குழந்தைகள் பத்திரம்!! (பகுதி இரண்டு)
குழந்தைவதை செய்பவர்கள்
அ) யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள் ???
1.) குழந்தைவதை கொடுமைக்கு ஆளானவர்கள்
சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட வடுக்களை அழிக்க இயலாமலே வயதான பின் மற்ற குழந்தைகளை இப்படி பலாத்காரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றொரு சிந்தனை நம்மிடையே பொதுவாய் இருந்தாலும், நடந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளின்படி, அது உண்மையில்லை. சில சம்பவங்களில் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எல்லா சம்பவங்களிலும் அது மெய்யல்ல. பல நேரங்களில் குழந்தைவதை செய்பவர்களுக்கு வேறெந்த காரணமும் தேவையில்ல, அவர்கள், அவர்களே. விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சியை படிக்கவும்.
2) குடும்பமும், சினேகங்களும்
ஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா சம்பவங்களிலும் குழந்தைவதை செய்பவன் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது அந்த குடும்பத்திற்கு மிக நெருங்கிய வெளியாளாகவோதான் இருக்கிறான். கிட்டத்தட்ட நான் (மூல ஆசிரியர்) சந்தித்த, வஞ்சகத்திற்கு ஆளான பல பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே (உதா: ஒன்று விட்ட அண்ணன் / மாமா / சித்தப்பா / இன்னும் சில சம்பவங்களில் சொந்த தாத்தாக்களே... ந'ஊதுபில்லாஹ்!!)
குழந்தைவதை செய்பவனுக்கு வேறெங்கும் வெளியிலிருந்து இரை தேடுவதைவிட சொந்தத்திலேயே இரை தேடுவது சுலபமானது. ஏனெனில் வருஷங்களாக அவன் மீது குடும்பத்தாரின் நம்பிக்கை இருக்கிறது, எனவே அவர்களின் மீது சந்தேகம் எழுவதோ, செய்யும்போது பிடிபடும் சந்தர்ப்பமோ அரிதிலும் அரிது. இன்னும் அவர்களின் இரையான சிறுவன் / சிறுமியை என்நேரமும் அடையவும் இயலும். என்னிடம்(மூல ஆசிரியர்) இவ்வாறான கொடிய கதைகளைக் கூறிய பலர், அவர்களின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான, அதிகமாய் வருகை புரியும் ஆட்களாலேயே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிள்ளைகள் அடிக்கடி வதைக்கு ஆளானதும், அதை சொல்லிட துணிந்தபோதும் யாரும் நம்பாமல் போனதும் இத்தகையவர்கள் சம்பாதித்து வைத்துள்ள நம்பிக்கை ஓட்டுக்களாலேயே...!!
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைவதை செய்பவன் எந்த குழந்தையை தேர்ந்தெடுக்கிறானோ அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடுவில் ஒரு திரை / ஒரு தடை இருக்கிறதா...அவர்கள் வெளிப்படையாக பேசவோ, பயமற்ற அன்பு நிரம்பிய உணர்வுகளோடு இருக்கிறார்களா என்பதையும் கவனித்து வைக்கிறான். (இந்த விஷயத்தை பெற்றோர் மற்றும் குழந்தை உறவினைப் பற்றி நேரமிருப்பின் இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்)
ஆ) எங்கிருந்து, எப்படி குழந்தைவதை செய்ய துணிகிறார்கள்??
1. தகுந்த நேரமும் இடமும்.
ஆம். அவர்களுக்கு நேரமோ, இடமோ தனியாக தேவையில்லை என்பதே மெய். கீழ் வரும் சம்பவத்தை பாருங்கள்:
மோனாவிற்கு ஆறு வயதாகும்போது அச்சம்பவம் நடந்தது. அவளுடைய தாய்மாமனாலேயே பலாத்காரத்திற்கு ஆளானாள். அதுவும் எங்கே? காரில்!! அந்த கொடியவன் மோனாவின் தாயை விட பல வயது பெரியவன். அதனாலேயே மிகவும் மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தான். அந்த நாளில் அவன் மோனாவையும் அவளின் தாயையும் ஷாப்பிங்குக்காக காரில் அழைத்துச் சென்றான். தாயை ஷாப்பிங் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டில் மோனாவையும் தன்னுடன் வைத்துக் கொண்டான். கார் சீட்டில் பின்னால் அமர்ந்திருந்த மோனாவை முன் சீட்டிற்கு வரச் சொன்னான். அந்தக் குழந்தையின் அறிவிற்கு ஏன் என்ற கேள்வி கூட எழாத வயது. அவன் மோனாவின் கழுத்திலிருந்து ஆரம்பித்து வருடிக்கொண்டே வந்தான், அதன் கீழ், அதன் கீழ் என்றவாறே...மோனாவிற்கு சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் செய்வது உறைக்க ஆரம்பித்தது. என்னவென்று புரிய வில்லையென்றாலும் மனதில் பயப்பட ஆரம்பித்த மோனா நிறுத்திவிடுமாறு எவ்வளவு மன்றாடியும் அவன் நிறுத்தவில்லை, அவனின் தாகம் அடங்கும்வரை. கிடைத்த சந்தர்ப்பத்தினை உபயோகித்து அழுதபடியே மோனா அவளின் தாயை நாடி ஷாப்பிங் கடையினுள் ஓட ஆரம்பித்தாள்...
இத்தகைய பாவிகள் நேரமோ இடமோ எதையும் கவனத்தில் கொள்வதில்லை. நாம் எதிர்பார்க்காத சமயத்தில்தான் தாக்க முற்படுகின்றனர். சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையும் தருணங்களில் பாதிக்கப்பட்டவரை நம்ப ஒரு ஆத்மாவும் இருப்பதில்லை.
"உன்னை காரில் விட்டுவிட்டு வந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை...அதற்குள் நீ சொல்லும் செயல்கள் எப்படி, அதுவும் பப்ளிக் பார்க்கிங் லாட்டில் நடக்கும்? என் அண்ணனைப் பற்றி ஏதுவும் சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள், உனக்கு தேவை வெறும் அட்டென்ஷன்தான், ச்சே..."
தாயிடம் மோனா தேடிய பாதுகாப்பு இதுவா??
2) துரிதமானதாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக:
முன்னரே கூறியதுபோல் குழந்தைவதை செய்யும் மிருகங்களுக்கு அதற்கென தனி நேரமோ, இடமோ தேவையில்லை. பல சமயங்களில் பண்பாட்டை ஒட்டி நாம் செய்யும் / அனுமதிக்கும் சில காரியங்களே இதற்கு தீனி போட

மோனாவின் தாய்மாமனுக்கு அவர்களின் குல வழக்கப்படி யாரேனும் சந்தித்துக் கொண்டால் நெற்றியில் முத்தமிடுவது சாதகமாகிப்போனது. மோனாவின் நெற்றியில் அவ்வாறே ஆரம்பிக்கும் முத்தம் பல சமயங்களில் அதோடு நிற்பதில்லை...யா அல்லாஹ். இதை தாயிடம் சொன்னாலும் அவள் சிரித்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவாள் என்பது மோனாவிற்கும் அதைவிட அதிகமாக அந்த மிருகத்திற்கும் தெரிந்தே இருந்தது.
அடுத்த பகுதியில்
1. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தாக்கங்கள் நிறைந்த வாழ்வும்
மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்...அதுவரை...குழந்தைகள் பத்திரம்!!!
.