி வரையறைகளுக்குட்பட்ட மனிதன் போல் இறைவனும் ஆவானானால் இறைவன், இறைவனுக்கேற்ற குணங்கள் அற்றவன் ஆவான். பின்????

சிலர் கூறலாம், [போன பதிவில் சகோ.ஜெயதேவதாஸ் கூறியது போல :)], இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனாகவும் இறைவனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது?? மேற்கூறிய வாக்கியத்தை சற்றே அலசுவோமே... இறைவனால் எல்லாமே முடியும் எனில், இறைவன் பொய்கூறுபவனாக இருக்க முடியுமா? அல்லது அநீதி இழைப்பவனாக இருக்க முடியுமா?? இறைவனால் எல்லாம் முடியும் எனில், இவைகளும் முடியும்.... ஆனால் இறைவன் இவ்வாறு இயலமாட்டான். காரணம்: பொய் கூறுவதும், அநீதி இழைப்பதும் இறை குணங்களுக்கு பொருந்துவதன்று. எனவே இறைவன், தன் தகுதிக்கும் தெய்வத்தன்மைக்கும் பொருந்தும் இயல்புகள் எவையோ அவற்றை மட்டுமே வெளிப்படுத்துவானேயொழிய பொருந்தா இயல்புகளுடன் பொருந்த மாட்டான். இதுவே நம் முடிவு. உங்கள் முடிவு? சிந்தித்துப் பாருங்கள் சகோஸ்...?

இறைத்தூதர்கள் கற்றுத்தந்ததுதான் என்ன?

இறைத்தூதர்கள் அனைவருடனும் அனுப்பப்பட்ட செய்தியின் நுட்பமான பொருளை ஒரே வரியில் கூறுவதானால்
1. நம்மைப் படைத்த இறைவனை மட்டும், அவனுக்கு மட்டுமே சமரப்பணம் செய், கட்டுப்படு மற்றும் வழிபடு. (படைத்தவனை வணங்கு, படைக்கப்பட்டவற்றை அல்ல). எந்த ஒரு உயிரினத்தையோ அல்லது பொருளையோ இறைவனின் அந்தஸ்துக்கு உயர்த்தாதே, இறைவனை மறுக்கவும் செய்யாதே. ஏக இறைவனான அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,

”மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.” (திருக் குர்ஆ’ன் 16:36)

2. இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடத்தில் நாம் பதிலளிப்பவர்களாக உள்ளோம். திருக் குர்ஆ’னில் அல்லாஹ் கூறுகிறான், 
“நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.” (திருக் குர்ஆ’ன் 88:25-26)
இன்னும், அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
“எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (திருக் குர்ஆ’ன் 99:7-8)




 இனி, மரணத்திற்குப் பின் வாழ்வா????
.

பெற்றோரா ??? இறைவனுக்கா ????

 

 இறைவனுக்கு குழந்தை தேவையா?இறைவனுக்கு என்ன தேவை இருக்கக்கூடும்? இறைவனுக்கு குழந்தைகள் / மனைவி தேவையா? இறைவனுக்கு பெற்றோர் இருக்கலாமா?

யோசித்துப் பாருங்கள் மேற்கண்ட கேள்விகளை...

ஒரு நபருக்கு ஏதேனும் தேவை ஏற்படின் அவரின் தேவையை நிறைவேற்ற யாரேனும் தேவை இல்லையா? அதே போல் இறைவனுக்கும் ஏதேனும் தேவை ஏற்படின் அந்த தேவையை பூர்த்தி செய்ய யாரேனும் தேவை. அப்படி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனை விட மகத்தானவராக இருக்க வேண்டும். சரியா? உதாரணத்திற்கு கணவன் - மனைவி உறவை எடுத்துக் கொள்வோமே. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு தோழமை, ஒரு தோள் தேவைப்படுவதாலேயே நாம் வாழ்க்கைத்துணையை தேடுகிறோம். நம்மை திருப்திப்படுத்தும் ஒரு துணியை தேர்ந்தெடுக்கிறோம். அதே போல் இறைவனுக்கும் ஒரு துணை தேவை என்றால், இறைவன் தன்னைக் கொண்டு மட்டும் திருப்தியடையாதவன் என்றுதானே பொருளாகும்? தன்னைக் கொண்டு திருப்திப்படாமல் இன்னொரு நபரை சார்ந்திருக்கும் நிலை கொண்ட ஒருவர் எப்படி இறைவனாக முடியும்? அதே போல், இறைவனுக்கு மனைவி இல்லையெனில் குழந்தைகளும் இல்லை. இறைவனுக்கு பெற்றோர் உண்டெனில், 'பிறப்பு' நிகழும் வரை இறைவன் 'இல்லாமல்' இருந்ததாகத்தானே பொருளாகிறது? அப்படியெனில் ஒரு கட்டத்தில் இறைவன் என யாருமில்லை என்றொரு பொருள் வரும். இந்த அர்த்தம், இறைவன் இல்லாமல் இருப்பது என்பது 'இறைவன்' என்னும் சொல்லின் பொருளுக்கே எதிராகிறதே? நிகழவே முடியாத நிலையாகிறதே? எனவே இறைவனுக்கு பெற்றோர் என்பது ஏற்புடைய கருத்தே அல்ல. அல்லாஹ், குர்'ஆனில் கூறுகின்றான்,
"அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்'ஆன் 112:1)"

இறைவன் சோர்வடையக் கூடுமா? இறைவன் மறக்கவோ அல்லது தவறிழைக்கவோ முடியுமா?

"அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (குர்'ஆன் 2:255)"

இறைவனுக்கு ஈடு / இணை உண்டா?

"(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)"

நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் உண்டா?

நாம் முன்னரே சொன்னது போல், நம்மை சுற்றியுள்ள பொருட்களைப் பார்ப்போம். அவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நோக்கம் இல்லாமல், அதன் இருத்தலுக்கான ஒரு காரணம் இல்லாமல் இருக்கிறதா? நம் உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துக் கொள்வோமே? ஒரு காரணம் இல்லாமல் ஏதேனும் ஒரு பொருள் அமைக்கபட்டிருக்கிறதா? இல்லையெனில், இந்த உலகில் நம் இருப்புக்கும் ஒரு காரணம், ஒரு கொள்கை தேவை என்று உங்களுக்கு தோன்றவில்லையா? பகுத்தறிவுள்ள எந்த மூளையும் இதை ஒத்துக் கொள்ளும், இவ்வுலகில் வாழும் நமக்கு ஒரு நோக்கம் / காரணம் இருப்பதை.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை யார் முடிவு செய்வது? நாமா அல்லது நம்மை படைத்தவனா?

சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் எழுதுகோலையே எடுத்துக் கொள்வோமே? அந்த எழுதுகோலின் நோக்கம் என்ன? அதன் உண்மையான நோக்கம், "எழுதுவது" அல்லது "எழுத உதவுவது". ஒரு எழுதுகோலின் நோக்கம் / அதன் படைப்பின் காரணம் இதுதான் என யார் முடிவு செய்வது? முதன் முதலாக யார் அதை படைத்தாரோ, அந்த நபரே அதை முடிவு செய்தது. முதுகை சொரிவதற்காகவும் கூட நாம் ஒரு எழுதுகோலை உபயோகப் படுத்தலாம். ஆனால் அதனைக் கொண்டு எழுதுகோல் அதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் கூற முடியுமா? எனவே படைப்பவர் யாரோ, அவர் மட்டுமே படைக்கப்பட்ட பொருளின் சரியான நோக்கத்தை / காரணத்தை முடிவு செய்ய முடியும். அதே போல் இவ்வுலகில் நம் இருத்தலுக்கான காரணங்களை நாமும் பல விதமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான, சரியான காரணமாக இருக்க முடியாதே? நம் வாழ்க்கையின் சரியான / உண்மையான நோக்கம் என்ன என்பதை நம்மைப் படைத்த இறைவனிடமிருந்து மட்டுமே அறிய முடியும்.

வாழ்வின் நோக்கம் என்ன?

இதற்கான பதிலை இறைவன் குர்'ஆனில் தெளிவாக கூறுகின்றான்,
"இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(குர்'ஆன் 51:56)"

இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழவேண்டும் என இறைவன் ஏன் எதிர்பார்க்கிறான்?

ஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் குழந்தை தமக்கு கட்டுப்பட்டு வளர வேண்டும் என எதிர்பார்ப்பது நிதர்சனம். ஒரு ஆசிரியர், தம மாணவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சாதாரணம். அதே ரீதியில்தான் நம்மைப் படைத்த இறைவனும், அவனை மதித்து, அடி பணிந்து நாம் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறான். வணக்கத்திற்குரிய தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது, எனவே நாம் அவனை வணங்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இன்னும் வேறு விதமாக சொன்னால், நம் வாழ்வே ஒரு சோதனைதான். நாம் இறைவனை அஞ்சி, வணங்கி நடக்கிறோமா என பரீட்சித்து பார்க்கும் ஒரு சோதனைக்களம்தான் இவ்வுலக வாழ்வு. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (குர்'ஆன் 67:2)"


இனி, நபிமார்கள் என்றால் யார்?
.

'முஸ்லிம்' என்றால் யார்?




பல தெய்வங்கள் இருப்பின் ??????
 இஸ்லாத்தை - செய்பவரை, (Doer - verb) (அதாவது இறைவனுக்கு முழுதும் அடிபணிந்து, இஸ்லாம் வகுத்த சட்டத்தின்படி நடப்பவரை) நாம் முஸ்லிம் என்கிறோம். எவ்வாறு கார் ஓட்டுபவரை காரோட்டி எனவும், பாடல்கள் பாடுபவரை பாடகன் எனவும் கூறுகிறோமோ, அதே போல இஸ்லாத்தை செய்பவரை முஸ்லிம் என்கிறோம். அதாவது ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதை அடிபணிந்து நடப்பவரையே நாம் முஸ்லிம் என்கிறோம்.

பாடல்கள் பாடும் ஒருவரை நாம் 'பாடகன்' என்றே அழைக்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், எந்த மொழி பேசுபவராயினும் சரி. அது போல், எந்த ஒரு மனிதன், நம்மைப் படைத்த ஏக இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரை நாம் முஸ்லிம் என்கிறோம். அவர் எந்த நாட்டை சேர்ந்தவராயினும், எந்த சமூகத்தை சார்ந்தவராயினும், அவரின் தோலின் நிறம் எப்படி இருப்பினும், அவர் எந்த மொழி பேசினாலும், அவர் முஸ்லிமே!!

இங்கே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு நபருக்கு அப்துல்லாஹ் எனவோ, இப்ராஹீம் எனவோ பெயரிருப்பதாலோ அல்லது அந்த நபர் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாலோ மட்டுமே அவர் முஸ்லிமாகி விட முடியாது. 'முஸ்லிம்' என்னும் பட்டம் வாரிசுரிமை போன்றதல்ல; மாறாக யாரொருவர் நம்மைப் படைத்த இறைவனுக்கு அடி பணிந்து நடக்கிறாரோ அவரையே குறிக்கும்.

குர்'ஆன் என்றால் என்ன?

ஏக இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி அவர்களுக்கு தரப்பட்ட இறுதி இறை வேதமே குர்'ஆன் ஆகும்.  முழு குர்'ஆனும் இறைவனின் வாக்கன்றி வேறில்லை. குர்'ஆனில் முஹம்மது நபியின் வார்த்தைகள் இல்லவே இல்லை. அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்கென்றே குர்'ஆன் உள்ளது, எனினும் அதன் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவும் உள்ளது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் (இறைவன்) கூறுகின்றார், 
 "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (குர்'ஆன் 4:82)

இஸ்லாத்தின் அடிப்படை செய்தி என்ன?

இஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன? "படைத்தவனை வணங்கு; படைக்கப்பட்டவற்றை வணங்காதே" என்பதே அது. அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், 
 "இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்." (குர்'ஆன் 41:37)

வணக்கம் - என்பது இங்கே சடங்குகள் செய்வதையோ மந்திரங்கள் சொல்வதையோ குறிக்கவில்லை. மாறாக வணக்கம் எனபது இறைவனுக்கு அடிபணியும் ஒரு ஒழுக்கம், மனிதனின் ஒவ்வொரு காரியத்திலும் அந்த ஒழுக்கத்தை பிரதிபலிப்பதே வணக்கமாகும்.

இறைவனுக்கான குணாதிசயங்கள் என்னென்ன?

இஸ்லாம் நமக்கு கூறும் இறைவனின் குணாதிசயங்கள் என்னவெனில்:
1 இறைவன், ஏகன்.
2.இறைவனுக்கு தேவைகள் ஏதுமில்லை (அல்லது) தேவைகளற்றவனே இறைவன்.
3.இறைவனுக்கு பெற்றோரோ, மனைவியோ, குழந்தைகளோ கிடையாது.
4.இறைவனின் இயல்புகளான ஆற்றல், ஞானம், மன்னிப்பு போன்றவற்றில் அவனுக்கு நிகர் வேறெவருமில்லை.
5. இறைவனுக்கு சோர்வில்லை.
6. இறைவனுக்கு மறதியில்லை.
7. இறைவன் தவறு செய்பவனல்ல.
8.இறைவன், மக்களனைவரையும் நேசிப்பவனே அன்றி குலம், கோத்திரம் , சமூகம், வம்சம் போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பவனல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான், "(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)

பல இறைவன்கள் சாத்தியமா?

உதாரணத்துக்கு ஒரு நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அதிபர்களோ, அல்லது ஒரு கல்விக்கூடத்தில் இரண்டு தலைமையாசிரியரோ இருப்பது சாத்தியமா? பின் எப்படி இத்தனை பெரிய அண்டத்தை ஆள மட்டும் ஒரு இறைவனுக்கும் மேலே தேவை என எண்ணுகிறோம்? ஒரு வாகனத்துக்கு இரு ஓட்டுனர்கள் போன்ற உதாரணம்தான் அது. ஒரே வாகனத்தை இருவரும் ஓட்டும்போது, அவர்கள் எத்தனை திறமைசாலியாய் இருப்பினும் விபத்து ஏற்படுவது உறுதி.

"(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்." (குர்'ஆன் 21:22) "


இனி, பெற்றோரா? இறைவனுக்கா????


.

அல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவனா?






நிறைய பேர் நினைத்துக் கொண்டிருப்பது போல அல்லாஹ் "முஸ்லிம்களுக்கு மட்டுமான‌" இறைவன் அல்ல.

'அல்லாஹ்' என்னும் அரபுச் சொல் வேறுபாடில்லாமல், உங்களையும் என்னையும் படைத்த 'ஓரிறைவனை' குறிக்கிறது. அரபு மொழி பேசும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட 'அல்லாஹ்' எனும் சொல்லையே இறைவனைக் குறிக்க உபயோகிக்கின்றனர்.

'தண்ணீர்'(தமிழ்), 'நீரு'(கன்னடம்), 'வாட்டர்'(ஆங்கிலம்) என எப்படி அழைத்தாலும் அது ஒரே பொருளையே குறிக்கிறது. வேறு மொழியில் கூப்பிடுவதால் மட்டும் ஒரு குவளை தண்ணீர் வேறு பொருளாகி விடுமா? அதே போல்தான் ஈஷ்வர்(ஹிந்தி), தேவரு(கன்னடம்), அல்லாஹ்(அரபி) என்னும் எல்லா சொற்களும் இந்த மாபெரும் உலகை படைத்த இறைவனை மட்டுமே குறிக்கும்.


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
"அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:2)

இஸ்லாம் - என்னும் வார்த்தைக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்பது ஒரு அரபுச் சொல். இஸ்லாம் என்னும் வார்த்தைக்கு 'ஸில்ம்' மற்றும் 'ஸலாம்' என்னும் இரு பொருட்கள் உள்ளது. ஸலாம் என்றால் 'அமைதி' என்றும் 'ஸில்ம்' என்றால் 'கீழ்ப்படிதல்' என்றும் அர்த்தம்.

அதன்படி 'இஸ்லாம்' என்றால் இந்தப் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து அதன் மூலம் அமைதியடைதல் என்று அர்த்தம்.

இஸ்லாத்தை தோற்றுவித்தவர் யார்?

இஸ்லாம் ஒரு புதிய மார்க்கம் என இன்றும் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். முஹம்மது நபி அவர்களால் இந்த மதம் தோற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை. உலகின் முதல் மனிதன் ஆதம்மிலிருந்து அதன் பின் தோன்றிய எல்லா மனிதர்களுக்கும் இஸ்லாம் எனும் ஒரு வாழ்க்கை முறையை, வாழும் மார்க்கத்தை நம் அனைவரையும் படைத்த இறைவன் தந்துள்ளான்.

இறைவன் இந்த மனிதக்குலத்திற்கு அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும், நூஹ்(Noah), இப்ராஹீம்(Abraham), மூஸா(Moses), சுலைமான்(Soloman), தாவூத்(David), ஈஸா(Jesus) மற்றும் அனைத்து இறைத் தூதர்களும் இஸ்லாத்தையே அதாவது ஓரிறைக் கொள்கையையே தத்தம் வாழ்க்கை முறையாக பின்பற்றினர்.

இறைவன் அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும் இறைவனுக்கு கீழ்ப்படியவும், இறைச்சொல்லை மதித்தும், இறைவனுக்கு நேர்மையாய் வாழவுமே மக்களுக்கு கற்றுத் தந்தனர்.


இனி, "முஸ்லிம் என்றால் யார்?"

.

இறைவனை படைத்தது யார்?



இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப் படைத்தது யார்?

நம் பெற்றோர் மூலம் நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள், அவர்கள் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அது எங்கே போய் முடியுமெனில், "அப்போ இறைவன் எப்படி உருவானார்? அல்லது அவனைப் படைத்தது யார்?"

பதில் மிக எளிது. 

இந்த முழு அண்டமும் உருவாவதற்கு முன் ஒரு பொருள் உருவாவது முக்கியம். அந்தப் பொருளைக் கொண்டுதான் மற்ற பொருட்களின் பிறப்பு இறப்பை கணக்கிட முடியும். அப்படிப்பட்ட பொருள் வேறெதையும் நம்பி அல்லது வேறு எந்த கட்டுப்பாடுக்கும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அது என்ன??? நேரம் !!!!

நேரத்தைப் பொறுத்தே நாம் அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் 'நேரத்தை' படைத்தவன் பிறப்பும் இல்லாமல் இறப்பும் இல்லாதவனாக இருக்க வேண்டும். நேரம் அல்லது மணித்துளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர இயலாதவனாக இருக்க வேண்டும். அந்த ஒருவனையே நாம் இறைவன் என்கிறோம்.



 

உதாரணத்துக்கு ஒரு பென்சிலை வடிவமைக்க ஒருவர் முயல்கிறார். அவரை 'எண் 1' என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னால் தனியாக அந்த பென்சிலை வடிவைக்க இயலாது. 'எண் 2'இன் உதவி தேவை என்கிறார். எண் இரண்டு நபரோ எண் மூன்றாம் நபரின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது என்கிறார். இப்படியே ஒவ்வொரு நபரும் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த பென்சிலை கடைசியில் வடிவமைப்பதுதான் யார்? பதிலில்லை இல்லையா? ஏனெனில் இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இன்றி என்னால் அந்த பென்சிலை வடிவமைக்க இயலும் என்று கூற வேண்டும். வடிவமைக்க வேண்டும். அப்படி இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இல்லாமல் வடிவமைத்தால்தான் அந்த சங்கிலி தொடர் முடிவுக்கு வரும். இல்லையேல் அது முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பென்சிலும் வடிவமைக்கப் படவே படாது.

அந்த ஒருவர்தான் யாரையும் சாராமல் தனியே இயங்கக்கூடிய ஆள். அவரை மட்டுமே நாம் பரம்பொருள், சூப்பர்பவர் அல்லது இறைவன் என்போம். யாரையும் சாராமல், தனியே இயங்கவும், படைக்கவும் தெரிந்தவனே இறைவன். எனவே 'இறைவனைப் படைத்தது யார்' என்ற கேள்விக்கே இப்பொழுது இடமில்லை.

இறைவன் என்பவன் யார்?
சரி, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. 'தாய் என்பவள் யார்?' உங்களின் பதில் என்ன? யாரொருவர் ஒரு குழந்தையை பெற முடியுமோ அவரே தாயாவார். இதுதான் எளிமையான பதில். 
இல்லை என் தாயை எனக்கு பிடிக்கவில்லை, அன்னை தெரசாவை கூட்டி வாருங்கள் அவர்தான் என் தாய் என்று நாம் கூற முடியுமா? நாம் எல்லோரும் அன்னை என்றழைப்பதால் அவர் நம் அன்னையாக முடியுமா? நம்முடைய தாய் யார் என்பதை முடிவெடுக்கும் வாய்ப்பு நம்மிடம் இல்லை.

அதே போல் என்னை, உங்களை படைத்தது ஒரிறைவன்.... ஒரே இறைவன். வேறு யாரை வேண்டுமானாலும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் நாம் இறைவன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய உண்மையான இறைவன் ஆகுமா? நம்மைப் படைத்தவனைப்போல ஆகுமா? எப்படி தந்தை தாயை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு / உரிமை நம்மிடம் இல்லையோ அதே போல் படைத்தவனை தவிர்த்து வேறெதையும் நம்முடைய இறைவனாக அங்கீகரிக்கும் வாய்ப்பும் உரிமையும் நம்மிடம் இல்லை. நம்மை படைத்தவன் மட்டுமே நம் இறைவன். உலகறிந்த ஒரே உண்மை இதுதான். எல்லா சமூகங்களிலும், சமயங்களிலும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரே கருத்து இதுவே.

திருமறை குர்'ஆனில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்:


வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - 
அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன். 
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; 
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் 
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; 
மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (57:3)

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

.

உண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா???



ஒரு ஊருக்கு போகிறோம், அல்லது ஊருக்குள்ளேயே பயணிக்கிறோம், அந்தப் பயணங்களில் எத்தனை முறை நாம் பாலங்களை கடக்க வேண்டி உள்ளது? அது தானாக முளைத்து விட்டது என்றால் நம்பும்படி உள்ளதா? ஒரு கட்டிடமோ, வாகனமோ அல்லது ஒரு தார் சாலையோ ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் துணையின்றி இதெல்லாம் முளைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த அந்த பொருட்களின் அல்லது கட்டிட அமைப்புக்களிலேயே அதை இவ்வளவு சிறப்பாய் வடிவமைக்க அந்தத்துறையின் நிபுணர் தேவை என்று நினைக்கிறோம், இல்லையா? அப்படி இருக்க, உயர்தரமான, கடுஞ்சிக்கலான கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மனித உடம்பு? யோசித்துப்பாருங்கள் சகோ...

சிந்தனை செய்யும் மூளையைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்: அது எப்படி சிந்திக்க உதவுகிறது, எப்படி பகுப்பாய்கிறது, எப்படி தகவல்களை சேமிக்கிறது, எவ்வாறு அவற்றை மீண்டும் வெளிக்கொணறுகிறது? எப்படி தகவல்களை பிரிக்கிறது, வகைப்படுத்துகிறது?? ஒரு மைக்ரானுக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் செய்யவும் வல்லது, அல்லவா? (இந்த வரியைப் படித்து பிரம்மிக்கவும் அதே மூளையை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளோம், நினைவிருக்கட்டும் !!)

கொஞ்சம் இதயத்தையும் கவனிப்போம். மனிதன் பிறந்த நொடியிலிருந்து இறக்கும் வரையிலும் நொடி தவறாமல் எப்படி இரத்தத்தை இறைக்கிறது? கல்லீரலும் சிறுநீரகமும் கூட இவ்வாறே ஓய்வின்றி உழைக்கின்றனவே. இரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள நஞ்சை அகற்றிடவும், இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் என ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை பணிகளை ஆற்றுகின்றன? நம் கட்டுக்குள் வரக்கூடியவையா இவை?

கண்கள்? அதைப் பற்றியும் யோசியுங்கள் சகோ...  

உயர் தர கேமராவையும் மிஞ்சும் வேகம், காட்சிகளை மையத்தில் குவிக்கும் திறன், சுழலும் பார்வையை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரி செய்யும் புலமை, காணும் காட்சியை மூளைக்கு மொழி பெயர்க்கவும், மதிப்பீடு செய்யவும், நிறங்களை உடலுக்கும் நரம்புக்கும் ஏற்புடையதாக்கி சுற்றியுள்ள ஒளிக்கும் தூரத்திற்கும் ஏற்ப தகவல்களை தரும் விவேகம், திறமை - இவையெல்லாம் யாரும் உருவாக்காமல், திட்டமிட்டுத் தராமலே வரக் கூடுமா? அல்லது சிலர் கூறுவது போல, இத்தகைய கடுஞ்சிக்கலான ஒழுங்குமுறைகளை தற்செயலான மரபணு மாற்றங்களோ அல்லது பரிணாமமோ உருவாக்கியிருக்க முடியுமா?

சுத்தமாக இருக்கும் ஒரு வெள்ளை சுவற்றில் பல்வேறு நிறங்களை பீய்ச்சி அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வர்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை போன்றோ, பறவை போன்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் போன்றோ கூட தோன்றலாம். ஆனால் அவை யாவும் கலந்து திடீரென மோனலிசா போன்றாயிடுமா? அல்லது ஒரு கலைஞனின் திறமையும் முயற்சியும் இன்றி ஒரு மோனலிசா ஓவியம் வந்து விடக் கூடுமா?

சகோ...ஒவ்வொரு பாகமாக பார்த்துப் பார்த்து செதுக்கியது போன்றுள்ள நம் உடல், அந்த மோனலிசா ஓவியத்தை விட மிக சிக்கலான பாகங்களையும் நுணுக்கங்களையும் கொண்டது இல்லையா? அப்படி இருக்கையில், இந்த உடம்பின் அமைப்பும், அழகும், நுட்பமும் எவரின் ஞானமும் இல்லாமல் இப்படியே உருவாகிவிட்டது என்று நம்புவது எந்த விதத்தில் பகுத்தறிவாகும் சொல்லுங்கள் ??? 

இந்தப் பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்வோமே... நாம் வாழும் பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களைப் போன்றதொரு கோள். நம் சூரிய மண்டலமும் பால் வீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மண்டலங்களில் ஒன்று. நாம் வாழும் பால் வீதி மண்டலமும் அதைப்போல் எண்ணிக்கையில் அடங்காத பால்வீதிகளில் ஒன்று. மொத்த பிரபஞ்சத்திலும் இது போல் லட்சக்கணக்கில் பால்வீதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரம் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் ஒரு உன்னதமான ஒழுங்கும் நுட்பமும் கலந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  

இன்றைய தேதியில் இன்னும் பல வருடங்களுக்கு பின் வர இருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் கூட இன்றே கணிக்க முடிகிறதே... எப்படி இது சாத்தியம்?  

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையுங்கூட இன்னும் 200 வருடங்களுக்கு இன்றே, இப்போதே கணிக்க முடியும். இவையெல்லாம் எப்படி முடிகிறது?  

அந்தப் பால்வீதியிலும், எண்ண இயலாத நட்சத்திரங்களிலும் கோள்களிலும், அவற்றின் அசைவிலும், சுழற்சியிலும் உள்ள ஒழுங்கால், அந்த நேர்த்தி மாறாது என்னும் நம்பிக்கையால்...  

இவையெல்லாம் பறை சாற்றுவது என்ன???  இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவனின் நேர்த்தியான கலைத்திறன் மற்றும் இதைப் பற்றியுள்ள உன்னதமான அறிவு.


அணுவளவும் பிறழாத ஒழுங்கும், அலாதியான அழகுடனும் விளங்கும் இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்து விட்டதாக நினைக்க முடிகிறதா சகோ? 

திடீரென நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பில் இத்தனை சிக்கலான ஒரு அமைப்பு வந்து விட முடியுமா?  தானாக வாய்த்து விடுமா?

நிகழ்வாய்ப்பில் ஒரு உதாரணம் சொல்லவா?  வெவ்வேறு நிறங்களாலான 10 கோலிக்குண்டுகளை வரிசைப்படுத்தி ஒரு பையில் போட்டு நன்றாக குலுக்குங்கள். அதன் பின் கண்களை மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து பத்து வரையான கோலிக்குண்டுகளை வரிசை தவறாமல் எடுக்க வேண்டும். முடியுமா? அதற்கான வாய்ப்புகள் எத்தனை தெரியுமா? இரண்டு கோடியே அறுபது லட்ச வாய்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பு (2,60,00,000 to 1) மட்டுமே. 

10 கோலிக்குண்டுகளுக்கு மட்டுமே இந்த நிலை எனில், லட்சோப லட்ச நட்சத்திரங்களும், கோள்களும், சம கால நிகழ்வில் இத்தனை துல்லியமான நேர்த்தியுடனும், ஒரு இனிய பல்லியத்துடனும் தற்செயலாக இயங்க எத்தனை வாய்ப்புகள் உண்டு, சொல்லுங்கள்???? 

பதில்????......................பூஜ்ஜியம்தான்!!!!

இந்த சிறிய உதாரணமே போதுமானதாக இல்லையா படைத்தவனின் இருப்பை விளக்க?????

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)





.