கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??

இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)


தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.  இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!

இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???

நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.

மீண்டும் குழந்தைவதை...


news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327

கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.


------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------


பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.

அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.

நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு

பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்

கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது


 
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????




கேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...



இரவினில்தான் கவிதை வரும் என்று
ஜன்னலருகில் அமர்ந்தபோதுதான்
தெரிந்தது, வானத்தின் இருள்.
அமாவாசையா நீ?

க‌ன்னே, மனியே
என்றெல்லாம் கவிதை
எளுதலாம் என்றால்
கனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்
தமிழாசிரியத் தந்தை

சைட்டடிக்க சைக்கிளே என்று
எட்டி மிதிக்கும் வேளையில்
நினைவில் வந்து நின்றது - உன்
அண்ணனின் பூத உடல்

கொலுசின் சத்தத்தில்
என்னை உணர்வாய் என்று
வாங்கிட விளைகையில்
எனக்கு முன் கியூவில்
உஷா உதூப்பாய் உன் தாய்

தூது செல் செல்லக்கிளியே
என்று உன் தங்கையை தேடினால்
கலர் கலராய் பெல்ட்டை காட்டுகிறது கராத்தே

அடச்சே...
வந்து வாய்க்குது பார்
எனக்குன்னு!!


.

சி.என்.என்னின் பத்து ஹீரோக்கள்


ஒரு நல்லதை செய்யும் முன் ஆயிரம் விளம்பரங்கள் செய்யும் அரசியவாதிகளின் முன், செய்ததை மேடை போட்டு சொல்லி, அந்த உதவிகளைப் பெற்றவர்களை ஃப்ளாஷ் மழையில் வெட்கப்பட வைத்து ஆளுயர மாலைகள் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் முன், சிறு சிறு பொறிகளால் உந்தப்பட்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நாலு பேருக்கு பயன் பட்டதாய் வாழும் ஒவ்வொருவரும் ஹீரோக்களே!! (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து!!)

ஊடகங்களை பெரும்பாலும் நான் மெச்சுவதோ, போற்றிப்புகழுவதோ கிடையாது எனினும், சி.என்.என்னின் இந்த பரிசளிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அரசியல், மதம், நிறம் போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நிஜ ஹீரோக்களை உலகின் முன் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறே இந்த ஆண்டும் 10 சிறந்த ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரை முதன்மையாக்குவது.... நம் ஓட்டுக்கள். (கள்ள ஓட்டு போடற பார்ட்டிங்கெல்லாம் கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க...)

இனி இந்த 10 பேரை பற்றி கொஞ்சம் கதைக்கலாம்...

1. நாராயணன் கிருஷ்ணன்
நாராயணன் கிருஷ்ணன் ஒரு காலத்தில் ஸ்டார் ஹோட்டல் ஷெஃப். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவை பார்த்த அந்த சம்பவம், அவரின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், மனம் பிறழ்ந்த நிலையில் தன்னுடைய மலத்தையே தின்னும் அவலம். அன்று ஆரம்பித்த பொறி இன்று, வேராகி விருட்சமாகி, அக்ஷயா என்னும் டிரஸ்ட் மூலமாக ஒரு நாளைக்கு நானூரு பேருக்கு சாப்பாடு தருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்களுக்கு அன்னதானம் செய்துள்ள புண்ணிய ஆத்மா.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


2. சூஸன் பர்டன்
தானே ஒரு டிரக் அடிக்டாய் இருந்த காலத்தை மறந்து, தன்னைப்போன்றே இருட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்களை மீட்டு வெளிச்சப்பகலில் வாழ்க்கையை நடத்த கற்றுத் தருவதே இவரது இப்போதைய தொழில், மூச்சு, கடமை...எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது வரை 400 பெண்களுக்கும் மேலானவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
இவரின் வலை:


3. டே ல வேகா (ஃபர்ஸ்ட் நேம் எல்லாம் வாயிலயும் வரலை, டைப்படிக்கவும் வரலை)
நம் திரு நாடான இந்தியாவை போன்றதே மெக்ஸிகோவும். கொலை, கொள்ளை, வன்முறை, வெடிகுண்டு என்பது வாழ்க்கையில் காத்தாடி மாதிரி மிக பொதுவான பொருட்கள் ஆகி விட்டன. ஆனாலும், இப்படி ஒரு ஊரிலும் மக்களுக்கு முதலுதவி தரவும், நோயிலிருந்து மீட்டெடுக்கவும் ஒரு மருத்துவமனையை பல போராட்டங்களுக்கு பின் தொடங்கி, இன்னும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதை நடத்திக் கொண்டும் இருக்கிறார் இப்பெண்.  சேவை என்றொரு எண்ணம் தோன்றி விட்டால் தடை போட வயது ஏது? இவரின் வயதோ 74!!
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


4. லிண்டா ஃபோன்ட்றென்
தோசையும், மசால்வடையும், பதினோரு மணிக்கு டீயும் இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாத நம் போன்ற மக்களின் மத்தியில், சதை பெருத்து மலையானால் வரும் அபாயத்தை உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தி வரும் ஒரு பெண்.  இவர் வாழும் ஊரின் மூன்றில் ஒரு பகுதியினர் உடல்பளுவினால் ஆபத்திலுள்ள மக்கள்.  17 வாரங்கள், இவரை நம்பி ஒப்ப்டைத்ததில் கிட்டத்தட்ட 15,000 பவுண்டுகள் (ஒரே ஆளெல்லாம் இல்ல) குறைத்துள்ளனர். நல்ல விஷயம்தான்...ஃப்ரீயா யாராவது எங்க ஊர்லயும் செஞ்சா பரவாலல்லயே...
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


5. ஹார்மன் பார்க்கர்
1989ல் மத போதகராக கென்யாவில் அடியெடுத்து வைத்த பார்க்கரின் கண்களில் விழுந்த உமுதல் காட்சியே கடும் வெள்ளமும் அதை உபயோகித்து மக்களை வேட்டையாடும் (நான் அரசியல்வாதிங்களை சொல்லலை...இருந்தாலும், அவங்களையும் சேத்துக்குங்க..) பெரிய முதலைகளும் இன்னும் பல மலைவாழ் விலங்ககுகளுமே. அந்த சம்பவமே பார்க்கரின் வாழ்வை மாற்றியமைத்தது. ஒரு பாலம் மக்களின் வாழ்வையும் அவர்களின் சமூகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்து கொண்ட பார்க்கர் இன்று வரை கிட்டத்தட்ட 45 பாலங்கள், கட்டி முடித்துள்ளார்...இன்னும் பல இருக்கின்றன இவரின் கை பட. இவரின் பாலங்களால், வெள்ளம் வந்தாலும் பாலத்தை கடந்து அத்தியாவசிய பொருட்களைப் பெற அந்த மக்களால் முடிகிறதென்பதே பெரிய சாதனை.
இவரின் வலை:

6. எவான்ஸ் வடொங்கொ
இருப்பதிலேயெ சிறிய வயதுடையவர் இவர்தான் போல. சிறிய வேலைதான் செய்வதும், ஆனால் அதன் தாக்கம் மிக மிக பெரிது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல. 23 வயதாகும் இவர் தயாரிப்பது சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு. விலை ஜீரோ. இதுவரை 10,000 விளக்குகளை இப்படி ஏழைகளுக்கு தந்துள்ளார். இதனால் என்ன பெரிய பயன் என்பவர்களுக்கு கிரசினும் அதன் புகையால் எழும் பாதகங்களையும் படிக்க ஆணையிடுகிறேன்...:)
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

7. அனுராதா கொய்ராலா (மனீஷாவோட அத்தையெல்லாம் இல்ல!!)
மைதி நேபாள் என்னும் அமைப்பின் நிறுவனர். இதற்கு முன் ஒரு சாதாரண ஆங்கில வாத்தியார்.   குழந்தைகள் பத்திரம் என்று ஒரு கட்டுரை ஓடுகிறதே அந்த கட்டுரையில் வரும் பெண்களைப்போல இளம் வயதிலேயே அந்த தாக்குதல்களுக்கு உள்ளான சிறுமிகளையும், உள்ளாக இருக்கும் சிறுமிகளையும் காப்பதே இவரின் தலையாய கடமையாய் உணர்கிறார், செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 12,000 பெண் பிள்ளைகளை கரை சேர்த்த புண்ணியம் இவரையே சாரும். இந்திய வரலாற்றில் இடம் பெற வேண்டிய பெண்.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

8. மேக்னஸ் மேக்ஃபேர்லேன் பேர்ரோ
இவரும் நாராயணனைப் போலவே. ஒரு நாளைக்கு இவரின் டிரஸ்ட்டால் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகளுக்கு (உலகம் முழுவதும்) சாப்பாடு அளிக்கப்படுகிறது. இதன் ஐடியா வந்த பிண்ணனி சுவாரசியமானாது. எப்பொழுது போல தண்ணியடிக்க ஒரு பாருக்கு சென்ற மேக்னஸ்ஸுக்கு, தண்ணியடித்த பின் ஒரு குரல் கேட்கிறது, இப்படி தண்ணியடித்துக் கொண்டிருந்தால் போஸ்னியாவின் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்? தண்ணியால் வந்த தெளிவு...வேலையை விட்டுவிட்டு முழு நேர தொழிலாய் மக்களுக்கு உதவ முன் வந்தார்,  மேரி'ஸ் மீல்ஸ் என்னும் இவரின் டிரஸ்ட் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குகிறது.
இவரின் வலை:

9. அகி ரா
தான் விளைத்த கண்ணி வெடியை தன் கையை கொண்டே அகற்றுவது. சிறிய எண்ணம்தான்...சவால் பெரிது.  சாதனையும் பெரிது. இது வரை 50,000 கண்ணிவெடியை பூமியிலிருந்து அகற்றி, மக்களை உயிர் தப்ப வைத்திருக்கிறார்.  இவரைப் பற்றி யாராவது அமெரிக்கப் படைகளுக்கு வகுப்பெடுத்தால் நல்லது.!!  கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால்? வெல்டன்!
இவரைப் பற்றிய பேட்டி:

10.டேன் வால்ரத்
காயப்பட்ட போர் வீரர்களுக்கு பைசா செலவில்லாமல்(Only Mortgagae Free!!)  வீடுகள் (அமெரிக்காவில்0 கட்டித் தருவதே இவரின் வேலை. அதுவே இவரின் சாதனை. அதுவும், உடலின் ஊனத்தை பொறுத்து அதன்படி சொகுசா ப்ளான் அமைத்து தருகிறார். (வீல்சேரின் தேவைகள் போன்று) இதுவரை ஒன்பது வீரர்களுக்கு இத்தகைய பரிசு கிட்டியுள்ளது, இன்னும் 10 வீடுகள் ரெடியாகிக் கொண்டே உள்ளன. அமெரிக்காவில் வீடு இப்படி கட்டி தருவது உண்மையில் பெரிய விஷயம்தான்.
இவரின் பேட்டி:

  • இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க (கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம். ஒருவருக்கு மேலேயும் தேர்ந்தெடுக்கலாம்.
  •  சனி ஞாயிறு வேறென்ன வேலை, யாரை தேர்ந்தெடுக்கறதுன்னு கவனமா படிச்சு ஓட்டு போடுங்க.  
  • அதுவரை, டின் டின்டிடின் (பிரிட்டானியா பிரேக்)


.