Showing posts with label குழந்தைகள் பத்திரம். Show all posts

எதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்?

ஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...

நாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலியாவினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.

அப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.

பின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருகம்.

அந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன்? மிருகம் கூட இப்படி செய்யாதே??? அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும்? ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்?

நான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது? அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு?? இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூனிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.

அதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.

இப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும்? ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா?? அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா? யார் காப்பார் இவர்களை? இப்பொழுது நான் பாதுகாப்ப?ளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார்? பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது???? இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????

சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்?? இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே????  வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே??? என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.

பிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா? அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே????

இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??

//கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//



.

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)


3. உளவியல் குறைபாடுகள்

இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.

a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷய‌ங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.

ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.

a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவந‌ம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.


a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.

தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!

தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.

லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவ‌னே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தன‌க்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி இரண்டு)

குழந்தைவதை செய்பவர்கள்

அ) யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள் ???

1.) குழந்தைவதை கொடுமைக்கு ஆளானவர்கள்
சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட வடுக்களை அழிக்க இயலாமலே வயதான பின் மற்ற குழந்தைகளை இப்படி பலாத்காரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றொரு சிந்தனை நம்மிடையே பொதுவாய் இருந்தாலும், நடந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளின்படி, அது உண்மையில்லை. சில சம்பவங்களில் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எல்லா சம்பவங்களிலும் அது மெய்யல்ல. பல நேரங்களில் குழந்தைவதை செய்பவர்களுக்கு வேறெந்த காரணமும் தேவையில்ல, அவர்கள், அவர்களே. விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சியை படிக்கவும்.

2) குடும்பமும், சினேகங்களும்
ஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா சம்பவங்களிலும் குழந்தைவதை செய்பவன் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது அந்த குடும்பத்திற்கு மிக நெருங்கிய வெளியாளாகவோதான் இருக்கிறான். கிட்டத்தட்ட நான் (மூல ஆசிரியர்)  சந்தித்த, வஞ்சகத்திற்கு ஆளான பல பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே (உதா: ஒன்று விட்ட அண்ணன் / மாமா / சித்தப்பா / இன்னும் சில சம்பவங்களில் சொந்த தாத்தாக்களே... ந'ஊதுபில்லாஹ்!!)

குழந்தைவதை செய்பவனுக்கு வேறெங்கும் வெளியிலிருந்து இரை தேடுவதைவிட சொந்தத்திலேயே இரை தேடுவது சுலபமானது. ஏனெனில் வருஷங்களாக அவன் மீது குடும்பத்தாரின் நம்பிக்கை இருக்கிறது, எனவே அவர்களின் மீது சந்தேகம் எழுவதோ, செய்யும்போது பிடிபடும் சந்தர்ப்பமோ அரிதிலும் அரிது. இன்னும் அவர்களின் இரையான சிறுவன் / சிறுமியை என்நேரமும் அடையவும் இயலும். என்னிடம்(மூல ஆசிரியர்)  இவ்வாறான கொடிய கதைகளைக் கூறிய பலர், அவர்களின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான, அதிகமாய் வருகை புரியும் ஆட்களாலேயே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிள்ளைகள் அடிக்கடி வதைக்கு ஆளானதும், அதை சொல்லிட துணிந்தபோதும் யாரும் நம்பாமல் போனதும் இத்தகையவர்கள் சம்பாதித்து வைத்துள்ள நம்பிக்கை ஓட்டுக்களாலேயே...!!

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைவதை செய்பவன் எந்த குழந்தையை தேர்ந்தெடுக்கிறானோ அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடுவில் ஒரு திரை / ஒரு தடை இருக்கிறதா...அவர்கள் வெளிப்படையாக பேசவோ, பயமற்ற அன்பு நிரம்பிய உணர்வுகளோடு இருக்கிறார்களா என்பதையும் கவனித்து வைக்கிறான். (இந்த விஷயத்தை ‍ பெற்றோர் மற்றும் குழந்தை உறவினைப் பற்றி நேரமிருப்பின் இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்)


ஆ) எங்கிருந்து, எப்படி குழந்தைவதை செய்ய துணிகிறார்கள்??

1. தகுந்த நேரமும் இடமும்.
ஆம். அவர்களுக்கு நேரமோ, இடமோ தனியாக தேவையில்லை என்பதே மெய். கீழ் வரும் சம்பவத்தை பாருங்கள்:

மோனாவிற்கு ஆறு வயதாகும்போது அச்சம்பவம் நடந்தது. அவளுடைய தாய்மாமனாலேயே பலாத்காரத்திற்கு ஆளானாள். அதுவும் எங்கே? காரில்!! அந்த கொடியவன் மோனாவின் தாயை விட பல வயது பெரியவன். அதனாலேயே மிகவும் மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தான். அந்த நாளில் அவன் மோனாவையும் அவளின் தாயையும் ஷாப்பிங்குக்காக காரில் அழைத்துச் சென்றான். தாயை ஷாப்பிங் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டில் மோனாவையும் தன்னுடன் வைத்துக் கொண்டான். கார் சீட்டில் பின்னால் அமர்ந்திருந்த மோனாவை முன் சீட்டிற்கு வரச் சொன்னான். அந்தக் குழந்தையின் அறிவிற்கு ஏன் என்ற கேள்வி கூட எழாத வயது. அவன் மோனாவின் கழுத்திலிருந்து ஆரம்பித்து வருடிக்கொண்டே வந்தான், அதன் கீழ், அதன் கீழ் என்றவாறே...மோனாவிற்கு சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் செய்வது உறைக்க ஆரம்பித்தது. என்னவென்று புரிய வில்லையென்றாலும் மனதில் பயப்பட ஆரம்பித்த மோனா நிறுத்திவிடுமாறு எவ்வளவு மன்றாடியும் அவன் நிறுத்தவில்லை, அவனின் தாகம் அடங்கும்வரை. கிடைத்த சந்தர்ப்பத்தினை உபயோகித்து அழுதபடியே மோனா அவளின் தாயை நாடி ஷாப்பிங் கடையினுள் ஓட ஆரம்பித்தாள்...

இத்தகைய பாவிகள் நேரமோ இடமோ எதையும் கவனத்தில் கொள்வதில்லை. நாம் எதிர்பார்க்காத சமயத்தில்தான் தாக்க முற்படுகின்றனர். சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையும் தருணங்களில் பாதிக்கப்பட்டவரை நம்ப ஒரு ஆத்மாவும் இருப்பதில்லை.

"உன்னை காரில் விட்டுவிட்டு வந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை...அதற்குள் நீ சொல்லும் செயல்கள் எப்படி, அதுவும் பப்ளிக் பார்க்கிங் லாட்டில் நடக்கும்? என் அண்ணனைப் பற்றி ஏதுவும் சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள், உனக்கு தேவை வெறும் அட்டென்ஷன்தான், ச்சே..."

தாயிடம் மோனா தேடிய பாதுகாப்பு இதுவா??

2) துரிதமானதாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக:
முன்னரே கூறியதுபோல் குழந்தைவதை செய்யும் மிருகங்களுக்கு அதற்கென தனி நேரமோ, இடமோ தேவையில்லை. பல சமயங்களில் பண்பாட்டை ஒட்டி நாம் செய்யும் / அனுமதிக்கும் சில காரியங்களே இதற்கு தீனி போட ஏதுவாகின்றன.

மோனாவின் தாய்மாமனுக்கு அவர்களின் குல வழக்கப்படி யாரேனும் சந்தித்துக் கொண்டால் நெற்றியில் முத்தமிடுவது சாதகமாகிப்போனது. மோனாவின் நெற்றியில் அவ்வாறே ஆரம்பிக்கும் முத்தம் பல சமயங்களில் அதோடு நிற்பதில்லை...யா அல்லாஹ். இதை தாயிடம் சொன்னாலும் அவள் சிரித்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவாள் என்பது மோனாவிற்கும் அதைவிட அதிகமாக அந்த மிருகத்திற்கும் தெரிந்தே இருந்தது.

அடுத்த பகுதியில்
1. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தாக்கங்கள் நிறைந்த வாழ்வும்



மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்...அதுவரை...குழந்தைகள் பத்திரம்!!!




.

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)

 
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள்.  அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.

  • ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
  • இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
  • மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.

இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.


கட்டுரை விதிகள்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களுக்கான எச்சரிக்கை:
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
==========குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)============

மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென.  காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.

குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.

இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.

ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!

இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.

நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.

அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?

இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,

1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?

என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.